செய்தி: பாட்னா – பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியான சம்பவத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லையென அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள்பாண்டே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி சவுபே உள்ளிட்டோர் மீது பொது நல வழக்கு தொடரப்பட்டு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

நீதி: விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள் இன்னும் எத்தனை குழந்தைகள் மரிப்பார்களோ? அப்படியே தீர்ப்பு வந்தாலும் காவிகள் ஆளும் நாட்டில் என்ன நீதி கிடைத்து விடும்?

♠ ♠ ♠ 

செய்தி: தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இன்று உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும் என்பது கூடுதல் தகவல். மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று.

நீதி: ஏற்கனவே 14 மாநகராட்சிகளில் குடிநீரின்றி மக்கள் தவித்து வருகிறார்கள். அந்த தவிப்பில் ஆவடி 15-வது தவிப்பாக சேர்ந்திருக்கிறது.

♠ ♠ ♠

செய்தி: குழந்தைகளை ஆபாச நடன அசைவுக்கு பயன்படுத்தாதீர்கள். நடன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது மிகுந்த கட்டுப்பாடுடன், கண்ணியமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என அனைத்து தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நீதி: ரியாலிட்டி ஷோக்களுக்கு அறிவுரை சொல்லும் மத்திய அரசு இந்தி மாநிலங்களில் நடக்கும் ரியல் ஷோக்களில் குழந்தை திருமணம், பெண் குழந்தைகள் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்படுதல், தலித் சிறுமிகள் மீதான தாக்குதல் குறித்து என்ன அறிவுரை செய்ய முடியும்?

♠ ♠ ♠

செய்தி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்ஷங்கர் இருவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர்களாம். ஆரம்ப காலத்தில் இருந்தே இருவரும் வலதுசாரிகள் அமைப்பில் ஆர்வம் கொண்டிருந்ததோடு இடதுசாரி சித்தாந்தங்களையும் எதிர்த்தவர்கள்.

நீதி: ஜேஎன்யூ வரலாற்றில் மறைந்திருந்த இரண்டு காவிப் புள்ளிகள்!

♠ ♠ ♠

செய்தி: கார்டூனிஸ்ட் கே.கே. சுபாஷ், கேரளாவில் சிஸ்டராக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பேராயர் ஃப்ரான்கோ முல்லக்கலுக்கு எதிராக கடந்த ஆண்டு கார்டூன் ஒன்றை வெளியிட்டார். அப்போது அந்த கார்டூனுக்கு யாரும் எதிர்ப்பு கூறவில்லை.

இந்நிலையில் அந்த கார்டூனிற்கு கேரளாவின் லலிதா கலா அகாடெமி சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் இந்த விருதிற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

நீதி: குற்றப் பின்னணி கொண்ட கத்தோலிக்கத் திருச்சபைக்கு இருப்பது கிரைம் சென்ஸ், இல்லாதது காமெடி சென்ஸ்.

♠ ♠ ♠

செய்தி: சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீதி: தெர்மோகோலால் வைகை நதியைக் காப்பாற்றிய ‘விஞ்ஞானிகள்’ டிரெயின் மூலம் வறட்சியைப் போக்க மாட்டார்களா என்ன?

♠ ♠ ♠

செய்தி:  காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்கிறது. அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறினார்.

நீதி: இதற்கு முன்னும் காவிரி நீரைத் திறந்து விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட நாட்களில் என்ன நடந்ததோ அதுவே இப்போதும் நடக்கும்.

♠ ♠ ♠

செய்தி: இந்திய ரெயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து  ரெயில்களை இயக்க  ரெயில்வே வாரியத்தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாகப் பேசிய ரெயில்வே அதிகாரி ஒருவர், ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.  ஆகியவற்றுக்கு தலா ஒரு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நீதி: மிச்சமிருந்தது ரயில்வே மட்டும்தான். அதிலும் உணவகம், தூய்மைப் பராமரிப்பு என தனியாருக்கு ஏற்கெனவே கொடுத்துவிட்டார்கள். தற்போது ரயில்களையே தூக்கிக் கொடுக்கிறார்கள். விரைவில் முழுத்துறையும் தனியார்மயமாகும். மோடி அரசின் சிவப்பு அபாய விளக்கு எச்சரிக்கை!

