அமனஷ்வீலி
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 06

சிந்திக்கும் மனிதனைப் பார்ப்பதே மகிழ்ச்சி

“குழந்தைகளே, எனக்கு ஆறு முக்கோணங்கள் தெரிகின்றன.”

“அவை முக்கோணங்கள் அல்ல சதுரங்கள்” என்று ஒரு சில குரல்கள் ஒலிக்கின்றன.

“ஆமாம், ஆமாம், சதுரங்கள். என்னைத் திருத்தியதற்கு நன்றி. கவனமாகப் பாருங்கள், அங்கே எவ்வளவு சதுரங்கள் உள்ளன? ஆறா? ஏழா?”

“ஆறு!” என்று சிலர் அவசரமாகக் கூறுகின்றனர்.

“ஏழு!” என்று இன்னும் சிலர் கத்துகிறார்கள்.

ஏன் ஆறு வயதுக் குழந்தைகளின் நாக்கு இப்படி சிந்தனையை முந்துகிறது? மற்றவர்கள் சிந்திக்க இடையூறாக இவர்கள் தம் பதிலை உரக்கச் சொல்வதில் மட்டும் விஷயம் இல்லை. சாதாரணமாக நடைமுறையில் ஆசிரியர்கள் பாடவேளைகளின் போது வரும் இப்படிப்பட்ட கூச்சல்களை எளிய வழிகளில் கட்டுப்படுத்தி விடுவார்கள்: கட்டுப்பாட்டை மீறியதற்காக குழந்தைகளைக் கண்டிப்பார்கள், கை உயர்த்தவும் கேட்கும் வரை காத்திருக்கவும் சொல்லித் தருவார்கள்.

ஆனால் இதனால் என்ன மாறுகிறது? பதிலின் உட்பொருள் அடையப்படும் பொழுது இது நல்ல வழி. குழந்தை தன் பதிலை யோசித்து, சரிபார்த்து, வார்த்தைகளைக் கண்டுபிடித்து, பின் கையை உயர்த்திக் கூப்பிடும் வரை அமைதியாகக் காத்திருப்பான். ஆனால் பிரச்சினை என்னவெனில் குழந்தையால் அமைதியாகக் காத்திருக்க இயலாது, விஷயத்தை இன்னமும் முழுமையாக அறிந்துணரவில்லை, ஆனால் அதற்குள்ளாகவே மற்றவர்களை முந்திக்கொண்டு பதில் சொல்ல அவசரப்படுகிறான்.

பல நேரங்களில் நான் கேள்வி கேட்பதற்காக வாயைத் திறந்ததுமே குழந்தைகளின் கரங்கள் உயரும். “நான் என்ன கேட்கப் போகிறேன் என்றே உங்களுக்குத் தெரியாதே” என்று நான் ஆச்சரியப்படுவேன். அனேகமாக அவர்களுக்குப் பதில் சொல்வதுதான் முக்கியமே தவிர, என்ன கேள்வி, பதில் சரியா என்பதெல்லாம் அவ்வளவு முக்கியமல்ல.

அவர்கள் ஆசிரியரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல எப்போதும் “தயார்”. அவர்களுடைய மூளை நாக்கிற்கு “இடம் மாறியது” போன்றும், எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பதில்கள் ஏற்கெனவே “தயார்” போன்றும் அவை நாக்கின் நுனியில் உள்ளன போன்றும் தோன்றும். இதோ, அவர்கள், பதில்கள் தவறு என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “ஆறு”, “ஏழு” என்று கத்துகின்றனர். சிந்திக்கவில்லை, ஆனால் பதில் சொல்கின்றனர், சொல்ல அவசரப்படுகின்றனர்.

ஒருவேளை தம் ஆசிரியருடன் கலந்து பழக முயலுகின்றார்களோ? மற்றவர்களிடமிருந்து தனித்துத் தம்மை வெளிப்படுத்த ஒருவேளை விரும்புகின்றார்களோ? அல்லது சிந்திக்க வேண்டுமென அவர்களுக்குத் தெரியாதோ, அல்லது எப்படி சிந்திப்பதெனத் தெரியாதோ? இவர்களுடைய நடவடிக்கைகளின் திடீர் எழுச்சிகள் ஒரு புறமிருக்க இவர்களுடைய யோசனையற்ற கூச்சல்களுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

எனவே, நான் இக்கூச்சல்களை வெறுமனே கட்டுப்படுத்த வேண்டியதில்லை. குழந்தைகள் சரியான பதிலைச் சொல்லும் போது, உண்மையைக் கண்டறிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது இவை அவ்வளவு பயங்கரமானவையல்ல.

