கேள்வி: // நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், ஊடகங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மல்லுக் கட்டும் போது அதை எதிர்த்து நிற்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கருதுகிறார்கள் அல்லவா //

இந்த sterlite பிரச்சனை என்பது எப்போதோ அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது. ‘ban sterlite’ அல்லது ‘burn sterlite’ என்கிற வாசங்கங்களை பார்த்து கோர்ட்டே கேள்வி எழுப்புகிறது. இந்த sterlite பிரச்சனை ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டதே கனிமொழி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே என்று சொல்லப்படுகிறது.

நன்றி

– சதீஷ்

வினவு கேள்வி பதில்

ன்புள்ள சதீஷ்,

கனிமொழியின் தேர்தல் வெற்றிக்காகத்தான் ஸ்டெர்லைட் பிரச்சினை ஊதி பெரிதாக்கப்பட்டது என்றால், ராஜபக்சே வெற்றிக்காகத்தான் ஈழப் பிரச்சினை ஊதிப்பெரிதாக்கப்பட்டது, மம்தா பானர்ஜியின் வெற்றிக்காகத்தான் நந்திகிராம் பிரச்சினை ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்று சொல்வீர்களா?

இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பல்வேறு கட்டங்களைக் கடந்து மக்கள் அதைப் புரிந்து இறுதியில் எப்படியாவது மூட வேண்டும் என நினைக்கிறார்கள். அதுவே சென்ற ஆண்டு மே மாதம் நடந்த மாவட்ட ஆட்சியாளர் முற்றுகைப் போராட்டம்.

அதை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்க முயன்றது தமிழக அரசு. பசுமைத்தீர்ப்பாயம் மூலமாக ஆலையை மீண்டும் திறக்க முயன்றது மத்திய அரசு. தூத்துக்குடி மக்களோ யார் வரினும் ஆலையைத் திறக்க முடியாது என்று உறுதியேற்றிருக்கிறார்கள். அதை கனிமொழியின் தேர்தல் வெற்றியோடு ஒப்பிடுவது மக்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம்.

♦ ♦ ♦

கேள்வி: நாங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டோம் என்ற விவரம் கட்சிகாரங்களுக்கு தெரியுமா இல்லையா பதில்…

– ராமகிருஷ்ணன்

ன்புள்ள ராமகிருஷ்ணன்,

அதை தெரிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? வேர்மட்டம் வரை வலுவாக இருக்கும் எந்த ஒரு கட்சிக்கும் தனது தெருவில் யார் தனக்குப் போடுவார்கள், யார் போடமாட்டார்கள், யார் வெளியூரில் இருக்கிறார்கள், யார் வரமாட்டார்கள் என சகல விசயங்களும் தெரிந்திருக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக வாக்களிக்கும் எந்திரத்தில் நீங்கள் அளிக்கும் வாக்கு ரகசியமாகத்தான் வைக்கப்படும். வாக்களிப்பது யாருக்கு தெரியும் என்று ஆராய்வதை விட வாக்களிப்பதால் என்ன மாற்றம் வரும் என்று யோசித்துப் பார்ப்பது சாலச்சிறந்தது.

♦ ♦ ♦

கேள்வி: மக்கள் அதிகாரத்தில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் குறித்தும் புதிய ஜனநாயகம் குறித்தும் விளக்கம் கூறுங்கள்!

– வீ. சசிக்குமார்

ன்புள்ள சசிக்குமார்,

மக்கள் அதிகாரத்தின் கொள்கை அறிக்கையை இந்த இணைப்பில் சென்று படியுங்கள்! உங்கள் சந்தேகம் அனைத்திற்கும் அதில் விளக்கம், பதில் இருக்கிறது.

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை !

♦ ♦ ♦

கேள்வி: திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா அல்லது வேறு வேறா?

– அ. பாரதிதாசன்

ன்புள்ள பாரதிதாசன்,

தமிழ் தேசியம் மொழி வழித்தேசியத்தை முன்னிறுத்துகிறது. திராவிடம் என்பது சமஸ்கிருதத்திற்கு மாற்றாக தோன்றி வளர்ந்த மொழிக் குடும்பத்தின் பெயர். தென்னிந்தியாவில் இருக்கும் பல்வேறு மொழிகள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. அந்த வகையில் திராவிட இயக்கம் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக தோன்றி வளர்ந்த இயக்கம்.

