பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 12

டோக்ளியாட்டி

ர்டிட்டி தொண்டர் படையினரையும், அவர்களது காப்டன்களையும், அதிகாரிகளையும், உதவாக்கரைகளையும், தறுதலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குழு என்ற முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற சில காலமாகவே இவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் பிறகு அது தங்களுடையதாகிவிடும் என்று இவர்கள் கருதிக் கொண்டிருந்தனர். குட்டி பூர்ஷுவாக்கள் அதிகாரத்துக்கு வரமுடியும், பாட்டாளி வர்க்கத்தையும் பூர்ஷுவாக்களையும் தங்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும், தங்கள் சொந்தத் திட்டங்களின்படி சமுதாயத்தை மறுசீரமைக்க முடியும் என்று இவர்கள் கற்பனையில் மூழ்கிப் போயிருந்தனர்.

பாசிசம் ஆட்சிபீடம் ஏறியதும் இந்தக் கனவுகள் எல்லாம் பொய்த்துப் போயின. பாசிசம் அதிகாரத்துக்கு வந்ததும் முதல் காரியமாக பூர்ஷுவாக்களுக்குச் சாதகமாக பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு நாம் நிலைமையை மிகைப்படுத்தக் கூடாது. உடனடியாக ஊதியங்கள் மீது எத்தகைய தாக்குதலும் தொடுக்கப்படவில்லை. இது ஏன்? ஏனென்றால் பூர்ஷுவாக்களால் ஏககாலத்தில் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியாது. அவர்களைப் பல பிரச்சினைகள் எதிர்ப்பட்டன. அரசு எந்திரத்தை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. குட்டி பூர்ஷுவாக்களின் அதிருப்தியைத் தணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் மேலும் மேலும் புதிய கோரிக்கைகளை முன்வைத்து வந்ததோடு அரசு எந்திரத்துக்குள்ளும் ஊடுருவ ஆரம்பித்திருந்தனர். இதோடு அடிபட்டுக் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. பூர்ஷுவாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அவர்கள் எளிதாக தங்கள் சக்திகளை ஒன்றுதிரட்டிப் போராட்டத்தில் குதிக்க முடியும்.

ஆர்டிட்டி கொலைகார படையினர்.

முதலில், வர்க்கப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், இந்த அம்சம் பிரதானமானதாக மாறி தங்கள் விவகாரங்களில் தலையிடாதிருக்கும்படிச் செய்யவும் பூர்ஷுவாக்கள் முயன்றனர். அச்சமயம் உருவாகி வந்த ஸ்திர நிலைமை சில பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு பூர்ஷுவாக்கள் தீர்வுகாண துணை புரிந்தது. தொழில் துறையின் கைகளைக் கட்டிப்போட்டு வந்த யுத்த எந்திரம் அகற்றப்பட்டது. முந்திய காலகட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன; மூலதனத்துக்கு விரிந்து பரந்த சுதந்திரம் அளித்து, அதன் முன்முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன.

வர்க்கப் பிரச்சினையை கூர்மையாக்காமல், ஊதியங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்காமல் பல்வேறு பிரச்சினைகளை பாசிசத்தால் எவ்வாறு சமாளிக்க முடிந்தது? பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சமயத்தில் ஸ்திர நிலைமை ஏற்பட ஆரம்பித்திருந்ததும், இத்தாலியப் பொருளாதார நிலைமை மேம்பாடுறத் தொடங்கியிருந்ததும்தான் இதற்குக் காரணம்.

எனினும் இது பாசிசத்துக்கு மிகவும் சோதனை மிக்க காலமாக இருந்தது – நெருக்கடி மிக்க காலம் என்று கூறுவதற்குக் காரணம் இருந்தது. இந்தக் காலத்தில்தான் பாசிசத்தின் திட்டத்துக்கும் பழைய திட்டத்தை ஆதரித்து வந்த குட்டி பூர்ஷுவா வெகுஜனப் பகுதியினரின் ஆர்வ விருப்பங்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் பகிரங்கமாக வெளிப்படத் தொடங்கின. இந்த முரண்பாடுகள் முதல் ஆண்டில் எவ்விதம் பிரதிபலித்தன?

