பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 18

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.

பூர்ஷுவாக்களில் மிகவும் பிற்போக்கான பகுதியினரின் பகிரங்கமான சர்வாதிகாரத்தை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த இத்தாலிய குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவா அணிகளுக்குள் ஏற்பட்ட மோதல்கள், முரண்பாடுகளிலிருந்துதான் பிரதானமாக இந்த நெருக்கடிகள் தலைதூக்கின.

இத்தாலிய பாசிசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை இதர இயக்கங்களுக்கு உதாரணமாக ஜெர்மன் பாசிசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. அங்கெல்லாம் மத்தியதர வர்க்கத்தினர், வேலையில்லாதோர் போன்றோரின் அதிருப்தி நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதில் மிகப் பெரும் பங்காற்றி இருக்கிறது. இத்தாலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இத்தகைய தன்மை கொண்டவை அல்ல. அச்சமயம் உழைக்கும் வெகுஜனப் பகுதியினர் பாசிஸ்டுக் கட்சியில் இடம் பெற்றிருக்கவில்லை.

இத்தாலியில் பாசிஸ்டுக் கட்சியில் கலகக் கொடி தூக்கியவர்கள் ஸ்தல பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளின் குட்டி பூர்ஷுவா தலைவர்களும், பாசிஸ்டு சர்வாதிகாரம் அளவுக்கு மீறி தந்த நிர்ப்பந்தத்துக்கு ஆளான கிராமப்புறக் குட்டி பூர்ஷுவா வெகுஜனப் பகுதியினரும்தான். இதனால் அதிருப்தி பெருகி, ரோம் படையெடுப்புக்குப் பிறகு பாசிசத்தின் உள்ளூர் அமைப்புகளில் பிளவு வெடித்தது.

நம்முடைய முன்னாள் தோழர் பாஸ் குயினி 8 1925-27-ம் வருடங்களில் தோன்றிய நெருக்கடிகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் இது சம்பந்தமான விவரங்களைக் காணலாம்.

ரோம் பேரணி.

உதாரணமாக ஃபோர்னியை எடுத்துக் கொள்வோம். இவர் யுத்தப் பிற்காலத்தைச் சேர்ந்த கோபாவேசமிக்க ஒரு குட்டி பூர்ஷுவா: கிராமப்புற முதலாளிகளிடமிருந்து கைக்கூலி பெற்றவர். அப்படியிருந்தும் இத்தாலிய அரசியல் வாழ்க்கையில் தமக்கு ஒரு மிகப் பெரும் பங்கு இருப்பதாக மனக்கோட்டைக் கட்டிக் கொண்டவர். சாலா, மிசூரி போன்றோரும் இதே வகையைச் சேர்ந்தவர்களே 9, ஒவ்வொரு பாசிஸ்டு அமைப்பிலும் ஒரு கலகத் தலைவன் இருந்தான். அவன் கிளர்ச்சி செய்யவும் குழப்பம் விளைவிக்கவும் சதி செய்து வந்தான். நெருக்கடிகளைத் தூண்டிவிட்டு வந்தான்.

எனினும் எல்லோரும் இவ்வாறு செய்தார்கள் என்று கூற முடியாது. மிகப்பலர் அரசு எந்திரத்திலும் பூர்ஷுவாக்களின் பொருளாதார எந்திரத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தீர்மானமான வழிகாட்டும் நெறிகளைக் கொண்டிராத காப்பீட்டுக் கழகங்கள் போன்ற பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆவதற்கு பாசிஸ்டுகள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற பல ஊழல்கள் நடைபெற்றன. பெரிய நிறுவனங்களில் பாசிஸ்டுகளின் பெருமளவிலான ஊடுருவலே இதற்குக் காரணம், அங்கு அவர்கள் மோசடிகள் புரிந்தும், தில்லு முல்லுகள் செய்தும், களவாடியும் பெரிய முதலாளிகள் ஆவதற்கும், பொருளாதாரத் துறையில் முக்கிய பங்கேற்பதற்கும் பெரும் பிரயத்தனம் செய்து வந்தார்கள். இது மிக முக்கியமானது. ஏனென்றால், பாசிஸ்டுக் கட்சி இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிவந்து கொண்டிருப்பதை இது பிரதிபலிக்கிறது.

தனிப்பெரும் கட்சியாக இருந்தும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று விரும்பினால், பாசிசம் இந்தக் கலகப் போக்குக்கு முடிவு கட்டுவது இன்றியமையாததாயிற்று. எனவே, முசோலினி இந்தப் பணியில் முனைந்து ஈடுபட்டார்; பாசிஸ்டுக் கட்சி அணிகளை மாற்றத் தீர்மானித்தார். இந்தச் சமயத்தில்தான் முசோலினி இந்தக் கண்டோட்டத்தை உருவாக்கிக் கொண்டார்; எந்தக் கட்சி அணிகளின் உதவியோடு அதிகாரம் கைப்பற்றப்பட்டதோ அதே அணிகளைக் கொண்டு கட்சி அதிகாரத்தை பாசிஸ்டுக் கட்சி தக்கவைத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.

