“மக்களால் மக்களுக்காக…, தேர்தல் திருவிழா, தேர்தல் போர், ஜனநாயக உரிமை, ஜனநாயக கடமை….” இத்யாதி இத்யாதி.., இந்த வார்த்தைகள் அனைத்தும் மக்களை ஏய்க்கும் மாய்மாலங்கள் என்பது ஊர் அறிந்த இரகசியம்தான்.

ஒருபுறத்தில் இந்த தேர்தலும், அரசமைப்பும் மக்கள் மத்தியில் அம்பலமாகும் நிலையில் இன்னொருபக்கம் இந்த அரசை நம்பமுடியாது என்பதை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாய் நடைபெரும் விவசாயிகள், மாணவர், தொழிலாளர், சிறுதொழில் முனைவோர் ஆகியோரின் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன.

எங்கு காணிலும் மக்கள் “எங்களை வாழவிடு” என மன்றாடி வருகின்றனர். அரசையும் ஆட்சியையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு மன்றாடுவதற்கு பதிலாக இனி “எங்களை ஆளவிடு” என்ற முழக்கத்தின் கீழ் போராட்டமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும், “நாங்கள் யார்.. எங்கள் கொள்கை என்ன?” என்பதையும் மக்கள் அதிகாரம் இதோ உங்கள் முன் வைத்துள்ளது. படியுங்கள்…

மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை அறிக்கையை PDF கோப்பாக பதிவிரக்கம் செய்ய..

ஆளும் அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம் !

கொள்கை அறிக்கை

மக்கள் அதிகாரம் – People’s Power

குமுறிக் கொண்டிருக்கிறார்கள், இந்திய மக்கள்; அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சிகள், அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என்கிற முறையில் செயலிழந்துவரும் அரசுக் கட்டுமானங்கள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கையிழந்து விட்டார்கள். அதனால்தான் மக்கள் பிரச்சினை பற்றிப் பேசினாலே, “யார் ஆட்சிக்கு வந்தாலும், யாரும் எதுவும் செய்துவிட முடியாது“ என்கிறார்கள்.  சமூக ஒழுக்கம், சமூக நியதி, ஆக்கப்பூர்வமான திட்டங்கள், நேர்மறைக் கொள்கைகளுக்குப் பதிலாக வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் மோசடிகள், கிரிமினல்மயமாதல்தாம் உள்ளன.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிகார வர்க்க இலஞ்ச ஊழல் – அத்துமீறல்கள், போலீசு அக்கிரமங்கள் அராஜகங்கள், நீதித்துறை முறைகேடுகள் – ஊழல்கள், அவற்றின் பிற சமூக விரோதக் குற்றங்கள், மொத்த அரசமைப்பும், சமூகமும் கடும் நெருக்கடியில் சிக்கி, நொறுங்கிச் சரிந்து வருவதைக் குறிக்கின்றன. பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அவற்றை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் அடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு கொள்கை – கோட்பாடு, சித்தாந்தம், சமூக ஒழுக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவை பற்றிப் பேசுவதெல்லாம் முட்டாள்தனம் என்ற கருத்து பரப்பப்படுகிறது. சுயநலம், இலாபவெறி, நுகர்பொருள் மோகம், வரைமுறையற்ற இன்பநாட்டம், சொகுசு வாழ்க்கை, தனிமனிதப் பேராசை, பாலியல் வக்கிரங்கள்,  போதை வாழ்க்கை, கிரிமினல் குற்றக் கும்பல் வாழ்க்கை போன்ற சமூகக் குற்றங்கள் தவறானவை அல்லவென்ற சமூக மதிப்பீடு பரப்பப்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், கூலிக்குக் கொலை ஆகிய சமூக விரோதக் கிரிமினல் குற்றங்களையே ஒரு தொழிலாகக் கொண்டு, விலங்குகள் வாழும் காடுபோல சமூகமே மாறிவருகிறது.

அரசே தனது வருவாய்க்குரிய வழிமுறையாக, இலக்கு வைத்து சாராய வியாபாரம் நடத்தி மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிறது. அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், நிச்சயமற்ற உதிரித்தனமான தொழில்கள் ஆகியவை காரணமாக 15-25 வயது வாலிபர்களில் கணிசமான பேர் குடிகாரர்கள் – காமாந்தகர்கள் – கூலிப்படையினர்களாக மாறிவருகின்றனர். இதனால் சமூக விரோதக் குற்றங்கள் ஏராளமாக வெடிக்கின்றன.  சமூக விழுமியங்கள் சீரழிவதும் சமூகக் கட்டுமானங்கள் நொறுங்கிப்போவதும் பெருமளவு நடக்கின்றன. இவையெல்லாம் ஒரு சுனாமி போல சிவில் சமூகத்தைச் சூழ்ந்து வருகின்றன. இந்த நிலைமைகளைக் கண்டு அலரும் எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும், நடுத்தர வர்க்கத்தினரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாகவும், போலீசையும் பெருந்திரள் கண்காணிப்பையும் அதிகரிக்கக் கோருகின்றனர். உண்மையில் இது, ஒரு கன்னத்தில் அறையும் ஒடுக்குமுறை அரசிடமும் ஆட்சியாளர்களிடமும் போய் மறு கன்னத்தையும் காட்டும்படிச் சொல்வதாகும்.

இந்த நிலைமை எதைக் காட்டுகின்றது? நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது,  திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து (bankrupted, failed, collapsed and turned into opposite) எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்டன. நாட்டிலுள்ள அரசுக் கட்டுமானங்கள் அனைத்தும்,மேலும் முன்னோக்கி நகர முடியாமல், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டன. ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப்போய் விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?

மத்தியில் பிரதமர், மாநிலங்களில் முதலமைச்சர்கள், மத்திய − மாநில அமைச்சர்கள், மத்திய – மாநில போலீசு அதிகாரிகள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகிய உயர் பதவி வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் அப்படி இருந்தும் தண்டிக்கப்படவில்லை; மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இவர்களிடமே அரசுப் பொறுப்புகளைக் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது. போலீசு, உளவுத்துறை, நீதித்துறை, இராணுவம், துணை இராணுவம், அதிகார வர்க்கம் போன்ற அரசு அதிகார அமைப்புகளையும் அதிகாரத்தையும் இவர்களே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

நீதிபதிகளையும் அதிகாரிகளையும்  நியமிக்க வேண்டிய அதிகாரமும் இவர்களிடமே உள்ளது. இவை காரணமாக, இவர்களும் இவர்களைப் போன்ற குற்றவாளிகளும், பல ஆண்டுக் கணக்கில் தண்டனையின்றித் தப்பித்துக்கொள்வதோடு, இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் மேலும் பல குற்றங்கள் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் உச்ச, உயர் நீதிமன்றங்களே தமது பொறுப்புகளைத் தட்டிக் கழித்துத் தாராளமாக நடந்து கொள்கின்றன. சான்றாக, ஏராளமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தாலும் குஜராத்தில் இசுலாமியரைப் பெருந்திரளாகக் கொலைசெய்த கிரிமினல் குற்றவாளி பிரதமர் மோடி, அமீத் ஷாவை போன்ற அப்பட்டமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஏராளமாகச் சொத்துக்களைக் குவித்த ஜெயலலிதாவைப்போல, ஜெகன்மோகன் ரெட்டியைப்போல, சரத் பவாரைப் போல, மாயாவதி முலாயமைப்போல, லாலுவைப்போல, செளதாலாவைப்போல, எடியூரப்பாவைப்போல, சந்திரபாபுநாயுடுவைப்போல பல அரசியல்வாதிகள், இயற்கை வளங்களைச் சூறையாடுதல்  இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுப் பல இலட்சம் கோடி ரூபாய் கள்ளப்பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் இப்போது ஒரு புது அரசியல் கலாச்சாரத்தைப் பரப்பி வருகிறார்கள். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்தால், அவை அரசியல் அவதூறுகள் என்றும் தண்டிக்கப்பட்டால், அவை தமக்கெதிரான அரசியல்  சதிகள் – சூழ்ச்சிகள் காரணமாகச் செய்யப்படுவதாகக் கூறி, கூலிப்படையை வைத்துப் போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

அம்பானி, அதானி, மிட்டல், பிர்லா, டாடா, ஜிண்டால், ரூயா போன்ற பெரும் தரகு முதலாளிகள் அரசுப் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்தும் பலவித மோசடிகளில் ஈடுபட்டும், பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அந்நியநாட்டு வங்கிகளில் குவித்துவைத்து, ஹவாலா மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். சட்டமுறைப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் முதலீடுகளை முடக்கிவிடுவதாக மிரட்டுகிறார்கள். உள்நாட்டு, அந்நியக் கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களின் தரகர்களும் பெருமளவிலான கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் கொள்ளையிலும் கனிமவளக் கொள்ளையிலும் ஈடுபட்டு, காடுகளையும் மலைகளையும் நீர்நிலைகளையும் அழித்து நாட்டையே பாலைவனமாக்கி வருகிறார்கள்.

அதே சமயம், அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் வன்முறை, அடக்குமுறை நிறுவனங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாகவும், எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாகவும் உள்ளன.  இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகாரவர்க்க அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு உச்ச நீதிமன்றமே அஞ்சுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில் ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், சட்ட நியதிப்படி தண்டிப்பதற்குப் பதில் தாராளவாத நோக்கில் விடுவிக்கப்படுகின்றனர். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில், குஜராத், உ.பி., மராட்டியம், பீகார், ஆந்திரா, ஜார்கண்ட், சட்டிஸ்கர் உட்பட பல மாநிலங்களில்  இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள் ஆகிய நிறுவனங்கள்  நடத்தும் போலி என்கவுண்டர் வழக்குகளில் இதற்கான சான்றுகளைக் காணலாம்.

பயங்கரவாத, பிரிவினைவாத பீதி கிளப்பி மக்களுக்கு எதிராக கடுமையான பெருந்திரள் கண்காணிப்பு, அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. அரசியல் அமைப்பு முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள்  ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் – அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு சிவில் சமூகத்தின் மீது ஏறிமிதித்து, முற்றும் முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

நாட்டின் பொருளாதாரமோ அந்நிய, ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த சில பத்தாண்டுகளாக  உற்பத்திப் பின்டைவு, தேக்க – வீக்கம், ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாதவாறு கடும் நெருக்கடிக்குள்,  சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு விட்டது. அரசே ஆட்குறைப்பும் செய்தும், கட்டணச் சுமையேற்றியும் விலைவாசியையும் வேலையின்மையையும் விண்ணை முட்டுவதாக எகிறச் செய்து ஏழை எளிய மக்களின் தலையிலேறி மிதிக்கின்றது. நாட்டு மக்கள் அனைவரின் குறைந்தபட்சத் தேவைக்கும் மிஞ்சியுள்ள  உணவு தானியங்கள் இந்தியக் கிடங்குகளில் குவித்து வைக்கப்பட்டு, அழுகிப் புழுத்துப் போய்க்கொண்டிருக்கிறது. இருந்தபோதும்,  நாட்டு மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதி மக்கள் பசி – பட்டினியால் வாடுகின்றனர். ஊட்டச் சத்துக் குறைவால் இறப்போரின் எண்ணிக்கை ஆப்பிரிக்க ஏழை நாடுகளுக்கு இணையாக உள்ளது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம் – மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு எல்லாம் கானல் நீராகவே உள்ளன.

அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித் தரக் கடமைப்பட்ட அடிப்படை வசதிகள், தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிதண்ணீர், சாலைப் போக்குவரத்து, குடியிருப்பு, வீடு, வீட்டுமனை அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கான தொழில் செய்யும் வியாபாரச் சரக்குகளாக, சேவைத் தொழில்களாக மாற்றிக் கொடுக்கும் தரகு வேலையைச் செய்கிறார்கள். கொள்ளை இலாபத்துக்காக இடைவிடாது தமது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போகும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது கொள்ளைக்காக வங்கி, காப்பீட்டுத் துறை, பங்குச் சந்தைத் தரகுத் தொழில் போன்றவற்றையும் நிதிச் சேவைத் தொழில்கள் என்ற பெயரில் விரிபடுத்திக்கொண்டே போகிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளிகளின் தரகர்களான அரசும் ஆட்சியாளர்களும் தங்களை பொது ஊழியர்கள்/அரசு ஊழியர்கள் என்று நம்பச் சொல்லுகிறார்கள். ஆனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் துரோகம் செய்து, தாம் ஆதாயம் அடைவதையே தொழிலாகச் செய்து கொண்டிருப்பவர்களை பொது ஊழியர்கள் என்று சித்தரிக்கும் மிகவும் தவறானதொரு, மோசமானதொரு கருத்தாக்கம் பரப்பப்படுகிறது. அவர்கள் மக்களுடைய அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகளைத் தாமே நிறைவேற்றித்தராதது மட்டுமல்ல, மக்களுக்கே சொந்தமான நீர், நிலம், கடல், மணல், பாறைகள், காடுகள், மலைகள், அவற்றுக்குள் புதைந்திருக்கும்  கனிம வளங்கள் அனைத்தையும் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்குத் தாரை வார்க்கிறார்கள்.  கார்ப்பரேட் முதலாளிகளின்  கொள்ளை வெறியால் இந்த இயற்கை வளங்கள் வரம்பில்லாமல் சூறையாடப்படுகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக மலைவாழ் பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்கள், சிறுவியாபாரிகள், நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் உதிரிப்பாட்டாளிகள் நெசவாளிகள், கைவினைஞர்கள் ஆகியோரின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டுத் துரத்தப்படுகிறார்கள். நம் தொழிலாளர்களின் உழைக்கும் உரிமையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தயவிற்கு விடப்பட்டுவிட்டன. பல இலட்சக்கணக்கான சில்லரை வியாபாரிகளை விரட்டி விட்டு, சில்லரை வர்த்தகத்தை  கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். முன்பேர வர்த்தகம், இணையதள வர்த்தகம், பெரு விவசாயிகளுடன் ஒப்பந்த உற்பத்தி, பெரும் கிடங்குகளில் நவீன வசதிகளுடன் பதுக்கல் ஆகியவற்றின் மூலம் சந்தையைக் கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். நுகர்வோர் மற்றும் நாட்டின் சந்தையை ஆட்டிப் படைக்கும் வல்லமை மிக்கவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் ஆகிவிட்டார்கள்.

நாட்டின் ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்க முடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின்  உச்ச நிலையை எட்டிவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள் தொகையில் முக்கால் பங்குக்கும் மேலான இம்மக்கள் வாழத் தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச் சிறுபான்மையினர் மீது பாசிசப் பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் ஆகியவை பெருகி நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. அவற்றுக்கு வழமையான வழக்கு மன்றங்களில் நீதி கிடைக்காதென்பது உறுதியாகிவிட்டது.  புதிய சிறப்புச் சட்டங்களும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களும் சிறப்பு விசாரனை ஆணையங்களும் அமைக்கப்பட்டு, அவையும் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கிடப்பில் போட்டு, ஊற்றிமூடுவதற்கான குறுக்கு வழிகளாகிவிட்டன.

இந்தியாவின் அரைக்காலனிய, பின்தங்கிய அரை நிலவுடைமை சமூக அமைப்பிலும், தரகு அதிகாரவர்க்க முதலாளிய அரசியல் அமைப்பிலும் புகுத்தப்படும் இத்தகைய சீரழிவுப் போக்குகள் இங்கிருந்த அரசியல், பொருளாதார, சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கி விட்டன. இவை ஒரு உச்ச நிலையை எட்டி, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது. எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வுகாண முடியாதவாறு அரசும் சமூகமும் சிக்கித் திணறுகின்றன. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு சிக்கல்கள் எல்லாமே தீர்வு காணமுடியாதவாறு ஒரு முட்டுச்சந்தில் போய் நின்றுவிட்டன. ஒவ்வொரு பிரச்சினையும் இந்த நிலையை எட்டிவிட்டதால், முதலாளித்துவ அறிவாளிகளே  இப்போது ஒரு கட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டுவிட்டதை ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது தீர்வுகாண முடியாத சிக்கல்கள் என்று ஏதோ ஒரு சில மட்டும் இல்லை. எல்லா சிக்கல்களுமே தற்போதைய கட்டமைப்புக்குள் தீர்வுகாண முடியாதவையாக வளர்ந்து விட்டன. அதுமட்டுமல்ல, தற்போதைய கட்டமைப்பு நீடிக்கவும் முடியாத நிலையை எட்டிவிட்டதையே இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் காட்டுகின்றன.

ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியிழந்துவிட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய் மற்றும் நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்டன. ஆனால், அவை வீழ்த்தப்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் திரள் அமைப்புகளும் இயக்கங்களும் அவற்றை வீழ்த்தும் அளவுக்கு இப்போதைக்கு பலம்கொண்டவையாக இல்லை. இந்த நிலையில் மக்கள் செய்யவேண்டியது என்ன? அதற்கான பலத்தை திரட்ட வேண்டும். வேண்டாத அந்தச் சுமையை இனிமேலும் தூக்கிச்  சுமக்க வேண்டியதில்லை. கீழே இறக்கிப்போடவேண்டும். அதிகாரம் அனைத்தையும் மக்களே கைப்பற்றிக்கொள்ளும் மாற்று அரசியல் கட்டுமானங்களைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்!

நமது நாட்டை மீளமுடியாத அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூக நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில் நீடிக்கத் தகுதியற்றவை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத, மக்களின் உரிமைகளை மறுக்கும்  அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில்  நீடிக்கத் தகுதியற்றவை. நாட்டின் எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்கும் தீர்வாக மாபெரும்  மக்கள் எழுச்சிகளின் மூலம்  மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்போதுள்ள அரசுக் கட்டமைப்பைக் கலைத்துவிட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான, உண்மையில் ஜனநாயகத் தன்மையுடைய மாற்று அரசுக் கட்டமைவை நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்குப் பொருத்தமான மைய ஏற்பாடாக ஒரு பொது அமைப்பைக் கட்டி, அதற்குப் பொருத்தமான முழக்கங்களை வகுத்து, மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் புதிய, சரியான அவசியமான, அரசியல் கடமையாக அமையும்.

இப்போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஒர் உச்ச நிலையை எட்டிவிட்டதையும், அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டதையும் நமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத்  தட்டிக்கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு எதிராக சவால் விடவும் மக்கள் ஒன்று திரள வேண்டும். அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ளும் அவசியத்தை வலியுறுத்தவேண்டும். இச்செய்தியை மையமாகக் கொண்ட மக்கள் இயக்கங்கள் கட்டி அமைக்கப்பட வேண்டும். அதைவிட்டு தனித்தனி சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளையும் கோரிக்கைகளையும் முழக்கங்களையும் முன்வைத்து, தனித்தனி இயக்கங்களுக்கும் மக்களைத் திரட்டினால் போதாது. இவற்றைச் செய்யக்கூடாது என்று நாம் சொல்லவில்லை. இவை மட்டும் போதாது என்றுதான் கூறுகிறோம். ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்குமான, கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக மக்களே  அதிகாரத்தைக் கைப்பற்றும் இயக்கமாக மக்கள் அதிகாரம்  – People’s Power என்ற ஒரு பொது அரசியல் அரங்கத்தை, ஒரு பொது அரசியல் அமைப்பைக் கட்டி, அதற்கான முழக்கங்களை வகுத்து, புதிய, சரியான அவசியமான, மைய இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் எந்தவொரு முற்போக்கான இயக்கத்திற்குரிய பொறுப்பும் கடமையுமாக இருக்கிறது. 

இந்த உண்மையை மக்களிடையே சொல்லி தற்போதைய கட்டுமானங்களை முழுவதுமாக கலைத்துவிட்டு, நீக்கிவிட்டு புதியஅரசுக் கடடுமானங்களை, மக்கள் அதிகாரத்தைத் தாமே நிறுவிக்கொள்வதற்கான எழுச்சிக்கு மக்களைத் தயாரிக்கவேண்டும். தற்போதைய அரசுக் கட்டுமானங்களுக்கு எதிராக அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள்,  அரசியல் எழுச்சிகளைக் கட்டமைக்க வேண்டும்.  இந்த வளர்ச்சிப்போக்கில் மக்களின் தயார்நிலை, அமைப்பு பலம் ஆகியவற்றைப் பொருத்து பல்வேறு போராட்டங்களை வளர்த்தெடுக்கப்படவேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கும் எழுச்சிக்கும் தலைமை தாங்கும் உறுப்புகள்தாம் தற்போதைய கட்டுமானங்களுக்கு மாற்றாக அமையும்.

அதாவது தற்பேதைய அரசுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தையும் மக்கள் சொத்தையும் தின்றுகொழுப்பவை. இவை நமது நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத பெருஞ்சுமையாக மாறிப்போய்விட்டன. அவை இனிமேலும் நீடிக்கக் கூடாதவையாகி விட்டன. அவற்றை முழுமையாக  மாற்றி அமைப்பதற்கான அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள், அரசியல் எழுச்சிகளை அனைத்துக் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் நடத்தவேண்டும். அதன் மூலம் தற்பேதைய அரசின் வன்முறை அமைப்புகள் உட்பட அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யவேண்டும்.

ஆளும் அருகதை இழுந்துவிட்ட இன்றைய அரசுக் கட்டமைப்புக்கு எதிரான போராட்டங்களினூடாக, அவற்றைத்  தலைமையேற்று நடத்தும் அமைப்புகளை எல்லா கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளாகப் பரிணமிக்கச் செய்யவேண்டும். இந்த மக்கள் அதிகார அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு தொடரும் மக்கள் எழுச்சியின் வளர்ச்சிப்போக்கில் “இடைக்கால (தற்காலிக மாற்று) மக்கள் அரசு” போன்ற பல்வேறு வடிவங்களை உருவாக்க வேண்டும்.

தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க  போலீசு நிர்வாக அமைப்புக்கும் பதிலாக, நேரடியாக மக்கள் பங்கேற்கும் அதிகார, நிர்வாக அரசியல் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக யாரோ சிலர் அரசு நிர்வாகம் உட்பட ஏதாவது நல்லது செய்வார்கள் என்று பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது. அரசு நிர்வாகத்தை மக்கள் நேரடியாகக் கண்கானிக்கும், தவறுசெய்பவர்களை மக்களே தண்டிக்கும் முறைகள் வேண்டும். அப்பொழுது தான் இலஞ்சஊழல், அதிகார முறைகேடுளைத் தடுக்கமுடியும். இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் “சட்டத்தையும் அதிகாரத்தையும் மக்கள் தம் கையிலெடுத்து கொள்ளக்கூடாது, அதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று ஆளும் வர்க்கத்தினரும் அரசு அதிகார வர்க்க  போலீசு நிர்வாகத்தினரும் திரும்பத் திரும்ப கொதித்துப் போகிறார்கள். அதிகாரம் பற்றிய பிரச்சினைதான், அது யாரிடமிருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அதிகாரம் மக்களிடம் தான் இருக்கவேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். இது ஒரு புதிய அரசியல். தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க  போலீசு நிர்வாக அமைப்புக்கும் பதிலாக உருவாக்கப்படவேண்டிய புதிய அரசியல்.

அரசியல் கட்டமைப்பு  நெருக்கடியால் எழும் பிரச்சினைகளுக்கு தேர்தலை இன்னமும் ஒரு தீர்வாக ஆட்சியாளர்கள் நம்பச்சொல்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்று வாய் ஓயாது வாதிடுகிறாகள். ஏன் உறுதியான தன்மை அவசியம், ஏன் உறுதியான தலைமை தேவை, யார் அதைத் தர முடியும் என்றும் வித்தாரம் பேசுகிறாகள். தோற்று, காலாவதியாகிவிட்ட இந்திக் கட்டமைப்புக்குள்ளாகவே தாங்கள் ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எல்லாம் சரியாக நடக்கும் என்று ஒவ்வொரு கட்சியும் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன. தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பு நெருக்கடிக்கு இவர்களோ, தேர்தலோ தீர்வு அல்ல. கட்டமைப்புக்கு பதிலாக, முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை; ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம்தான் அதை உருவாக்க முடியும்.

இப்பொழுது மக்களுக்கு அண்மையிலுள்ள பிரச்சினைகளுக்கும், மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் என்ன தீர்வு? மக்கள் போராட்டங்கள் முன்@னற முன்@னற தற்போதைய அரசுக் கட்டமைப்பைக் கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக என்னென்ன கட்டுமானங்களை வைப்பது என்ற கேள்விகள் எழும்போது, விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற வர்க்க ரீதியிலும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மீனவர்கள், பழங்கடியினர், சிறு வணிகர்கள் என்று வெவ்வேறு பிரிவு மக்கள் திரளுக்கான அமைப்புகள் போதாதவையாக உள்ளன. இந்தப் பிரிவுகளைக் கடந்து பெருந்திரளான மக்களைத் திரட்டும் அரசியல் அமைப்பு தேவை. அது அரசியல் ரீதியிலான புதிய அமைப்பாக,  மக்களின் அதிகாரத்திற்காகப் போராடும் அமைப்பாக இருக்கவேண்டும். தற்போதைய கட்டமைப்பு தீராத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது. இதை நீக்கிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதை ஏற்கும் மக்கள் அனைவரையும் ஓர் பொதுமேடையாகிய மைய அமைப்புக்குள் கொண்டு வந்து, மக்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத்தரும், அரசியல் ரீதியிலான இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. இவ்வாறுதான் இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வுகளை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

இப்போதிருந்து ஆளும் வர்க்கங்களின் அரசையும், ஆட்சி உரிமையையும் எதிர்த்து கேள்விக்குள்ளாக்குவதாக, சவால்விடுவதாக மாற்றியமைப்பதாக மைய அரசியல் இயக்கம் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை மாற்றும் வேலையை ஓட்டுக்கட்சி அரசியல் மூலம் செய்யமுடியாது. போர்க்குணமிக்க மக்கள் போராட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சி மூலம் அதனைச்  செய்யவேண்டும் இது மக்களுக்கு எளிதாகப் புரியக்கூடியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமாகும்

1. நெருக்கடிகள் முற்றி, பொருளாதாரம் வெடித்துச் சிதறும் நிலையை எட்டியுள்ளது :

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து 1947 அதிகார மாற்றத்துக்குப் பிறகு, 1962 இந்தியா – சீனப் போரைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்திய அரசியல், பொருளாதார அமைப்பின் பலவீனங்கள் அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கிவிட்டன. ஒரு குறுகிய காலத்திலேயே இந்தியப் பொருளாதாரம் தேக்க வீக்க நிலையை எட்டியது. 1990-களின் தொடக்கத்தில் பொருளாதார நெருக்கடி மேலும் கடுமையாகியது. வளைகுடாப் போர், பெட்ரோலிய எண்ணெய் இறுக்குமதிச் செலவு ஊதிப்பெருகியது, ஏற்றுமதி வீழ்ச்சி, அன்னியச் செலாவணி வற்றிப்போனது, முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து மூலதனத்தைத் திருப்பி அள்ளிக்கொண்டு போனது ஆகியவை காரணமாக நடப்பு நிதிப் பற்றாக்குறை மிகையளவுக்குப் பெருகியது. இந்தியப் பொருளாதாரமே திவாலாகிவிடும் நிலையை எட்டியது. மத்திய அரசுபுதிய கடன்கள் பெறுவதற்கு ரிசர்வ்வங்கி தடையும் விதித்தது.

