அமனஷ்வீலி
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 13

80-ம் ஆண்டுகளின் போக்கு

செப்டெம்பர் முதல் தேதி, எனது ஆறு வயதுக் குழந்தைகளின் முதல் பள்ளி நாள் பழையதாகி விட்டது. நாளை குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்திக்க எனக்கு உதவாமல் இது என்னை விட்டு அகலாது.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள்? (இவர்களில் பலருக்கு ஆறு வயதாக இன்னமும் 2-3 மாதங்கள் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்).

நான் அவர்கள் வரைந்த படங்களைப் பார்க்கிறேன், அவர்கள் எழுதிய சொற்களையும் வாக்கியங்களையும் படிக்கிறேன்.

சாதாரணப் படங்கள். பெரும் பிறவித் திறமையை வெளிப்படுத்தும் படங்களை அவற்றின் இடையே நான் காணவில்லை. ஆனால், இவற்றின் சாரம் என்னைக் கவர்ந்தது. குழந்தைகள் என்ன வரைகின்றார்கள்? விண்கப்பல்கள், விண்வெளி வலவர்கள், விமானங்கள், கார்கள், உயரமான வீடுகள், பள்ளிக்கூடம், சர்க்கஸ் காட்சிகள், விலங்கியல் பூங்காவில் உலாவும் காட்சி, மலைகள், காடுகள், புல்வெளிகள், மலர்கள், அம்மா, விழாக்கள், விளையாடும் குழந்தைகள், பலூன்கள், மனித உருவங்கள், விலங்குகள், பெரும் சூரியன் ஆகியவற்றை அவர்கள் வரைகின்றனர்.

சுருங்கச் சொன்னால் அவர்கள் மகிழ்ச்சியை வரைகின்றனர், தாங்கள் உலகத்தை எப்படிப் பார்க்கின்றனர் என்று அவற்றில் காட்டுகின்றனர். ஒருவன், ஒளிக் கற்றைகளுடன் கூடிய புன்சிரிப்பைச் சிந்தும் பெரும் வட்டத்தை வரைந்து, அதற்கு ஒரு நூலையும் வரைந்திருந்தான். ஒரு சிறுவன் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். சிறுவன் ஓடிய படியே அதை இழுத்துச் செல்கிறான். “நான் சூரியனைப் பிடித்து விட்டேன்” என்று விளக்கினான் அந்த “ஓவியன்”. மற்றப் படங்களில் “இது டாங்கி”, “நிலா”, “நான் விளையாடுகிறேன்”, “என் அம்மா“, “பள்ளிக்கூடம்”, “எங்கள் வீட்டின் பின்புறம்”, “என் தம்பி”, “காளான்” என்று எழுதப்பட்டிருந்தது.

படங்களின் கீழ் உள்ள சொற்கள், வாக்கியங்கள், எண்களை என் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறேன் இருவரைத் தவிர எல்லாக் குழந்தைகளுக்கும் தம் பெயர்களையும் வெவ்வேறு சொற்கள், வாக்கியங்களையும் எழுதத் தெரிந்திருந்தது. “எனக்குப் படிக்கவும் எழுதவும் தெரியும், என் அப்பா சொல்லித் தந்தார்” என்று தேன்கோ எழுதினான். “நான் ஏற்கெனவே ஒரு புத்தகத்தைப் படித்து விட்டேன்” என்று தேயா எழுதினாள். மாக்தா கீழ்க்காணும் பல கணக்குகளை எழுதியிருந்தாள்: 10+5=15, 100-90= 10, 100+100 =200…..

பார்த்தீர்களா, எப்படிப்பட்ட அசாதாரணமான குழந்தைகள். 80-ம் ஆண்டுகளின் போக்கு! ஏன் இவர்கள் எழுத்துகள், நூல்கள், எண்கள் மீது இப்படி அக்கறை காட்டுகின்றனர்? கண்ணாமூச்சி விளையாட்டோ வேறு விளையாட்டோ விளையாடலாம், தாண்டிக் குதித்துக் கொண்டிருக்கலாம். ”இங்கு என்ன எழுதியுள்ளது?”, “இது என்ன எழுத்து?” என்று தொலைக்காட்சிப் படங்களின் தலைப்பு எழுத்துகளையும் தெருக்களில் தென்படும் பலகைகளில் உள்ளவற்றையும் சுட்டிக்காட்டி ஏன் இவர்கள் தம் தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளைக் கேள்வி கேட்டுத் துளைக்கின்றனர்? பத்திரிகையில் உள்ள தமக்குத் தெரியாத எழுத்துகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இவர்கள் இப்படி கஷ்டப்படுகின்றனர்? ஐந்து வயதான குழந்தைகள், ஏன் நான்கு வயதான குழந்தைகள் கூடப் படிக்க முயலுகின்றனர். இதைச் சொல்லித்தருமாறு அவர்கள் தம் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். தமது சைக்கிள்கள், கார் பொம்மைகள், மற்ற விளையாட்டுப் பொருட்களை மறந்துவிட்டு இவர்களே அடிக்கடி பரஸ்பரம் எழுத்துகள், எண்களைச் சொல்லித் தருகின்றனர். இந்த ஆறு வயதுக் குழந்தைகள் புதியவற்றை அறிந்து கொள்ளும் நாட்டத்தோடு மட்டுமின்றி குறிப்பிட்ட அளவு ஞானத்தோடும் (இது பள்ளிப் பாடத்திட்டத்தில் அடங்கியுள்ளது) வகுப்பறைக்கு வந்துள்ளனர்.