ஆர்டிட்டி கொலைகார படைக்கு ஆதரவான பிரச்சார சுவரொட்டி.

பாசிச முகாமுக்கு வெளியே கனன்று கொதித்துக் கொண்டிருந்த எதிர்ப்பு இயக்கங்களில் அவை பிரதிபலித்தன. பாசிச முகாமுக்குள்ளிருந்தவை உள்ளிட்ட குட்டி பூர்ஷுவா சக்திகளை இந்த இயக்கங்கள் கவர்ந்து ஈர்த்தன. இதனால் இந்த சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் பாசிசத்துக்கு ஏற்பட்டது. இச்சக்திகளை பாசிசம் சகித்துக் கொண்டிருந்திருக்குமானால் அதன் வெகுஜன அடித்தளம் பெரிதும் ஆட்டம் கண்டிருக்கும்.

எனவே, பாசிசம் முதலில் பாப்புலர் கட்சியைக் குறிவைத்தது. அதுதான் பாசிசத்தின் முதல் எதிரியாக இருந்தது. அதன்மீது தனது அடக்குமுறைக் கணைகளைத் தொடுத்தது. பாப்புலர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்நிலைகளை மேற்கொண்டனர். இதேபோன்று அமைச்சரவையிலிருந்த ஏனைய குழுக்களும் கட்சிகளும் போர்க்கொடி தூக்கின. குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவா பகுதியினரிடையே இவற்றுக்கு வலுவான ஆதரவு இருந்தது. பாசிசம் எடுத்த பல கடுமையான நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் – பொருளாதாரக் குவியலின் ஆரம்பம், சிறு சொத்துடைமையாளர்களின் சீர்குலைவு. சிறு விவசாயிகள் மீது வரிச்சுமை போன்ற நடவடிக்கைகளை இவ்வகையில் குறிப்பிடலாம். இக்கால கட்டத்தில் எங்கும் அதிருப்தி நிலவியது: பாசிஸ்டுக் கட்சிக்குள்ளேயே கூட அது ஊடுருவிச் சென்றது. அதிருப்தி, அரசு எந்திரத்தின்மீது ஆதிக்கம் செலுத்த இயலாமை ஆகிய இவ்விரண்டு அம்சங்களும் சேர்ந்து ஆரம்பம் முதலே அரசாங்கத்தைச் சரிவர நிர்வகிக்க முடியாத சூழ்நிலைமையை உருவாக்கின; ஆட்சி பீடத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கிழடு தட்டிப் போய், நாட்டுக்குப் பெரும் பாரமாக இருந்தவர்களையும் அகற்ற முடியவில்லை. இவை போன்ற இக்கட்டுகளிலிருந்துதான் மாட்டியோட்டி நெருக்கடி தோன்றியது.

மாட்டியோட்டி நெருக்கடி ஆரம்பமானபோது தொழிலாளி வர்க்கம் பிரதான சக்தியாகத் தோன்றவில்லை. பல நிகழ்ச்சிகள் இதனை மெய்ப்பித்தன; உதாரணமாக, தெற்கிலும், ரோமிலும், நேப்பள்சிலும், பிறகு டூரினிலும் மிகப் பெருமளவுக்கு கொதிப்பும் குமுறலும் கிளர்ச்சியும் நிலவின. சற்றுத் தாமதித்துத்தான் தொழிலாளி வர்க்கம் தன் சக்திகளை அணிதிரட்டி, தலையிட்டது. பிரதான அம்சமாகப் பரிணமித்தது. 1925-26-ம் ஆண்டுகளில்தான் நமது கட்சி சுறுசுறுப்படைந்து முன்னணிப் படையாகத் திகழ்ந்தது.