நாடு முழுவதும் பீதியும் ஆத்திரமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இந்தியாவைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக மேலும் கடனை வாங்கியது. அதோடு நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்துக்கான பாதை என்கிற பெயரில் ஏகாதிபத்தியம், உலக வங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை திணித்த உலகமயமாக்கம், மறுகாலனியாக்கம், பொருளாதார சீரமைப்பு, கட்டுமானச் சீரமைப்பு முதலிய நிபந்தனைகளை காங்கிரசின் நரசிம்மராவ் அரசாங்கம் தண்டனிட்டு ஏற்றது. அப்போது புகுத்தப்பட்ட தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் ஆகிய புதிய பெருளாதாரக் கொள்கை, அந்நிய, உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளியக் கொள்ளை மற்றும் மறுகாலனியாக்கம்  ஆகியவை மூன்று பத்தாண்டுகளுக்குள் முன்பைவிட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவந்து விட்டன. 2007ஆம் ஆண்டு தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் முழு வீச்சில் இந்தியாவையும் எட்டியது.

அதே சமயம், ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சி, அந்நிய செலாவணிக்  கையிருப்புச் சரிவு, தொழில் வளர்ச்சிப் பின்னடைவு, நிதிப் பற்றாக்குறை பெருகியது; அந்நிய மூலதனத்துக்கு நாட்டைப் பெருமளவு திறந்து விட்டும் வெளிநாடுகளுக்குக் காவடி தூக்கியும் பொருளாதாரத் தேக்கநிலை மாறவில்லை. இது குறித்து அப்போது நாட்டை ஆண்ட மன்மோகன் – மான்டேக்சிங் – சிதம்பரம் கும்பல் அப்பட்டமாக ஒப்பாரி வைத்தது. இவை அனைத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கிய இந்தோனேசியா, மெக்சிகோ, கிரீஸ் முதலான பல நாடுகளின் பொருளாதாரம் திவாலாகிப் போனதைப் போல இந்தியாவிலும் நடப்பதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்று காட்டின. பொருளாதார வளர்ச்சியில் சீனத்துடன் போட்டி போடுவதாகக் கூறப்பட்ட இந்தியாவின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடும் வீழ்ச்சி கண்டது. அதைத் தொடர்ந்து பொதுவில் ரூபாய் மதிப்பைக் குறைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டும், இந்தியப் பொருளாதாரமே திவாலாகி விடும் நிலையை எதிர் நோக்கியிருந்தது.

இந்தியப் பொருளாதாரத்தில் நீடித்த தேக்க – வீக்கம், பணவீக்கம் காரணமாக விலையேற்றம், ஏற்றுமதி இறக்குமதி சமன்பாட்டில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உற்பத்தித் துறையில் கடும்வீழ்ச்சி, ஆலை மூடல்கள் ஆகிய நெருக்கடிகள் தொடங்கிய போதே பெரும் ஊழல் விவகாரங்கள் அம்பலப்பட்டு நாடே நாறியது. இந்த ஊழல் விவகாரங்கள் பலவும் மூடிமறைக்கப்பட்டன அல்லது அவை தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. இவற்றினிடையே நாட்டு மக்கள் எதிர்த்தபோதும் மறுகாலனியாக்கம் மற்றும் புதியபொருளாதாரக் கொள்கைளை அமலாக்குவதில் சோனியா – மன்மோகன் – மான்டேக்சிங் – சிதம்பரம் கும்பல் அழுந்தி நின்றது. இதன் விளைவாக அக்கும்பலின் அரசியல் வீழ்ச்சியை நாடே கண்டது.

அடுத்து வந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க மோடி கும்பலின் ஆட்சியில் அன்னிய, உள்நாட்டு முதலீடுகளைத் தாராளமாக அனுமதித்து, வரி வட்டிக் குறைப்பு செய்து, சந்தையைப் பரவலாக்கினால் தமது தொழில்வளர்ச்சி சீராகும், அதற்கான அரசியல், பொருளாதார நிலைமைகள் உறுதியானதாக அமையும் என்று மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் நம்புகின்றனர். ஆனால், கார்ப்பரேட் தரகு முதலாளிகளை இழுவை எந்திரமாகக் கொண்டு இயங்கும் பொருளாதாரத்தில் இலாபவெறியும் லஞ்சம் – ஊழலுமே அதன் எரிசக்தியாக இருக்கிறது. முதலீட்டுக்கான ஊழலைச் சாதகமாக்கி விடுவதனால், அந்நிய முதலீடுகளுக்கான தாராள அனுமதி வழங்குவதனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதனால் பொருளாதாரத்தில் நேர்ந்துள்ள பின்னடைவை சரிசெய்து, முன்னேற்றி விடமுடியும் என்கிறார்கள். சீனாவைப்போல நுகர்பொருள் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவதன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தியை சாதனையளவுக்கு அதிகப்படுத்தி, நாட்டை பொருளாதார வல்லரசாக்கிவிட முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள்.

ஆனால், உலகச் சந்தையில் சீனா, வங்கதேசம், மற்றும் கிழக்காசிய, தென்அமெரிக்க நாடுகளின்  மலிவான உழைப்புச் சக்தி, மேலைநாடுகள் பின்பற்றிய வர்த்தகக் காப்புக்கொள்கை, உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணமாக ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் விரைவில் வற்றிப்போயின. இனி உள்நாட்டுச் சந்தையை நம்பியே இந்தியப்  பொருளாதாரம் சுழலவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருந்தபோதும், புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டபோது அமெரிக்காவைப் போன்று இந்தியாவில் வாங்கும் சக்தி குறிப்பிடத்தக்க அளவு இருந்தபோதும், விரைவிலேயே அது வற்றிப்போய்விட்டது. குறிப்பாக, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள். அவர்களின் பொருளாதார வலிமையைத்தக்க வைத்து, வளர்ப்பதற்குப் பதிலாக, புதிய பொருளாதாரக் கொள்கை விவசாயத்தைத் திவாலாக்கியது. பெருமளவிலான மக்களை விவசாயத்திலிருந்து கிராமப்புறங்களில் இருந்தும் வெளியேற்றியது. இலட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் மட்டுமல்ல பணக்கார விவசாயிகளும்கூட தீராக்கடனில் சிக்கிக்கொண்டு, பலர் தற்கொலை செய்துகொண்டனர். கூலி, ஏழை விவசாயிகள் விவசாய வேலையின்றி கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்பட்டனர். இலாபகரமாக இல்லையென்றால், விவசாயிகள் தமது நிலத்தை விற்றுவிட்டு நகர்ப்புறங்களுக்கு வந்துவிடவேண்டும் என்றும், நகர்ப்புறங்கள் பெருகுவதே பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்றும் நாட்டின் பிரதமர்கள் உபதேசித்தார்கள்.

அரசு, கார்ப்பரேட் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகிய அமைப்பு ரீதியிலான மாதச் சம்பளக்காரர்களுக்கு ஊதியம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது. ஏராளமாகக் கடன்கள் வாரிவழங்கப்பட்டன. இவ்வாறு குறுகிய அளவு விரிவாக்கப்பட்ட வாங்கும் சக்தியை, உலகமயமாக்கம் காரணமாக இந்தியச் சந்தையை நிரப்பிய அந்நியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் நுகர்பொருட்கள், அவர்களே பரப்பிய கலாச்சாரத்தின் விளைவாகக் கபளீகரம்செய்துவிட்டன. இந்தியச் சந்தை விரைவிலேயே ஒரு நிறைவு நிலையை எட்டியது. நாட்டில் 10, 15 சதவீதமேயுள்ள அரசு ஊழியர்கள்,  மேல்தட்டு வர்க்கத்தினரையே பெரும்பாலும் சார்ந்த  நுகர்பொருட்களுக்கான பொருளாதாரமாக சிதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய உற்பத்திப் பொருட்களுக்கான வெளிநாட்டு, உள்நாட்டு சந்தைகள் இரண்டுமே சுருங்கிப்போய் விட்டது. இதன் விளைவாக பொருளுற்பத்தியில் தேக்கமும் பின்னடைவும் எற்பட்டு, கூடவே, பணவீக்கம், அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் ஆகியவையும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

இந்த அடிப்படைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாற்று வழி எதுவுமின்றியே மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பல் நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் சாதிக்கப்போவதாக வாக்களித்தது. ஆனால், அக்கும்பல்  ஆட்சிக்கு வந்ததிலிருந்து “மன்மோகனாமிக்சின்” மறுஅவதாரம்தான் “மோடினாமிக்ஸ்” என்பதை நிரூபிக்கும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ ஆயுத உற்பத்தி, வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் அன்னிய முதலீடு, தொழில் கூட்டுக்கு  இருந்த தாமதங்களை. தடைகளை நீக்கி மக்கள் வாழ்வுரிமைகளை மேலும் பறிப்பதற்கான இலக்குகளை குறித்துவிட்டது.

 2. தேர்தல் அரசியல் கட்டுமானச் சீரழிவு :

இப்போது எந்த தேர்தல் அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும்,தேசியம், திராவிடம், சோசலிசம், முற்போக்கு, சமூகநீதி, காந்தியம், மனிதநேயம் முதலான கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் எதுவும் கிடையாது. அவை எல்லாவற்றிலும் பிழைப்புவாதமும் இலவசங்களும்தாம் செல்வாக்கு செலுத்துகின்றன. தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் வந்த பிறகு, உள்நாட்டு, தேசங்கடந்த தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகளைச் சார்ந்த பொருளாதாரமே வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான ஒரே பாதை என்பதாக நாடாளுமன்றக் கம்யூனிசக் கட்சிகள் உட்பட எல்லாத் தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கை, கோட்பாடாகி விட்டது. முன்பு இராஜாஜி  – காமராசர் காலத்தில் சாதி, மதத் தலைவர்கள்  தேர்தல் அரசியல் கட்சிகளில் ஆதிக்கம் வகித்தனர்; அவர்களோடு இப்போது, எந்தவழியிலாவது பணம் – செல்வம் – சொத்துச் சேர்ப்பது, சுகபோகங்களில் புரள்வது, ஆடம்பரங்களில் மூழ்கித் திழைப்பது, பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பது என்பதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவர்களே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் பிரமுகர்களாகவும் உள்ளனர். இதற்கேற்ப ஒட்டுமொத்த சமுதாயத்தையே பண்பாட்டு ரீதியில் சீரழிக்கிறார்கள். இவற்றுக்காக எல்லாவிதக் கிரிமினல் குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.தற்போது நிலவும் கட்டமைபுக்குள் இதைத் தகர்ப்பதற்கான வழிவகையின்றி நாடு திணறுகிறது.

தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் தொகையைத்தான் வேட்பாளர்கள் செலவுசெய்யவேண்டும், வாக்காளர்களுக்குப்பணம் கொடுப்பதோ, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதோ, சாதி, மத அடிப்படையில் வாக்குச் சேகரிப்பதோ கூடாது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் வெறும் கண்துடைப்புகள்தாம் என்பதை இப்போது மக்கள் அனைவரும் அறிவர். உள்ளூராட்சித் தலைவர்கள் முதல் பிரதமர் வரை எல்லாமட்டங்களிலும் உள்ளவர்கள் அரசு ஒப்பந்தக்காரர்கள், மணல் கொள்ளையர்கள், அலைக்கற்றை, நிலக்கரி முதலிய இயற்கை வளக்கொள்ளையர்கள் மற்றும் அந்நிய, உள்நாட்டுக் கார்ப்பரேட் கொள்ளையர்களுடன், கிரிமினல் குற்றக்கும்பல்களுடன் நெருங்கிய கள்ளக்கூட்டு வைத்துள்ளவர்கள். “மக்கள் பிரதிகள்” மட்டுமல்ல போலீசு, நீதிபதிகள் என எல்லோருமே விலைபோகப் கூடியவர்கள். ஜெயலலிதா முதல் நரசிம்மராவ், மன்மோகன்சிங் வரை எம்.பி.களை விலைக்கு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட கோடி கோடியான பணம் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் கொட்டப்பட்டபோதும், சர்வ கட்சியினரும் ஹவாலாப் பணம் பெற்றதாக ஜெயின் டயரி பிடிபட்டபோதும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஹெலிகாப்டர், நீர்மூழ்கிக் கப்பல், பீரங்கிகள், போர் விமானங்கள் என்று இராணுவக் கொள்வனவுகள் முதல் அரசுத் திட்டங்கள் எவையும் இலஞ்ச – ஊழல், அரசுச் சொத்துக்களைச் சூறையாடப்படாதவை இல்லை. அரசியல்வாதிகள் – அதிகாரிகள் – போலீசுக்காரன்கள் அடங்கிய முக்கூட்டு நாட்டின் பேராபத்துக்களில் ஒன்றாகிப் பல ஆண்டுகளாகிவிட்டன.

தேர்தல் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், தேர்தல் அரசியல் கட்டுமானங்கள் மட்டுமே சீரழிந்து போயுள்ளதாகவும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் பலர் எண்ணுகிறார்கள். ஆனால், இவை மட்டுமின்றி, அரசின் ஒட்டுமொத்தக் கட்டுமானங்களுமே சீரழிந்து போயுள்ளன. கட்டமைப்பு முழுவதுமே நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அவை இனிமேலும் நீடிக்க முடியாதனவாகவும் சீர்திருத்தி, நாட்டின் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளவே முடியாத நிலையையும் எட்டிவிட்டன. அரசும் ஆட்சியாளர்களும் ஆளும்வர்க்கங்களும் ஆளமுடியாமல் போனதையும், ஆளும் நியாயவுரிமையை இழந்துவிட்டதையும், ஆளத்தகுதியிழந்து போயுள்ளதையும் காண்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்குள்ளும் கட்டமைப்புக்குள்ளும்கூட கடுமையான சிக்கல்களும் நெருக்கடிகளும் வந்துவிட்டன. இரண்டு இலக்கப்  பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட வேண்டும், அதை நீடித்திருப்பதாகச் செய்யவேண்டும், அந்நிய முதலீடுகளை பெருமளவு ஈர்க்க வேண்டும் என்பது ஆளும்வர்க்கங்களின் நோக்கம். ஆனால் அதை அடைவதிலும் சிக்கல்களும் தடைகளும் ஏற்பட்டுள்ளன.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் முதலான புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகத் தோன்றிய ஏராளமான புதிய தரகு முதலாளிகள் எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளிலும் செல்வாக்குச் செலுத்துபவர்களாகவும் முக்கியப் பிரமுகர்களாகவும் உள்ளனர். இவர்களில் சிலர் சொந்தமாக அரசியல் கட்சிகளையும் வைத்துக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட புதிய தரகு முதலாளிகளும் தாம் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை வாரி இரைத்து தங்களுக்கும், தமது பினாமிகளுக்கும் நாடாளுமன்ற  சட்டமன்ற வேட்பாளர் சீட்டுக்களையும், மேலவை உறுப்பினர், மற்றும் மந்திரி பதவிகளையும் விலைக்கு வாங்குகிறார்கள். தேர்தல் அரசியல் கட்சிகள் மூலமாக இல்லாமல் நேரடியாகவே, புதிய தரகு முதலாளிகள் மட்டுமல்லாமல் காப்பரேட் முதலாளிகளும் இவ்வாறு செய்கிறார்கள். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளுமே தமது வேட்பாளர் தேர்வின்போது இலஞ்சம் வாங்கிக்கொள்வதோடு, தேர்தல்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு செலவு செய்யமுடியும் என்ற அடிப்படையிலேயே சீட்டுகள் தருகின்றன. அதனால், இப்போது வேட்பாளர்கள் அறிவிக்கும் தமது சொத்து மதிப்பு பிரமிப்பூட்டுமாறு கோடிக்கணக்குக்கு எகிறிவிட்டது. அடுத்து இப்போது தேர்தல்களில் போட்டியிடுவதற்கான முக்கியத் தகுதிகளாக பணத்தோடு சாதி, மதச் செல்வாக்கும் அடியாள் பலமும் கிரிமினல் குற்றவழக்குகளின் எண்ணிக்கையும் உள்ளன.

எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளுமே  பிழைப்புவாத, மறுகாலனியாக்க அடிமைக் கட்சிகளாகவும், புதிய தரகு முதலாளிகளாகவும் உள்ளதால் அவர்களிடையே குறிப்பிட்டுச் சொல்லும்படியான கொள்கை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், தேர்தல்களில் வெல்லவும் பதவிகளைக் கைப்பற்றவும் தீராத நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றன. இதனால் சாதி, மத, இன, மொழி ரீதியாகப் பிளவுபட்டுள்ள இந்திய சமூகத்தில் அனைத்து மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக எதுவும் நீடித்திருக்க முடியவில்லை. அதனால், தேர்தல் அரசியல் கட்சிகள். சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. சாதி, மத வெறியைத் தூண்டி அல்லது ரவுடிகள் பலம், பணபலம் (வோட்டுக்குப் பணம்) ஆகியவற்றை வைத்து ஆட்சியைப் பிடிக்கின்றனர்.  அதேசமயம் நாடாளுமன்றமும், சட்ட மன்றங்களும், நகரவைகளும் தேர்தல் அராஜகங்களால் நிரம்பி ஜனநாயகம் என்பதே கேலிக்கூத்தாகவும், திவாலாகிப் போனவையாகவும்  உள்ளன.

3. கட்டுமானச் சீரமைப்பு என்ற பெயரில் புதிய அதிகார மையங்களாக சிந்தனைக் குழாம்கள், அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள்

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களும் மற்றும் பிற மக்கள் பிரதிநிதித்துவப் போலி ஜனநாயக அமைப்புகளும்கூட ஓரங்கட்டப்பட்டு, கட்டுமானச் சீரமைப்பு என்ற பெயரில் ஆளும் வர்க்கங்கள் தற்போதைய அரசியல் கட்டுமானங்களுக்குப் புதுப்புது மாற்றுக்களை உருவாக்கி வருகின்றன. ஏகாதிபத்திய உலகமயமாக்கம் திணித்த புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசியல் கட்டுமானச்  சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள்  கொண்டுவரப்பட்டன. இதனால்தான், இந்தியாவில் ஆட்சிகள் எவையானாலும் அவை அமலாக்கிவரும் புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்பின் முக்கியமான கூறாக அரசின் முறைசாரா அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

அதேசமயம், அரசின்முறை சார்ந்த அமைப்புகளின் மிக முக்கிய அங்கமாகவும் ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கும் அதிகார வர்க்கத்தை இந்தக் கட்டுமானச் சீரமைப்பு ஒழிப்பதில்லை. மாறாக, அதற்கு மேலும் மேலும், அதிகாரம் கொடுக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற அதிகார வர்க்க நபர்களை ஒழுங்குமுறை ஆணையங்கள், சிறப்பு ஆலோசகர்கள், நிபுணர் குழுக்கள் என்ற பெயரில் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு மேல்நிறுத்தப்படுகிறார்கள். மேலும்பலமுன்னாள் அரசு அதிகாரவர்க்கத்தினர் தரகு முதலாளிகளின், பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும்பதவியளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஓய்வுபெற்ற பிறகும் அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து   கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊழியம் செய்து எல்லா இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளுக்குமான ஊடகமாகச் செயல்படுகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரம், சமூக, மருத்துவம் சுகாதாரம், கல்வி – பண்பாடு உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் ‘கொள்கை’ முடிவெடுக்கவும் ‘திட்டங்கள்’ வகுக்கவும் பொறுப்பேற்கும் வகையில் புதிய கட்டுமானங்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக சிந்தனைக் குழாம்கள் (‘திங்க் டாங்க்ஸ்’): அதாவது ஆலோசனை வியாபாரிகள். சிந்தனைக் குழாம்கள் (அல்லது ஒரு கொள்கை வகுப்புக் கழகம், ஆய்வுக் கழகம் மற்றும் பிற) என்பவை சமூகக் கொள்கைகள், அரசியல் போர்த்தந்திரம், பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், பண்பாடு முதலான துறைகளில் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் செய்யும் ஒரு அமைப்பாகும். அரசுக்கும், தொழிலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான ஆய்வுகளும், ஆலோசனைகளும் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும்  சேவை நிறுவனங்கள். இந்திய அரசின் அயலுறவுத்துறை, போலீசு, இராணுவத்துறை, பல்கலைக் கழகக் கல்வி, உணவுப் பதனிடும் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சட்டச் சீர்திருத்தங்கள், தொழிலுறவு, அரசு நிர்வாக சீர்திருத்தங்கள், அவற்றைக் கனினிமயமாக்கம்நவீனமயமாக்கம் செய்தல் இப்படிப்பன்முகப்பணிகளில் ஆலோசனைகள் வழங்குவதில் இந்தச் சிந்தனைக் குழாம்கள் ஈடுபடுகின்றன.

சிந்தனைக் குழாம்கள் எப்போதும் தனித்துச் செயல்படுவதில்லை. சிந்தனைக் குழாம்களும் அரசுசாராதொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமை சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் செயல்படுகின்றன. சிந்தனைக் குழாம்களுக்குத் தேவையான கள ஆய்வுகள் செய்வது, தகவல்களைத் திரட்டித் தருவது, அவை பரிந்துரைக்கும் கொள்கைளையும், திட்டங்களையும் அரசே ஏற்கச் செய்யும் அழுத்தம் கொடுக்கும் இயக்கங்களைக் கட்டமைப்பது, அவற்றின் அமலாக்கத்தில்  பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது என்று பலவாறு அரசுசாராத் தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமை சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

பல்வேறு பிரிவு மக்களுடைய அடையாள அரசியல் சார்ந்த பகுதிக் கோரிக்கைகள், வாழ்வியல் உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பிற சமூகச் சீர்திருத்தங்களுக்கான செயல் திட்டங்களைத்தாம்  அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள்(NGOs) முதன்மையாகக் கொண்டிருந்தன. பொதுவில் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்களிடையே நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பிழைப்புவாத நோக்கிலான கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்பு மக்களைத் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் திரட்டி வந்தனர். ஆனால், இவை அவற்றின் ஏகாதிபத்திய எஜமானர்களுடைய பன்னாட்டு அரசியல் நலன்களுக்கு இப்போது போதுமானவையாக இல்லை. எனவே, அரசுசாராத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கிய குடிமைச் சமூகங்கள் (Civil Society Organisations) என்ற புதிய மேடைகளை ஏகாதிபத்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் கடந்த காலத்தில் செயல்படுத்தி வந்த அரசியல் வரம்புகளைத் தாண்டி, தற்போதுள்ள நிலைமைகளுக்குத் தகுந்தாற்போன்ற அரசுக் கட்டுமானங்களுக்கு அரசியல் மாற்றை ஏற்படுத்திக் கொடுக்கவும், அரசு அமைப்புக்குள்ளாகவே நுழைந்து அதன்கொள்கை வகுப்பு அமலாக்க அமைப்புகளில்பங்கேற்கவும் குடிமைச் சமூகங்கள் என்ற அரசியல்அமைப்புக் கருவியை ஏற்படுத்திக் கொண்டார்கள். குறைவளர்ச்சியுள்ள நாடுகளில் ஆட்சி மாற்றம் (Regime Changes) என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  உலகப் போர்த் தந்திரத்தில் குடிமைச் சமூகங்கள் முக்கிய அரசியல்அமைப்புக் கருவிகளாக உள்ளன.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையும், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்க நோக்கிலான மறுகாலனியாக்கம் என்கிற அரசியல் கொள்கையும் திணிக்கப்பட்ட பிறகு, இந்நாடுகளில் அரசின் சமூக, அரசியல், பொருளாதாரப் பாத்திரம் குறித்து புதிய விளக்கங்களும் வரையறைகளும் அளிக்கப்படுகின்றன.  “பொதுவில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு  முதலான சிலவிவகாரங்கள் தவிர சமூகம், மதம், கல்விமருத்துவம், பண்பாடு போன்றவற்றிலோ, குறிப்பாக மக்கள் நலன், திட்டமிடுதல், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதார விவகாரங்களில் அரசு தலையீடு செய்யக்கூடாது. இந்த விவகாரங்களைச் சந்தையும் சமூகமும் மூலதன நிர்வாகிகளும் (அதாவது கார்ப்பரேட் முதலாளிகளும்) கவனித்துக்கொள்வார்கள்.”

சாரமாகச் சொல்வதானால், அரசின், கடமைகள், பணிகள், வரம்புகள் குறித்த ஏகாதிபத்திய கைக் கூலிகளது பிரச்சாரம் பின்வருமாறு: “கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டுத் தொழிற் கழகங்களின் நலன்களுக்கேற்ப செயல்படும் எலும்புக் கூடு போன்றதாக மட்டுமே அரசு அமைப்பு இருக்க வேண்டும். இந்த வரம்பைத் தாண்டி அவற்றின் செயல்பாடுகளில் தலையிடுவதும் குடிமை சமூகத்தின் பொருளாதார  தொழில் உரிமைகளை மறுப்பதும் எதேச்சதிகாரமும் ஆகும்.”  அரசியல் கட்சிகளின், தலைவர்களின் இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், நம்பிக்கை துரோகங்கள், கிரிமினல் குற்றங்கள்முதலான சீரழிவுகள், அவர்களுக்கெதிரான மக்கள் வெறுப்பு ஆகியன மேற்படிப் பிரச்சாரத்துக்கு சாதகமாக அமைகின்றன. இவ்வாறு அரசும், அரசியல்கட்சித் தலைவர்களும் இழிவுற்று, சிறுமைப்பட்டுப் போகும் நிலையில், நாட்டின் அரசியல், பொருளாதார வாழ்வில் சிந்தனை குழாம்கள், குடிமைச் சமூகங்களின் பங் குபாத்திரம் அதிகரித்தன.