மிசூரி (Alfredo Misuri)

பழைய அணிகளுக்கு எதிரான போராட்டம் எளிதானதாகவோ, ஒரே மாதிரியானதாகவோ இல்லை. இந்த அணிகள் பல்வேறு குழுக்களுடனும் அடிமட்ட ஊழியர்களுடனும் பின்னிப் பிணைந்திருந்தன. பாசிஸ்டுக் கட்சியின் இயைபைப் பரிசீலித்துப் பார்த்தோமானால், 1927 இல்தான் அணிகளின் உண்மையான மாற்றம் ஏற்பட்டது எனலாம். இப்போது 1919 ஆம் வருட அணிகள் இல்லை. மாறாக கிராமப்புற முதலாளிகளும் தொழிலதிபர்களும், முதலாளிகளின் புதல்வர்களான மாணவர்களும், பூர்ஷுவாக்களின் பொருளாதாரக் கட்டமைப்பில் தலைவர்களாக உயர்ந்த பாசிஸ்டுகளும்தான் இருந்தனர். அணிகளை மாற்றும் இந்தப் பணி 1927 ஆம் ஆண்டில் பூர்த்தியடைந்தது. எனினும் பிரச்சினை மிகவும் கடுமையானதாக இருந்தது. இந்தப் பிரச்சினை குறித்து பாசிஸ்டுக் கட்சியில் உக்கிரமான போராட்டம் நடைபெற்றது. சித்தாந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, கட்சியின் பாத்திரம் குறித்த பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஸ்தாபனக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, கட்சியை யார் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ஏனென்றால் இது சம்பந்தமான போராட்டத்தின் விளைவாக இந்தப் பிரச்சினையில் முற்றிலும் வேறுபட்டதொரு கண்ணோட்டம் உருவாயிற்று.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

8. பாஸ்குனி ஸ்கான்டினோ டிவின்ஸ்குல்லியின் நாம் டி குயூர்ரேயாக இருந்தார், இப்பொழுது இக்னாஸியோ சிலோனி என்று வழங்கப்படுகிறார். இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் கமிட்டியிலிருந்து 1930 இல் சில்லோனி நீக்கப்பட்டார். 1931 ஜூலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். நிபுணத்துவம் பெற்ற ஒருவர் என இவரை பற்றி டோக்ளியாட்டி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சி தரும் தன்மை வாய்ந்ததாக இருக்கலாம்.

சீசாரே போர்னி (Cesare Forni)

9. பாசிஸ்டுக் கட்சியின் பல்வேறு முரண் கூறுகளையுடைய அடித்தளத்திலுள்ள முரண்பாடுகள் ரோம் படையெடுப்பையடுத்து உடனடியாக எதிரும் புதிருமாகச் செயல்படும் போக்குகளை ஏற்படுத்தின. பழைய போக்குடைய தேசியவாதிகள், மன்னராட்சி ஆதரவாளர்கள் ஒரு புறம், கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் அரசு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விரும்பிய குட்டி பூர்ஷுவாக்கள் மறுபுறம் – இவர்களுக்கு இடையே ஜால வித்தைகள் செய்து, இவற்றை ஈடு செய்ய முசோலினி முயன்றார். “சகஜநிலைமை வாதிகளுக்கும்” “வளைந்து கொடுக்காதவர்களுக்கும்” இடையேயான நெருக்கடி 1923 மே மாதம் உச்சகட்டத்தை அடைந்தது. தத்துவார்த்த வேலைத்திட்டம் பற்றி பதப்பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும் இந்தத் தகராறுக்கு பின்னால் பல்வேறு பிரிவின் தலைவர்களிடையே இருந்த சுயநல ஆசையும் அவர்களிடையே இருந்த உட்பகையும் வெளிவந்தன. சகஜ நிலை திரும்பவேண்டும் என்பதை அளவுக்கு அதிகமாக அனுமதித்ததாக கருதிய முசோலினி, தற்காலிகமாக வளைந்து கொடுக்காதவர்கள் பக்கம் சாய்ந்தார்.

படிக்க:
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

ஸ்குவாட்ரிஸ்டியில் உயர் மட்டத்தில் இருந்த சீசாரே போர்னியும் ரெய்மோன்டோ சாலாவும் வடமேற்கு இத்தாலியில் உள்ள பெரிய நிலவுடமையாளர்களின் கையாட்களாக (அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு) இருந்தனர். பாசிஸ்டு ஆதரவாளர்களான அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதை எதிர்த்தார்கள். அல்பிரிடோ மிசூரி பெருகியாவில் பி.என்.எப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு பாசிஸ்டு தேசியவாதிகள் இணைப்பு ஏற்பட்டவுடன் அதில் மீண்டும் சேர்ந்தார். பி.என்.எப் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதையும் சாதாரண நிர்வாகப் பணிகளில் தலையிடுவதையும் கண்டித்து 1923 மே 29 இல் மிசூரி ஒரு உரை நிகழ்த்தினார். அதற்கு சில மணி நேரங்கள் கழித்து முசோலினியால் அனுப்பப்பட்ட ரெளடிகளால் அவர் தாக்கப்பட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க