ஒருவன் உண்மையைக் கண்டறிந்ததும் இதை மற்றவர்களுக்குச் சொல்ல அவசரப்படுவது இயல்பே. ஏதாவது ஒரு விஷயத்தில் முதன்முதலாகக் கண்டுணரவும் இதற்காக மகிழ்ச்சியடையவும் உரிமையுண்டு. சரி, குழந்தைகள் திடீரென எதையாவது புரிந்து கொண்டதும், உண்மை “பிடிக்கப்பட்டதும்” அல்லது கண்டுபிடிக்கப்பட இருக்கையில் கையை உயர்த்தியபடி எனது பொறுமையான அழைப்பிற்காக அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கும்படி எப்படி செய்வது? “குழந்தைகளே, கூச்சல் போடாதீர்கள், என்னைக் கூப்பிடாதீர்கள், சத்தம் போடாதீர்கள், அமைதியாக உட்காருங்கள்” என்று அவர்களிடம் எப்படிச் சொல்வது? எல்லோரும் பதில் சொல்ல விரும்பும் போது முதலாவதாக நான் (உதாரணமாக) தாத்தோவிற்கு பதில் சொல்ல வாய்ப்பளித்தால், அதன் மூலம் உண்மையைக் கண்டுபிடித்ததில் தாத்தோவிற்கு முதல் இடத்தை செயற்கையாக அளிக்கவில்லையா? ஒவ்வொருவரும் “கொலம்பசாக” முடியும்.

அப்படியிருக்கையில் எனது நடவடிக்கையின் மூலம் நான் தேர்ந்தெடுக்கும் ஒருவனை “கொலம்பசாக்குகிறேன்”. இது நியாயமா? இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லோரை யுமே ‘கொலம்பசாக்கவே” நான் விரும்புகிறேன். நான் வகுப்பறையின் நடுவில் நின்று கொண்டு, எல்லோரும் ஒரே குரலில் பதில் சொல்லும் வாய்ப்பைத் தருகிறேன். அப் போது எல்லோருக்கும் திருப்தி.

படிக்க:
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

எனவே, கூச்சல்களை அடக்க வேண்டியதில்லை, யோசிக்கப்படாத பதில்களுக்குத்தான் முடிவு கட்ட வேண்டும். இதை நளினமாகச் செய்ய வேண்டும். “ யோசியுங்கள், யோசியுங்கள்” என்று நான் குழந்தைகளுக்குச் சொல்வது உதவி புரியுமா? எப்படி யோசிப்பது என்று அவர்களுக்கு நன்கு சொல்லித் தராவிடில், உண்மையை அறியும் போக்கு தனியாக முன் நிற்பதைக் காட்டிலும் முக்கியமானதாகும் படி அவர்களுடன் நான் கலந்து பழகாவிடில் இது சாத்தியமில்லை .

இதை எப்படிச் செய்வது?

எல்லோர் முன்னும் அடிக்கடி வாய் விட்டு யோசித்து நடந்து கொள்வேன்; இதன் மூலம் எப்படி யோசிப்பது, செயல்படுவது என்று நடைமுறையில் காட்டுவேன்.

அவர்களிடம் விசேஷக் கேள்விகளைக் கேட்பேன். நன்கு சிந்திக்காமல் இவற்றிற்கு பதில் சொல்ல முடியாது. தொடர்ச்சியான மூளை நடவடிக்கைகளைத் திட்டமிட அவர்களுக்கு உதவுவேன்.

அவர்கள் சுதந்திரமாக விவாதிக்க, நிரூபிக்க, மறுக்க, சந்தேகிக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்துவேன்.

யோசிக்கவும் சிந்தனையில் பதில்களை முடிவு செய்யவும் அவர்களை பழக்கப்படுத்துவேன். அப்போது, இவற்றிற்குப் பின் தான் பதில் சொல்லும் பழக்கம் வரும்.

நன்கு சிந்திக்க, யோசிக்க, “அவசரப்பட்டு பேசாமலிருக்க” ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள நாட்டத்தை பலப்படுத்துவேன்.

இப்போது “ஆறு”, “ஏழு” என்ற கூச்சல்களின் மீது நான் கவனம் செலுத்தவில்லை. எனது கருத்தை சரிபார்ப்பதில் இறங்குகிறேன். எனக்குள் முணுமுணுத்தபடியே படத்தில் உள்ள சதுரங்களை எண்ணுகிறேன். நான் செய்வதையே குழந்தைகளும் திரும்பச் செய்கின்றனர்.  நான் இன்னமும் சதுரங்களை எண்ணிக் கொண்டிருக்க, பலர் ஏற்கெனவே சரியாக எண்ணிவிட்டனர்:

“ஆறல்ல, ஐந்து சதுரங்கள் தான்.”

“ நான்கு சிறிய சதுரங்களும் ஒரு பெரிய சதுரமும்.”

“நீங்கள் ஏழு சதுரங்கள் என்று சொன்னீர்கள், அங்கு ஐந்து தான் உள்ளன.”

சில நிமிடங்களுக்கு முன் லேலா நன்கு சிந்திக்காமல் “ஏழு சதுரங்கள்” என்று கத்தியதைக் கேட்டேன்.

“லேலா, அங்கு ஐந்து சதுரங்கள் தான் உள்ளன என்று உன்னால் நிரூபிக்க இயலுமா? ஒரு வேளை, மூக்குக் கண்ணாடி இல்லாததால் எனக்குச் சரியாகத் தெரியவில்லையோ, அங்கு ஏழு சதுரங்கள் உள்ளதாக எனக்குப்படுகிறதோ?”

லேலா, தான் “ஏழு சதுரங்கள்” என்று கத்தியதையே மறந்து விட்டாள். இப்போது அவள் சரியாக எண்ணினாள். ஓடி வந்து எல்லாவற்றையும் காட்டுகிறாள்.

“ஆம், நான் சரியாகப் பார்க்கவில்லை. நன்றி. சரி, அங்கு ஐந்து சதுரங்கள் உள்ளன?…”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க