சிந்தனைக் குழாம்கள், குடிமை சமூகங்கள்,  அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் முதலான இவையெதுவும் பலரும் நம்புவதுபோல தனிநபர் முன்முயற்சியால் தன்னியல்பாக உருவானவை அல்ல. பன்னாட்டு தொழிற்கழகங்கள், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற நிறுவனங்கள், ஏகாதிபத்திய அரசுகளின், உள்நாட்டுவெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல், இராணுவ உளவு, சமூக, கல்விபண்பாட்டு ஆய்வு நிறுவனங்களால் திட்டமிட்டு உருவாக்கி, நெறிப்படுத்தி, இயக்கப்படுபவை. அவற்றின் அமலாக்கத்தில் பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது என்று பலவாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஊட்டிவளர்க்கப்பட்ட இந்தச் சிந்தனைக் குழாம்கள், என்.ஜி.ஓக்கள், குடிமைச் சமூகங்கள் ஆகியவை உலகின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவியிருக்கின்றன. இவை புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக, ஆய்வாளர்களாக மாற்றின. கலைஞர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை பெருநிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பின. அடையாள அரசியல், மனித உரிமைகள் என்னும் பெயரில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழல், பொதுவான சமூக முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லுகின்றன. போர்க்குணமிக்க போராட்டங்களிங் ஈடுபடும் இளைஞர்களை அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் ஆதரவாக அறவழி, காந்தியவழி என்று முடக்குகிறார்கள்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டாலர்கள் பணம் புரளும் பல லட்சம் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், அவற்றில் நமது நாட்டில் மட்டும் பலபத்தாயிரம் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், குடிமைச் சமூகங்கள் உள்ளன. அவை மிகப்பெரும்பாலும் ஐரோப்பியஅமெரிக்க ஜப்பானிய அரசு மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையை ஆண்டுதோறும் பெறுபவை. பெரிய சிந்தனைக் குழுமங்களின், அரசுசாராத் தொண்டு நிறுவனங்களின், குடிமைச் சமூகங்களின் நிர்வாகிகள் எல்லாம் கொள்ளை இலாபமடிக்கும் ஏகபோகக் கார்ப்பரேட் தொழில் கழகங்களின் தலைமை நிர்வாகிகளுக்குச் சமமான ஊதியம், சொகுசுக் கார், அடுக்குமாடி பங்களாக்கள் வசதிகளும் பெறுகிறார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேச மாநாடுகளுக்கு விமானங்களில் பறக்கிறார்கள்; பன்னாட்டு கார்ப்பரேட், நிதி நிறுவனங்களின் உயர்அதிகாரிகளின் தோளோடு தோள் உரசிக் கொண்டு உலகின் பல நாட்டு அரசுகளின்கொள்கை முடிவுகளை விவாதிக்கிறார்கள், அவற்றுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இந்தக்கொள்கை முடிவுகள் பெரும்பாலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாகவும் அந்நாடுகளின் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு எதிரானவையாகவும் இருக்கின்றன.

அதனால்தான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கைகளையோ, உள்நாட்டு வெளிநாட்டுக் கார்ப்பரேட் கொள்கைகளையோ, மறுகாலனியாக்கம் என்ற ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையோ எதிர்த்து சிந்தனைக் குழாம்கள், அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், குடிமைச் சமூகங்கள் பேசுவதோ, எழுதுவதோ கிடையாது. அரசியல் சித்தாந்த உந்துதல் ஏதுமற்ற, வெறும் பிழைப்புக்கான, வேலைவாய்ப்புக்கான இன்னொரு ஏற்பாடாக அரசுசாராத் தொண்டு அமைப்புகளையும், குடிமைச் சமூகங்களையும் பல நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆகவே, தேர்தல் அரசியல் உறுப்புகளைப் போலவே, அரசுசாராதொண்டு அமைப்புகளும், குடிமைச் சமூகங்களும் லஞ்ச ஊழலிலும், மோசடிகளிலும் கருப்புப் பணக் குவிப்பிலும் மூழ்கிச் சீரழிந்து போயுள்ளன. மக்கள் சேவை என்பது போய், அரசு அதிகாரவர்க்கத்தைப் போலவே சிகப்பு நாடாவிலும் சிக்கிமுடங்கிப்போய் விடுகின்றன.

4. நீதிபதிகளே இலஞ்ச, ஊழல், பாலியல் கிரிமினல் குற்றவாளிகளாக ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக நீதியே விற்பனை சரக்காக – நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை

கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீமன்ற நீதிபதிகள் வரை மேலும் அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு விசாரணை ஆணைய நியமனங்கள் வரை எல்லா மட்டங்களிலும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், அநீதிகள், அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். இவை இல்லாத நீதித்துறை விவகாரங்கள் இல்லவே இல்லை. போலீசையும் சமூக விரோதக் கிரிமினல்களையும் கொண்ட கூட்டணியின் ஒருமுக்கிய உறுப்பாகவே கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன. கீழமை நீதிமன்றங்களுக்கும் சமூக விரோதக் கிரிமினல்களுக்கும் இடைத் தரகர்களாகப் போலீசு செயல்படுகிறது. நீதித்துறையின் இந்தச் சீரழிவின் சிகரமாக உச்சநீதிமன்றம் விளங்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூன்றிலொரு பகுதிக்கும் மேலான தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள்; என்ற என்ற பட்டியல் புகார் விவரம் உச்சநீதிமன்றத்திலேயே நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கை போய்விடும் என்ற காரணத்தைச் சொல்லி இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது மறுக்கப்படுகிறது. அதன்பிறகு, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது பெண் வழக்குரைஞர்களாலேயே பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டது. இதேபோலத் தான் பல மாநிலங்களின் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை கடுமையான, வக்கிரமான பாலியல், ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. பெங்களூருவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட 867 நீதிபதிகளுக்கும் லோக்ஆயுக்தா அதிகாரிகளுக்கும் எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், ஒரு சமூக ஆர்வலர். அதற்காக அவர்தான் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள் உட்பட மொத்தம் 120 பேர்மீது பல்வேறு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளன. இதுவரை அவற்றின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்காது தட்டிக் கழிக்கப்படுகின்றன; அல்லது பூசி மெழுகப்படுகின்றன.

நீதிமன்றத் தீர்ப்புகளை அரசின் பிற உறுப்புகளோ, ஆட்சியாளர்களோ, கார்ப்பரேட் முதலாளிகளோ மதிப்பதே இல்லை. நெய்வேலியில் தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தமாக்கவும் மக்கள் நலப் பணியாளர்களையும் சாலைப் பணியாளர்களையும் மீண்டும் பணிய மர்த்தவும் நீதிமன்றங்கள் தீர்ப்புச் சொல்லியும் அரசாங்கம் அமலாக்க மறுக்கிறது. அதேசமயம், தமது கோரிக்கையை வலியுறுத்தித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதிக்கிறது. அவர்களை நிரந்திரமாக்கும்படி உச்ச நீதிமன்றம் உட்பட எல்லா நீதிமன்றகளும் முன்பு அளித்த தீர்ப்பை அரசாங்கம் மீறிவருவது குறித்து நீதிமன்றங்கள் ஒன்றும் செய்யவில்லை. கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்காக என்று சொல்லிக்கொண்டு அரசுப் புறம்போக்குகள், ஏரிகுளங்கள், பொதுச்சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கும்படி நீதிமன்றஙகள் உத்திரவுகள் போடுகின்றன. அரசு வாகன விபத்துகளுக்கும் அரசுகையகப்படுத்திய நிலங்களுக்கும் ஈட்டுத்தொகை அளிக்கும்படியான நீதிமன்றத் தீர்ப்புகள் போன்ற பலதையும் அரசாங்கம் அமலாக்க மறுக்குகிறது. நீதிமன்ற அவமதிப்புவழக்குப் போட்டு அரசு வாகனங்களையும், அரசு அலுவலங்களையும் பறிமுதல் செய்யும் உத்திரவுகள் போடப்படுகின்றன. இம்மாதிரியான நீதிமன்றத் தீர்ப்புகளை அரசுகளும் ஆட்சியாளர்களும் மதிக்காத, அமலாக்க மறுக்கும் விவகாரம் சிலநூறு அல்ல, ஆயிரக்கணக்கானவை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலமுறை எச்சரிக்கை விட்டும், அரசு அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விட்டும் இதே நிலைதான் நீடிக்கிறது. தலைமைச் செயலாளரையே நேரில் அழைத்து எச்சரிக்கை விட்டு, நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்க வைத்தும் இதே நிலைதான் நீடிக்கிறது. உச்ச நீதிமன்றத்திலும் இப்படித்தான் நடக்கிறது. தமிழ் நாட்டில்மட்டும் இந்த நிலை என்றில்லை. நாடுமுழுவதும் இத்தகைய போக்குகள் பன்மடங்கு அதிகமாக நடக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவதற்கும் அமலாக்காமல் இருப்பதற்கும் ஆட்சியாளர்களை வழிநடத்துவதே அரசு வழக்கறிஞர்கள் அதிகாரிகளின் வேலையாக உள்ளது.

இந்த மாதிரியான பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காகவே மனித உரிமை, நுகர்வோர், தொழிலுரிமை நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், லோக் ஆயுக்தா அமைப்புகள் முதலான பலவற்றிற்கும் பல மாநில அரசாங்கங்கள் நீதிபதிகளையே நியமிக்காது, காலியாக வைத்திருக்கின்றனர். ஆண்டுகள் பலவாகியும் தமிழகம் உட்பட  பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா எனப்படும் அதிகாரத்தில் உள்ளவர் மீதான புகார்களை விசாரிப்பதற்கான நீதிமன்றங்களே அமைக்கப்படவில்லை. நீதிபதிகள் இருந்தாலும் அதற்குரிய ஊழியர்களோ, அலுவலகத்துக்குத் தேவையான பொருட்களோ கூட ஏற்பாடு செய்யாமல் செயலிழக்கச் செய்துவிடுகின்றனர். நாட்டிலுள்ள நீதிபதிகளுக்கு என்று ஏராளமான வசதிகள், சலுகைகள், பாதுகாப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக பதவி நீக்கமோ, வேறுபிற தண்டனை நடவடிக்கைகளையோ அவ்வளவு எளிதில் எடுத்து விட முடியாது. அவர்கள் மீது வழக்குப் போடவும் தண்டிக்கவும் வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு ஒப்புதல் பெற்றுத்தான் பதவிநீக்கம் செய்ய முடியும். அவர்களை விமர்சிப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதங்கொண்டு தண்டிக்கும் எதேச்சதிகார அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் நாற்காலிகளைத் தேய்த்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள், இலட்சக்கணக்கான அல்ல, கோடிக்கணக்கான வழக்குகளை விசாரித்து முடிக்காமல் குவித்து வைத்திருக்கிறார்கள். பல வழக்குகளை பல ஆண்டுகளாக வேண்டுமென்றே நிலுவையில் வைப்பதன் மூலம் குற்றவாளிகளைக் காப்பாற்று கிறார்கள். ஆனால், சாதாரண மக்கள் விசாரணையின்றி இலட்சக்கணக்கில் பல ஆண்டுகள் சிறைவைக்கப்படுகின்றனர். பல வழக்குகளில் குற்றவாளிகளும் சாட்சிகளும் இறந்தே போகின்றனர்.

கிரிமினல் குற்றவாளிகளையே நீதிபதிகளாகக் கொண்டுள்ள அமைப்பில் நீதி விலைபோகும் சரக்காக உள்ளதில்வியப்பில்லை. அதனால், அதிக விலைகொடுக்கும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சாதகமாக “நீதி” விலைபேசி விற்கப்படுவதுதான் நீதி மன்றங்களில் நடக்கிறது. நீதிமன்ற நியமனங்கள் இருட்டில் இரகசியமாக நடப்பதைப்போலவே, தீர்ப்புகளும் விசாரணைகளின்றி, சட்டபூர்வ நியாயங்களின்றி, விளக்கங்களின்றி விற்கப் படுகின்றன. கொலை, திருட்டு, பாலியல் வன்முறை முதலிய குற்றங்களைத் தற்செயலாகச் செய்பவர்களைத் தவறாது தண்டிக்கும்  நீதிமன்றங்கள், அதே குற்றங்களைச் கிரிமினல் குற்றக் கும்பல்களாகத் திரண்டு, திட்டமிட்டு செய்துவிட்டு அதிகாரத்துடனும் அதிகாரத்தின் துணையோடும் இருப்பவர்களைத் தீண்டுவதேயில்லை. அதுவே, மக்கள் சமூகத்தையும் நாட்டையும் கொள்ளையடிப்பதற்கு எதிரான வழக்குகளானால் ஏகாதிபத்திய  பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமான தீர்ப்புகளையே நீதிமன்றங்கள் வழங்குகின்றன. தனியார்மயதாராளமயஉலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கும் வழக்குகளிலும் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகளை, தொழிலுரிமைகளைக் கோரும் வழக்குகளிலும், குறிப்பாக கிரானைட், தாதுமணற் கொள்ளை, இயற்கைக் கனிம வளங்களை சூறையாடல், சுற்றுச்சூழலை நாசமாக்குதல் முதலானவற்றுக்கு எதிரான வழக்குகளிலும் மக்கள் எதிரிகள் நேரடியாகவே நீதிபதிகளை அணுகித் தமக்குச் சாதகமான தீர்ப்புகளைவிலைக்கு வாங்குகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படுபவர்கள் தாமாகவே பதவியிழப்பார்கள் / பதவிபறிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தும் அதைக் கழிப்பறைக் காகிதத்தைவிடக் கேவலமாக மதிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆனால், அத்தீர்ப்புகளை அமலாக்குவதற்கு அத்தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதி மன்றம் உட்பட எந்தவொரு அரசு அமைப்பும் அது குறித்து அக்கறைப்படவேயில்லை. இவ்வாறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்திரவுகளை மதியாதது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அரசும் அதிகாரிகளும் சந்திக்கவேண்டி வருவதும், நீதிமன்றங்கள் எச்சரிக்கை விடுவதும், அதிகாரிகள் மன்னிப்புக் கோருவதும், அரசுச் சொத்துகளையே பறிமுதல் செய்யும்படி நீதிமன்றங்கள் உத்திரவு போடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இப்படி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தமிழக அரசுஅமலாக்க மறுத்து, எச்சரிக்கை பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் உண்ணாமலை கிராமத்தில் அரசின் டாஸ்மாக் சாராயக்கடையை மூடச்சொல்லி சென்னை உயர்நிதிமன்றம் போட்ட உத்திரவை ஓராண்டுக்கு மேலாகியும் அமலாக்கத்தவறின அரசும், நீதிமன்றமும். ஆனால், டாஸ்மாக் சாராயக்கடையை மூடக்கோரிப் போராடிய மக்களைத் தாக்கி கைதுசெய்து வழக்குப்போட்டன. இதற்குமேல் எதுவும் செய்ய இயலாத, மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமாகச் சொல்லப்படும் நீதித்துறையே கடும்நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

ஏற்கெனவே சாதி, மதவெறித் தீர்ப்புகளை வழங்கும் நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜக. ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் சட்டத்துக்கு மாறான, புறம்பான இந்துத்துவா தீர்ப்புகளையும் உத்திரவுகளையும் பகிரங்கமாகவே போடுகிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும், தீண்டாமை எதிர்ப்பு அரசாணைக்கும் எதிராக பார்ப்பனர்களையே நிரந்தர அர்ச்சகராக்கும். அவர்களிடமே கோவில்களையும், அதன் சொத்துக்களையும், ஒப்படைக்கும் தீர்ப்புகளைப் போடுகிறது. பாபரி மசூதி இடிப்புக்கு எதிரான இசுலாமியர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, மாட்டுக்கறி உணவுக்குத் தடை, பசுப் பாதுகாப்பு, கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு ஆகிய இந்துத்துவா தீர்ப்புகளையும் தான்தோன்றித்தனமாகப் போடுகிறது. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்களை நீதிமன்றங்களின் மாண்புகளைக் காப்பதற்காகக் களையெடுப்பது என்ற பெயரில் பழி வாங்குகிறது. போராடும் வழக்கறிஞர்களைப் பணியாற்ற விடாமல் பார் கவுன்சிலில் இருந்து வெளியேற்றவும் தகுதியற்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜ.க. ஆட்களைக் கொண்டு நீதிமன்றங்களை நிரப்பி கொள்கிறது.

5. கார்ப்பரேட் கொள்ளைக்கூட்ட ஆதிக்கத்தின் கீழ் மருத்துவம்

மருத்துவ மனைகளும் மருத்துவக் கல்வி நிலையங்களும் இனிமேலும் சேவை நிறுவனங்களாக இல்லை. அவை அறநெறிகள் ஏதுமற்ற கார்ப்பரேட் கொள்ளைக் கூடங்களாகவே உள்ளன. இப்போது அவை தகுதியுள்ள மருத்துவர்களாலும் கல்வியாளர்களாலும் நடத்தப்படவில்லை. நோயாளிகளையும், மருத்துவ மாணவர்களையும் பணயக் கைதிகளாக வைத்துக் கொள்ளையடிக்கும் கிரிமினல் குற்றக் கும்பல்களால் நடத்தப்படுகின்றன. மருத்துவ மனைகள் மட்டுமல்ல, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும், மருந்துகள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இப்படித்தான் இருக்கின்றன. அதனால்தான் மக்கள் மாற்றுமருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். மாற்று மருத்துவ முறைகளும் கார்ப்பரேட்மயமாகி மேற்கண்டவாறுதான் மாறிக்கொண்டிருக்கிறன.

இப்போது நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் இவ்வளவு நாட்கள் இருக்கவேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வதாக இல்லை. வசூல் இலக்குகளை எட்டுவதற்காக, நோயாளிகள் மருத்துவமனைகளில் கட்டாயமாகத் தங்க வேண்டும், நவீனக் கருவிகளைக் கொண்டு சோதனைகளையும் அறுவைச் சிகிச்சைகளையும் செய்ய வேண்டும் என்பதை மருத்துவமனைகளின் முதலாளிகளே முடிவு செய்கிறார்கள். பணம் பிடுங்குவதற்காக  நோயாளிகள் ஈவிரக்கமின்றி நடத்தப்படுகிறார்கள். இறந்துபோன பிறகும் பிணங்களுக்குச் சிகிச்சை அளிப்பதாக நாடகமாடிக் கொள்ளையடிப்பதை அப்போலா போன்ற நட்சத்திர மருத்துவமனைகளின் கார்ப்பரேட் முதலாளிகள் செய்கிறார்கள்.

மருத்துவமனைகளிலும் நோய்க் கூறு ஆய்வுக்கூடங்களிலும் மருத்துவப் பரிசோதனை என்னும் பெயரில் பில்கேட்ஸ் பவுண்டேசன் உட்பட பல மருந்துக் கம்பெனிகளின் சோதனைக் கூடங்களாகவும் இந்தியப் பழங்குடிகள், பெண்கள் சோதனைப் பிராணிகளாக மாற்றப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இளம்பெண்கள் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான தடுப்பூசி போட்டு சோதித்துள்ளனர். இதில் பல பெண்கள் இறந்துபோயுள்ளனர். சட்டிஸ்கரில் அடிப்படை வசதிகளின்றி கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடத்தி பல பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள் நடத்திப் பலர் பார்வையிழக்கின்றனர்; பலர் உயிரிழக்கின்றனர். மனித உயிர் இங்கே அவ்வளவு மலிவாகிப்போயுள்ளது.

அரசும் ஆட்சியாளர்களும் பின்பற்றும் மக்கள் விரோத கார்ப்பரேட் கொள்ளைக்குச் சாதகமான மருத்துவக் கொள்கையும்பொதுச் சுகாதாரப் புறக்கணிப்புக் கொள்கையும் தாம் இதற்குக் காரணம். நமது மக்கள் ஒவ்வொருவரும் தமது வருமானத்தில் 52 விழுக்காடு மருத்துவத்திற்காக செலவழிக்கின்றனர். சுற்றுப்புறச் சுகாதாரச் சீர்கேடு, பெருகிவரும் தொற்றுநோய்கள் – ஆட்கொல்லி நோய்கள் மருந்து விலையேற்றம், ஏறிவரும் மருத்துவச் செலவு  ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தினரும் அவதிப்படுகின்றனர். குடும்பத்தில் ஒருவர் ஏதாவது நெடுநாள் அல்லது ஆட்கொல்லி நோயால் தாக்குண்டால் அக்குடும்பமே திவாலாகிப் போகிறது. மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கமுடியாமல் நோயாளியைப் பலிகொடுப்பதோடு, உயிரோடிருப்பவர்களும் வாழ்நாள் கடனாளிகளாகிறார்கள்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், சாக்கடை குப்பை கழிவுநீர் அகற்றுதல், நோய்பரப்பும் உயிரினங்களை ஒழித்தல் போன்ற பொதுச் சுகாதாரமும் அடிப்படை மருத்துவ வசதிகளும் தொண்டு நிறுவனங்களிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் விடப்படுகின்றன. பொதுச் சுகாதாரம் கழிப்பறை வசதிகூட இல்லாதது, குடிநீர் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக குழந்தைகளும் முதியோர்களும் பலியாவது அதிகரித்துக் கொண்டே போகிறது. நகர்ப்புறச் சாக்கடை, தொழிற்சலைகளின் இரசாயனக் கழிவுகள் திறந்தவெளி நிலத்திலும் குடிநீர் ஆதாரங்களிலும் கலப்பதாலும் அனல்மின், அணுமின் நிலையங்களின் கழிவுகள், தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்துவதாலும் புற்று நோய், தைராய்டு, மரபணுக்குறைகளுடன் குழந்தைப் பிறப்பு போன்ற கொடிய நோய்களையும் அழிவுகளையும் மக்கள் சந்திக்கின்றனர். நச்சுக் காய்ச்சல், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சிக்கன்குனியா, டெங்கு போன்ற புதிய புதிய நோய்கள் வருகின்றன. அவற்றோடு, முன்பு ஒழிக்கப்பட்டவையாக சொல்லிக்கொண்ட காசநோய், போலியோ, காலரா போன்ற நோய்கள் மீண்டும் பரவுகின்றன.

நோய்த் தடுப்பு, உயிர்க்காப்பு மற்றும் மலிவுவிலை சிகிச்சைக்குரிய மருந்துகளை உற்பத்தி செய்யும் அரசுத் தொழிற்சாலைகளை மூடிவிட்டு, இவற்றிடத்தில் அந்நியக் கார்ப்பரேட் மருந்துக் கம்பெனிகளிடம் கொள்ளை விலையில் அரசு கொள்முதல் செய்கிறது. போதுமான சுகாதாரப் பணியாளர்களையும் மருத்துவர்களையும் நியமிப்பதோ, சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிக்கவோ, தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோ, மக்களுக்குத் தொற்று நோய்த்தடுப்பு விழிப்புணர்வுகூட ஏற்படுத்துவதில்லை. தொற்று நோய்கள் வருவதையும் பரவுவதையும், பஞ்சைப்போட்டு நெருப்பை அணைக்க முயலுவதைப்போல மூடிமறைக்கிறது. சுகாதாரச் சீர்கேட்டாலும் அரசின் அலட்சியத்தாலும் பொதுமக்களைத் தாக்கும் உயிர்க்கொல்லி, தொற்று நோய்களைத் தடுக்கவோ முற்றாக ஒழிக்கவோ வக்கற்றுப் போயுள்ளது இந்த அரசு.

6. கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் கல்வி

ஒருபுறம் தனியார்மயமும் மறுபுறம் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி உரிமையும் எப்படி இணைந்து போக முடியும்? ஆரம்பக் கல்வியில் மட்டுமல்ல, கல்வியின் எல்லா மட்டங்களிலும் இதுதான் தற்போது ஏற்பட்டிருக்கும் கல்வி நெருக்கடிக்கு அடிப்படைப் பிரச்சினை. தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையே நாட்டின் எல்லாத் துறைகளிலும் இன்றைய ஆளும் கொள்கையாக உள்ளது. அது கல்வித்துறையை மட்டும் விட்டுவைக்குமா என்ன!

முதலீட்டுக்கு ஏற்ற இலாப விகிதம் கிடைப்பதில்லை என்பதால் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை போதிக்கும் பணி அரசுக்கு விடப்பட்டுள்ளது. அதிலும் ஏற்கெனவே பெருமளவு நிலங்களைக் கொண்டுள்ள அரசுப் பள்ளிகளைத் தனியார் கைப்பற்றிக்கொள்ளும் வகையில் பொதுத்துறை தனியார்துறைக் கூட்டுத் திட்டம் புகுத்தப்படுகிறது. தனியார் கல்விக் கொள்ளையர்களைப் போலவே அரசே அனைவருக்கும் கல்விச் சட்டங்களை அமலாக்க மறுப்பதோடு, பல மறைமுகத் தடைகளைப் போடுகிறார்கள். நாட்டிலுள்ள பெரும்பான்மையான பள்ளிகளுக்குத் தேவையான கட்டிடங்களோ, உருப்படியான மேற்கூரைகளோ, குடிநீர் கழிப்பிட வசதிகளோ, கருவிகளோ, ஆசிரியர்களோ கிடையாது. நாட்டின் மொத்த வருவாயில் கல்விக்காக செலவிடும் அளவு குறைந்து கொண்டே போகிறது. போதிக்கும் கல்வித் திட்டமும் தரக்குறைவாகவும் குழப்பமாகவும் உள்ளதாக கல்வி ஆய்வாளர்கள் பலரும் இடித்துரைக்கின்றனர். இருந்தாலும் அரசு கண்டுகொள்வதில்லை.

ஒருபுறம் கொள்ளையடித்தாலும் மேல்சாதி, மேட்டுக்குடி பெற்றோர்களை ஈர்ப்பதற்காகவே பலவசதிகளையும் கொண்ட தனியார் பள்ளிகள். மறுபுறம் ஏழை, ஏளிய வர்க்கத்தினருக்கான அடிப்படை வசதிகளற்ற அரசுப் பள்ளிகள். இவ்வாறு அரசும் ஆட்சியாளர்களும் கல்வியில் இருவேறு துருவங்களை உருவாக்குகிறார்கள். முன்பு கல்வி ஒருசமூகத் தொண்டு என்று கருதப்பட்டது; ஆகவே, கல்வி நிலையங்களை நடத்தும் அறக்கட்டளைகளுக்கு பலசலுகைகளை அரசு வழங்கியது. அதனால் சாதி, மதப்பிரமுகர்களும் நிலப்பிரபுக்கள் தரகு முதலாளிகளும் அறக்கட்டளைகளின் பெயரில் பள்ளி, கல்லூரிகளை வைத்து சாதி, மத ஆதிக்கங்களும் தொழில்ரீதியான ஆதாயங்களும் அடைந்து வந்தனர். கல்வியில் தனியார்மயம், தாராளமயம் புகுத்தப்பட்ட பிறகு, கல்வி ஒரு சமூகத் தொண்டு முகமூடி விலக்கப்பட்டு, கல்வி பகற் கொள்ளைக்கான மற்றுமொரு தொழிலாக  மாறியது. அரசியல் பிரமுகர்கள், திடீர் பணக்கார அரசியல் ரௌடிகள், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள், பழைய, புதிய தரகு முதலாளிகள் நூற்றுக்கணக்கில் கல்வி வியாபாரத்தில் நுழைந்தனர். இவர்களோடு, உலகமயமாக்கம் காரணமாகவும் ஏராளமான அந்நியக் கல்விக் கொள்ளையர்களும் நுழைந்தனர்.

