முசுலீம்களுக்கு எதிரான இந்து தீவிரவாத இயக்கங்களின் கும்பல் வன்முறை தாக்குதல்கள் 2018-ம் ஆண்டிலும் தொடர்ந்து நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரத்துக்கான அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை (21-06-2019) அன்று அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதில் ஆளும் பாஜக-வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை பேசியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் அரசியலமைப்பு மத சுதந்திரத்துக்கான உரிமையை வழங்கியுள்ள நிலையில், மத சுதந்திரத்துக்கான வரலாற்றில் கரும்புள்ளியாக தீவிரவாதத் தன்மையுடைய சக்திகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை சொல்கிறது.

மத சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையைத் தூண்டிவிடும் தீவரவாத சக்திகளுக்கு, ஆளும் அரசு சலுகைகளும் ஊக்கமும் அளிப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது அமெரிக்காவின் அறிக்கை. வன்முறை பிரச்சாரத்தின் பகுதியாக துன்புறுத்தல், மிரட்டல் போன்றவை இந்து அல்லாதவர்கள் மீதும் கீழ்சாதி இந்து சிறுபான்மையினர் மீதும் நிகழ்த்தப்படுவதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“பசுக்களை விற்றது அல்லது இறைச்சிக்காக வெட்டியது போன்ற வதந்திகள் காரணமாக இந்து தீவிரவாத குழுக்கள் கும்பல் வன்முறைகளை சிறுபான்மை சமூகங்கள் மீது குறிப்பாக முசுலீம்கள் மீது ஏவிவிடுகின்றனர். இது ஆண்டு முழுக்க நடக்கிறது” என அறிக்கை சொல்கிறது.

சில தொண்டு நிறுவனங்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களை தண்டனையிலிருந்து அதிகாரிகள் தப்பவிடுகின்றனர். 2018-ம் ஆண்டின் நவம்பர் மாதம் வரை 18 கும்பல் வன்முறை சம்பவங்களும் எட்டு கொலைகளும் நடந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
♦ அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !

மத சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகங்கள், அரசை விமர்சிப்பவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் மீது அரசு சில நேரங்களில் நடவடிக்கையே எடுப்பதில்லை எனவும்; முசுலீம் கல்வி நிலையங்கள் சுதந்திரமாக செயல்படவும் அவர்களுக்குத் தேவையான பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் சிறுபான்மையினர் தகுதியை பெற்றிருக்கும் நிலையில் அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அரசு வழக்கு தொடுத்து வருவதையும் அறிக்கை கூறுகிறது.

“இந்திய நகரங்களில் உள்ள முசுலீம் பெயர்களுக்கு மறுபெயர் வைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அலகாபாத்துக்கு பிரயாக்ராஜ் என பெயர் சூட்டியதைச் சொல்லலாம். இந்திய வரலாற்றில் முசுலீம்களின் பங்களிப்புகளை அழிக்கும் வகையில் இத்தகைய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இது வகுப்புவாத பதட்டத்தை உருவாக்குவதாகவும் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதரீதியாக தூண்டிவிடப்பட்ட கொலைகள், தாக்குதல்கள், கலவரங்கள், பாகுபாடு, காழ்ப்புணர்ச்சி மற்றும் தனிநபர்கள் தங்களுடைய தனிப்பட்ட மத நம்பிக்கை மற்றும் மதமாற்றத்தை தடுத்தல் போன்றவை குறித்து அறிக்கைகள் உள்ளதாகவும் வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், அரசு தரப்பிலிருந்து இவற்றைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது அறிக்கை.

இந்தியாவில் மத சுதந்திரத்தை மேம்படுத்த அமெரிக்க அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவின் மத சுதந்திரத்துக்கான சர்வதேச ஆணையத்தைச் (USCIRF) சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்து நேரடி ஆய்வு செய்ய அனுமதி தர வேண்டும் என்றும் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

2001, 2009, 2016 ஆகிய ஆண்டுகளில் USCIRF அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்த நிலையில் மைய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.

சிறுபான்மையினரை குறிவைத்துத் தாக்கும் வெறுப்பு குற்றங்களை குறைக்க பல ஆண்டுகளுக்கு பலன் தரும் நீண்ட வழிமுறையை உருவாக்குங்கள் எனவும் அறிக்கை கேட்டிருக்கிறது. மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடும் மதத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஊடக பிரபலங்கள் போன்றவர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.

மாநில அளவில் மனித உரிமைகள் ஆணையத்தையும், மனித உரிமைகள் நீதிமன்றத்தையும் அமைக்க வழி செய்யும் மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2018-ஐ இந்தியா அமலாக்குவதை அமெரிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். அதுபோல, சர்வதேச மிஷனரிகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களை பழிவாங்கும் விதத்தில் ஃபெரா சட்டத்தை பயன்படுத்தக்கூடாது எனவும், அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுபான்மையினரை ஒடுக்கி இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்துகொண்டு பெரும்பான்மை மதத்தின் பெயரால் வன்முறைகளைச் செய்யும்போது, சர்வதேச அமைப்புகள் எத்தனை அறிக்கைகள் விட்டாலும் அது கழிப்பறைக் காகிதங்களாக மட்டுமே பயன்படும்.


அனிதா
செய்தி ஆதாரம்: தி வயர்.