தமிழகத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் கூட சங்ககாலம் தொட்டே இங்கே பார்ப்பனிய சமஸ்கிருதப் பண்பாடு ஆதிக்கம் செலுத்தவில்லை. திணை வகைகளின் வாழ்வியலைப் பார்த்தால் அது சடங்கு சம்பிரதாயங்களைச் சார்ந்து இல்லாமல் இயற்கை சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் இன்றைய மொழியில் சொன்னால் “மதச்சார்பற்றும்” இருப்பது உண்மை.

படிக்க:
தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3
நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !

பிற்காலச் சோழர்களின் காலத்தில்தான் பார்ப்பனியம் இங்கே ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. அந்த வகையில் தமிழின் வரலாற்றிலும் பார்ப்பனிய எதிர்ப்பு இருக்கிறது. இன்று வரையிலும் தமிழகம் பெரியார் பிறந்த மண் என்று சொல்லப்படுவதற்கும், “கோ பேக் மோடி” என்று இந்தியாவில் எங்கும் இல்லாத முழக்கம் இங்கே ஒலிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மண்ணின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுதான்.

எனவே தமிழையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. பார்ப்பனிய எதிர்ப்பில் ஏனைய தென்னிந்திய மக்கள் வட இந்தியாவை விட இங்கே ஒன்று படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே போன்று பார்ப்பனிய எதிர்ப்பில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை திராவிடம் தனது தலைமையகமாகக் கொண்டு தோன்றியது எனலாம்.

இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களும், தமிழ் தேசியமும் ஓட்டரசியல் பாதையில் நலிவடைந்து விட்டன. திராவிட இயக்கத்தில் பெயரளவிலாவது பார்ப்பனிய எதிர்ப்பு இருப்பது போல தமிழ் தேசியத்தில் காண இயலவில்லை. மேலும் தமிழ் தேசியம் பேசுவோர் திராவிட இயக்கத்தை ஜென்ம பகையுடன் அணுகுகின்றனர். அவர்களில் சிலர் தமிழ்பேசும் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் இருக்கின்றனர்.

திராவிட இயக்கமாக வெட்டி ஜம்பம் பேசும் அதிமுக, பார்ப்பனிய பாஜக-வின் பாதந்தாங்கிகளாக சீரழிந்து விட்டனர். எனவே தமிழ் மரபு, திராவிட மரபின் நேர்மறை அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு பொருளாதார ரீதியாக உழைக்கும் மக்களின் விடுதலைக்கு செயல்படும் அரசியலே நமது தேவை.

♦ ♦ ♦

கேள்வி: வினவுக்கு .. நீண்ட நாட்களாக { பிப்ரவரி 1 க்கு பிறகு } கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிவும் வரவில்லையே ஏன் ..?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

ஆம், வரவில்லை. வேலைச் சுமை காரணமாக எழுத இயலவில்லை. இனி நீண்ட இடைவெளி இல்லாமல் எழுதுகிறோம். உங்கள் அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.

♦ ♦ ♦

படிக்க:
ராமர் கோயில் நிச்சயம் : சாமியார்களிடம் உறுதியளித்த பாஜக !
♦ இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !

கேள்வி: பறை இசை பற்றின புத்தகங்கள்….

– ரம்யா

ன்புள்ள ரம்யா,

பார்ப்பன இசைக் களவை அம்பலப்படுத்தும் பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இசைக் கருவிகளின் களவு குறித்தும் பல ஆய்வுகள் வந்துள்ளன. யாழ் வீணையாக உருமாறியது குறித்த விவாதம், அவற்றில் மிகப் பிரபலமானது. எனினும் ஆய்வாளர்களால் இதுநாள் வரை தீண்டப்படாமலிருந்த இசைக் கருவி தமிழ் மக்களின் தொன்மையான இசைக் கருவியாகிய பறை. இதற்குக் காரணம் சொல்லாமலேயே விளங்கும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் வளர்மதி, சனவரி, 25, 1997 அன்று, தஞ்சையில் ம.க.இ.க நடத்திய தமிழ் மக்கள் இசை விழாவில் “பறையும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் வழங்கிய ஆய்வுக் கட்டுரையை மேலும் விரிவாக்கி “பறை, இசைக்கருவி – ஓர் ஆய்வு” எனும் நூலாகத் தயாரித்துள்ளார். அந்த நூல் குறித்த அறிமுகக் கட்டுரையை கீழே வாசிக்கலாம்.

நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க