ஏனென்றால் எதார்த்த நிலைமையும், இத்தாலிய முதலாளித்துவத்தின் ஸ்திரத் தன்மையின் இயல்பும் இந்த ஆண்டுகளில்தான் முழு அளவுக்குத் திரை விலகி வெளிப்பட்டன. தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறையும் ஊதிய வெட்டுகளும் ஆரம்பமாயின. வேலையில்லாத் திண்டாட்டம் பூதாகரமாக தலைதூக்கியது. வாழ்க்கைச் செலவுகள் தாங்கொணா அளவுக்கு அதிகரித்தன. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில்தான் பொருளாதாரமும் உற்பத்தியும் ஒரு சிலரின் கையில் குவியும் இயக்க நிகழ்வு ஆரம்பமாயிற்று. பொருளாதாரத்தை இந்த வளர்ந்து வரும் குவியலால் ஆளும் பூர்ஷுவா வர்க்கங்கள் பெரிதும் ஊக்கமும் உத்வேகமும் பெற்று, தொழிலாளி வர்க்க அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தன.

இத்தாலி பாப்புலர் கட்சியினர்.

மத்தியிலிருந்த பெரும் பூர்ஷுவாக்களின் ஊசலாடும் சக்திகளுக்கும் அடித்தளத்திலிருந்த குட்டி பூர்ஷுவா சக்திகளுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுதான் மாட்டியோட் நெருக்கடிக்கு மூலகாரணம் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டேன். பாட்டாளி வர்க்கம் கடைசி நிமிடத்தில்தான் ஒரு தீர்மானகரமான சக்தியாக அரங்கில் தோன்றிற்று. இதே சமயம் பொருளாதார வர்க்க அம்சங்கள் போன்றவையும் தலையிட்டன. உதாரணமாக, ஸ்திர நிலைமை -விரிவடைவதற்கு மூலதனத்துக்குள்ள சுதந்திரம் – நிதி மூலதனத்தை வலுப்படுத்திற்று. உற்பத்தி ஒரு சிலர் கையில் குவிவதை ஊக்குவித்தது. இதன் காரணமாக பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகள் உச்சநிலைக்கு வந்தன.

1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின. நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகள் மேல்நிலையைப் பெற்றதும், அனைத்து எதிர்ப்பையும் அவை அடக்கி ஒடுக்கியதுமானது அரசியல் மட்டத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. பூர்ஷுவாக்கள் மிகவும் பிற்போக்கான அடிப்படையில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கும் இது வகை செய்தது.

சர்வாதிபத்தியம் பிறந்தது. பாசிசம் சர்வாதிபத்தியமாகப் பிறக்கவில்லை; பூர்ஷுவா வர்க்கத்தின் தீர்மானமான சக்திகள் அதிகப்பட்ச பொருளாதார ஒற்றுமையையும் அரசியல் ஒற்றுமையையும் எய்திய போதுதான் பாசிசம் சர்வாதிபத்தியமாக மாறிற்று.

பரினாஸ்ஸி (Roberto Farinacci)

சர்வாதிபத்தியம் என்பது பாசிஸ்டு சித்தாந்தத்திலிருந்து தோன்றாத மற்றொரு கருத்தோட்டமாகும். குடிமகனுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய பாசிசத்தின் ஆரம்பக்காலக் கண்ணோட்டத்தைப் பார்த்தால், அராஜகவாதப் பெரும்போக்கு அம்சங்கள் அதில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். தனிநபர் விவகாரங்களில் அரசு தலையிடுவதற்குக் காட்டப்படும் எதிர்ப்பு இவ்வகையைச் சேர்ந்ததே ஆகும். உண்மையில் சர்வாதிபத்தியம் என்பது இடையிலேற்பட்ட மாற்றத்தையும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

பிரச்சினையின் இந்த அரசியல் அம்சங்களை மேலெழுந்த வாரியாகத்தான் குறிப்பிட முடியும். சர்வாதிபத்தியப் பிரச்சினை எவ்வாறு முன்வைக்கப்படுகிறது என்பதைப் பரிசீலிக்கும்போது முந்திய காலகட்டத்தில் எழுந்த பிரச்சினைகளையும் நாம் காண வேண்டும். பூர்ஷுவா வர்க்கம் தனது செயல்முறையை மாற்றிக் கொண்டது. அவ்வாறே பாசிசமும் தனது செயல் முறையை மாற்றிக் கொள்ள வேண்டியதேற்பட்டது. இந்த மாற்றம் விவாதங்களையும் போராட்டங்களையும் குறித்தது. பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் இது பிரதிபலித்தது. கட்சிக்குள்ளும் பாசிசத் தொழிற்சங்கங்களுக்குள்ளும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. கட்சியில் இந்தப் போராட்டம் பாசிஸ்டுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் கட்சிக்கும் அரசுக்குமுள்ள உறவு குறித்த பிரச்சினையை மையமாகக் கொண்டிருந்தது.

