தொழிலாளர்கள் சும்மா இருந்தாலும் முதலாளித்துவம் சும்மா விடாது !

ன்பார்ந்த தொழிலாளர்களே!

“வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” போல பல ஆயிரங் கோடி இலாபகரமாக ஆலை இயங்கும் நேரத்தில் 6-வது வேலைநாள் பறிப்பும் சம்பளவெட்டும் நடக்கிறது. இதற்குப் பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும் அசோக் லேலண்ட் நிறுவனம் 1000 கோடிக்கு மேல் இலாபம் ஈட்டும் சூழலில்தான் “மாற்று சிந்தனையாளர், அறம் மிகுந்த அரசியல் – பொருளியல் பார்வை கொண்டவர்” என்று சங்கத் தலைவராக  திடீரென முன்னிறுத்தப்பட்ட தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.வெங்கட்ராமன் அவர்களால் நிர்வாகத்துடன் 11 மாதங்கள் பேசி கையெழுத்திடப்பட்ட 28-07-2017 ஒப்பந்தத்தால்தான் சட்டவிரோத வேலை நாள் பறிப்பும் சம்பள வெட்டும் நடக்கிறது. நிர்வாகத்திற்கு இந்த ஒப்பந்தம் கேடயமாகும். நிர்வாகத்தின் 02.07.2019 நாளிட்ட வேலைநாள் பறிப்பு நோட்டீசே இதற்கு ஓர் சாட்சியாகும்.

இந்த ஒப்பந்தத்தால்  யூனிட்-2க்கு மட்டும் ஒரு நாள் சம்பளவெட்டு மூலம் 50 இலட்சம் ரூபாய்க்கு மேல் ஊதிய செலவு நிர்வாகத்திற்கு இலாபமாகும் என்றாலும் மற்றொரு பக்கம் 6 நாள் உற்பத்தியை 5 நாட்களில் செய்யவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அதற்கு ஏற்றாற்போல் யுனிட்-2 ஆலை பெயிண்ட் சாப், அசெம்ப்ளி பிரிவுகள் மிகை உற்பத்தி உயர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் மூலம் பலன் ( சம்பள வெட்டும்) பெற்றவர்கள் 1670 நிரந்தரத் தொழிலாளர்கள் என்றால் ஒப்பந்தத்தின் பாதகம், பணிச்சுமைகள்,  சம்பளவெட்டு சந்திப்பவர்கள் கேஷிவல் (CL) காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பணி நிரந்தரமல்லாத தொழிலாளர்கள் 6000-த்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சமீபத்தில் பணிக்கு சேர்ந்த கேஷிவல்( CL) 1,100 பேர் ஆட்குறைப்பும் செய்யப்பட்டுள்ளார்கள்.

கி. வெங்கட்ராமன்.

ஊதிய  உயர்வுக்காக 6-வது நாள் சட்ட உரிமையை அடகு வைக்கக்கூடாது என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரசுரம், அவசரக்கடிதம், சுவரொட்டி  மூலம் கருத்துக்கள் வெளியிட்டதை மீறி கி.வெ. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுதான் விவாதிக்க வேண்டிய விசயம். திரு.கி.வெ அவர்கள் மாற்று சிந்தனையாளர் அல்ல. மாறாக, முதலாளித்துவ சிந்தனையாளர் என்பதைத் தாண்டி நேர்மையில்லாதவர் என ஏன் சொல்ல வேண்யுள்ளது என்றால் “6thday”-வின் பாதகமான மிகைஉற்பத்தி, சம்பளவெட்டு,  ஆட்குறைப்பு ஆகியவற்றை மறைத்தார் என்பதால்தான், இவருக்கு அறப்பார்வை கொண்டவர், நெருப்பு போன்ற நேர்மையாளர், சிறந்த ஆளுமை கொண்டவர் என்று  ‘ஒளிவட்டம்’ போடப்பட்டது. ஆனால், ஒரே ஒப்பந்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பிம்பங்கள் இரண்டே ஆண்டுகளில் முதலாளித்துவத்தாலே தகர்ந்து போனது.

திரு.கி.வெ. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, “ ‘win – win’ – என் பாலிசி, மற்ற தலைவர்கள் சரியில்லை, இதயத்தோடு பேசுகிறேன்” என்று தேன் தடவி பேசினாலும் முதலாளித்துவ சுரண்டல், வஞ்சகத்தை எத்தனை நாளைக்கு மறைத்திட முடியும். சங்கத் தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் வெற்றி பெற்றபின் நிர்வாகம் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு முதலாளித்துவ சூழ்ச்சிகளை மறைத்து மற்றவர்களை மட்டும் குற்றவாளியாக்குவது எப்படி நேர்மையான  செயலாகும்.

படிக்க:
அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !
தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !

முதலாளித்துவ பாதையில் சென்று மற்றத் தலைவர்கள் உரிமைகளை அடகு வைத்தும் முதலாளித்துவ சுரண்டல் கொள்கைகளை பேசாமலும் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். அவர்களின் இடத்தை திரு.கி.வெ நிரப்பிக்கொண்டு தொடர்ந்து செல்ல முடியாது என்பதை 6-வது வேலைநாள் பறிப்பு மூலம் முதலாளித்துவம் சும்மா விடாது என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்திவிட்டது.

தகவல்:
பு.ஜ.தொ.மு – அணிகள்,
அசோ யுனிட் – 1 & 2  ஒசூர்.
தொடர்புக்கு – 97880 11784.