இந்தத் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் மூலம் மற்ற பிற துறைகளைப் போலவே, கல்விச் சந்தையிலும் உலகத்தரம் பெறுவோம் என்று சொன்னார்கள். ஆனால் தற்போது, அது மேற்கண்ட கல்விக் கொள்ளையர்களிடம் சிக்கி நாட்டின் கல்வித்துறையே திணறுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் கொள்ளைக் கூடாரங்களாக மட்டுமல்ல; மாணவர்களின் உயிரையும் காவு வாங்கும் கொலைக் கூடங்களாகவும் மாறி வருகின்றன என்பதைத்தான் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மர்ம மரணங்களும் தற்கொலைச் சாவுகளும் உணர்த்துகின்றன.  அவர்கள் பெற்றோர்களிடம் வழிப்பறிகள் நடத்துகிறார்கள்; மாணவர் மாணவிகளை பலவகையிலும் தற்கொலைக்கும், இருண்ட எதிர்காலத்துக்கும் தள்ளுகிறார்கள். தமது கொள்ளையில் ஒரு பகுதிப் பணத்தை ஆட்சியாளர்களுக்கு இலஞ்சமாக வாரி இறைத்து, பள்ளியோ, கல்லூரியோ, ஆய்வுக்கூடங்களோ, பல்கலைக் கழகங்களோ நடத்துவதற்கான எந்த அடிப்படை வசதியும் தகுதியான ஆசிரியார்களோ இல்லாமலேயே, அரசிடமிருந்து அனுமதிகள் வாங்கிவிடுகிறார்கள். அல்லது அனுமதிகூட வாங்காமலேயே மாணவர்  மாணவிகளைச் சேர்த்து மோசடிகளும்செய்கிறார்கள். தமிழகத்தில், அரசிடம் அனுமதிஅங்கீகாரம் பெறாமலேயே மாணவர் – மாணவிகளைச் சேர்த்து மோசடி செய்து ஏமாந்த நூற்றுக்கணக்கான மாணவர் – மாணவிகள் தொலைத்துவிட்ட வாழ்க்கையை மீட்கப் பல மாதங்களாகப் போராடினார்கள். மோசடியில் சிக்கிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் நீதிமன்றத்துக்குப்போய் இலஞ்சம் கொடுத்து மீள முயற்சிப்பதையும் கண்டோம். பிற மாநிலங்களில் இவ்வாறு நூற்றுக்கணக்கான விவகாரங்கள் உள்ளன.

மொத்தத்தில், கல்வித்துறையும் மோசடியாளர்களின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பான்மையான தனியார் சுயநிதி பொறியியல் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களோ பேராசிரியர்களோ கிடையாது. இவர்களில் 80 சதவிகிதமானவர்கள் ஒரே சமயம் பல கல்லூரிகளில் பணிபுரிவதாக பட்டியல்களில் இடம் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் பல போலிப் பொறியியல் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் பல்கலைக் கல்லூரிகளும் உள்ளன. போலியான பட்டச் சான்றிதழ்களைக் கொண்டு பல ஆயிரம் பேர் ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். இதுதான் நாட்டின் கல்வி நிலை!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு,கல்வியில் அந்நிய ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தையும் கொள்ளையையும் விரைவு படுத்தும் அதே வேளையில் சமஸ்கிருத மயமாக்கத்தையும் இந்துத்துவ மயமாக்கத்தையும் திணித்து வருகிறது. கல்விப் பாடத்திட்டங்களில் மட்டுமல்லாது அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்விலும் இவ்வாறே செய்கிறது.

7. கட்டுக்கடங்காத சமூக சீரழிவுகள் , பண்பாட்டு வக்கிரங்கள், கிரிமினல் குற்றங்கள் , பெண் சமூகத்திற்கு எதிரான கொடூரங்கள்

2012 டிசமபர், 16 அன்று, புதுடில்லியில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்குப் பலியான “நிர்பயா”-வின் மரணத்தைத் தொடர்ந்து பொங்கியெழுந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவர் சொன்னார்: “அரசு மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் தோற்றுப்போனதையே இது குறிக்கின்றது.” இது இந்நாட்டின் அரசியல், சமூக நெருக்கடியை மிகச்சரியாகவும், துல்லியமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது. அப்போது, நடந்த சம்பவங்களும் வெளியான தகவல்களும் இதை அப்பட்டமாகத் தெளிவுபடுத்தின. 3 வயதுச் சிறுமிகள் முதற்கொண்டு 60,70 வயதுப் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்குப் பலியாகின்றனர். அக்கொடுமைகளுக்கு இலக்கானவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே தெரிந்தவர்களால், நெருக்கமான குடும்ப உறவுக்காரர்களால் இழைக்கப்படுகின்றன. இது குடும்ப, சமூக உறவுகளின் சீரழிவையும் நெருக்கடிகளையுமே காட்டுகின்றன. சமூக அமைப்புகளும் விழுமியங்களும் பெண்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இதனாலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பலவும் வெளி உலகுக்கு தெரியவருவதோ, பதிவு செய்யப்படுவதோ இல்லை. அவற்றுக்குப் பலியானவர்கள் வெளியே சொல்லவே முடியாதவாறு பலவழிகளிலும் மிரட்டி வைக்கப்பட்டுள்ளனர். போலீசு நிலையங்கள் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மறுக்கின்றன. பலசமயங்களில் பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவர்கள் மீதே பழிபோடப்படுகின்றது. குற்றவாளிகள் அரசியல், அதிகாரம், சாதி, மதம் பிற சமூகச் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். போலீசுக்காரன்கள்  தம் ஆளுகையின் கீழுள்ள பகுதியில் குற்றங்கள் நடப்பதே இல்லை என்றோ அல்லது குற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவோ காட்டுவதற்காக வழக்கு பதிவு செய்யவே மறுக்கின்றனர். பதிவு செய்தாலும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீது சாதிய, ஆணாதிக்க மனப்பான்மையோடும் அக்கறையில்லாமலும், வேண்டாத வீண் வேலைச் சுமையாகவும் கருதி வழக்குகளை நீர்த்து போகச் செய்கிறார்கள்.

நாட்டின் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பொதுச்சட்ட நெறிமுறைகளும் தீர்ப்புகளும் கிடையாது. ஒவ்வொரு நீதிபதியும் தான்தோன்றித்தனமாகவும் வெவ்வேறு அணுகுமுறையைக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர்.  பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதற்குப் பலியானவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் அவமதிப்பதாகவுமே குற்றவாளிகளைத் தப்புவிப்பதாகவுமே சட்ட, நீதி முறைமைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி போலீசு நிலையங்களிலும் நிதிமன்றங்களிலும் பலியான பெண்கள் மேலும் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். சட்டப்படி பதினெட்டு வயதுக்குக் கீழான பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வன்புணர்ச்சி வகையினதாகக் கொள்ளமுடியாது; பதினெட்டு வயதுக்குக் கீழான ஆண்கள் புரியும் பாலியல் குற்றங்கள் சிறார்களின் தவறாகவும் வன்புணர்ச்சி அல்லாதவையாகவும் சட்டப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்; எனவே, சட்டப்படியே இவ்வழக்குளில் கடும் தண்டனை வழங்க முடியாது. ஆனால் இயல்பாகவே, பாலியல் வன்கொடுமைகளை போலீசுக்காரன்களும், நீதிபதிகளும் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பெண்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே இவ்வாறானதுதான் என்று சமூகமும் கருதுகிறது. பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி, அவை அதிகரித்து வருவதைப் பற்றி சாதி,மத, அரசியல், சமூகப்பிரமுகர்கள் மட்டுமல்ல ஒருபிரிவுப் பெண்களும் கூறும் கருத்துக்களும் இதையே காட்டுகின்றன.

“நிர்பயா”விவகாரத்தில், புதுடில்லியில் பல நாட்கள் நடந்த மக்கள் எழுச்சிகளுக்குப் பிறகு, அவற்றைச் சமாளிப்பதற்காக நீதிபதி வர்மா தலைமையிலான கமிசனை மத்திய அரசு அமைத்தது. மிகப் பெரும்பாலான மாநில அரசுகள் வர்மா கமிசனுக்குத் தம் கருத்துக்களை, பரிந்துரைகளை, அறிக்கைகளை அனுப்பவே இல்லை. அதற்காக வர்மா கமிசன் தெரிவித்த கண்டனங்களையும் அவை மதிக்கவும் இல்லை. இதற்காகவும் நீதிகேட்டும் போராடிய இளைஞர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி விரட்டியதற்காகவும் புதுடில்லி தலைமைப் போலீசு இயக்குநர் உட்பட அனைத்து மாநில தலைமைப் போலீசு இயக்குநர்களின் நியமனங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வர்மா கமிசன் பரிந்துரைத்தது. இதையும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவேயில்லை.

பெண்களுக்கு எதிராகப் பெரும்பாலான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசும், துணை இராணுவமும் மற்றும் இராணுவத்தினரும்தாம்; அவர்களைப் பாதுகாக்கும் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் அதையொத்த அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்கவேண்டும்; மேலும், ஒரு இராணுவ சிப்பாய் பாலியல் வல்லுறவுக் குற்றமிழைத்தால் அவரது மேலதிகாரியையும் சேர்த்து இராணுவ ஆணைமீறல் குற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது முதலான பல பரிந்துரைகளை அக்கமிசன் வைத்தது. இதுவும் இதைப் போன்ற பலபாரிய பரிந்துரைகளில் 90 விழுக்காடு கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, கண் துடைப்புக்குச் சில சில்லரைத் திருத்தங்கள் செய்யும், போலீசுக்கு மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் சட்டம் ஒன்று அனைத்துக் கட்சிகள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. புதுடில்லியில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு “நிர்பயா” பலியானவுடன் கொதித்துப் போனவர்களைப்போல  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, ஆண்மையை நீக்கச் சிகிச்சை என்றெல்லாம் குத்தாட்டம் போட்ட நாடாளுமன்ற அரசியல்வாதிகளும், ஊடக ஊதுகுழல்களும் “ஒப்புதலுடன் உடலுறவு,” பாலியல் வன்கொடுமைகள் புரியும் சிறார் குற்றவாளிகளுக்கு வயது வரம்பைக் குறைப்பது போன்ற விளிம்பு விஷயங்களில் கவனத்தைத் திருப்பிவிட்டனர்.

அதேசமயம், அரசியல், சமூகத் தலைவர்கள்  வெளியில் என்ன நீதிபோதனை சொல்கிறார்களோ அதற்கெதிரான போக்குகளே நாட்டில் அரங்கேறி வருகின்றன.  உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கைக் மிகமிக அதிகரித்த வகையில் கோரும் உலகமயமாக்கமும் மறுகாலனியாக்கமும் திணிக்கப்படுகின்றன. அவை பெண்கள் உடலைச் சந்தைப்படுத்தும் பண்பாட்டுச் சீரழிவைக் கொண்டு வருகின்றன. ஆண்களிடையே பாலியல் வெறியைப் பரப்பும்தொழில்களும் (விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குதல், பாலியல் சுற்றுலா முதல் சினிமா, வானொளி, இணையம் ஆகிய ஊடகங்கள் வரை) பெருகி வருகின்றன.   ஆணாதிக்கப் பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட அரை நிலவுடைமை சமூக அமைப்பில் மேலைப் பண்பாட்டைப் புகுத்துவது காரணமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பெருகுகின்றன.

ஆனால், போலீசு ரோந்து சுற்றுவது (போலீசும் கண்காணிப்பும் பெண்களுக்குப் பேராபத்து விளைவிப்பதாக உள்ளன!), பேருந்து மற்றும் பொது இடங்களில் காமிராக்களைப் பொருத்துவது, உயர் போலீசு அதிகாரிகளின் மேற்பார்வை, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகளைவிரைந்து நடத்தித் தண்டனையைக் கடுமையாக்குவது போன்ற யோசனைகள் அள்ளிவீசப்படுகின்றன. கூடவே, பெண்கள் பாரதப் பண்பாட்டை மதிக்கவும் கடைப்பிடிக்கவும் வேண்டும், ஆபாச உடையணியக் கூடாது, இரவு குறிப்பட்ட நேரத்துக்குப் பிறகு வெளியில் “சுற்றக் கூடாது. ஆண்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது இயல்பானது” என்பது போன்ற பெண்ணடிமைத்தனத்தைப் பேணும் “உபதேசங்களும்” வழங்கப்படுகின்றன. இதனாலெல்லாம் பெண்களுக்கெதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறையவில்லை. மாறாகப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. பாலியல் வன்முறையோடு அதற்குப் பலியாகும் பெண்கள் படுகொலை செய்யப்படுவதும், சாதிப் பஞ்சாயத்துக்களில் கும்பல் பாலியல் வன்முறைக்குத் தீர்ப்புகள் வழங்கப்படுவதும் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் இம்மாதிரியான இழிசெயல்களுக்குப்பலியாவதும் என்ற காட்டு மிராண்டித்தனங்கள் மிகையாக நடக்கின்றன. அதிலும்முக்கியமாக நாட்டின் உச்சநீதிமன்றமே இம்மாதிரியான கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றது. இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் பயணம் செய்வதற்கும் தகுதியுள்ள நாடு அல்லவென்ற கருத்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.   இந்நாட்டின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சிக்கலுக்குத் தீர்வெதுவும் காண முடியாத இந்தவொரு விவகாரமேபோதும் ஆளும் வர்க்கங்களும் அதன் அரசும் ஆளத் தகுதியற்றுப் போயுள்ளதைத் தெளிவாகவும் காட்டுவதற்கு!

8. இணை அதிகார மையங்களாக வளர்ந்துவிட்ட சாதி, மதவெறி எதேச்சதிகார அமைப்புகள்

ஒடுக்கப்படும் சாதியினர், சாதிவெறிக் கும்பல்களால் கோரமாகத் தாக்கிப் படுகொலைகள் செய்யப்படுவதும் நாடு முழுவதும் தொடர்ந்தும் தடையின்றியும் அப்பட்டமாகவும் அடிக்கடியும் நடக்கின்றன. சாதி கடந்து மணம் புரிந்து கொள்ளும் இளைய இணையினருக்கு சாதிப் பஞ்சாயத்துக்களில் பகிரங்கமாகவே, மரண தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கரங்களாலேயோ அல்லது அவர்கள் கண் முன்பாகவோ குரூரமாகக் கொல்லப்படுகின்றனர். அவற்றுக்குப் போலீசும் அரசு நிர்வாகமும் பார்வையாளராகவோ, உடைந்தையாகவோ இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்களோ கண்டுகொள்வதில்லை. அவற்றில் தலையீடு செய்வதற்கு அஞ்சுகின்றன அல்லது அவை தாங்களே பிற்போக்குச் சாதிவெறி சகதியில் மூழ்கிப்போயுள்ளன. இம்மாதிரியான படுகொலைகளுக்குக் “கௌரவக் கொலைகள்”என்ற நாகரிகமான பெயர் சூட்டியதே நீதிமன்றங்கள்தாம்!

தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகின்றன. சிறு குழந்தைகள் உட்பட தாழ்த்தப்பட்டவர்களை கட்சி வேறுபாடின்றி ஆதிக்க சாதியினரால் உயிரோடு எரித்தும், வெட்டியும் படுகொலைகள் செய்யப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமைகள் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடுகிறார்கள். இக்குற்றங்களுக்கு போலீசே துணை நிற்கிறது. நீதிமன்றங்கள் கண்டு கொள்வதில்லை. இளவரசன், கோகுல்ராஜ் என்று படுகொலைகள் தொடர்கின்றன. இம்மாதிரியான குற்றங்கள் புரிவோர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிகிறார்கள்.

மேலவளவு, கயர்லாஞ்சி, சுண்டூர், பதனித்தோலா, லச்சுமண்பூர்பதே, துலியானா போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான கும்பல் கொலைவெறியாட்டங்கள் புரிந்த சாதிவெறிக் கொலை குற்றவாளிகள் அனைவரும் தண்டனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான குற்றங்களுக்காக ஆதிக்க சாதிவெறியர்கள் ஒருவர்கூடத் தண்டிக்கப்பட்டதே கிடையாது. மதிப்புக்குரிய மேல்சாதிக்காரர்கள், செல்வந்தர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்பது போன்ற அற்பத்தனமான, வக்கிரமான காரணங்களை கொஞ்சமும் வெட்கமின்றிக் கூறி உயர்நீதி, உச்சநீதி மன்றங்களே கொலையாளிகளை விடுவிக்கின்றன. பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருந்த போதும், அக்குற்றங்கள் அதிகரித்தபோதும் அச்சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்படுவதும் தண்டிக்கப்படுவதும் இல்லை. போலீசுக்காரன்களால், சாதிவெறியர்களால், நீதிமன்றங்களால் அச்சட்டங்கள் காலில்போட்டு மிதிக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோருக்கான கட்சிகள், அமைப்புகள் என்போரும் இவற்றுக்கு எதிராகப் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் இடஒதுக்கீடுப் பதவிகளைக் குறிவைத்து அறவழிப் போராட்டங்களோடு நின்றுவிடுகிறார்கள். சாரமாகச் சொல்வதானால் சாதிய அடையாளங்களைத் தகர்ப்பதுதான் சாதியத்தை ஒழிப்பதாகும். சாதிய அடையாளங்களை வைத்து ஓட்டு வங்கிகளைத் திரட்டுவது சாதியத்தை நிரந்தரமாக்கும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேண்டுவது சமூகச் சீர்திருத்தங்கள் அல்ல. அவற்றால் ஒரு பலனுமில்லை.சமூகப் புரட்சி, அதனால்தான் சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

பயங்கரவாத, பிரிவினைவாத, பிளவுவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வது என்பது பார்ப்பன பாசிச மதவெறியர்களின் உத்தியாக இருப்பதைப் பற்றி பலஆண்டுகளாகக் கூறிவருகிறோம். சமூகத்தை சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்துவதன் மூலம் ஒரு முனைவாக்கம் செய்து, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வது பல ஆண்டுகளாகப் பார்ப்பன பாசிச மதவெறியர்களின் உத்தியாக இருக்கிறது. இதனால் பல இலட்சம் இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இக்குற்றங்களுக்காக இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதே கிடையாது. ஆனால், குற்றம் நிரூபிக்கப் படாமலேயே அப்சல் குரு போன்ற நிரபராதிகள் தூக்கிலிடப்படுகின்றனர். போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்படுகின்றனர். இதைப்போன்றே இன்னொரு கொடுமை, பார்ப்பன பாசிச மதவெறியர்கள் தாமே சதிசெய்து  நிறை வேற்றிய குற்றங்களுக்காக, நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய இளைஞர்கள் பத்துப் பதினைந்து ஆண்டுகள் விசாரணையின்றிச் சிறையிலடைக்கப் படுகிறார்கள்; இதனால் இவர்களின் இனிமையான இளமைக்கால வாழ்வு முழுவதும் பறிக்கப்படுகின்றது.

இசுலாமியர் மீது பழிபோடவும் இசுலாமியர்களைப் பலிவாங்கவும் நடத்தப்பட்ட மாலேகான், ஐதராபாத் மக்காமசூதி, அஜ்மீர் தர்க்கா, பாகிஸ்தான் செல்லும் சம்ஜுதா துரிதரயில் குண்டு வெடிப்பு ஆகியவை பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாத கும்பல்களால் நடத்தப்பட்டன.   இச் சம்பவங்களில் பல இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்து மதவெறியர்கள் இந்து வழிபட்டுத் தலங்கள்மீது தாங்களே பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செய்துவிட்டு “குற்றங்களுக்குக் காரணமானவர்கள்” என்று பல இசுலாமிய இளைஞர்களைப் பிடித்து, சித்திரவதை செய்கிறார்கள். உண்மையான குற்றவாளிகள் கிடைக்காதபோது அல்லது வேண்டுமென்றே அந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல்செய்து, பொய்ச் சாட்சியங்களை உருவாக்கி (நிரந்தரமாக தொழில் முறை பொய்ச் சாட்சி சொல்லும் கும்பல்களையே போலீசும் நீதிமன்றங்களும் உருவாக்கி வைத்திருக்கின்றன) அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். தடா, பொடா முதலான பாசிச சட்டங்களின்படி எவர் சொல்லும் சாட்சியமும் இல்லாது, குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்திரவதை செய்து பெறும் வாக்குமூலங்களும் போலீசே எழுதிக் கொள்ளும் வாக்குமூலங்களும் கூடச் செல்லுபடியாகும். பல ஆண்டுகளுக்குப்பிறகு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் அல்லது போலீசும் நீதிமன்றங்களும் தமது “தவறுக்குப் பிராயச்சித்தமாக” வேறுசில பொய் வழக்குகளையும் அவர்கள் மீது போட்டு தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைத்து வதைக்கிறார்கள்.

செய்யாத குற்றங்களுக்காக பல ஆண்டு சித்திரவதை, சிறைத்தண்டனைக்குப் பிறகு, கல்வி – இளமை பறிக்கப்பட்ட இளைஞர்கள்; வீடு, வாசல், தொழில் மற்றும் வாழ்வாதாரங்களையும் குடும்பத் தலைவர்களையும் இழந்த குடும்பங்கள் ஏராளம். இந்த நிலைக்குத் தள்ளப்படும் இசுலாமியர்களுக்கெல்லாம் எவ்வித நிவாரணங்களும் கிடையாது. “வேண்டுமானால் சிவில் நீதிமன்றங்களுக்குப் போங்கள்”என்று கைகாட்டும்/கைவிரிக்கும் நீதியரசர்களிடம் நீதி கிடைக்குமா? இவை தவிர, இசுலாமியப் பயங்கரவாதிகளால் நாளும் பார்ப்பனத் தலைவர்கள் கொல்லப்படுவதாகப் புளுகி, பீதியூட்டி, அதற்காகவே போலி என்கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. போலீசும் உளவுத்துறையுமே உளவாளிகள் எதிர் உளவாளிகள், பயங்கரவாதிகள் எதிர் பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர்; இராணுவமும், துணை இராணுவமும் விருதுகள், பரிசுகளுக்காக போலி என்கவுண்டர்களை அரங்கேற்றுகின்றன. பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக என்று சொல்லி அரசே இரகசியக் கொலைப்படைகளை உருவாக்கி வைத்திருக்கின்றது.

இந்தச் சூழலில் இன்னொரு பக்கம் இசுலாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள் தோன்றுவதும் நிகழ்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகத்தின்மீது பயங்கரவாதச் சாயம் பூசப்பட்டு, இசுலாமியர் என்றாலே சந்தேகக் கண்கொண்டு ஒதுக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் துணைப்பிரதமர் அத்வானிமுதல் இன்னாள் பிரதமர் மோடி வரை பார்ப்பன பாசிச இந்து மதவெறியைக் கக்கும் பிரச்சாரங்களை அப்பட்டமாகவே செய்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சங்கக் குடும்பத்தின் (பரிவாரின்) கீழ் நூற்றுக்கணக்கான பெயரில் இந்து மதவெறிக் கும்பல்களை, கொலைக் குழுக்களை உருவாக்கி வெறியாட்டங்கள் போடுகின்றன. இவற்றுக்கு எதிராகவோ தடுப்பதற்கோ முந்தைய காங்கிரசு அரசு மட்டுமல்ல, சில மாநிலங்களை ஆண்ட/ஆளும் முலாயம், மாயாவதி, நிதீஷ், ஜெயா, கருணாநிதி, மம்தா, அகாலிதளம், தெலுங்குதேசம் போன்ற மதச்சார்பின்மை பேசும் பிராந்தியக் கட்சிகளுமேகூட எதையும் செய்வதில்லை. மாறாக, “மதச் சார்பற்ற” ஓட்டுக்களைப் பொறுக்கிக் கொள்வதற்காகவும் “மதச் சார்பு”ஓட்டு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவுமே சதித்தனமான வேலைகளில் அவை ஈடுபடுகின்றன.  மறுபுறம், பயங்கரவாதத் தாக்குதலை எப்போதும் எதிர்கொண்டுள்ள தியாகிகளைப்போல எங்கும் கருப்புப்பூனைப் படைசூழப் பவனி வருகின்றனர். இதையே தாங்கள் ஓட்டுப்பொறுக்குவதற்கான கௌரவமாகவும் தகுதியாகவும் மாற்றிக்கொண்டு விட்டார்கள். நாடு முழுவதும் தானியங்கித் துப்பாக்கிகள் ஏந்திய போலீசும் உளவுப்படையும் கண்காணிப்புக் கேமராக்களும் சோதனைச் சாவடிகளும் நிறைந்த நாடாகவும், திடீர்ச் சோதனைகளும் கண்காணிப்புகளும் எப்பொழுதும் நடக்கின்ற நாடாகவும் உள்ளது. நாட்டையும் மக்களையும் நிரந்தர குண்டுவெடிப்புப் பயபீதியில் மூழ்கடித்து ஆதாயத்தை அறுவடை செய்து கொள்கிறார்கள்.