அரசு நிறுவனங்களுக்கும் மேலான அதிகாரம் கட்சிக்கு இருக்க வேண்டும் என்று தீவிர நடுத்தர ஊழியர்கள் கொண்டிருந்த கண்ணோட்டமே பாசிஸ்டுக் கண்ணோட்டமாக அமைந்திருந்தது. கட்சிதான் உண்மையில் அதிகாரம் செலுத்த வேண்டும். இந்த நிலையைத்தான் பரினாஸ்ஸி12 மேற்கொண்டிருந்தார். மாகாண கட்சி செயலாளர் மாகாண தலைமை அதிகாரியைவிட மிகவும் அதிகாரம் படைத்தவராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தேசியவாதிகளான ஃபெதர்ஸோனியும் ரோக்கோவும்13 வேறுவிதமான கருத்துக் கொண்டிருந்தனர். அரசுக்குத்தான் முதல் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும், அதற்குப் பின்னர்தான் கட்சி வரவேண்டும். அரசுக்குக் கட்சி கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். முசோலினி இரு குதிரைகளில் சவாரி செய்யும் செப்பிடு வித்தையில் இறங்கினார். மாட்டியோட்டி காலத்தில் பரினாஸ்ஸியைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், சர்வாதிபத்தியப் பிரச்சினை தலைதூக்கியபோது ரோக்கோவுடன் சேர்ந்து கொண்டார். அரசுதான் எல்லாம், அதற்கு எதிராக எதுவும் கூடாது என்ற திட்டவட்டமான கோட்பாட்டை முன்வைத்தார்.

ஃபெதர்ஸோனி (Luigi Federzoni)

புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்த நடைமுறை பூர்த்தியடைந்தது. பாசிஸ்டுக் கட்சியானது அரசின் வெறும் தேசிய பிரசார ஊதுகுழலாயிற்று. குட்டி பூர்ஷுவாக்களையும் மத்தியதர பூர்ஷுவாக்களையும் அரசிடம் விசுவாசம் கொள்ளச் செய்வதும், தொழிலாளர்களைப் பாசிசத்தின் பக்கம் ஈர்ப்பதுமே இந்தப் பிரசாரப் பணியின் குறிக்கோள்.

தொழிற்சங்கங்கள் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை. இந்தப் பிரச்சினை எவ்வாறு சமாளிக்கப்பட்டது? துரதிர்ஷ்டவசமாக இது பற்றி மிகச் சுருக்கமாகவே நம்மால் கூறமுடியும். தொழிற்சங்கப் பிரச்சினையில் நூற்றுக்கு நூறு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

பாசிஸ்டுத் தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள், ஆரம்பத்தில் அது மிக சொற்பமானதாகவே, அற்பமானதாகவே இருந்தது. இதற்கு முன்னர் பாசிசம் வெகுஜனப் பகுதியினரை ஒருங்கு திரட்டுவதற்குப் பதிலாக அவர்களைச் சிதறடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தது. 1920-ம் ஆண்டுக்கும் 1923-ம் ஆண்டுக்கும் இடையே பாசிசத் தொழிற்சங்கங்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒருங்கு திரட்டினர். அதே சமயம் வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்கங்களிலிருந்து வெளியேறியவர்கள் லட்சக்கணக்கில் இருந்தனர். தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதே இந்தக் காலகட்டத்தில் பாசிசத்தின் திட்டமாக இருந்தது,