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

பல குழந்தைகளுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் என்பது குறித்து ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிப்பதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இப்போது என்ன செய்வது?” என்று கூட அவர்கள் குறைப்பட்டுக் கொண்டனர். “படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வீட்டில் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டாம், ஏனெனில் இவர்கள் இதையே வகுப்பறையிலும் படிக்க வேண்டி வருவதால் பாடவேளையின் போது இவர்களுக்குச் சலிப்பேற்படும்” என்று ஒரு பத்திரிகையில் ஆசிரியை ஒருவர் பெற்றோர்களுக்கு அறைகூவல் விடுத்ததைக்கூட நான் பார்த்தேன்.

ஆனால் பெற்றோர்கள் விசேஷப் பாடத்திட்டத்தின்படி தம் குழந்தைகளுக்கு ஒன்றும் சொல்லித் தருவதில்லையே. குழந்தைகளே தமது “ஏன்”, “எப்படி”, “இது என்ன?”, “இப்படியிருந்தால்” போன்ற கேள்விகள் மூலம் தமது கல்வியைப் பெறுகின்றனர். வீட்டில் குழந்தைக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தராமலிருக்குமாறு கோருவதில் பொருளில்லை என்று எனக்குப்படுகிறது. ஏனெனில் இன்றைய குழந்தையின் அறிந்துணரும் நாட்டத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முக்கியமானது என்னவெனில், இப்படித் தடை செய்ய வேண்டியது அவசியமா? இது குழந்தையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்குமே.

ஒரு வகுப்பில் குழந்தைகள் வெவ்வேறான ஞான மட்டங்களில் இருக்கும்போது ஆசிரியரின் பணி நிச்சயமாகக் கடினமாகும். ஏனெனில் “பூஜ்ஜியத்திலிருந்து கல்வி துவங்கும்போது தயாராக உள்ள முறை இச்சந்தர்ப்பங்களில் எடுபடாது. கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டிவரும். சில சமயங்களில் ஒன்றிற்குப் பதிலாக இன்னொன்றைக் கூடப் பயன்படுத்த நேரிடும். நடைமுறையில் இது, ஆசிரியர் தன் முறையியல் கோட்பாடுகளை மாற்றுவதைக் குறிக்கும். சில சமயங்களில் ஆசிரியருக்கே உரித்தான தன் சொந்த சடத்துவத்திற்கெதிராகப் போராடுவதைக் குறிக்கும்; சில ஆசிரியர்கள் வழக்கமான கல்வி முறைகளை மாற்றுவதன் தீமைகள் குறித்து வாய் வீச்சுக்களின் மூலம் இதைத் திறமையாக மூடி மறைப்பார்கள். ”ஆம், சில சந்தர்ப்பங்களில் ஒரு சில ஆசிரியர்களின் செயலற்ற மந்த நிலை மற்ற ஆசிரியர்களின் படைப்பாற்றலை மழுங்கடிக்கச் செய்கிறது. புதியவற்றை நாடும் ஆசிரியர்களைக் கட்டிப்போடுகிறது”. ஒரு விந்தையான நிலை ஏற்படுகிறது: ஆக்கபூர்வமான அணுகுமுறையற்ற ஒரு ஆசிரியர் தன் மாணவர்களைச் சோம்பேறிகளெனக் கூறுகிறார். மிக மோசமாகப் பாடம் நடத்தும் ஆசிரியர் (இதற்கு அவருக்கு பூஜ்ஜியம் மார்க்குதான் போடலாம்) தன் மாணவர்களுக்கு இப்பாடத்தில் பூஜ்ஜியம் மார்க்கு போடுகிறார்.

குடும்பம், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நர்சரிப் பள்ளிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், திரைப்படம், விளையாட்டுப் பொருட்கள், மனிதர்கள், நமது நவீன வாழ்க்கை எல்லாம் சேர்ந்துதான் இன்று என் முன் உட்கார்ந்துள்ள இந்த அசாதாரணக் குழந்தைகளை உருவாக்கியுள்ளன. பள்ளிக்கு வந்த போது இவர்களில் பலருக்குப் படிக்கவும் எழுதவும் கூட்டவும் கழிக்கவும் வகுக்கவும் பெருக்கவும் (பத்து வரைக்கும் மட்டுமல்ல அதற்கு மேலும் கூட) தெரியும். இன்று இவர்கள் தம் வளர்ச்சியாலும் “கல்வியறிவாலும்” என்னைப் பன்முறை வியப்பில் ஆழ்த்தினர். என்னால் இவர்களை ஒன்றுமறியாத சிறுவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆறு வயதுக் குழந்தைகள் உள்ள மற்ற பல வகுப்புகளைப் போன்றே என் வகுப்பிலும் வெவ்வேறு திறமைகளையும் வெவ்வேறு மட்ட ஞானத்தையும் உடைய குழந்தைகள் நிறைந்திருக்கட்டும். தனிப்பட்ட அணுகுமுறைக் கோட்பாடு என் வகுப்புகளில் எடுபடவில்லையெனில் ஏன் போதனை முறை இக்கோட்பாடு குறித்து இவ்வளவு பெருமிதம் கொள்கிறது?