9. பெரும்பான்மை மக்களுக்கே எதிரான கட்டமைப்பு

சென்னை  முகலிவாக்கம் ஏரியில் கட்டப்பட்ட பதினோரு மாடிக் கட்டிடம் இடிந்து நொறுங்கி விழுந்ததில் அதில் சிக்கி கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் கீழ்நிலை மேலாளர்கள் உட்பட 71 பேர் உயிரிழந்தனர்; அடுத்த வாரமே சென்னை பொன்னேரியில் ஒரு கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து பதினோரு கட்டுமான தொழிலாளர்கள் மாண்டனர். இராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை கழிவுநீர்த் தொட்டி வெடித்து, அதில் மூழ்கி, மூச்சுத் திணறி 10 தொழிலாளர்கள் பரிதாபமாக மாண்டனர். ஆந்திராவின் ராஜமுந்திரியில் அரசு எரிவாயு எண்ணெய் நிறுவனத்தின் எரிவாயுக் குழுாய் வெடித்து, கிராமமே தீப்பற்றி 17 பேர் எரிந்து சாம்பலாகினர். ஆந்திராவில் செம்மரக் கடத்தலுக்கு மரம்வெட்டியதாக போலி என்கவுண்டர் நடத்தி 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அணைகள், ஏரிகள் எச்சரிக்கையின்றித் திறந்துவிடப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி மடிகிறார்கள்; அவர்களின் குடியிறுப்புகள், தட்டு முட்டுக்கள் கூட அடித்துச் செல்லப்படுகின்றன.  உத்திரகாண்டில் எச்சரிக்கை விடுக்காமல் பெரும் நீர்த்தேக்கம் திறந்து விடப்பட்டு, அங்கே சுற்றுலாப்போன 25 பொறியியல் கல்லூரி மாணவர்கள் நீரில்மூழ்கிச் செத்தார்கள். பள்ளிச் சிறுவர்களை வரை முறையில்லாமல் வேன்களில் ஏற்றிக்கொண்டுபோய் ஆளில்லா ரயில்வே கேட்களில் ரயில்களோடு மோதியும், பள்ளங்களில் வீழ்த்தியும் சத்துணவுக் கூடங்களில் விஷமாகிப்போன உணவைக் கொடுத்தும் பல புதிய மருந்துகளைக் கொடுத்து மருத்துவச் சோதனைகள் நடத்தியும்  ஆதிவாசி, தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை முகாம்கள் நடத்தியும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசக் கண்சிகிச்சை முகாம்கள் நடத்தியும் பிற வகைகளிலும்  உழைக்கும் மக்கள் கொல்லப்படுகின்றனர். இவை தற்செயலாகவோ, இயற்கையிலோ ஏற்படும் விபத்துக்கள் அல்ல. இலாப வெறிபிடித்த முதலாளிகள் விளைவிக்கும் விபத்துக்கள், உயிர்ப்பலிகள்தாம். இவ்வாறு நடக்கும் கொலைகள் நாளும் பெருகி வருகின்றன.

இனியும் இவைபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்குரிய ஏற்பாடுகள், வழிவகைகள், அதற்கான அறிகுறிகள்கூட ஏதும் இல்லை. இம்மாதிரியான குற்றங்கள் மீதான விசாரணைகள், வாதப்பிரதிவாதங்கள், பரிசீலனைகள் எல்லாமுமே முட்டுச்சந்து நோக்கிப்போய் மோதி நின்றுவிடுகின்றன. இம்மாதிரியான குற்றங்கள் மீண்டும் நிகழாவண்ணம் சட்டங்களும், விதிமுறைகளும் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஒருபிரிவும், அதற்கெல்லாம் போதிய சட்டங்களும், விதிமுறைகளும் உள்ளன, அவற்றை அமலாக்கவேண்டியவர்கள்தாம் தவறு செய்கின்றனர் என்று மற்றொரு பிரிவும் அறிவாளித்தனமாகப் பேசுகின்றனர். அமலாக்க வேண்டியவர்களுக்கு சிறப்புக் “கவுன்சிலிங்குகள்”, பயிற்சிகள், மேலதிகாரிகளின் கண்காணிப்புகள் வேண்டுமென இன்னும் சிலர் அதிமேதாவித்தனமாக வலியுறுத்துகின்றனர். இவை எதுவானாலும் அவையெல்லாம் ஏற்கெனவேயுள்ள அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை முதலிய அரசுக் கட்டுமானங்களிடம் மக்களை அடக்கும் அதிகாரங்களை குவிக்கவும் ஊழலைப் பெருக்கவும் மட்டுமே செய்கின்றன.

ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மட்டுமல்ல, இவர்களையும் உள்ளடக்கிய மிகமிக அதிகமான மக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை, சாலையில் பாது காப்பில்லை, சமூக வாழ்க்கையில் பாதுகாப்பில்லை, சகல முனைகளிலும் பாதுகாப்பில்லை. கிரிமினல் குற்றங்களும், கொலைகளும், பட்டப்பகல் கொள்ளைகளும் பாலியல் வன்முறைகளும் பல்கிப் பெருகி வருகின்றன. ஒரு பொட்டுத் தங்கத்துக்காக காதும் மூக்கும் கழுத்தும் அறுத்துக் கொல்லப்படுகிறார்கள். ஒருவருக்குத் தமது சொந்த வீட்டிலேயே உயிருக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைக்காக பெண்களும், பணத்துக்காக ஆண்களும் ஏதுமறியாத சிறுவர்களும்கூடக் கடத்தப்படுகிறார்கள். சாதனை படைக்கும் அளவுக்குப் பெருகிவரும் சாலை விபத்துகளில் நிகழும் சாவுகளும் தற்கொலைகளும் குடும்பக் கொலைகளும் சாதிவெறிக் கொலைகளும் தனிப்பட்டவர்களின் தவறுகள் – பிரச்சினைகள் என்பதாகச் சொல்லிக் கொண்டே அரசு மற்றும் சமூகத்தின் பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படுகின்றன.

பொருளாதார, சமூக, சுகாதார, அறிவியல் மற்றும் கலாச்சார உரிமைகளையும், போதிய அளவு தரமான வாழ்க்கைக்கான உரிமை, வாழ்விட உரிமை, கல்வி, மருத்துவ உரிமை போன்ற மனித உரிமைகளை நிறைவேற்றித் தருவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் ஒருஜனநாயக அரசின், மக்கள் நல அரசின் கடமைகள். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்; சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவற்றை மதிக்கவும் பாதுகாக்கவும் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை நிறைவேற்றித் தருவதும் ஐ.நா. அவையின் உறுப்பு நாடுகளின் சட்டபூர்வ, கட்டாயக் கடமை.  உடனடியாக இல்லையானாலும் அவற்றை நிறைவுசெய்வதை நோக்கி “முற்போக்கான நடவடிக்கை” எடுக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது.

ஐ.நா. அவையின் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர்) அதன் உறுப்பு நாடுகளில் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கு முதன்மையான சர்வதேச சட்ட ஆதாரமாக உள்ளது. அது  தொழிலாளர்களுக்கு சாதகமான பணி நிலைமைகள், மற்றும் பிற வேலை உரிமைகளை அங்கீகரித்துப் பாதுகாக்கக் கோருகின்றன. தொழிலாளர்கள் தொழிற் சங்கமாகச் சேரவும், கூட்டு நடவடிக்கைகள் எடுக்கவும் தொழில் மற்றும் பாதுகாப்பு உரிமை,  தாய்மார்கள்மற்றும் குழந்தைகள் உட்பட குடும்பப் பாதுகாப்பு,  உணவு உரிமை மற்றும் வீட்டு உரிமை ஒரு நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான உரிமை, சுகாதார உரிமை, கல்வி மற்றும் கலாச்சார வாழ்வில் பங்குபெறும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்கின்றது. இந்த உரிமைகள் இதுவரை இரத்து செய்யப்படவும் இல்லை, ஆனால் அவற்றை ஏற்றுக் கையொப்பமிட்டுள்ள இந்திய அரசும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்த உரிமைகளை தமது காலில் போட்டு மிதிக்கின்றனர்.

எதன் அடிப்படையில் அரசும் ஆட்சியாளர்களும்  தமது அதிகாரத்தைப் பெறுகிறார்கள்? மக்களுக்குக் குடியிருப்பு வாழ்விடம், குடிதண்ணீர், சாக்கடை வசதி, கழிப்பிடம், இடுகாடு, சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, உடை ஆகிய அடிப்படை வசதிகள் – தேவைகள்; வேலைவாய்ப்பு உரிமை, மனித உரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகள்; இவை மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய அரசும் ஆட்சியாளர்களும் கடமைப்பட்டவர்கள். இந்தப் பொறுப்பு, புரிதல், ஒப்புதல், உடன்படிக்கை அடிப்படையில்தான் அரசும் ஆட்சியாளர்களும் நாட்டையும் மக்களையும் ஆளும் அதிகார உரிமை பெறுகிறார்கள். மக்களின் அடிப்படை வசதிகள்  தேவைகளை நிறைவேற்றித் தருவதாகச் சொல்லித்தான் வரி வசூலிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். இந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு மட்டுமல்லாமல், அரசினுடைய செலவுகளுக்கும் அதன் இருப்பு மற்றும் பராமரிப்பிற்கும் மக்களிடமிருந்து அரசு வரிவசூல் செய்கிறது. ஆனால், அதில் பெரும்பங்கை மக்களுக்கே எதிராக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிவழங்குகிறது.

மக்களின் அடிப்படை வசதிகள் தேவைகளையும் உரிமைகளையும் நிறைவேற்றித்  தருவதாக நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, உலக நாடுகளின் அவையிலும் அரசும் ஆட்சியாளர்களும் வாக்குறுதியளித்து ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, அவற்றை நிறைவேற்றத் தவறும் அரசின் அதிகாரத்தை ஏற்கவும் மறுக்கவும் மீறவும் எதிர்க்கவும் மக்களுக்கு உரிமையுண்டு. அவற்றை நிறைவேற்றத் தவறும் அரசும் ஆட்சியாளர்களும் ஆளத் தகுதியற்றவர்கள்; தூக்கியெறியப்பட வேண்டியவர்கள். ஆனால், நடப்பது என்ன? அரசும் ஆட்சியாளர்களும் கடமைப்பட்டு, ஒப்புக்கொண்ட அடிப்படை வசதிகளைமறுத்துவிட்டு, தர்மசீலர்களைப் போல இலவசங்களை வீசி மக்களின் விசுவாசத்தை அள்ளிக் கொள்கிறார்கள். ஒரு அரசு விளம்பரத்தில் வருவதைப்போல, “சும்மாவா ஓட்டுப்போட்டீர்கள், அதுக்குத்தான் விலையை வாங்கிக் கொண்டீர்களே, அப்புறம் என்ன அடிப்படை வசதிகேட்டுப் போராட்டம்”என்று அரசும் ஆட்சியாளர்களும் சவால் விடுகிறார்கள். “இலவசங்களுக்கு விலைபோகும் இவர்களுக்கு, அடிப்படை உரிமை கேட்கும் அருகதை ஏது?” என்று திமிரோடு கேட்டு மக்களை ஒடுக்குகிறார்கள்.

அடிப்படை உரிமைகளைக் கோரி மக்கள்  தன்னெழுச்சியாகத் தெருவில் இறங்கி நாளும் போராடுகிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல வேண்டிய ஆட்சியாளர்கள்  அடிப்படை வசதிகளையும் அடிப்படை உரிமைகளையும் கேட்டு மறியல் செய்யும் மக்களை போலீசே ஏவிவிட்டு ஒடுக்குகிறார்கள். வேறு சட்டபூர்வ வழிகளில் பலவகைப் போராட்டங்கள் நடத்தினாலும், எத்தனை தடவை நடத்தினாலும், உங்களால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று ஏளனமாகப் பார்த்து, திமிரோடு நடந்து கொள்கிறார்கள்.

பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பது, கிரிமினல் குற்றங்களைக் குறைப்பது, அல்லது புலன் விசாரனைகளைத் துரிதப்படுத்துவது என்கிற பெயரில் பொதுமக்கள் மீதே பெருந்திரள் கண்காணிப்பும் அரசபயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.  இப்படி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது பயபீதியைக் விதைப்பதன் மூலம் கிரிமினல் குற்றங்களைக் குறைத்துவிட முடியும் என்பது அரசுக்கொள்கையாகவே உள்ளது. சாதாரனத் திருட்டுக் குற்றங்களுக்காக சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்படும் உழைக்கும் மக்களையே குற்றப் பரம்பரையினராகக் கருதி நடத்தும் இந்த சமூகம் பாடுபட்டு உழைக்கின்ற, நேர்மையான மக்கள் வாழத் தகுந்ததாக இல்லை.

10. இயற்கைப் பேரிடர், பேரழிவுக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் நாசம்

அ) குளிர்க்காற்று அலை, மூடுபனி, பனி புயல்கள் மற்றும் பனிச்சரிவு; ஆ) கல்மாரி இடியுடன் கூடிய மழை மற்றும் புழுதிப் புயல்; இ) வெப்பக் காற்று அலை; வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் கடல் சீற்றம்,சுனாமி ஆழிப்பேரலைகள்; ஈ) வெள்ளம், கன மழை மற்றும் மலைகளில் பாறை – மண்சரிவு மற்றும் வறட்சி  இவற்றால் பலரும் மரணமடைவது நாட்டில் தொடரும் துயரமாக உள்ளன. பெரும்வெள்ளம், கடும் வறட்சி ஆகிய மாறிமாறி வரும் இரண்டு கடைக்கோடி பருவநிலை மாறுதல்களால் பேரிடர்கள்  பேரழிவுகள், பேரிழப்புகள் ஏற்பட்டு மிக மோசமாகப் பாதிக்கப்படும் உலக நாடுகளின் முதல்வரிசையில் இந்தியா இருக்கிறது. இவை எல்லாம் இயற்கையின் சீற்றங்கள் என்றெண்ணி மக்கள் மறந்து போகிறார்கள்.  ஆனால் இவை சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுவதால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தாம்.

21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வடமேற்கு இந்தியா அடுத்தடுத்து கடும் வறட்சியைக் கண்டது. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குக் கீழே போனது. ஒரிசா 2000 – 2002 ஆகிய அடுத்தடுத்த மூன்றாண்டுகளில் மிகமோசமான வறட்சியைக் கண்டது. அவற்றின் விளைவாக பயிர், பச்சைகள் கருகிப்போயின. அப்பஞ்சம் 1.1 கோடி மக்களைப் பாதித்து பெருந்திரளான மக்களைப் பட்டினியில் தள்ளியது. பருவமழை தவறியதால் 2006-இல் வடகிழக்கு இந்தியா மீண்டும் ஒரு வறட்சியையும் பஞ்சத்தையும் சந்தித்தது. அதே வடகிழக்கு இந்தியாவை 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் பெருநாசம் விளைவித்த பெருவெள்ளம் தாக்கியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு மத்தியில் மும்பையில் 944 மி.மீ. மழைகொட்டி, 1000 பேரைக் காவுகொண்டு, 1,25,000 கோடி ரூபாய் சொத்துக்களை நாசமடையச் செய்தது. இப்போது வங்காள விரிகுடாக் கடலில் அடிக்கடி  புயல் வீசுவது குறைந்தாலும் வீசுகின்ற புயல்களின் சீற்றம் மூர்க்கமாகவும் பெரும் நாசத்தை விளைவிப்பதாகவும் இருக்கின்றது. புயலினால் ஏற்படும் வெள்ளத்தின் அளவு கடுமையாகவும் மாறியிருக்கிறது.

இமயமலை மீதுள்ள பனி உருகுவதும் வெள்ளப் பெருக்கெடுப்பும் கங்கை, பிரமபுத்திரா ஆறுகளின் படுகைகளை ஆண்டுதோறும் வெள்ளக் காடுகளாக்கி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் காவுகொள்வதும் வளமான விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதும் வழமையாகிவிட்டது. ஆலைக் கழிவுகளால் கங்கையைச் சாக்கடையாக மாற்றிவிட்டதோடு, புவி வெப்பமடைவது அதிகரித்து வருவதால் பூமியின் வட, தென் இருதுருவங்களை அடுத்து மிகப் பெரிய அளவில் பனிக்கவசம் மூடிய இமயமலை மேலும் உருகுவதும் வேகமாகி வருகிறது. இதனால் பெருமழை, பெருவெள்ளத்தாலும் உத்திரகாண்ட், காஷ்மீர்  ஆகிய மாநிலங்கள் வரலாறு காணாத பேரழிவுகளை அண்மையில் கண்டன.

இந்தியத் துணைக் கண்டத்தைச் சுற்றியிருந்த கடற்கரை அலையாத்திக் காடுகளும் கடந்த சில ஆண்டுகளில் 40 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் கிரமமான முறையில் கடும் வறட்சிகள் வந்து போகின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட் தொழிற் கழகங்கள் புவிப்பரப்பை நஞ்சாக்குவது, மலைகளைச் சிதைப்பது, காடுகளை அழிப்பது போன்ற செயற்பாடுகளால் சுற்றுச் சூழல் நாசமாகிறது. இதனால் புவிவெப்பமடைந்து பெருங்கடற் பிரதேசங்களின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது; அதைத் தொடர்ந்து கடுங்குளிர்நிலை ஏற்படுகிறது. இது “எல் நினோ” மற்றும் அதற்கு எதிர் நிலையான “எல் நினா”என்று  தட்ப வெப்ப நிலை ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறது. இவ்விரண்டு கடைக்கோடி பருவநிலை மாறுதல்களினால் பெரும்வெள்ளம், கடும் வறட்சி ஆகிய இருவகை தாக்குதல்களும் மாறி மாறி நடக்கின்றன. திடீரென்று கடல் சீற்றங்களும் கடல் உள்வாங்குதல்களும் நிகழ்கின்றன. முக்கியமாக நமது நாட்டில் அழையா விருந்தாளியாக ஆண்டு தோறும் வந்துபோகும் “எல் நினோ” மற்றும் “எல் நினா” எனப்படும் பாதிப்புகளால் முறையே கடும் குளிர் அலையும், கடும் வெப்ப அலையும் பல ஏழை, எளிய மக்களைக் காவுவாங்கி வருகின்றது.

காட்டு விலங்குகள் நீர்நிலைகளைத் தேடிக் கிராமங்களில் அலைய வேண்டியுள்ளது. மனிதர்களும் காட்டு விலங்குகளைப் போல நீர் நிலையைத் தேடி குட்டைகளை நோக்கி படையெடுக்கிறார்கள். நன்ணீர் மழை பெய்து நிலத்தை வளமாக்கிக் கொண்டிருந்த நிலை போய் அமிலமழையால் கருகிப்போகின்றன விளை நிலங்கள். வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்வதால் ஏற்படும் மீளவியலாத சுற்றுச்சூழல்கேடுகள், அதனால் தலைமுறையைத் தாண்டிய பாதிப்புகள் நிகழ்கின்றன. மரபீனிமாற்றம் செய்யப் பெற்ற பயிர்களால் மலடாகிப் போன விளைநிலங்கள், அதன் விளைவாய் விவசாயிகளின் தற்கொலை. அணுக் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு ஏற்படுகிற நோய்கள் என ஒட்டுமொத்தச் சமூகமே சுற்றுச்சூழல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களை அழித்து கபளீகரம் செய்துவருகிற நிலையில் அதன் பாதிப்பாக சூற்றுச்சூழல் முழுவதும் நஞ்சாகி அவற்றை மீட்க இயலாத கையறு நிலையில் இருக்கிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருந்தாலும் அவையனைத்தும் மீறப்பட்டு இயற்கையைக் கபளீகரம் செய்யும் அவலநிலை தொடர்ந்து நீடித்துவருகிறது. கார்ப்பரேட் தரகு முதலாளிகள் நலனுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை நெளிக்கவும், வளைக்கவும், செய்யும் நிலையே இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க பல திட்டங்களும் சட்டங்களும் இருப்பதைப்போலக் காட்டிக் கொண்டாலும் உண்மையில், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக நிலம், நீர், காற்று, காடு, மலை என அனைத்து வளங்களையும் அழித்து சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் நிலையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மாறிமாறி ஆட்சிக்கு வரும் எல்லா கட்சிகளின் ஆட்சிகளும் ஆண்டாண்டுகளாக இதையே செய்துவருகின்றன. இவற்றிலிருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் கடமையை அரசும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்வதே கிடையாது.

பன்னாட்டுக் கம்பெனிகள் தாங்கள் விரும்பிய வளங்களை, விரும்பிய கணமே சூறையாடுவதற்கேற்ப பல சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இதற்குத் தடையாக இருந்த சில அமைச்சர்கள், அதிகாரிகள் தூக்கியெறியப்பட்டு, திட்டங்களுக்கான அனுமதியை விரைந்து வழங்கும் வகையில் சட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகம் அதற்கொப்பவே மாற்றியமைக்கப்பட்டது. வேதாந்தா அலுமினியம், போஸ்கோ இரும்பு எஃகு உள்ளிட்ட பல திட்டங்களுக்கு சாதகமாக அனுமதியளித்தனர். அதுமட்டுமல்லாது, மரபீனி மாற்றம் செய்த பல பயிர்களை நேரடியாக விளைநிலத்தில் சோதனை செய்யும் மகாபாதக முடிவும் அமலாக்கப்படுகிறது.

மோடி கும்பல் பல சுற்றுச்சூழல் விதிகளை, தடைகளைமீறி 144 திட்டங்களை அனுமதித்த மக்கள் விரோத முடிவுகளால் அதிர்ச்சியில் நாடே உறைந்து போயுள்ளது. அவ்வாறான முடிவெடுப்பதற்கு மோடி தலைமையிலான சுற்றுச்சூழல் குழுவுக்கு உச்சநீதிமன்றம் தடை வித்துள்ளது. ஆனாலும், பெரும் திட்டங்களுக்குள்ள முட்டுக்கட்டையைத் தவிர்க்க, தொழிலதிபர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தாலே அனுமதியளிக்கப்படும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார், சுற்றுச்சூழல் அமைச்சர். யார் ஆட்சியிலிருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் பன்னாட்டு, தரகு முதலாளிகளின் லாப வேட்டைக்கான நலன் காக்கப்படும் என்றே இவர்கள் கூறுகிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக நிலம், நீர், காற்று, காடு, மலை என அனைத்து வளங்களையும் அழித்து சுற்றுச்சூழலை நாசமாக்கும் நிலையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

விளை நிலங்களின் தனித்தன்மையையும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் கபளீகரம் செய்யும் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் நமக்குத் தெரியாமலேயே சந்தைகளில் பரப்பும் வேலையும் இங்கு நடந்து வருகிறது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, ஆமணக்கு, பருத்தி உள்ளிட்ட 200 வகையான பயிர்களுக்கு, மரபீனி மாற்றம் செய்த உடனேயே அவற்றை விளை நிலத்தில் விளைவிக்க அனுமதியளித்தது காங்கிரசு அரசு. தகுந்த பாதுகாப்பு நெறிகளையும், சோதனைகளையும் செய்யாமல் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிக்கக்கூடாது என்று 2012-ல் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கூறியது. மேலும் இது சம்பந்தப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வரும்வரை மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விளைவிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை மாற்றி அமைக்கும் மோடி அரசின் அறிவிப்பு உயிரித் தொழில்நுட்பக் கம்பெனிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.

இது போன்ற திட்டங்களால்  காலங்காலமாக அப்பகுதிகளில் விளையும் பயிர்களில் பேரழிவு மகரந்தக் கலப்பு ஏற்பட்டு அவற்றை மீளப்பெறமுடியாத அளவிற்கான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக அமெரிக்க தனியார் விதை நிறுவனமான மான்சாண்டோ இந்தியாவில கால்பதித்த பின்னர் ஏற்பட்ட பாதக விளைவுகள் அதிகம். மான்சாண்டோ அறிமுகப்படுத்திய பி.டி. பருத்தியின் விளைவிலிருந்து இன்னும் மீளாமல் உள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர விவசாயிகள். அங்கு விவசாயப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதோடல்லாமல் அப்பயிர்களைத் தின்ற ஆயிரக்கணக்கான கால்நடைகளும் மடிந்து போயின. இன்னும் அந்நிலங்கள் பயிரிடத் தகுதியில்லாத மலட்டு நிலங்களாகவும், அப்பகுதியில் நிலத்தடி நீர் இல்லாத நிலையும் நீடிக்கிறது. மான்சான்டோவின் தயாரிப்புகளான பி.டி. வகை விளை பொருட்களால் உடல்நல பிரச்சினைகள், மரபணு ரீதியான பிரச்சினைகள் வருகின்றன என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பி.டி. பருத்தி, கத்தரிக்காய் உள்ளிட்ட மான்சாண்டோவின் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ அல்லது போராடினாலோ ஓராண்டு சிறைத்தண்டனை என ஒரு மசோதாவை நிறைவேற்றி தனது உண்மை முகத்தைக் காட்டியது அரசு. மான்சாண்டோ மட்டுமல்லாது பல பன்னாட்டு உயிரித் தொழிநுட்ப நிறுவனங்களும் இந்தியாவிற்குள் தங்கள் விதைச் சந்தையை விரிவுபடுத்தி நிலம், நீர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் காவுகொள்ளத் தயாராகி வருகிறது.

மலைகளில் உள்ள காடுகளின் இயற்கைத் தன்மை அழிக்கப்பட்டு கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன; கார்ப்பரேட் கம்பெனிகளின் பெருந்தோட்டங்களாகவும், இயற்கை சூழல் கொண்ட சுற்றுலாத் தளங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. காடுகளும் மலைப்பகுதிகளும் புலிகள், சிறுத்தைகள், யானைகள் முதலிய வனவிலங்குகள் வாழமுடியாத அளவிற்கு அங்கே சுற்றுச் சூழல் சூறையாடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மிருகங்கள் சமவெளிப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுக்கின்றன. உண்மை இப்படியிருக்க பழங்குடிகள் மற்றும் மலையோரக் கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் மீதும் அரசும் ஆட்சியாளர்களும் பழிசுமத்துகின்றனர். இக்காடுகளின் விரோதிகள் எனக் குற்றஞ் சுமத்தி பழங்குடிமக்களை வனங்களிலிருந்தும் நிலங்களிலிருந்தும் வெளியேற்றியும் வாழ்வுரிமையைப் பறித்தும் அவர்களின் வளங்களைச் சூறையாட எத்தணிக்கின்றன, ஆளும் வர்க்கங்கள்.

இப்படித் தொடர்ச்சியாக இயற்கைச் சூழலைக் கெடுக்கும் திட்டங்கள் வந்த வண்ணமிருக்கின்றன.  தமிழக டெல்டா மாவட்டங்களிலிருந்து மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், எண்ணெய் எரிசக்திக் குழாய்கள் பதிக்கும் திட்டம், வேடியப்பன் – கௌத்தி மலை இரும்புக் கனிமக் கொள்ளைத்திட்டம், கூடங்குளத்தில் அணு உலைகள் என்று நீண்டுகொண்டே செல்கின்றன. இவற்றுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது, இவ்வரசு. சுற்றுச்சூழல் சட்டங்களைச் சுட்டிக்காட்டி நீதிமன்றங்களுச் சென்றாலும் அவை சுவற்றிலடித்த பந்தாய் மக்கள்மீதே பாய்கின்றன.

