காராஷ்டிர மாநிலம் வார்தாவில் கோயில் ஒன்றில் நுழைந்ததற்காக, தலித் சிறுவனை அம்மணமாக்கி கொதிக்கும் வெயிலில் நிறுத்திய வன்கொடுமை நடந்துள்ளது. 45 டிகிரி செல்சியல் கடும் அனல் வெப்பம் நிலவிய நிலையில், கோயிலுக்குள் ஒதுங்கிய சிறுவனை அங்கிருந்த சாதி வெறி பிடித்த ஒருவர் இக்கொடுமையை நிகழ்த்தியிருக்கிறார்.

இந்தக் கொடுஞ்செயலைச் செய்த உமேஷ் என்கிற அமோல் தோரே ஒரு கூலித் தொழிலாளியாம். கோயிலுக்குள் நுழைந்த சிறுவனை ஆடைகளை அவிழ்க்க வைத்து, சுட்டெரிக்கும் வெயிலில், கோயில் வளாகத்தில் இருந்த டைல்ஸ் போடப்பட்ட தரையில் தள்ளியிருக்கிறார் உமேஷ். சிறுவன் எவ்வளவு கெஞ்சியும் சாதி வெறி பிடித்த மனம் விடத்தயாராக இல்லை. நெருப்பில் குதித்ததுபோல, கடும் வெயிலில் கீழே விழுந்த சிறுவனின் முதுகு, பின்புறம் வெந்துபோயிருக்கிறது.

ஆர்வி நகரின் அருகே ஜன்தா நகர் தலித் குடியிருப்பில் வசிக்கும் அந்தச் சிறுவன், கோயில் அருகே விளையாடச் சென்றிருக்கிறான். அப்போது, கோவிலின் நுழைவுவாயில் அருகே நுழைந்த சிறுவனை உமேஷ் உடனே தடுத்து நிறுத்தி, இந்தக் கொடுமையை செய்திருக்கிறார்.

உடலில் தீப்புண் போன்ற காயங்களைப் பார்த்த பெற்றோர், அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற அவர்களை ஆதிக்க சாதியினர் மிரட்டியுள்ளனர். அதையும் மீறி ஆர்வி காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார். ஆனால், ஊரில் உள்ள ஆதிக்க சாதிகளின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் இன்னமும் ஊர் திரும்பவில்லை.

சிறுவனின் படமும் அவனுக்கு நடந்த கொடுமைகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின், பல சாதி ஒழிப்பு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்க ஆரம்பித்தனர்.

ஆனால், குற்றவாளிகளின் பக்கம் நிற்கும்போலீசு, சிறுவன் கோயில் பிரசாதத்தை திருட முயற்சித்ததாகவும் அதனால் கோபம் கொண்ட உமேஷ் அவனை இப்படி செய்துவிட்டதாகவும் சொல்கிறது.

அழுத்தத்தின் பேரில், உமேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படியும் போஸ்கோ சட்டத்தின்படியும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊரைவிட்டு தப்பிக்க இருந்த உமேஷைப் பிடித்து நீதிமன்ற காவலில் வைத்திருக்கிறது போலீசு. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு போட்டால் எஸ்.பி. அல்லது டி.எஸ்.பி. அளவிலான அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற நடைமுறையைப் பொருட்படுத்தாமல் குற்றவாளி உமேஷை நீதிமன்ற காவலில் அனுப்பியிருப்பதாக சிறுவனின் குடும்பம் குற்றம்சாட்டுகிறது.

படிக்க:
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம்
♦ கரூர் அருகே தலித் சிறுவன் மீது ஆதிக்க சாதி வெறியாட்டம் !

சிறுவனின் சார்பாக வழக்கை நடத்தி வரும் வன்சாரி, போலீசு தரப்பில் சொல்லப்படுபவை அனைத்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு போட்டுள்ளதை நீர்க்கச் செய்யவே என்கிறார். “குற்றத்தைச் செய்தவர் அருகிலேயேதான் வசிக்கிறார். சிறுவன் தலித் சாதியைச் சேர்ந்தவன் என்பதை அவரும் மற்றவர்களும் அறிவார்கள். இது சிறுவனை துன்புறுத்துவது என்பதாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. இந்த கிராமத்தில் சமூக அடுக்கு நிலை எப்படி உள்ளது என்பதைத்தான் இது உணர்த்துகிறது” என்கிற வன்சாரி. “அம்மணமாக்கி, கொடும் வெயிலில் சிறுவனை தள்ளிய கொடுமை, உயர்சாதியைச் சேர்ந்த சிறுவனாக இருந்தால் நடந்திருக்குமா?” என கேள்வி எழுப்புகிறார்.

வார்தாவில் உள்ள ஆர்வி காவல்நிலையத்தில் வன்கொடுமை வழக்குகள் அதிகம் பதியப்படுவதாகவும், இப்போது நடந்திருப்பது கொடூரமான வன்முறை என்றும் ஒரு காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த குற்றத்தில் வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என்கிற கோணத்திலும் விசாரித்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சனாதன சாதி படிநிலையைப் போற்றும் இந்துத்துவ அதிகாரம் ஆட்சியில் இருக்கும்போது சட்டங்களும் காவல்துறையும் இத்தகைய குற்றங்களுக்கு என்ன தீர்வு சொல்லிவிட முடியும்? அவற்றால் குற்றவாளியை தண்டிப்பது குறித்து நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

வினவு செய்திப் பிரிவு
செய்திக் கட்டுரை : சுகன்யா சாந்தா
கலைமதி
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க