பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 16
பாசிஸ்டுக் கட்சி அதிகார பீடமேறுவதற்கு முன்னர் இந்த இயல்பைத்தான் பெற்றிருந்தது: குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவாவின் ஆரம்பகால அடையாள முத்திரையை இன்னமும் கொண்டிருந்தது. புரட்சிகர போக்குகளுடைய பிரச்சினைகளை இன்னமும் எழுப்பிக் கொண்டிருந்தது. பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ வேலைத் திட்டத்தை இன்னமும் முற்றிலும் கைவிடாது இருந்தது. பாசிஸ்டுக் கட்சியானது பூர்ஷுவாக்களின் தாக்குதல் படையாக அப்போதுதான் உருவாக ஆரம்பித்திருந்தது.
பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் இரண்டு குறிக்கோள்களை வரித்துக் கொண்டது. முதல் குறிக்கோளை உடனடியாக அல்லாமல் படிப்படியாகத்தான் செயல்படுத்திற்று. இதர எல்லா இத்தாலியப் பூர்ஷுவாக் கட்சிகளையும், பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இந்த முதல் குறிக்கோள். அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே இந்தக் குறிக்கோளை அது மேற்கொள்ளவில்லை; பாசிச சர்வாதிகாரம் வளர்ச்சியடைந்து வந்தபோதுதான், அப்போது எழுந்த அரசியல், பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு முயற்சி செய்துவந்த போதுதான் இந்தக் குறிக்கோள் உருவெடுத்தது.
இத்தாலிய பூர்ஷுவாக்களின் இதர கட்சிகளுடன் நேசஉறவு ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாசிஸ்டுக் கட்சி ஈடுபட ஆரம்பித்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 1921-ல் பூர்ஷுவாக்களது இதர பல்வேறு அரசியல் கட்சிகளின் நண்பனாக வாக்காளர்களின் முன்னால் தன்னைக் காட்டிக் கொண்டது. அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட, அதிலும் 1924-ல் பாசிஸ்டுக் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்ற தேர்தல்களில் பாசிஸ்டுக் கட்சி தான் மட்டும் தன்னந் தனியாகப் போட்டியிடவில்லை; பாசிஸ்டு சக்திகளுடன் மட்டுமின்றி, பழைய மிதவாதிகள் மற்றும் லிபரல்கள் முதல் கியோலிட்டின்கள் வரை பல்வேறு பழைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் சேர்ந்தே அது போட்டியிட்டது.
நான் கூறுவது தவறாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் கியோலிட்டியே கூட முசோலினியின் வேட்பாளர்களில் ஒருவராக இருந்தார். பாசிஸ்டுக் கட்சி மேற்கொண்ட நிலையை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 1921 இல் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்டபோதிலும் கூட முப்பது இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 1924 ஆம் ஆண்டிலோ மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அது வென்றது. மொத்த வாக்குகளில் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று புதிய தேர்தல் சட்டத்தின் மூலமும், இத்தாலிய பூர்ஷுவாக்களின் பழைய லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதன் மூலமும் இது சாதிக்கப்பட்டது. இத்தாலிய பூர்ஷுவாக்களின் இந்த அரசியல் அமைப்புகளுடனான உறவு சம்பந்தமாக பழைய கியோலிட்டியன் முறை இந்தக் காலகட்டத்தில் கைக்கொள்ளப்பட்டது.
படிக்க:
♦ காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
எனினும் இதர அரசியல் கட்சிகளை ஒழித்துக்கட்டும் பிரச்சினை 1923, 24, 25-ம் ஆண்டுகளில் திடீரென எழுந்தது. பாசிசத்தின் ஆரம்பகால வெகுஜன அடித்தளத்தை ஒத்த வெகுஜன அடித்தளங்களைக் கொண்ட கட்சிகள் மீது பாசிஸ்டுக் கட்சி முதலில் தாக்குதல் தொடுத்தது. சீர்திருத்தக் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் பாப்புலர் கட்சி மீதும் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் சீர்திருத்தக் கட்சி மீதும் அடக்குமுறைக் கணைகளை அது ஏவிற்று. இது ஏன்? அந்தக் காலகட்டத்தில் நம்மை விட பாப்புலர் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளுக்கு எதிராகத்தான் மிக மூர்க்கமாகப் போராட்டம் நடைபெற்று வந்தது.