11. இந்திய அரசே ஒரு கார்ப்பரேட் கொள்ளை நிறுவனம்; பிரதமரே அதன் தலைமை நிர்வாக அதிகாரி

நாட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளும் வாழ்வுரிமைகளும் அப்பட்டமாகவே மறுக்கப்படும், ஒடுக்கப்படும் அதேசமயம், ஏகாதிபத்திய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் உள்நாட்டுநாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களும் இந்திய அரசாலும் ஆட்சியாளர்களாலும் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் கேட்கும் அனைத்தும் ஈடேற்றிக் கொடுக்கப்படுகின்றன. இந்திய அரசே “கார்ப்பரேட் இந்தியா” என்ற ஒரு தொழில் நிறுவனம் போலாகி விட்டது. இந்தியப் பிரதமர் மக்களுக்குப் பொறுப்பான அரசியல் தலைவராக அல்லாமல், இலாபவெறி பிடித்த “கார்ப்பரேட் இந்தியா” என்ற தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பிரதமரும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களாக மாநில முதல்வர்களும் செயல்படுகிறார்கள்.

நாட்டிலேயே மிகப்பெரிய சுரண்டல் அமைப்பாக அரசுதான் உருவாகியிருக்கிறது. என்னென்ன வழிகளிலெல்லாம், என்னென்ன காரணங்களைச் சொல்லி மக்களைக் கொள்ளையடிக்கலாம் என்று சதாகாலமும் அரசு அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலேயே யோசித்து அரசுத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தனியார் கார்ப்பரேட் கம்பெனியைப் போல, அரசு கட்டுமான அமைப்புகளும் அரசுத் தொழில்களும் இலாப – நட்டக் கணக்குச் சொல்லி, நேரடியாக வரிச் சுமைகள் மக்கள் தலையில் ஏற்றப்படுவதோடு, மக்களது அடிப்படை வசதிகள் தேவைகளுக்காக செய்யப்படும் சேவைகளுக்கே கட்டணங்கள் அதீதமாக ஏற்றப்படுகின்றன.  பொதுநலன் என்ற பெயரைச் சொல்லி பொதுமக்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் சொந்தமான விவசாய நிலங்கள், வாழ்விடங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் எல்லாம் அரசு பறித்துக்கொள்கிறது. பிறகு, வளர்ச்சிக்கு அவசியமானது என்றுகூறி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குறைந்த விலையிலோ, இலவசமாகவோ அவை தாரைவார்க்கப்படுகின்றன.

அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித்தரக் கடமைப்பட்ட அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடைவதற்கான வியாபாரச் சரக்குகளாக மாற்றித்தரும் தரகுவேலையைச் செய்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் தரகர்களான இவர்களைத்தான் பொது ஊழியர்கள்/அரசு ஊழியர்கள் என்று நம்பச் சொல்லுகிறார்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் துரோகம் செய்து ஆதாயம் அடைவதையே தொழிலாகச் செய்துகொண்டிருக்கும் அரசையும் ஆட்சியாளர்களையும் பொது  ஊழியர்கள் என்று மிகவும் தவறானதொரு, மோசமானதொரு கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது. அவர்கள் மக்களுடைய அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகளைத் தாம் நிறைவேற்றித் தராதது மட்டுமல்ல, மக்களுக்கே சொந்தமான நீர், நிலம், கடல், மணல், பாறைகள், காடுகள், மலைகள், அவற்றுக்குள் புதைந்திருக்கும்  கனிமவளங்கள் அனைத்தையும் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்குத் தாரை வார்க்கிறார்கள்.  கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை வெறியால் இந்த இயற்கை வளங்கள் வரம்பில்லாமல் சூறையாடப் படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக மலைவாழ் பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்கள், சிறுவியாபாரிகள், நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் உதிரிப் பாட்டாளிகள் ஆகிய நமது மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டுத் துரத்தப்படுகிறார்கள். நம்தொழிலாளர்களின் உழைக்கும் உரிமையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தயவிற்கு விடப்பட்டு விட்டன.

அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித்தரக் கடமைப்பட்டு, ஒப்புக்கொண்ட அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை, மானியங்களை முற்றாக நிறுத்தி விடும்படி கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களுடைய பன்னாட்டுப் பங்காளிகளும் தொடர்ந்து அரசை நிரப்பந்திக்கிறார்கள். விவசாயிகளுக்குத் தரப்படும் கடன்கள் வீணென்று கரித்துக் கொட்டிப் பிரச்சாரம் செய்யும் அதேசமயம், அவர்கள் அதைப்போல பலமடங்கு அதாவது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏழு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன் என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் சுருட்டிக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கான அரசுக் கடன், மானியங்கள் போன்றவைகளைக்கூட கார்ப்பரேட் முதலாளிகள்தாம் கொள்ளையடித்து விடுகிறார்கள். அதாவது, குறைந்த விலைவைத்து விவசாயிகளுக்கு இடு பொருட்களை விற்கும்படி விவசாயத்துக்கு மானியம் என்று ஒதுக்கப்படும் தொகை ஆலை முதலாளிகளிடம் தரப்படுகிறது. ஆனால், அவற்றுக்கு விலைக்குறைப்பு செய்யாது தாங்களே அதை விழுங்கி விடுகிறார்கள்.

விவசாயிகளிடமிருந்து வாங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகையை அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில்  ஆலைமுதலாளிகள் தருவதே கிடையாது. விவசாயிகளின் போராட்டங் களுக்குப் பிறகு ஆலை முதலாளிகளுக்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கடன் கொடுக்கிறது. அதையும் ஆலை முதலாளிகள் விழுங்கி விடுகிறார்கள். புதியபொருளாதாரக் கொள்கை புகுத்தப்படும் முன்பு தனியார் ஆலைகள் நட்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதாகக் கூறித்தான் அவற்றை அரசுடைமையாக்கினார்கள். புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு அரசுடமைத் தொழில்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், அரசு ஊழியர்களின் திறமையின்மைக்குத் தனியார்மயம்தான் தீர்வு, ஏராளமான முதலீடும் முன்னேறிய தொழில் நுட்பமும் தேவை என்றெல்லாம் வாதிட்டு அரசுத்துறைத் தொழில்களை அடிமாட்டு விலைக்கு அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்த்தார்கள். 2007-க்குப் பிறகு உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இந்தியாவில் அதன் தாக்கம் விளைவாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகும் நிலையை எட்டியதாகக்கூறி அரசு நிதி ஏராளமாகக் கொட்டப்படுகிறது. பல இலட்சம் கோடி ரூபாய்கள் சுமையை மக்கள்மீது அரசும் ஆட்சியாளர்களும் சுமத்துகின்றனர்.

பார்ப்பன பாசிச மோடியின் குஜராத்தை நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மாதிரியாகக் காட்டி ஏய்த்ததைப் போல, அமெரிக்காவை மாதிரியாகக் காட்டி புதியபொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் புகுத்தப்பட்ட தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம், உண்மையில் இந்த நாட்டை மறுகாலனியாக்கும் அரசியலை, பெருளாதாரத்தைக் கொண்டதாகும். ஏகாதிபத்திய – பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களையும் உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களையும் இழுவை இயந்திரமாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதாகும்.

இதன் நேரடி விளைவாக இந்த நாட்டின் இறையாண்மை பறிக்கப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்க நலன்களுக்கு தொண்டூழியம் செய்வதாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த உண்மையை இந்தியாவின் எல்லாப் பொருளாதார, அயலுறவுக் கொள்கைகளிலும் காணலாம். இந்த நாட்டின் பொருளாதாரம் அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டு, அமெரிக்க எடுபிடியான உலக வர்த்தக நிறுவனத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து, ஏகாதிபத்திய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களுக்கும் சேவை செய்வதாகவும் மாற்றப்பட்டுவிட்டது. ஏகாதிபத்திய – பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்கள் வழியே தனியார் திறமை, முன்முயற்சியில் நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்து விடும் என்று அரசும் ஆட்சியாளர்களும் “பயாஸ்கோப்பில்” படம் காட்டினார்கள். ஆனால், நடந்ததோ வேறுதான்! தனியார் திறமை, முன்முயற்சி என்பது உண்மையில் இலாபவெறியை நோக்கமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. எனவே, அவர்கள் இலாபவெறியைக் கொள்ளை இலாபவெறியாக வளர்த்து, முன்னேற்றி நாட்டை இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளுக்குள் தள்ளினார்கள். நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் முன்பைவிடக் கடுமையான, தீராத நெருக்கடிக்குள் மூழ்கடித்தார்கள். அதன்மூலம் அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் தாம் ஆளவே அருகதையற்றவர்கள், உடனடியாகத் தூக்கியெறியப்பட வேண்டியவர்கள் என்று காட்டிவிட்டார்கள்.

விவசாயத் துறையை அடுத்து, கார்ப்பரேட் முதலாளிகளின் கண்களை மிகவும் உறுத்தியவை சினிமா, தொலைக்காட்சி முதலான ஊடகங்கள், சில்லரை வர்த்தகம் ஆகியவை. இவற்றில் மட்டும்  கோடி கோடியான ரூபாய் பணம் புரளுவதால் கொள்ளை இலாபமடிக்க முடியும் என்பதைக் கண்டுகொண்டுவிட்ட பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களுக்கும் இவற்றைக் கைப்பற்றுவதில் இறங்கின. சினிமா, தொலைக்காட்சி முதலான ஊடகங்களை இவர்கள் கைப்பற்றிக் கொண்டது விரைவாகவும், எளிதாகவும் நடந்துவிட்டது. இவற்றில் சினிமா ஏற்கெனவே வட்டி லேவாதேவிப் பண முதலைகளின் பிடியில் இருந்தது. புதிதாக வந்த தொலைக்காட்சித் துறை முதலில் ஒரு சிலரின் ஏகபோகமாக இருந்தது. ஆகவே, பெரும் மூலதனத்துடன் நுழைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றைக் கைப்பற்றி கொள்ள முடிந்தது. இப்போது தயாரிப்பு, விநியோகத்திலிருந்து பல சினிமாக் கொட்டைகைகளுடன் பலநோக்கு அங்காடிகள் நிறைந்த பிரம்மாண்டமான வளாகங்கள் (Malls and Multiplexes) வரை எழுப்பிப்  பெருங்கொள்ளையடிக்கிறார்கள். ஊடக மயக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவில் தங்களுக்குச் சாதகமான கருத்துக்களைப் பிரச்சரம் செய்வதற்கும் மன்மோகன், மோடி போன்ற “தமது ஆட்களை” அதிகாரத்தில்  அமர்த்துவதற்கும் இந்த ஊடக ஆதிக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதிகளை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதை அவர்களின் ஊடகங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆகவே மக்களுக்கு ஏற்புடையவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிட முடியாது

12. விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிமக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிப்பு – கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதாயம் குவிப்பு!

விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிமக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள் என்று பலபிரிவு மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கிப் பஞ்சைப் பராரிகளாக்கிய கார்ப்பரேட் முதலாளிகள் பல இலட்சக்கணக்கான சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரங்களைத் தட்டிப் பறிக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்திக்குட்பட்டு ஐம்பது காசு, ஒரு ரூபாய்க்கும்கூட “பாக்கெட் போட்டு”  சில்லரை வியாபாரிகளை விரட்டி விட்டு, சில்லரை வர்த்தகத்தை  கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். முன்பேர வர்த்தகம், இணையத்தள வர்த்தகம் (futures trade, online trade etc) பெரு விவசாயிகளுடன் ஒப்பந்த உற்பத்தி, பெரும் கிடங்குகளில் நவீன வசதிகளுடன்பதுக்கல் ஆகியவற்றின் மூலம் சந்தையைக் கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். நுகர்வோர், மற்றும் நாட்டின் சந்தையை ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்கவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் ஆகிவிட்டார்கள்.

இவை போதாதென்று பல வர்த்தக முத்திரைப் பொருட்களை விற்கும் (மல்டி பிராண்டு) சில்லரை வர்த்தகத்தில் ஏகாதிபத்திய – பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. இது, சிறு, பெரு வர்த்தகத்தில்  இந்தியாவை உலகச் சந்தையுடன் பிணைப்பதாகும், உலகத் தரம் என்ற பெயரில் அந்நியப் பொருட்களைக் கொண்டுவந்து குவிப்பதாகும். ஒருபுறம் உலகமயமாக்கம் பேசிக்கொண்டே வர்த்தகக் காப்புக்கொள்கைகளை மேலை ஏகாதிபத்திய நாடுகளே பின்பற்றும் இன்றைய காலத்தில், ஏகாதிபத்திய – பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை பலவர்த்தக முத்திரைப் பொருட்களை விற்கும் (மல்டிபிராண்டு) சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பது ஏற்றுமதி – இறக்குமதி, அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்து, இந்திய நாணயத்தின் மதிப்பை வீழ்ச்சி அடையச்செய்து பொருளாதார நெருக்கடியைக் கடுமையாக்கவே செய்கிறது.

தம் கொள்ளை இலாபத்துக்காக இடைவிடாது தமது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டேபோகும் கார்ப்பரேட் முதலாளிகள், அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித் தர வேண்டிய  அடிப்படைத் தேவைகளான  கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிதண்ணீர், சாலைப்போக்குவரத்து, வீடு – வீட்டுமனை முதலானவற்றைத் தமது சேவைத் தொழிலாக மாற்றிக் கைப்பற்றிக் கொண்டதோடு, வங்கி, காப்பீட்டுத் துறை, பங்குச் சந்தைத் தரகுத் தொழில் போன்றவற்றை நிதிச் சேவைத் தொழில்கள் என்ற வகையில் விரிவுபடுத்திக் கொண்டார்கள். அது மட்டுமல்ல, அரசு மற்றும் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து மேற்கண்ட எல்லாத் தொழில்களுக்கும் “சேவைவரி” என்ற பெயரில் அவற்றைப் பயனாளிகளிடமிருந்து வசூலித்துக் கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் புகுத்தப்பட்ட இந்த “சேவை வரி” நாட்டின் வருவாயில், வரிவசூலில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது. நாட்டு மக்களுடைய பன்முக வாழ்க்கை மீதும் “வரி” வசூல்முறையைப் புகுத்தி, மக்கள் அனைவரையும் வரிவசூலின் கீழ்கொண்டு வந்து விட்டது, அரசின் சாதனை என்று கார்ப்பரேட் முதலாளிகள் பாராட்டுகின்றனர். சொந்த வீட்டில் குடியிருந்தால் சொத்துவரி, வாடகை வீட்டில் குடியிருந்தால் வாடகைக் குடியிருப்பு சேவை வரி, உணவு விடுதியில் சாப்பிட்டால் ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் பேரிலும் வரி. “வாட் வரி” என்பது மதிப்புக் கூட்டு வரி என்பது உண்மையில் ஒரு சரக்கின் மதிப்பைக் கூட்டும் தொழிலாளியின் உழைப்பு மீதான வரி. இனிக் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் “சேவைக்கும்” வரி வசூலிப்பதுதான் பாக்கி. அப்புறம் அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்காக என்னதான் செய்கிறார்கள்? ஒன்றுமே செய்வதில்லை என்றும் கூறிவிட முடியாது; அரசும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களுக்கு எதிராகச் செய்யும் கேடுகளை எதிர்த்துப் போராடினால் ஒடுக்குவதைச் செய்கிறார்கள்!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசும் ஆட்சியாளர்களும் செய்துவரும் சேவைகளுக்கும் முறைகேடுகளுக்கும் சட்டப்படியான வரிவசூலிக்கவில்லைதான், வேறுவகை வசூல்களை (இலஞ்ச ஊழல்) நடத்திக்கொள்கிறார்கள்! அவை, சதித்தனமானவை, துரோகத்தனமானவை. அத்தகைய வசூல்களுக்காக பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்த நாட்டின் விவசாயத்தை சீரழித்து வருகிறார்கள்; பலகோடி விவசாயிகளின் வாழ்வையும் வாழ்வுரிமையையும் பலிகொடுத்து வருகிறார்கள். பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்ற பெயரால் விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள்; கார்ப்பரேட் நலன்களுக்காக அடிப்படைக் கட்டுமான நிர்மாணங்களுக்காக என்று சொல்லி  போக்குவரத்துச் சாலைகள் போடவும், உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் நடவும்,  எண்ணெய்க் குழாய் பதிக்கவும், எரிவாயு எடுக்கவும் அரசே நிலங்களைக் கைப்பற்றிக்கொடுக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் விவசாயிகளின் விளை நிலங்களைப் பிடுங்கி முந்தைய காலச் சீனத்தைப்போல தனித்தனிக் காலனிகளை அமைக்கிறார்கள். வீடு – வீட்டு மனைத் தொழில் முதலைகள் கவ்விக்கொள்ள விடுகிறார்கள்.

இது போதாதென்று எஞ்சியுள்ள விவசாய விளை நிலங்களையும் பாழடிக்கும், நாசமாக்கும் வேலையையும் விவசாயத் தொழில்களை நடத்தும் மாண்சான்டோ, பேயர்  போன்ற அந்நிய கார்ப்பரேட் நலன்களுக்காக அரசும் ஆட்சியாளர்களும், செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் நவீன விவசாயத் தொழிற் கருவிகளைப் புகுத்துகிறார்கள். நமது நாட்டிலுள்ள விவசாயப் பல்கலைக் கழகங்கள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், விவசாயக் கல்லூரிகள் பெரும்பாலும் விவசாயத் தொழில்களை நடத்தும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடிகளாகவே செயல்படுகின்றன. நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு மரபுவழி விதைகள், நமது நாட்டு மண்வளம், விவசாயம், பயிர்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டித் தருகிறார்கள்; இல்லை, அவற்றைத் திருடி விவசாயத் தொழில்களை நடத்தும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறார்கள். விவசாயத்தில் உலகுதழுவிய அளவில் நடக்கும் இம்மாற்றங்களை “உணவுயுத்தம்” என்று தமது கணிப்பாக விவசாயத் துறை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். நாட்டின் துரோகிகளாகிவிட்ட விவசாய ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரையின் பேரில் விவசாயத் தொழில்களை நடத்தும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காக நவீன மரபணு மாற்ற விதைகளையும் அதற்கான உரங்கள், பூச்சி மருந்துகளையும் திணிக்கிறார்கள். அவை நமது நாட்டு மரபுவழி விதைகளைப் பயன்படுத்த முடியாதவாறு செய்து விடுகின்றன. நமது நிலங்களைப் பாழ்படுத்துகின்றன; நிரந்தரமாகத் தரிசாக்குகின்றன. நமது மக்களை நீண்ட காலக் கொடிய நோய்களில் வீழ்த்துகின்றன. தீராக்கடனுக்கும் தற்கொலைக்கும் தள்ளுகின்றன. நமது மக்களை விவசாயத்தில் இருந்தும் கிராமப்புறங்களில் இருந்தும் நாடோடிகளாக்கி விரட்டுகின்றன.

இவ்வாறு விரட்டப்படும் பெரும் எண்ணிக்கையிலான  உழைக்கும் மக்கள், ஒன்று தமது சொந்த மாநிலங்களில் நகர்ப்புற நவீனச் சேரிகளான குடிசைப் பகுதிகளில் குவிகிறார்கள்; அல்லது குடிபெயரும் தொழிலாளர்களாகிறார்கள். உழைப்புச் சந்தையில் மலிவாகக் குவியும் இம்மக்களை ரிசர்வ் படையாகக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகள் ஈவிரக்கமின்றிக் கடுமையாகச் சுரண்டுகிறார்கள்.  ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலமாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலுறவு, மனிதவுரிமைகள் எல்லாம் மறுகாலனியாக்கமும் உலகமயமாக்கமும் புகுத்தப்பட்ட பிறகு கார்ப்பரேட் முதலாளிகளால் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. பல ஆலைகளில் பத்துப் பேருக்கு ஒருவர்கூட நிரந்தரத் தொழிலாளி கிடையாது. அவர்களுக்கும் தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. எஞ்சியவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; அடிப்படைத் தொழிலுரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் நவீனக் கொத்தடிமைகளாக, அன்றாடக் கூலித் தொழிலாளர்களாகவே நடத்தப்படுகிறார்கள். உள்ளூர் சாதிப்பிரமுகர்கள் இந்தக் கொத்தடிமைத் தொழிலாளர்களைப் பிடித்துத் தரும் தரகர்களாக செயல்படுகிறார்கள். வேலையின் போது அடிபட்டால் இவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி கூடக் கிடையாது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் செத்தால் உறவினர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அனாதைப் பிணமாக அப்புறப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், பன்னாட்டுக் கார்ப்பரேட் தொழிலகங்களில் நவீன “ரோபோ” இயந்திரங்களோடு போட்டி போடும் உற்பத்தியில் தள்ளிக் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். தாமும் பெரும் ஊதியம் பெறும் வகையில் பின்னாளில் தமது பணி நிரந்தரம் ஆகிவிடும் என்ற மாயையில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆலையில் சிக்கிய கரும்புபோல பிழியப்பட்டு வெளியே வீசியெறியப்படுகிறார்கள்.

13. ஊதிப்பெருக்கப்படும் அடக்குமுறை அரசு எந்திரம் நாட்டுக்கு வேண்டாத புற்றுநோய்ச் சதைப்பிண்டம்

அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வுரிமைகள், உழைக்கும் மக்களின் தொழிலுரிமைகள் முதலானவற்றை நிறைவேற்றித் தராதது மட்டுமல்ல, சமூகக் கிரிமினல் குற்றங்கள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், உயிர்க்கொல்லி நோய்கள், பெரும் விபத்துக்கள், வறட்சி பஞ்சம் பசி பட்டினிச் சாவுகள், வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து நாசம் விளைவிப்பது, பேரிடர் சாவுகள் ஆகியவற்றுக்கும் தமக்கும் தொடர்பில்லை, பொறுப்பில்லை; அவற்றுக்கு நிவாரணங்கள் செய்து தரவேண்டிய கடமை தமக்கு இல்லை என்பதாக அரசு ஒதுங்கிக்கொள்கிறது. சற்று ஆழமாகப் பார்த்தால் இத்தகைய கேடுகளுக்கு அரசுதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகும். அரசின் தவறான பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல், பண்பாட்டுக் கொள்கைகளின் விளைவுகளால் இவை ஏற்படுகின்றன. நேரடி, மறைமுக வரிவசூல் மூலமும் மக்களின் சொத்துகள் இயற்கை வளங்களை விற்பதன் மூலமும் ஏராளமான நிதியைத் திரட்டிக்கொள்ளும் இந்த அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளையும் அவசியமானபோது தக்க நிவாரணங்களை வழங்கவும், வாழ்வுரிமைகளையும், வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலையும், பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது.

ஆனால், மக்களுக்கு நேரும் எல்லா கேடுகளையும் அரசும் ஆட்சியாளர்களும் கண்டு கொள்வதே இல்லை. அதாவது மக்களுக்காக செயல்படாத இந்த அரசு, ஏகாதிபத்திய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களுக்கு ஒரு பாதிப்பு இழப்பு என்றால் ஓடோடிச் சென்று உதவுகிறது. தங்களின் வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எந்த வகையிலான நடவடிக்கையிலும் அரசு தலையிடக்கூடாது; “சிறிய, சிக்கனமான அரசாங்கம், கூடுதலான நிர்வாகம்” என்பதை திறமையான அரசுக்குரிய இலக்கணமாக கார்ப்பரேட் சிந்தனையாளர்கள் தமது தாரக மந்திரமாக ஓதுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே மக்கள் நலப் பணிகளுக்கான, சேவைக்கான அரசு கட்டுமானங்களைக்  கலைக்க வேண்டும் என்பது அவர்களின் நிர்ப்பந்தமாக உள்ளது. மக்கள் சேவைக்காக ஆசிரியர், மருத்துவர், துப்புரவுப் பணியாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள், குடிநீர் மற்றும் பாசனநீர் பராமரிப்பாளர்கள் போன்ற வேலைகளுக்கு ஆள் சேர்ப்பது இல்லை. ஆட்குறைப்புதான் செய்கிறார்கள். மாறாக, மக்களை ஒடுக்குவதற்காக போலீசு, ஆயுதப்படைகள், துணை இராணுவம், உளவு கண்காணிப்பு அமைப்புகள், வழக்காடு மன்றங்கள், சிறைச்சாலைகள், பல துறை ஒழுங்குமுறை அதிகாரவர்க்க அமைப்புகள் போன்ற அரசு வேலைகளுக்குத்தான் ஆள் சேர்க்கப்படுகிறது. அவற்றை ஊதிப்பெருக்குவதோடு, நவீன ஆயுதங்கள் கருவிகளைக் கொண்டு மேலும் பலப்படுத்துவதற்காக கூடுதலான அரசு நிதி திருப்பிவிடப் படுகிறது. இப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் சமூகத்தின்மீது பெருந்திரள் கண்காணிப்பு ஏற்பாடுகளும் அடையாளத் தகவல் சேகரிப்புகளும், நவீன வாகனங்கள் – செய்தித் தொடர்பு – விரைவான போக்குவரத்து வசதிகளும் என்று அரசு எந்திரம் ஊதிப்பெருக்கப்படுகிறது. அரசுக்கு எதிரான மக்கள் திரள் எழுச்சி எதுவும் வந்துவிடக்கூடாது; வந்தாலும் அதை ஒடுக்குவதற்கான முன்தயாரிப்பாகவே இவ்வாறு அரசு எந்திரம் கட்டமைக்கப்படுகிறது.

உலக ஏழைநாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், உலகில் மிகப் பெரிய பணக்கார நாடாகிய அமெரிக்காவின் அரசு ஊழியர் எண்ணிக்கையை விட இந்திய மைய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 2% மட்டுமே குறைவு. 2008-ஆம் ஆண்டிலேயே இந்திய மைய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 31.12 இலட்சம் பேராக இருந்தது. இவை தவிர, சிறியதும் பெரியதுமாக உள்ள எல்லா மாநில அரசுகளின் போலீசு, ஆயுதப்போலீசு, அதிகாரவர்க்கம், நீதித்துறை சட்டத்துறை, வாரியங்கள் கழகங்கள், ஆணையங்கள் எனப்பெருகி வருகின்றன. இவை வேண்டாத சதைப்பிண்டமெனக் கூறப்பட்ட போதிலும், கட்டுமான மறுசீரமைப்பு அமலாக்கப்பட்ட போதிலும் 25 ஆண்டுகளில் 0.42% தான் இந்திய மைய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதிலும், மக்கள் சேவைக்கான அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டு விட்டன. மக்களை ஒடுக்கும் இராணுவம், போலீசு முதலிய ஒடுக்குமுறை அமைப்புகளோ அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்திய மைய அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இராணுவம், போலீசு மற்றும் அவற்றுக்கான சிவில் ஊழியர்களின் பங்கு மட்டும் 20 சதவீதமாகும்.