மாட்டியோட்டி காலம் வரை இந்தப் போக்கு நீடித்தது. தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்று திரட்டப் பாசிசம் முயற்சித்தது. ஆனால் இதில் தோல்வியே கண்டது. ஆனால் சர்வாதிபத்திய பிரச்சினை எழுந்தபோது, அரசை சர்வாதிபத்திய ரீதியில் மறுசீரமைக்கும் பாதையை பாசிசம் மேற்கொண்டபோது, செயல்முறை மாற்றமடைந்தது. அப்போது பாசிசம் தனது சொந்தத் தொழிற்சங்கக் கட்டுக்கோப்புக்குள் தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்கங்களிலிருந்து அவர்களைப் பிரிப்பது மட்டும் அச்சமயம் அதன் பணியாக இருக்கவில்லை. மாறாக அவர்களைத் தானே அணி திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !

இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது? இது விஷயத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1926-ம் வருடச் சட்டம் இத்தீர்வுக்கு ஓர் அடிப்படையாக அமைந்தது. இச்சட்டம் தொழிற்சங்க ஏகபோகத்துக்கு வழி வகுத்தது. ஆலைப்பிரிவுக் கமிட்டிகள் போன்றவற்றைக் கலைத்துவிட்டது. இந்தத் தொழிற்சங்க ஏகபோகத்தின் அடிப்படையில்தான் வெகுஜனங்களைப் பாசிசத்தின் பக்கம் கவர்ந்து ஈர்க்கும் பணி ஆரம்பமாயிற்று.

மேலும் சில மாற்றங்கள் பின்னால் மேற்கொள்ளப்பட்டன என்பதை நினைவில் கொள்ளுங்கள். 1926, 1927, 1928-ம் ஆண்டுகளின் சர்வாதிபத்தியமும் 1931-ம் ஆண்டுச் சர்வாதிபத்தியமும் ஒன்றல்ல. நாட்டின் பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் இத்தாலியின் பொருளாதாரத்தில் தோன்றிய நெருக்கடி காரணமாகவும் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

12. ராபர்ட்டோ பரினாஸ்ஸி (1892-1945) கிரிமோனாவின் பாசிஸ்டுத் தளபதி. வளைந்து கொடுக்காத கிராமப்புற அணியின் ஒரு தலைவர். மாட்டியோட்டி நெருக்கடியின் இறுதியில் பரினாஸ்ஸி முசோலினிக்கு பாதுகாப்பாக இருந்தார். டியூஸ் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள சாகசம் புரிந்தார். நன்றியுள்ள முசோலினி அவரை பி.என்.எப்க்கு செயலாளராக 1925 பிப்ரவரி 12-ல் நியமித்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்குப்பின் பெரிய பூர்ஷுவாக்களோடு மோதியபோது பரினாஸ்ஸி ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இரண்டாவது உலக யுத்தத்தில் இத்தாலி நுழையும் காலம்வரை கட்சியில் ஒரு முக்கியத்துவமற்ற நபராக இருந்தார். 1945-ல் இத்தாலிய கொரில்லாக்கள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.

ஆல்பிரெட்டோ ரோக்கோ (alfredo rocco)

லியூகி ஃபெதர்ஸோனி (1875-1967) பாசிசத்திற்கு முந்திய இத்தாலிய தேசிய சங்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவர். பாசிஸ்டு-தேசிய சங்கம் இணைந்ததும் 1923-ல் பி.என்.எப்ல் சேர்ந்தார். முசோலினியின் முதல் அமைச்சரவையில் காலனிகளுக்கான அமைச்சராகப் பணியாற்றியபின், 1924-ல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருடைய இந்த அந்தஸ்தில்தான் அரசைவிட கட்சிக்கு முதல் இடம் என்ற பரினாஸ்ஸியின் கருத்தோடு மோதினார்.

13. ஆல்பிரெட்டோ ரோக்கோ (1875-1935) பி.என்.எப், 1923-ல் ஈர்த்துக் கொண்ட மற்றொரு தேசியவாதி. 1925 முதல் 1932 வரை நிதித்துறை அமைச்சராக இருந்தபோது அரசு, சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் எதேச்சாதிகாரத்தை ஏற்படுத்திய சட்டத்தைத் தயாரிக்கும் பணியை மேற்பார்வையிட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க