அதே சமயம், ஆறு வயதுக் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளார்கள் என்றால், இவர்கள் பள்ளிக்கு வரும் முன்னரே புதியவற்றை அறியும் நாட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றால், இவர்கள் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு முழுப் பொறுப்போடு பாடம் படிப்பதில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கிறேனா? நான் இப்படி நினைத்தால், குழந்தைகளின் உண்மையான வாழ்விலிருந்து தள்ளி நிற்கும் ஒரு எளிய ஆசிரியனாக அல்லவா இருப்பேன்! எனது வேலையின் சிக்கலே எதுவெனில், அவர்களின் ஞானம் எப்படிப்பட்டதாயிருந்தாலும் அவர்கள் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள், அவர்களுக்கு விளையாட்டுதான் வாழ்வின் உட்பொருள் என்பதாகும்.

ஒருமுறை ஒரு ஐந்து வயதுச் சிறுமியை அவளுக்கு எவ்வளவு “கல்வியறிவு” உள்ளது என்று சோதித்துப் பார்ப்பதற்காக என்னிடம் கூட்டி வந்தனர். அச்சிறுமி நன்றாகப் படித்தாள், பல கதைகளைப் படித்திருந்தாள், தன் மனப் பதிவுகளை அவளால் எழுத்து வடிவில் வடிக்க முடிந்தது. கடிகாரத்தில் மணி பார்த்துச் சொன்னாள். வகுத்தாள், பெருக்கினாள், மூளை வளர்ச்சியை நிர்ணயிக்கும் பல சிக்கலான சோதனைகளில் நன்கு தேறினாள். நான் அவளைப் போகச் சொல்லிவிட்டு, பெற்றோர்களுடன் பேசத் துவங்கியதுமே அவள் மேசையின் அடியில் புகுந்து கொண்டு எங்களைப் பார்த்து நாய்க்குட்டியைப் போல் குரைக்க ஆரம்பித்தாள்.

பள்ளிப் பாடங்கள் நான்கு, ஐந்து, ஆறு ஏன் ஏழு – எட்டு வயதுக் குழந்தைகளின் இயல்பை அடியோடு மாற்றுவதில்லை. அதாவது, குழந்தைப்பருவம் என்றழைக்கப்படுவதிலிருந்து இவர்களைப் பிரிப்பதில்லை. கருத்தாழமுள்ள விஷயங்களைத் தெரிந்திருப்பதாலும், மேன்மேலும் இவற்றை அறிந்து கொள்ள முயலுவதாலும் மட்டுமே குழந்தை பொறுப்புள்ளவனாகி விடுவதில்லை. ஆறு வயதுக் குழந்தைகளுக்கு எனது கட்டளைகள், தடைகள், அறைகூவல்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும், நீண்ட நேரம் அவர்களால் பாடம் படிக்க முடியாது, ஒரே மாதிரியான நிலை அவர்களுக்கு விரைவிலேயே சலிப்பேற்படுத்தும் …..

இன்று என் வகுப்பில் எப்படியிருந்தது? குழந்தைகள் களைத்து விட்டனர். அவர்களுக்குச் சலிப்பாயுள்ளது என்பதை இரண்டு முறை உணர்ந்தேன். இன்னமும் குறைவான பாடவேளைகளைப் பற்றி நான் யோசித்துப் பார்க்க வேண்டுமோ! ஒவ்வொரு பாடவேளையிலும் 15 நிமிடங்கள் பாடம் நடத்தினால் போதுமோ? ஒரு நாளில் எட்டு சிறு பாடவேளைகள். இல்லை, தாய்மொழி, கணிதம், ருஷ்ய மொழி வகுப்புகளை மட்டும் இப்படிப் பிரிப்பது நல்லது. வரைதல், பாட்டு வகுப்பு, உடற்பயிற்சி வகுப்புகளை விட இவற்றிற்குப் பெரும் மூளை உழைப்பு தேவைப்படும். தாய் மொழிப் பாடம் 15 நிமிடங்கள் நடந்ததும் வகுப்பு மணியடிக்கும். பின் வகுப்பை விட்டு வெளியே போகாமலேயே 5 நிமிடங்கள் ஓய்வு. எஞ்சிய 15 நிமிடங்களை கணிதத்திற்கு ஒதுக்குவோம். நாளை இப்படிச் செய்து பார்க்க வேண்டும்….

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க