அதேசமயம், அவர்களின் சம்பளம் மற்றும் வசதிகளைப் பெருக்குவதற்கான செலவு எகிறிக் கெண்டே போகிறது. அது 2011-12 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் கீழிருந்தது. அதுவே 2012-13 இல் 1,13, 785 கோடி ரூபாயாகவும், 2013-14 இல் 1,24,646 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த விவரங்களில் உள்ளதைவிட பன்மடங்கு அதிகமான அளவில் உள்ள மாநில அரசுகளின் ஊழியர்கள் போலீசு எண்ணிக்கையும், செலவும் சேர்க்கப்படவில்லை. பல மாநிலங்களின் வரவைவிட செலவு மிகையாகி அவற்றின்பொருளாதாரமே திவாலாகிவிட்ட நிலையை எட்டியுள்ளது. மாதக் கணக்கில் அவர்களுக்கு சம்பளம்கூட தரப்படுவதில்லை. மையமாநில அரசுகளின் ஊழியர்களும் அதிகார வர்க்கத்தினரும் போலீசும் உளவுப்பிரிவினரும் இவ்வாறு ஊதிப் பெருக்கப்படுவதால், அதே விகிதத்தில் இலஞ்ச ஊழலும் பல்கிப் பெருகுகிறது. மக்களை ஒடுக்குவதையே பயிற்சியாகவும் பணியாகவும் கொண்டு தனிவகை சாதியாக வளர்க்கப்படும் இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கே வேண்டாத, தூக்கியெறியப்பட வேண்டியபகை சக்தியாக உள்ளது.

இந்திய இராணுவத்தின் மீது மனித உரிமை மீறல் உட்பட பல கடும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆண்டுகள் பலவான பிறகும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  போலீசுக் கமிசன்கள், சட்டத்துறைக் கமிசன்கள், நீதித்துறைக் கமிசன் எனப்பல ஆணையங்கள் அமைத்து பரிந்துரைகள் பெற்றபோதும், அவை அமலாக்கப்பட்டதே கிடையாது. ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோருவது தேசதுரோகச் செயல் என்று குற்றம் சாட்டப்படுகிறது. 1962 போரில் சீனாவிடம் இந்திய ரானுவம் தோற்றது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மிகச் சிறிய பாகிஸ்தானிய படைகளை சமாளிக்க சிரமப்படுவதும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அவை எதுவும் கவனிக்கப்படவேயில்லை.

பெரும்பாலும் ஏழை இளைஞர்களை இணைத்துக் கொண்டுள்ள இந்திய இராணுவத்தில் அவர்களுக்கு உரிய மதிப்பு மரியாதையும் கிடையாது. இந்திய படைத்துறையில் பெண்களுக்கு சம உரிமைகளும் வாய்ப்புக்களும் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. 23 பெரும்பான்மை உயர் பதவிகளில் அனைத்திலும் மேல்சாதியினரையும், ஆண்களையும், வைத்திருப்பது இதற்கு இன்னுமொரு சான்றாகும். இந்திய படைத்துறையில் குறிப்பாக, வட இந்திய சீக்கிய, இராச புத்திர இனத்தைச் சார்ந்தவர்கள் பெரும் தொகையில் உள்ளார்கள். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும், சிறுபான்மையினரும் மிகக் குறைவே. தலித்துக்கள், பழங்குடிகள் போன்றோருக்குச் சம பங்களிப்பு மறுக்கப்படுகிற இந்திய படைத்துறை இயங்கிய, இயங்குகின்ற பல தளங்களில் பாரிய மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்காக இராணுவம் துணை இராணுவத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. படுகொலைகள், கொள்ளை, சித்திரவதை, பாலியல் வன்முறை எனப் பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை, காசுமீர், அசாம், மணிப்பூர் எனப்பல இடங்களில் இவர்கள் மனித உரிமைகளை மீறிச்செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழான ஏழைகளாக இருக்க, போலீசுக்கு மிகப்பெரும் தொகை நிதி, இராணுவம்  ஆயுதங்களுக்காக செலவிடப்படுகிறது. இந்திய படைத்துறைப் போர் வானூர்திகள், கப்பல்கள், கவச வாகனங்கள், எரிபொருள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்தே பெரிதும் வாங்கப்படுகின்றன. இது ஒரு பெரிய செலவு ஆகும். எனினும் பாகிஸ்தான், பயங்கரவாதம், சீனா எனப் பலதரப்பட்ட ஆபத்துக்கள் இருப்பதால் இவை அவசியம் என நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், ஊழல்கள்தாம் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக ஆயுதக் கொள்வனவுக்காக மட்டும் பல ஆயிரம்கோடி ரூபாயும் அதே அளவு பணம் மோசடியும் செய்யப்படுகிறது.

இந்திய அரசுக் கட்டுமானம் இந்திய மக்களின் சேவைக்கும் தேவைக்கும் உருவாக்கப்பட்டது அல்ல. இதன் தோற்றமும் பரிணாமமுமே இதைத் தெளிவுபடுத்துகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள்,  இந்திய காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சமுதாயத்தின்மீது தனது காலனிய இரும்புப் பிடியையும் அரசாதிக்கத்தையும் இருத்தி வைத்துக் கொள்வதற்காகப் பல்வேறு அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டார்கள்;  தனது  ஆளுகைக்குத் தேவையான பழைய சமூக, பண்பாட்டுக் கட்டுமானங்களைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.  இந்த இரண்டும் கலந்த தொகுப்பானதொரு கட்டமைப்பை நிறுவிக்கொண்டார்கள். 1947 ஆதிகார மாற்றத்துக்குப் பிறகு, இந்த நாடு பல்வேறு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக்கப்பட்டு அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பாக மாறியது. அதற்குப் பொருத்தமானதாக, முன்பு பிரித்தானிய ஏகாதிபத்தியம் உருவாக்கியிருந்த கட்டுமானங்கள் மாற்றியமைக்கப்பட்டன. உலகின் பல புதிய காலனிய நாடுகளில் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்திய சார்பு தரகு அதிகார வர்க்க முதலாளியமும் காந்தியப் பழமைவாதமும் நேருவிய “சோசலிசப் பாணியிலான மக்கள் நலவாதமும்” கலந்த தரகு முதலாளியத் தேர்தல் ஜனநாயகத்துக்கு ஏற்ற அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பாக இது இருந்தது. ஒரு இருபதாண்டுகளில் அது கடும் நெருக்கடிகளைக் கண்டது. உறுதியற்ற அரசியல் நிலையையும் நெருக்கடிகளையும் பொருளாதாரத் தேக்கத்தையும் பின்னடைவையும் கண்டது. அந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு என்பதாகக் கூறிக்கொண்டு உலக வங்கி, சர்வதேச நிதி நாணயம், மற்றும் உலக வர்த்தகக் கழகம் மூலமாக ஏகாதிபத்தியங்களால் உலகு தழுவிய அளவில் திணித்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவிலும் திணிக்கப்பட்டது. உலகமயமாக்கத்திற்கும் மறுகாலனியாக்கத்திற்கும் பொருத்தமாக இந்த நாட்டின் கட்டமைப்பையும் அதற்கான கட்டுமானங்களையும் மறுசீரமைக்கும் வேலையை ஏகாதிபத்திய எடுபிடிகளான அரசும் ஆட்சியாளர்களும் ஆளும்வர்க்கத்தினரும் மேற்கொண்டனர்.

இதில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சோவியத் யூனியனைப் பின்பற்றி அரசுத்துறைத் தொழில்கள், “மக்கள் நலவாதம்” நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களை அரசே நிர்மாணிப்பது ஆகியவற்றை ஐந்தாண்டுக் கணக்கில், மையரீதியில் திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டிருந்தவை மத்திய, மாநிலத் திட்டக் கமிசன்கள். இவை நாட்டின் தொழில்வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாகக்கூறி, இனி நாட்டின் தொழிற்துறையை அரசு கட்டுப்படுத்தக் கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளே கட்டுப்படுத்திக் கொள்வார்கள் என்ற வகையில் மையரீதியில் திட்டமிடுவது கைவிடப்படுகிறது; திட்டக் கமிசன் கலைக்கப்படுகின்றது. இனி, கார்ப்பரேட் முதலாளிகள் கூலிக்கு அமர்த்திக்கொண்டுள்ள சிந்தனைக் குழுமங்கள் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை, ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளான நிதி அமைச்சக அதிகாரவர்க்கத் தலைவர்களும் அதிகார வர்க்கத்தினரும் வழிநடத்துவார்கள். இனி மக்கள் நலத்திட்டங்களையும் அதிகாரவர்க்க அமைப்புகளுக்கு மாற்றாக, அரசுசாராத் தொண்டு நிறுவனங்களே அமலாக்கும்; அதற்கான நிதியை அந்தந்த அமைச்சகங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றின் சமூகப்பொறுப்பு என்ற முறையில் நேரடியாகவே அந்நிறுவனங்களுக்கு ஒதுக்கும்.

இந்த ஏற்பாட்டில் ஏதாவது தவறுகள், இலஞ்ச- ஊழல் அதிகார முறைகேடுகள் நிகழ்ந்தால் இவற்றை போலீசு, கிரிமினல் குற்றத்தடுப்பு உளவுப்போலீசு, சி.பி.ஐ. போன்றவை விசாரித்துத் தண்டிப்பது என்ற வழக்கமான முறைக்கு மாறாக சிவில் சமூக அமைப்புகள் தலையிட்டு சரிசெய்யும். இந்த சிவில் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாகவும், மக்கள் இயக்கங்களாகவும் செயல்படும். இவை சட்டபூர்வமாக்கப்பட்டு அதற்குரிய அதிகாரங்களும் பாதுகாப்புகளும் தரப்படும். ‘சிவில் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இயக்கங்கள்’  ஆகிய சொற்களில் மயங்கிவிடக் கூடாது. இந்தச் சீரமைப்பின் நோக்கம் கல்வி, சமூகத் தகுதி, தேர்வு மூலம் வரும் அரசு ஊழியர்கள் என்கிற அதிகார வர்க்கத்தின் இடத்தில் ஏகாதிபத்தியத் தரகர்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் குட்டி முதலாளிகள் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுகின்ற, எவ்விதக் கண்காணிப்புமில்லாத அதிகாரத்துக்கு வருகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க சுயநலமிகளான இவர்கள், மக்களுக்குப் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியதில்லை; வேலைநேரம் கூடக் கிடையாது; தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை; எந்தக் கணக்கும் காட்டத் தேவையில்லை; தங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழேயும் கொண்டு வரமுடியாது என்று சண்டித்தனம் செய்யும் இவர்கள், புதுவகை வெள்ளுடைக் கிரிமினல்களாக உருவெடுக்கிறார்கள். ஏகாதிபத்தியங்களும் ஆளும் வர்க்கங்களும் கொண்டுவரும் கட்டுமானச் சீர்திருத்தம் எத்தகைய சிக்கலையும், நெருக்கடியையும் அதன் தோற்றத்திலேயே கொண்டுள்ளது என்பதை இவை காட்டுகின்றன.

ஏற்கெனவே, இந்திரா காலத்திய ஏகபோகத் தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் முதலிய போலி சோசலிசப் பொருளாதாரச் சட்டங்கள் மற்றும் லைசென்சு – கோட்டா – உரிமம் என்ற அரசுக் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைகள் தளர்த்தப்பட்டு விட்டன. வெளிநாடுகளில் இந்தியத் தரகு முதலாளிகள் குவித்து வைத்திருந்த கருப்புப் பண முதலீட்டிற்கும் அந்நிய மூதனத்துக்கும் இருந்த தடைகள் அகற்றப்பட்டன. அரசுத் துறைத் தொழில்கள், ஆலைகள், அரசுவங்கி மூலதனம் ஒட்டுண்ணித் தரகு முதலாளிகளுக்கு வாரிவழங்கப்பட்டன. இவை மற்றும் அமெரிக்கா முதலிய மேலை நாடுகளிலிருந்து பெறப்பட்ட மலிவான கூலிக்கு வெளியாருக்கு வேலை ஒதுக்கீடுகள் காரணமாகவும் தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் புகுத்தப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் இதுவரை கண்டிராத ஏறுமுகத்தில் நுழைந்து விட்டதாகத் தோன்றியது.

இந்தியாவின் அரைக்காலனிய, பின்தங்கிய அரை நிலவுடைமை சமூக அமைப்பின் மீதும், தரகு முதலாளிய அரசியல் அமைப்பின்மீதும் திணிக்கப்படும் இத்தகைய கட்டுமானமாற்றங்கள் இங்கிருந்த அரசியல், பொருளாதார, சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கிவிட்டன. மேற்கண்ட போக்குகள் ஒரு உச்ச நிலையை எட்டி, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது. எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வுகாண முடியாதவாறு அரசும் சமூகமும் சிக்கித் திணறுகின்றன. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு சிக்கல்கள் எல்லாமே தீர்வு காணமுடியாதவாறு ஒரு முட்டுச்சந்தில் போய் நின்றுவிட்டன. ஒவ்வொரு பிரச்சினையும் இந்த நிலையை எட்டிவிட்டதால், முதலாளித்துவ அறிவு ஜீவிகளே இப்போது ஒரு கட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டு விட்டதை ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது தீர்வுகாண முடியாத சிக்கல்கள் என்று ஏதோ ஒரு சில மட்டும் இல்லை. எல்லா சிக்கல்களுமே தற்போதைய கட்டமைப்புக்குள் தீர்வுகாண முடியாதவையாக வளர்ந்து விட்டன. அதுமட்டுமல்ல; தற்போதைய கட்டமைப்பு நீடிக்கவும் முடியாத நிலையை எட்டிவிட்டதையே இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் காட்டுகின்றன.

ஆனால், அவை வீழ்த்தப்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் திரள் அமைப்புகளும் இயக்கங்களும் அவற்றை வீழ்த்தும் அளவுக்கு இப்போதைக்குப் பலம்கொண்டவையாக இல்லை. என்றாலும், ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய் மற்றும் நிலைகுலைந்து, எதிர்மறை சக்திகளாக (bankrupted, failed collapsed and turned into opposite) மாறிவிட்டன. இந்த நிலையில் புரட்சிகர மக்கள் செய்ய வேண்டியது என்ன? அவற்றுக்குப் பதிலாக அதிகாரம் அனைத்தையும் மக்களே கைப்பற்றிக் கொள்ளும் மாற்று அரசியல் கட்டுமானங்களைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுவதுதான்!

ஆகவே, நாம் சொல்கிறோம் நமது நாட்டை மீளாத அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூக நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசும் ஆட்சியாளர்களும் ஆளும்வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில்  நீடிக்கத் தகுதியற்றவை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தராத மக்களின் உரிமைகளை மறுக்கும்  அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில்  நீடிக்கத் தகுதியற்றவை. நாட்டின் எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்கும் தீர்வாக மாபெரும்  மக்கள் எழுச்சிகளின் மூலம்  மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்போதுள்ள அரசுக் கட்டமைப்பைக் கலைத்துவிட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான, உண்மையில் ஜனநாயகத் தன்மையுடைய மாற்று அரசுக் கட்டமைவை நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்குப்  பொருத்தமான மைய ஏற்பாடாக ஒரு பொது அமைப்பைக் கட்டி, அதற்குப் பொருத்தமான முழக்கங்களை வகுத்து, மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் புதிய, சரியான அவசியமான, அரசியல் கடமையாக அமையும்.

14. நொறுங்கி நிற்கும் கட்டமைப்பிற்கு முட்டுக் கொடுக்கும் குருட்டுத்தனமான தேசபக்தி

அந்தக் காலத்தில் கடவுளின் அவதாரம்தான் அரசர்கள் என்ற மூடநம்பிக்கை அடிப்படையில்  “ராஜபக்தி”, “அரசவிசுவாசம்” ஆகிய கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்டு எதேச்சதிகார ஆட்சி நடத்தினார்கள்; இப்போது குருட்டுத்தனமான தேசபக்தியை மக்களிடையே பரப்பி, பாசிச அதிகாரத்தை நியாயப்படுத்துகிறார்கள். அதனால்தான் ‘தேசியம் பாசிஸ்டுகளின் புகலிடம்’ என்ற வரையறை எல்லா ஜனநாயகவாதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. “தேசிய”த்தின் பெயரால்தான் இட்லரும், முசோலினியும் இரண்டாவது உலகப்போரையும் யூத இனப் படுகொலைகளையும் நடத்தி கோடிக்கணக்கான உலக மக்களைக் கொன்றார்கள். அதைப்போல இல்லாதவொரு இந்திய தேசியத்தின்மீது குருட்டுத்தனமான தேசபக்தியை உருவாக்கி அரசும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான தமது எல்லா துரோகங்களையும் கொள்ளைகளையும் நடத்துகிறார்கள். இந்திய தேசியத்தின் சாரம், உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது? இந்திய தேசியப் பெருமிதம், கௌரவம், நம்பிக்கை விசுவாசம், சாதனை, வல்லமை, வளர்ச்சி – முன்னேற்றம் என்று ஒவ்வொன்றையும் எடுத்துப் பரிசீலித்தால் இவை நமது நாட்டுக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரானதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பல தேசிய இனங்களையும் சமூகப் பிரிவுகளையும் மொழிகளையும் மதங்களையும் பண்பாடுகளையும் கொண்ட இந்திய நாட்டில் அனைத்து மக்களையும் ஜனநாயக ரீதியில், சமத்துவ அடிப்படையில் ஒருங்கிணைக்கும் கொள்கைக்கு மாறாக இந்து – இந்தி – இந்தியா என்கிற பார்ப்பன பாசிசக் கொள்கையைப் பின்பற்றி, சாதி, மத ரீதியில் இந்திய சமுதாயத்தை முனைவாக்கம் செய்கிறார்கள். அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளிலும் கிரிமினல் குற்றங்களிலும் மூழ்கிக் கிடக்கின்ற இவர்களை வெறுக்கும் மக்கள் இவர்கள் பரப்பும் குருட்டுத்தனமான இந்திய தேசபக்தியையும் நிராகரிக்க வேண்டும்.

இந்திய மக்கள் மீது பெருந்திரள் மரணங்களை விளைவித்து விட்டு, உரிய நட்டஈடுகள் வழங்கத் திமிர்த்தனமாக மறுக்கிறார்கள். இந்திய மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை, இத்தாலியக் கொலைகாரர்களையும் தண்டிக்காது தப்புவிக்கிறார்கள். மேலும் பெருந்திரள் மரணங்களை விளைவிக்கும் அணு, இரசாயன ஆலைகளை இறக்குமதி செய்கிறார்கள். அணு, இரசாயன, மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். இந்திய விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் நிரந்தரமாக நாசம் செய்வதோடு, புதுப்புது உயிர்க்கொல்லி நோய்களையும் விளைவிக்கும் மரபணு மாற்று விதைகளையும் அவற்றுக்கான உரம், பூச்சிமருந்துகளையும் கொல்லைப் புறவழியாகவும் சதித்தனமாகவும் வலுக்கட்டாயமாகவும் திணிக்கிறார்கள். கேடுகள் விளைவிக்கும் புதுப்புது மருந்துகளை, குறிப்பாக நோய்த்தடுப்பு மருந்துகளை சதித்தனமாகக் கொண்டுவந்து, இங்குள்ள சில மருத்துவர்களையும் ஊழல்படுத்தி  நமது மக்கள்மீது மருத்துவ ஆய்வுகளை நடத்திப் படுகொலைகளைச் செய்கிறார்கள். இதனால் குறிப்பாக, குழந்தைகளின்  இறப்பு விகிதம் எகிறிக்கொண்டே போகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வளவு துரோகத்தனங்களைப் புரியும் அரசும் ஆட்சியாளர்களும்தான் இந்திய தேசியப்பெருமிதம், கௌரவம், நம்பிக்கை – விசுவாசம், சாதனை,  வல்லமை, வளர்ச்சி – முன்னேற்றம் என்று பித்தலாட்டங்கள் செய்கிறார்கள்.

இந்திய அமைச்சர்களையே நிர்வாணப்படுத்தி சோதனை போட்டுத்தான் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கிறார்கள்; இந்தியப் பிரதமர் அலுவலகமும் இந்திய அமைச்சர்கள் முதல் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்கள் வரையிலானோரும் ஒட்டுக்கேட்டு, உளவு பார்க்கப்படுகிறார்கள். அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தால் இந்தியாவை நம்பாது, அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கூட்டி வருகிறார்கள்; அவர்களுக்கு அரசமரியாதை தரப்படுகிறது. இப்படி எத்தனை நேர்ந்தாலும் அவையெல்லாம் தேசிய அவமானங்களாகக் கருதப்படுவதில்லை. இந்திய தேசியத்தின் வெளியுறவுக் கொள்கை, பாகிஸ்தான் சீன எதிர்ப்பு தேசியவெறியையும், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் மீதான விசுவாசத்தையும் நாடு கடந்த இந்திய தரகு முதலாளிகளின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. இதனாலேயே அது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் சிங்கள பேரினவாதப் பாசிசத்தையும் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய ஜியோனிசத்தையும் ஆதரிக்கிறது. ஆப்கான், ஈராக் போர்களில் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் எடுபிடியாகவே செயல்படுகிறது. அமெரிக்காவுடனான இராணுவ, அணு ஆயுத ஒப்பந்தங்களை சதித்தனமாகப் போட்டுக் கொண்டுள்ளது. உலகச் சந்தையில் ஆதிக்கம் வகிக்கும் “டாலர்” பொருளாதாரத்துடனும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கப் போர்ச் சக்கரத்திலும் “இந்திய தேசியம்” தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்திய அயலுறவுத் துறைதான் நாட்டிலேயே மிகமோசமான பொய்யும் புனைச் சுருட்டும் பரப்பும் துறை. உலகின் பலநாடுகளும் பல உலக விவகாரங்களிலும் இந்தியாவின் நிலைப்பாடுகளை ஆதரிப்பதாக அது புளுகுகிறது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகும் இந்தியாவின் கோரிக்கையை உலக நாடுகளில் பெரும்பான்மையானவை ஆதரிப்பதாகப் புளுகுகிறது. ஆனால், அந்த நாடுகளின் அறிக்கைகளில் அவ்வாறான நிலை எதுவும் குறிப்பிடப் படவில்லை. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராகும் தேர்தல்களில் இந்தியா தோற்றுப்போவதே அதிகமாக நடக்கிறது. உலகச் சுற்றுச்சூழல் விவகாரங்களில், பின்தங்கிய நாடுகளில் ஏகாதிபத்தியங்களின் தலையீடு போன்றவற்றில் இந்தியாதான் பிற்போக்கான நிலையெடுத்து கடும் எதிர்ப்புக்குள்ளாகிறது. உள்நாட்டு விவகாரங்களில் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் வெறுப்புக்கு ஆளாகும் இந்திய அரசுத் தலைவர்கள், அயலுறவுகளில் சரியாகவும் சாதனையாளர்களாகவும் இருப்பதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. உண்மையில் தேசவிரோதச் செயல்கள்மூடி மறைக்கப்படுகின்றன.

15. கட்டமைப்பு நெருக்கடிக்கு தீர்வுகள்தாம் என்ன?

இப்போது நாம் காணும் தேர்தல் கட்டுமானச் சீரழிவு தனியானதொரு அரசியல் சீரழிவல்ல. அனைத்து அரசுக் கட்டுமானங்களிலும் ஏற்பட்டுள்ள சீரழிவுகளின், நெருக்கடிகளின் ஒரு பகுதிதான். தேர்தல் அரசியல் மட்டுமின்றி அரசின் மற்ற அனைத்துக் கட்டுமானங்களும்கூடச் சீரழிந்து போயுள்ளன. நாட்டின் அனைத்துக் கட்டுமானங்களையும் நியாயப்படுத்தும் கோட்பாடாகத்தான் தேர்தல் அரசியல் முறையும் அதைச் சீர்திருத்துவதும் முன்வைக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சீரழிந்து போனவாறுதான் தேர்தல் அரசியலும் சீரழிந்துபோயுள்ளது. இந்தச் சமூகத்தை ஆளுவதற்கு அரசியல், பொருளாதாரம் என ஒவ்வொரு துறைக்கும் ஒரு கட்டுமான அமைப்பை ஆளும் வர்க்கங்கள் வைத்துள்ளன. இந்த அமைப்புகளெல்லாம் சிதைக்கப்பட்டு, சீரழிந்து நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டுள்ளதைப் போலவே, அரசியல் கட்சிகள் சார்ந்த நெருக்கடிகள் தேர்தல் அரசியலில் வெளிப்பட்டுள்ளன. ஆகவே, தேர்தல் சார்ந்த கட்டுமானங்களைப் போலவே மேற்படி எல்லா கட்டுமானங்களும் சீரழிந்து போயுள்ளன.

இவ்வாறு எல்லா அரசுக் கட்டுமானங்களும் சீரழிந்து போனதைச் சொல்லும்போது அரசியல் கட்சிகளும் அரசுக் கட்டுமானங்களும் மக்களுக்கு எதிரானவை என்பதை வலியுறுத்தினால் போதாது. அதோடு, ஏற்கெனவே உள்ள அதிகாரக் கட்டுமானங்கள் ஆளமுடியாமல், ஆளத்தகுதியிழந்து கடும் நெருக்கடிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதையும் சொல்ல வேண்டும்; அவை மக்களுக்கு எதிரானவையாகவுள்ளது மட்டுமல்ல, ஆளும் வர்க்கங்களுக்கே முறைப்படி பயன்படாதவாறான நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டுள்ளன. போலீசும் அதிகார வர்க்கமும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மேட்டுக் குடிமக்களையும் தாக்கும் தன்மையுடையவையாக உள்ளன. எல்லா அரசு, பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டுமானங்களும் இப்படித்தான் சீரழிந்தனவாக உள்ளன. ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்டபோதும் அவை வீழ்த்தப்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் அமைப்புகளும் போராட்டங்களும் எழுச்சிகளும் அவற்றை வீழ்த்தும் அளவுக்கு இப்போதைக்குச் சக்தி வாய்ந்தவையாக இல்லை.