படிக்க:
கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

♠ ♠ ♠

செய்தி: சமீபத்தில்,  2-வது முறையாக, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அமெரிக்க அதிபதர் டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த  நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை டொனால்டு டிரம்ப் இன்று முறைப்படி துவங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் டிரம்ப்  பிரசாரத்தை துவங்கினார். 2020- நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

நீதி: முதல்முறை அதிபரான காலத்திலேயே டிரம்பை அமெரிக்காவும், முழு உலகமும் சகித்துக் கொள்ளவில்லை. இரண்டாம் முறை என்றால் இனி அமெரிக்காவை ’கடவுள்’ கூட காப்பாற்ற முடியாது.

♠ ♠ ♠

செய்தி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்தவர் முருகன். பழங்குடியினத்தைச் சேர்ந்த முருகன் விவசாயிகளின்  பயிர்களை நாசம் செய்யும் எலிகளை கிட்டி அமைத்து பிடிப்பது அவரது தொழில்.

பிடிக்கப்படும் எலிகளை வீட்டிலேயே உறித்து பதப்படுத்தி அறந்தாங்கி, பெரியாளூர், பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமங்களில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு விற்பனை செய்து வருகிறார். ஒரு எலி ரூ. 20-க்கு வாங்கும் டாஸ்மாக் பார்காரர்கள் அதை துண்டுகளாக வெட்டி சமைத்து முயல் கறி என்று குடிமகன்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நீதி: சரக்கடித்து விட்டால் அது முயலா, எலியா என்று நாக்கு ஆராயாது. சரக்கிலேயே கலப்படம் இருக்கும் போது கறியில் கலப்படம் இருப்பது ஒரு குற்றமா?

♠ ♠ ♠

செய்தி:  ரிலையன்ஸ் குழும நிறுவனரான திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து நிறுவனத்தைக் கவனித்து வந்தனர். 2005-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துகளை இருவரும் பிரித்துக் கொண்டனர்.

அனில் அம்பானி, 2006-ம் ஆண்டில் 14.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். முகேஷ் அம்பானியைவிட அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 550 கோடி ரூபாய் அதிகமாக இருந்தது. 2008-ம் ஆண்டில் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததோடு, உலகின் ஆறாவது பணக்காரராகவும் திகழ்ந்தார்.

உச்சத்திலிருந்த அனில் அம்பானிக்கு அதற்குப் பிறகு இறங்குமுகம் தான். அனில் அம்பானியின் தொழில் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கத் தொடங்கின. புதிய தொழில் முயற்சிகளும் பின்னடைவைச் சந்தித்தன. அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெருநஷ்டத்தைச் சந்தித்து சொத்துக்களை விற்கும் நிலைக்கு வந்தது. அதற்காக அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியை நாடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உலக பில்லினர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த அனில் அம்பானி தற்போது அந்த பட்டியலிலிருந்து கீழிறங்கியுள்ளார். அவரது சொத்து மதிப்பு, 42 பில்லியன் டாலர்களிலிருந்து சரிவடைந்து 523 மில்லியன் டாலர்களாக மாறியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,651 கோடியாக உள்ளது. எனவே பில்லியனர்கள் பட்டியலிலிருந்து அனில் அம்பானி வெளியேறிவிட்டார்.

நீதி: இனி ரஃபேல் விமானங்களை கோர்த்து தயாரிப்பதன் மூலம் அனில் அம்பானி தனது பில்லியனர் இடத்தை நிச்சயம் பிடிப்பார். மோடி உதவியுடன் பிசினஸ் செய்பவரை பா.ஜ.க. என்றுமே கைவிடாது.

♠ ♠ ♠

செய்தி:ரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

நீதி: ஈராக், ஆப்ஃகான் ஆக்கிரமிப்புக்கு பிறகு ஈரானை வளைக்கத் திட்டமிடுகிறது அமெரிக்கா. வர்த்தக ஆக்கிரமிப்பு இல்லையேல் போர் இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு பக்கம்.

♠ ♠ ♠

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க