பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சாஹெத் என்ற மனித உரிமைகள் அமைப்பிற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களில் பார்வையாளர் அந்தஸ்து வழங்குவதைத் தடை செய்ய இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தொடுத்துவரும் தாக்குதல்களும் மனித உரிமை மீறல்களும் ஊர் உலகம் அறிந்ததே! இந்தியாவில் காஷ்மீர் மக்கள் மீது எப்படி மிருகத்தனமான தாக்குதலை இந்திய அரசு திட்டமிட்டுத் தொடுத்து வருகிறதோ, அதைவிடத் தீவிரமாக இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல் தொடுத்து வருகிறது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட அதன் சார்பு நாடுகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் திறந்து வைத்தது. இதற்கு பல உலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. ஒருபுறத்தில் அமெரிக்கா ஜெருசலத்தில் தூதரகத்தை திறக்கையில், மறுபுறத்தில் பாலஸ்தீனத்தில் பேரணி சென்ற பொதுமக்கள் 120 பேரைக் கொன்றது இஸ்ரேல்.

தொடர்ச்சியான மனித உரிமைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதற்காக, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சாஹெத் என்ற மனித உரிமைகள் அமைப்பு முன் வைத்த கோரிக்கையை நிராகரிக்கும் தீர்மானத்தை முன் வைத்தது.

இஸ்ரேலிய அதிகாரிகளால் ஐ.நாவில் முன் வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம், கடந்த ஜூன் 6 அன்று 28 – 14 என்ற ஓட்டு விகிதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளிட்டு மொத்தம் 28 நாடுகள் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. எகிப்து, பாகிஸ்தான், சீனா, ரசியா, மொராக்கோ ஆகிய நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

இது குறித்து இந்திய அரசாங்கம் ஒருவார்த்தையும் பேசவில்லை. இந்த வாக்கெடுப்பு கடந்த ஜூன் 6 அன்றே நடந்திருந்தாலும், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது கடந்த 11-ம் தேதியன்று இஸ்ரேல் தூதரகத்தின் துணைத் தலைவரான மாயா கடோஷ் இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிடுகையில் மட்டுமே தெரியவந்தது.

படிக்க:
♦ இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
♦ இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

தனது டிவிட்டர் செய்தியில், “தம்மை ஐநாவில் பார்வையாளராக இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்த தீவிரவாத அமைப்பான ஷாஹெத்-தின் கோரிக்கையை எங்களோடு இணைந்து நின்று புறக்கணித்ததற்கு நன்றி இந்தியா ! நம்மைத் துன்புறுத்தும் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் மீது நாம் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

ஒரு மனித உரிமைகள் அமைப்பு என்ற வகையில் ஐ.நா. சபையில் பார்வையாளர் தகுதியில் ஒரு அமைப்பு நீடிக்கக் கூட அனுமதிக்கப்படுவதை எண்ணி பீதியடைகிறது இஸ்ரேல். பாசிஸ்டுகளைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் என்ற சொல்லே வேப்பங்காய்க்கு நிகரான சொல் என்பதால், இஸ்ரேலின் இந்தத் தீர்மானத்தை பாசிச மோடி அரசு ஆதரித்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஒரு பாசிச கோழைக்கு ஒரு பாசிச கோழைதானே துணைநிற்க முடியும் ?


நந்தன்
நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்