இப்போது அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றுவதன் வெளிப்பாடாக, மக்கள் பல தனித்தனிப் போராட்டங்களில் தன்னெழுச்சியாக ஈடுபடுவது பெரிதும் அதிகரித்து வருகின்றது. அவர்களும் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும், தொடர்பையும் ஒருங்கிணைந்த முறையிலானவையாக தொகுத்துப் பார்க்க இயலாதவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டங்களிலேயே அவர்கள் மூழ்கிப்போய்க் கிடக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களும் ஊடகங்கள் மூலமும் பல்வேறு வகைகளில் மக்களின் கவனத்தை சிதறடிக்கின்றது. தாது மணற்கொள்ளை,  ஆற்று மணற்கொள்ளை, வேடியப்பன்  கௌத்திமலை, மீத்தேன் எரிவாயு எடுப்பு, எரிவாயுக் குழாய் அமைப்பு, காவிரி நீர்  முதலான பல்வேறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காகத் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறான தனித்தனிப் பிரச்சினைகளுக்கிடையிலான பொதுத் தன்மையையும் உறவையும் தொகுத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும், அவற்றுக்கான தனித்தனித் தீர்வுகளை நாடும் போராட்டங்களுக்குப் பதிலாக, பொதுவான முழக்கங்களை முன்வைத்துப் போராடவேண்டியதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதோடு, செய்தி ஊடகங்கள் தரும் அன்றாடச் செய்திகளை மக்கள் தாமே தொகுத்து முழுமையான கண்ணோட்டத்துக்கு வரவியலாத நிலையில் மக்கள் உள்ளார்கள். மக்கள் முந்தைய அனுபவங்களை, தகவல்களை நினைவில் வைத்துக்கொண்டு, முழுமையான கண்ணோட்டத்துக்கு வருவதில்லை. அப்படி வரக்கூடாது என்ற வகையிலேயே பரபரப்பூட்டும் தனித் தனியான அன்றாடச் செய்திகளுக்குள் மூழ்கிக் கிடக்குமாறுசெய்யும் வேலையை ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் பார்த்துக் கொள்கின்றன. மோடி போன்றவர்கள் அன்றாடம் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சுமூலம், அறிவிப்பு மூலம் நாட்டு மக்களிடையே விவாத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை எழுப்பிக் குழப்புகிறார்கள். இத்தகைய அணுகுமுறைக்கு மாறாக, கட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதென்ற அடிப்படையிலான, முழுமையானதொரு பார்வையை மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும். இதன் மூலம் புதிய, அவசியமான, விவாத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை மக்கள் முன்பு நாம் வைக்கிறோம்.

இன்றைய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நெருக்கடி, சிக்கலுக்கு தனித்தனியான தத்தமது கோரிக்கைகள், முழக்கங்கள், போராட்டங்களுக்காக மக்கள் ஒன்று திரண்டால் மட்டும் போதாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேரடியாய் ஒருங்கிணைந்த முறையில் மக்கள் ஒன்று திரண்டு போராடி வெல்வதுதான் அவசியமானது, சாத்தியமானது. அதனால்தான் வெவ்வேறு பிரிவு மக்கள், வெவ்வேறு அமைப்புகளின் கீழ், அவர்களின் தனித்தனியான, தன்னியல்பான, தன்னெழுச்சியான பிரச்சினைகளை, பகுதி அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் அடையாள அரசியலையும் கையிலெடுத்தால்தான், அவற்றினூடாகத்தான் மக்களை அணுகவும் அணிதிரட்டவும் முடியும் என்ற சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களை ஏற்கமுடியாது. “நிலவும் கட்டமைப்புக்கு வெளியிலான பொதுவான, மையமான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுப் பிரச்சினைகளுக்கு மக்களைத் திரட்ட முடியாது; மக்களும் அவற்றுக்கு வர மறுக்கிறார்கள்” என்ற அவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் தவறானவை. அடிப்படை உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், சிறுபான்மை மக்களின் தன்னியல்பான, பகுதி அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காக மக்கள் போராடக் கூடாது என்பதல்ல. இப் பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் அடையாள அரசியலுக்காகவும் போராடுவதுதான் ஒரேமுறை, முக்கியமான அணுகுமுறை என்பதுதான் எப்போதும் ஏற்புடையதல்ல. தனித்தனியான கோரிக்கைகளைக் கையிலெடுத்து ஓரளவுக்குச் சாதித்துக் கொடுத்து, அவர்களின் நம்பிக்கையைப்பெறுவதும் இன்றைய அரசியல் நிலைமைகளில் சாத்தியமல்ல. வெவ்வேறு பிரிவு மக்களை வெவ்வேறு அமைப்புகளின் கீழ், திரட்டுவதும் அவற்றின் மூலம் கோரிக்கைகளை ஓரளவுக்கு மேல் சாதித்துக்கொடுக்க முடியாமல் போவதும் அடக்குமுறைகள் காரணமாக அவை கலைந்து போவதும் அல்லது தேக்கநிலையை அடைவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இத்தகைய அணுகுமுறை அரசின் ஒடுக்கு முறைகள் காரணமாக  தேக்கநிலையை எட்டிவிட்டன.

மக்களிடையே, அதுவும் தனிநபர்களிடையே நிலவும் கருத்து பின்தங்கியதாகவும் ஆளும் வர்க்கம் உருவாக்கும் “இந்தியா ஒளிருகிறது, வல்லரசாகிறது, முன்னேறிவிட்டது, செல்ஃபோன்கள் போன்ற வசதிகள் வந்துவிட்டன“. என்பது போன்ற மாயைகளுக்கு பலியாவதாகவும் இருக்கும். இப்படித்தான் மோடி அலையும் உருவாக்கப்பட்டது. அதேசமயம்,  நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகள் சிக்கலும் நெருக்கடியும் மிக்கதாக இருக்கின்றன. சமூக விழிப்புணர்வு பெறாத மக்களும் தனிநபர்களும் என்ன நினைக்கிறார்களோ, அதற்கு வெளியே உண்மை இருக்கிறது! சமூக விழிப்புணர்வு என்பது மக்களும் தனிநபர்களும் என்ன நினைக்கிறார்களோ அதை மட்டும்வைத்து வந்தடைவதில்லை. சமூக விழிப்புணர்வு என்பது மக்களும் தனிநபர்களும் என்ன நினைக்கிறார்களோ அதோடு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகளையும் சிக்கலையும் நெருக்கடியையும் சேர்த்தே புரிந்து கொள்வதாகும். நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சிக்கலும் நெருக்கடியும் தாமே மக்களிடம் சமூக விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதில்லை; இந்நெருக்கடிகள் முற்றும் அளவிற்கு மக்களின் சமூக விழிப்புணர்வு மட்டம் நேர் விகிதத்தில் உயர்வதுமில்லை. மக்கள் சமூக விழிப்புணர்வு பெறும்வரையிலும் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கலும் நெருக்கடியும் காத்திருப்பதுமில்லை.

இப்போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டதையும், அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்து விட்டதையும் நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத்  தட்டிக்கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால்விடவும் மக்கள் ஒன்று திரள வேண்டும். அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக் கொள்ளும் காலகட்டம் வந்துவிட்டது. ஆகவே, எல்லாச்  சிக்கல்களுக்குமான, கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக மக்களே  அதிகாரத்தைக் கைப்பற்றும் இயக்கமாக மக்கள் அதிகாரம் – People’s Power என்ற ஒரு பொது அரசியல் அரங்கத்தை, ஒரு பொது அரசியல் அமைப்பைக் கட்டி, அதற்கான முழக்கங்களை வகுத்து, புதிய, சரியான அவசியமான, மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் திவாலாகி, ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியற்றுப்போய் விட்டதால் தற்போதைய கட்டுமானங்கள் முழுவதுமாக நொருங்கி விழும் நிலையை எட்டிவிட்டன. தோற்றுப்போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக (bankrupted. Failed collapsed, and turned into opposite) மாறிவிட்ட நிலையில், தற்போதைய கட்டுமானங்களை முழுவதுமாக கலைத்துவிட்டு, நீக்கிவிட்டு புதிய அரசுக் கடடுமானங்களை, மக்கள் அதிகாரத்தைத்  தாமே நிறுவிக் கொள்வதற்கான எழுச்சிக்கு மக்கள் தயாராக வேண்டும். தற்போதைய அரசுக் கட்டுமானங்களுக்கு எதிராக அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள்,  அரசியல் எழுச்சிகளைக் கட்டமைக்க வேண்டும்.  இந்த வளர்ச்சிப்போக்கில் மக்கள் தயார்நிலை, அமைப்பு பலம் ஆகியவற்றை பொருத்து பல்வேறு போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கும் எழுச்சிக்கும் தலைமை தாங்கும் உறுப்புகள்தாம் தற்போதைய கட்டுமானங்களுக்கு மாற்று அரசமைப்பாக அமையும்.

அதாவது தோற்றுப்போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்ட தற்போதைய அரசுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தையும் மக்கள் சொத்தையும் தின்றுகொழுப்பவை. இவை நமது நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத பெருஞ்சுமையாக மாறிப்போய்விட்டன. அவை இனிமேலும் நீடிக்கக் கூடாதவையாகி விட்டன. அவற்றை முழுமையாகத் துடைத்தெறிவதற்கான அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள், அரசியல் எழுச்சிகளை ஒவ்வொரு கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் நடத்த வேண்டும். அதன்மூலம் தற்போதைய அரசின் வன்முறை அமைப்புகள் உட்பட கட்டுமான உறுப்புகள் அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்.

இத்தகைய புரட்சிகர எழுச்சிகளை நடத்தி, அப்புரட்சிப் போராட்டங்களினூடாக அவற்றைத் தலைமையேற்று நடத்தும் அமைப்புகளே ஒவ்வொரு கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளாகப் பரிணமிக்கச் செய்யவேண்டும்.இந்த மக்கள் அதிகார அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு தொடரும் மக்கள் எழுச்சியின் வளர்ச்சிப்போக்கில் “இடைக்காலப் (தற்காலிகப்) புரட்சி அரசு” போன்ற பல்வேறு வடிவங்களை உருவாக்க வேண்டும்.

தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகாரவர்க்க  போலீசு நிர்வாக அமைப்புக்கும் வெளியே, நேரடியாக மக்கள் பங்கேற்கும் அதிகார, நிர்வாக அரசியல் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக யாரோ சிலர் அரசு நிர்வாகம் உட்பட ஏதாவது நல்லது செய்வார்கள் என்று பொறுப்புக்களை ஒப்படைக்க முடியாது. அரசு நிர்வாகத்தை மக்கள் நேரடியாகக் கண்காணிக்கும், தவறு செய்பவர்களை மக்களே தண்டிக்கும் முறைகள் வேண்டும். அப்பொழுது தான் இலஞ்ச – ஊழல், அதிகாரமுறைகேடுளைத் தடுக்க முடியும். “இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சட்டத்தையும் அதிகாரத்தையும் மக்கள் தம் கையிலெடுத்து கொள்ளக்கூடாது, அதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று ஆளும் வர்க்கத்தினரும் அரசாங்கமும் அதிகாரவர்க்க போலீசு நிர்வாகத்தினரும் திரும்பத் திரும்பக் கூறிக் கொதித்துப் போகிறார்கள். அரசு அதிகாரம் பற்றிய பிரச்சினைதான், அது யாரிடமிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அரசு அதிகாரம் மக்களிடம் தான் இருக்கவேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். இது ஒரு புதிய அரசியல். தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க போலீசு நிர்வாக அமைப்புக்கும் வெளியே, உருவாக்கப்பட வேண்டிய புதிய அரசியல்.

புதிய அரசியலுக்குப் பொருத்தமான முறையில் பழைய அரசியல் அமைப்பு வடிவங்களுக்குப் பதிலீடாக புதிய புதிய வடிவங்களை வகுத்து முன்கொண்டு செல்ல வேண்டும். இயக்கங்கள் முன்போகும்போது, களப்போராட்டம் பெரிதாக முன்னேறும்போது மாற்று அரசமைப்புக்கள் பற்றிய பிரச்சினைகள் முன்னுக்கு வருகிறது. இயக்கங்கள் புதுப்புது வடிவங்களை எடுக்கும். அழிவு இல்லாமல், சேதாரம் இல்லாமல் மாற்றம் வராது. மாற்று என்பது பழைய அமைப்பைத் தகர்க்காமல் வராது. இதெல்லாம் எல்லோருடைய பங்களிப்புடன் பருண்மையாக்கப்பட வேண்டும். பல்வேறு உள்நாட்டு  வெளிநாட்டு அனுபவங்களிலிருந்து இருந்தும் மக்களிடையிலான விவாதங்களின் மூலமும்  மாற்று அரசியல் அமைப்பு பற்றிய  முடிவுக்கு வரமுடியும்.

16. புதிய அரசியல் மாற்றுஅரசமைப்புகள் அவற்றை நிறுவதற்கான புதிய போராட்டகளின் அவசியம்

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் அடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கை  புகுத்தப்பட்ட பிறகு நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகமயமாக்கமும் மறுகாலனியாக்கமும் விரைவாக நடக்கின்றன. குறிப்பாக, மூலதனமும், உழைப்புப் பிரிவினையும், சந்தையும் சர்வதேச மயமாவதனால் உலக அளவில் ஏற்படும் மாற்றங்கள் நமது நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் மிகுநிலை பெற்றிருந்த விவசாயம் பின்னிலைக்குத் தள்ளப்பட்டு, நகரமயமாக்கல் விரைந்து நடக்கிறது. கிராமப்பகுதிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் நகரப்புறங்களுக்கு இடம் பெயர்வதும் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து  தொழிலாளர்கள் அலைஅலையாக முன்னேறிய மாநிலங்களுக்குப் புலம் பெயர்வதும் பெரிய அளவில் நடக்கிறது. இது மக்கள் வாழ்விலும் சமூக உறவுகளிலும் பல பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அரசும் ஆளும் வர்க்கங்களும் பழைய முறைகளில் ஆளமுடியவில்லை; ஆளப்படும் மக்களும் பழைய முறைகளில் வாழமுடியாதவாறு இன்றைய புறநிலையில் ஏற்பட்டுள்ளன. மாற்றங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அதற்கேற்ப புதிய அரசியல் அவசியமாகவுள்ளது.

தேர்தல் அரசியல் கட்சிகளும் சரி,  அதற்கு வெளியிலுள்ள அரசியல் அமைப்புகளும் சரி தற்போது நிலவும் கட்டமைப்பு நெருக்கடியை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதோடு, அதனால் எழும் சிக்கலையும், பிரச்சினைகளையும் தமது வழக்கமான போராட்டங்கள் வடிவங்கள் மூலமே தொடந்து எதிர்கொண்டு வருகிறார்கள். புறநிலை மாற்றங்களை அவதானிக்கத் தவறுவதாலேயே முறையே போலி முற்போக்குவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் ஆளும் வர்க்களுடன் சமரச, சந்தர்ப்பவாத அணுகுமுறையைக் கொண்டுள்ளார்கள். இதே தவறுகளால் சில இயக்கங்கள் தீவிரவாத செயல்பாட்டுத் தவறுகள் இழைக்கின்றனர்.

இவ்விரு பாதைகளுக்கும் மாறாக தற்போதைய அரசுக் கட்டமைப்புக்கு வெளியில் புதிய அரசியல் மாற்றை நிறுவுவதற்கான மக்கள் திரள் எழுச்சியையும் போராட்டங்களையும் நடைமுறையாகக் கொண்ட புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். கடந்த காலப் போராட்டங்கள், இயக்கங்களில் இருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு வெளியே நாம் நேர்மறையில் அரசியல், அமைப்புப் போராட்டங்களை மாற்றுத் தீர்வாக முன்வைக்க வேண்டும். நாம் வைக்கும் மாற்றும் இதை நோக்கியதாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறான மாற்றை முன்வைக்காத வரை எந்தத் தீர்வும் தற்போதைய கட்டமைப்புக்குள்தான் இருக்கிறது என்றாகிறது.

ஏற்கெனவே உள்ள கட்டமைப்புக்குள்ளாகவே தீர்வுகளை முன்வைத்தால் அதனை மாற்றாக மக்களால் பார்க்க முடியாது. அதற்கு வெளியே ஒரு மாற்றை உருவாக்குவதன் அவசியத்தைச் சொல்லவேண்டும். ஏற்கெனவே உள்ள அமைப்பைக் கலைத்தால்தான் புதிய அமைப்பை நிறுவ முடியும். புதியதொரு கட்டமைப்பை ஒட்டுமொத்தாக நிர்வகிக்கும் தலைமையை முன்வைப்பதைத்தான் மக்கள் மாற்று அரசாங்க அமைப்பாகப் பார்க்கின்றனர்.  மாற்று ஒன்றை நிறுவுவதற்கு தற்போதுள்ள கட்டமைப்பைக் கலைத்தல் என்பது ஒரு முன்நிபந்தனை. ருசிய, சீனப் புரட்சிகளில் பழைய கட்டுமானங்களைத் தகர்த்துத்தான் அதனிடத்தில் புதியனவற்றை வைத்தனர்.

ஏற்கெனவேஉள்ள அதிகாரத்தைக் கலைப்பதற்கான அமைப்புகள்தாம், அந்தப் போராட்டத்துக்கான உறுப்புகள்தாம் அதிகாரத்துக்கான அமைப்புகளாக மாறக் கூடியவை. இவை மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் அமைப்புகளாக மாறும் வகையிலே இருக்க வேண்டும். ஏற்கெனவே பிழைப்புவாதிகளாக மாறியுள்ள  தலைமையைத்தான் மக்கள் பார்த்துள்ளனர். இதற்கு மாறாக தகுதியுள்ள நபர்களைக் கொண்டதாக, நடைமுறையில் மக்கள் சோதித்தறியக் கூடிய வகையில் பணியாற்றியவர்களை முன்நிறுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள அதிகாரக் கட்டுமானங்களைப் பற்றியும் அவை ஒரு பிற்போக்கான கட்டமைப்பாக இயங்குவதையும் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதனைத் தகர்ப்பது குறித்து நடுத்தர வர்க்கத்தினர், குட்டி முதலாளிகளுக்குப் பயம் இருக்கிறது, ஏற்கெனவே உள்ள அதிகாரக் கட்டுமானத்தை அவர்கள் இன்னமும் நம்புகின்றனர். ஏனெனில் அவர்களது நலன்கள் இதில் உள்ளன. உழைக்கும் மக்களுக்கு அப்படியில்லை.

ஆளும் வர்க்கங்களின்  அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள்  அவற்றின் அடிப்படையிலான கட்டுமானங்கள் அவற்றுக்கு ஏற்படும் தோல்விகள், பின்னடைவுகள், நெருக்கடிகள் ஆகியவற்றை அவதானித்து எதிர்க் கோட்பாடுகளை முன்வைப்பதன் மூலம் மக்களை அணிதிரட்டி புரட்சிப் போராட்டங்களினூடாக மாற்றுக்களை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டும். தற்போதைய இந்திய அரசுக் கட்டுமானங்கள் ஆங்கிலேயக் காலனியக் காலத்திலிருந்து நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதன் பிரதிபலிப்பாகவோ, இணையானதாகவோ புரட்சியினூடாகப் பிறக்கும் அரசமைப்பு இருக்காது.

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் தாமே உருவாகியவை இல்லை. ஆளும் வர்க்கங்களால் அவற்றின் வர்க்க நலன்களுக்கேற்ற கோட்பாடுகளின் அடிப்படையில் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அல்லது காலனிய ஆக்கிரமிப்பாளர்கள், ஏகாதிபத்தியங்கள் போன்ற அந்நிய சக்திகளால் புகுத்தப்படுகின்றன. நமது நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் முதலில் ஆங்கிலேயக் காலனியவாதிகளால் உருவாக்கப்பட்டவை மற்றும் நெறிப்படுத்தப்பட்டவை. அதிகார மாற்றத்துக்குப் பின்னரும் கூட அவற்றின் தொடர்ச்சியாகவே தரகு முதலாளிய, நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கேற்ற கோட்பாடுகளின் அடிப்படையில் திட்டமிட்டு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அந்த பழைய சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் அரசியல், மற்றும் அதைச் சார்ந்த அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் காலாவதியாகிப் போய்விட்டன. அவை நாடு எதிர்கொண்டுள்ள எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட பிறகு, நாமும் அதே பாதையில் பயணப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது.

அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல,  சில புரட்சிகர இயக்கங்களும்கூட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்து, மக்களுடன் நின்று போராடிய போதும், அப்போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேக்கநிலையை எட்டிய பிறகும் கட்டமைப்புக்கும் அதன் அரசியல் நெருக்கடிக்குமான மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.

மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தற்போதைய கட்டமைப்புக்கு வெளியே உள்ளதைக் காணவேண்டியது இன்றைய தேவையாக உள்ளது. இவ்வாறான பார்வைதான் உண்மையில் புரட்சிகரமானது. தன்னெழுச்சியாகப் போராடும் மக்களும் தற்போதைய கட்டமைப்புக்குள்ளாகவே தீர்வைத் தேடுகின்றனர். போலி முற்போக்குகளும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் சிலமாற்றுச் சீர்திருத்தங்களை முன்வைத்தாலும், அவர்கள் தற்போதைய கட்டமைப்புக்குள்ளாகவே தீர்வுகளை அடைய முடியும் என்ற கருத்திலேயே நிற்கிறார்கள். இவர்கள் இந்த வரம்புக்குள் நிற்பதில் வியப்பில்லை. நாம் அவற்றையும் தாண்டி, பகுதி மற்றும் வர்க்கப் போராட்டங்களைக் கீழிருந்தும், கட்டமைப்பு நெருக்கடிக்கு மாற்று அரசியல் அமைப்புகளை முன்வைத்து இயக்கங்களை மேலிருந்தும் (ஒடுக்கப்படும் வர்க்கங்களிடையே கூட நிலவுகின்ற வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொது அமைப்பின் தலைமையின்கீழ்) இந்த இரண்டு தளங்களிலும் திரண்டு போராட வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கை நமது நாட்டில் புகுத்தப்பட்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் மூலம் நமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த எதிர் பார்ப்புகள் பொய்த்துப் போய்விட்டன. அவை நமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகக் கடுமையான நாசகர விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விட்டன. 2007 இன் உலகப் பொருளாதார நெருக்கடி, அதன் தாக்கம் மக்களிடையே ஏமாற்றத்தையும் அதீத ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு அரசும் ஆளும்வர்க்கங்களும் முன்வைத்து, அமலாக்கும் தீர்வுகள் அந்நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகப் பன்மடங்கு அதிகரிக்கவே செய்கின்றன.

அரசியல் கட்டமைவு  நெருக்கடியால் எழும் பிரச்சினைகளுக்கு தேர்தலை இன்னமும் ஒரு தீர்வாக ஆட்சியாளர்கள் நம்பச்சொல்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்று பேசுகிறார்கள். ஏன் ஸ்திரத் தன்மை அவசியம், ஏன் உறுதியான தலைமை தேவை, யார் அதைத் தர முடியும் என்றும் பேசுகிறார்கள். ஒரு துணிச்சலான தலைமை தேவை,  பழைய தலைமை அப்படி இல்லை எனவும் தாங்கள்தாம் மாற்று எனவும் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவாறாகப் பேசுகிறார்கள். ஆனால் தற்போதைய கட்டமைப்பு நெருக்கடிக்குத் தீர்வு தேர்தல் அல்ல. தற்போதுள்ள அரசுக் கட்டமைப்புக்கு வெளியே தான், முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை; ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம்தான் அதற்குத் தீர்வு காண முடியும்  என மக்கள் அதிகாரம் முன்வைக்கிறது.

இப்போதிருந்து ஆளும் வர்க்கங்களின் அரசு, ஆட்சி உரிமையை எதிர்த்து கேள்விக்குள்ளாக்கும், சவால்விடும், அதை வீழ்த்தும் அரசியல் பணியாற்ற அழைக்கிறது, மக்கள் அதிகாரம். ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை மாற்றியமைக்கும் வேலையை  ஓட்டுக் கட்சி அரசியல் மூலம் செய்ய முடியாது. போர்குணமிக்க போராட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சி மூலம் அதனைச் செய்யமுடியும். இப்போதைய அரசுக் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது. மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக்கொண்டு விட்டது, அதை அகற்றிவிட்டு, புதிய கட்டமைப்பை நிறுவவேண்டியதன் அவசியத்தை  ஏற்பவர்கள்; வழக்கமான தேர்தல் அரசியல் கூட்டுகள் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாறாக, புதிய புரட்சிகர நடைமுறையில் நம்பிக்கை கொள்ளும் மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் கீழ் ஒன்று திரள வேண்டும். இப்போது பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடும் சமூக அமைப்புகள், முற்போக்கு, புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளில், இயக்கங்களில் அரசியல் வேலை செய்பவர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பில் ஒன்று திரள வேண்டும். இதன் வளர்ச்சிப் போக்கில் ஒத்த கருத்தின் அடிப்படையிலான ஐக்கிய முன்னணியாக ஒருங்கிணையவேண்டும். வெறுமனே ஒரு அமைப்பைத் தோற்றுவிப்பதல்ல பிரச்சினை. நிலவுகின்ற  அரசு அமைப்புக்கு சவால்விட்டு, இந்த அரசுக் கட்டமைப்புநெருக்கடிக்கு புரட்சித் தீர்வை  நோக்கி மாற்று வழியில் வழிநடப்போம்.

தற்போதைய கட்டமைப்பு ஏன் நொறுங்கிவிழும் நிலைக்கு வந்திருக்கிறது என்பது பற்றிய பருண்மையான புரிதலை ஏற்படுத்துவோம். மாற்றைப் பருண்மையாக, எதிர் நிலையில் எப்படி இருக்காது என்பதை வைப்போம். தற்போதைய அரசியல் அமைப்புக்கு மாற்று என்பதாக, நிலவும் கட்டமைப்பை நிராகரித்தலில் மாற்றுத் திட்டம் தொக்கி நிற்கிறது. தற்போதைய கட்டமைப்பின் தோல்வி, நெருக்கடி மற்றும் அதன் எதிமறை அனுபவங்கள், படிப்பினைகளைத் தொகுத்து, தற்போதைய அரசியல் கட்டமைப்பின் மீதான விமர்சனத்துக்குள்ளே மாற்றுத் திட்டம் இருக்கிறது என்பதாக புதிய அரசுக் கட்டமைப்புக்கான கோட்பாடுகளை உருவாக்குவோம்.

ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலைச் சக்திகளாக (bankrupted, failed, collapsed and turned into opposite) மாறிவிட்ட நிலையில், அவற்றைக் கலைத்துவிட்டு,  அதிகாரம் அனைத்தையும் மக்களே கைப்பற்றி மாற்று அரசியல் கட்டுமானங்களைக் கட்டமைக்க வேண்டும்.

“மக்கள் அதிகாரம்”(People’s Power) கட்டமைப்போம்!