ஏனென்றால் இந்தக் கட்சிகளின் வெகுஜன அடித்தளங்கள் பாசிசத்தின் தொடக்கக்கால வெகுஜன அடித்தளங்களை ஒத்திருந்தன; இக்கட்சிகள் குட்டி பூர்ஷுவா மற்றும் விவசாயப் பகுதியினரிடையே பரவியிருந்தன. ஒரு வெகுஜனக் கட்சியாவதற்கு பாசிசம் தனது அணிகளுக்குள் சேர்த்துக் கொள்ள விரும்பிய அதே வெகுஜனப் பகுதியினரிடையே இக்கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. எனவே, இந்த வெகுஜனப் பகுதியினரைத் தம்வசம் நீடித்து வைப்பதற்கு அல்லது அவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பதற்குக் கடும் போட்டி ஏற்பட்டது. இது மிக உக்கிரமான அரசியல் போராட்டமாக உருவெடுத்தது. இதர கட்சிகளை அழித்தொழித்துக் குழி தோண்டிப் புதைக்கும் திட்டம் உறுதியாக விரிவுபடுத்தப்பட்டது. முடிவில் பழைய கட்சிகளை எல்லாம் தடை செய்யும் சட்டங்கள் 1925-26 இல் இயற்றப்பட்டன. இவை யாவற்றுக்கும் உச்சகட்டமாக, யுத்தத்திற்கு முன்னர் இத்தாலிய பூர்ஷுவாக்களின் ஒரே அரசியல் அமைப்பாக இருந்த கூட்டுரிமைக் கழகத்தின் மீதும் (ஃப்ரிமசோன்றி) தாக்குதல் தொடுப்பதற்கான அபாய அறிகுறிகளாக இந்தச் சட்டங்கள் காட்சியளிக்கின்றன.
கூட்டுரிமைக் கழகத்தின் மீது சற்றுத் தாமதமாகத்தான் பாசிசம் தனது விஷப் பார்வையைத் திருப்பிற்று. இது 1925 இல் நடைபெற்றது. ஆனால் புயல் வேகத்தில் காரியங்கள் நடைபெற்று இறுதி முடிவு எய்தப் பெற்றது. கூட்டுரிமைக் கழகம் இருந்து வருவதைப் பாசிசத்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தாலிய பூர்ஷுவாக்களின் ஒரே கட்சியாக இருக்க பாசிஸ்டுக் கட்சி விரும்பியதால் கூட்டுரிமைக் கழகம் நீடிப்பதை அது அனுமதிக்க முடியாது. பூர்ஷுவாக்களின் ஒரே கட்சியாக பாசிஸ்டுக் கட்சி இருக்க வேண்டும் என்ற இந்தப் பிரச்சினை முக்கியமாக 1925, 1926-ம் ஆண்டுகளில் எழுந்தது. அந்தக் கணம் முதல் கூட்டுரிமைக் கழகத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதற்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது. இதேபோன்று இதர எல்லா அரசியல் கட்சிகளும் அஸ்தமிக்க வேண்டியதேற்பட்டது.
பாசிசத்தின் அரசியல் திட்டம் இச்சமயம் விரிவடைந்தது. இவ்விதம் அதன் பரிணாம வளர்ச்சியின் இரண்டாவது கட்டத்துக்கு நாம் செல்லுகிறோம். பூர்ஷுவாக்களின் மிகப் பிற்போக்கான, அப்பட்டமான சர்வாதிகாரத்தை எதிர்த்த கட்சிகளுக்குச் சமாதி கட்டுவதோடு பாசிசம் திருப்தியடையவில்லை. இந்தக் கட்சிகளின் அடிமட்ட ஊழியர்களைத் தனது அணிகளில் ஈர்த்து இணைத்துக் கொள்வதிலும், இதன் மூலம் ஸ்தாபனக் கண்ணோட்டத்தில் ஆளும் வர்க்கங்களிடையே ஒற்றுமையை ஈட்டுவதிலும் பாசிஸ்டுக் கட்சி மிகவும் முனைப்பாக இருந்தது.
(தொடரும்)
பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !