பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 19

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சியை ஓர் இயக்கம் என்ற கண்ணோட்டத்துடன் முசோலினி ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தார். கட்சிதான் தலையாயது, மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவைதான் என்பதுதான் இதற்குப் பொருள். இதுதான் முசோலினியின் ஆரம்பகாலக் கண்ணோட்டம். ஆனால் அகஸ்டியோவில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கண்ணோட்டம் கைவிடப்பட்டது.

இதன் பின்னர், இரண்டு நிலைப்பாடுகளை நீங்கள் தெளிவாகக் காணலாம்; கட்சிதான் யாவற்றுக்கும் மேலான சக்தி என்பது ஃபரினாஸ்ஸியும் ஏனைய குட்டி பூர்ஷுவா அணிகளும் மேற்கொண்ட நிலையாகும். கட்சியானது அரசுக்கு கீழ்ப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது தேசியக் கட்சியைச் சேர்ந்த பழைய கன்சர்வேடிவ் சக்திகளும், ஃபெதர்ஸோனி, ரோக்கோ போன்றோரும் எடுத்த இரண்டாவது நிலைப்பாடாகும். 1923 முதல் 1932 வரை இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையே ஊசலாட்டங்கள் இருந்து வந்தன. இதன் இறுதி முடிவு என்ன? தேசிய பாசிஸ்டுக் கட்சியின் சட்டதிட்டங்களில் இதனை நீங்கள் காணலாம். முழுவிவரங்களையும் படிக்காமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை மட்டும் படித்தால் போதுமானது.

பிஎன்எப் அரசுக்கு சேவை செய்யும் ஒரு மக்கள் படை என்று முதலாவது விதி கூறுகிறது. இதன் பொருள் என்ன? பிஎன்எப் இனியும் ஒரு கட்சி அல்ல, அது ஒரு மக்கள் படை. அதுவும் அரசுக்கு சேவை செய்யும் படை என்பதே இதற்குப் பொருள். எனவே இதிலிருந்து அரசுதான் பிரதானம் என்பது தெள்ளத் தெளிவு.

கட்சிக்கும் அரசுக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. அரசின் உருவகமாக மாகாண ஆளுநரும், பாசிஸ்டுக் கட்சியின் உருவகமாக மாகாணக் கட்சி செயலாளரும் செயல்பட்டனர். 1923-ல் இந்தப் போராட்டம் முழு அமைப்பையுமே சீர்குலைத்துவிட்டது. அதிகாரவர்க்கத்தினர் மீது ஆதிக்கம் செலுத்த கட்சிச் செயலாளர் விரும்பினார். இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டன. பாசிஸ்டுகளை அதிகாரிகளாக நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை இவ்வகையில் குறிப்பிடலாம்.

இந்தப் போராட்டத்தில் மிகவும் முனைப்பான கட்டம் 1924 – 1925-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அச்சமயம் பாசிசம் தோல்வியின் விளிம்புக்கே வந்து விட்டது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது அதிகாரத்தை இழக்கப் போகும் நிலையில் இருந்தது. இச்சமயம் ஸ்தாபன அமைப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. கட்சியையும் அரசையும் இரண்டற ஒன்றாக்கும் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்படி நேர்ந்தது. பழைய அணிகள் கட்சிக்குத் திரும்பின. 1924-ல் ஃபரினாஸ்ஸி பாசிசத்தைக் காப்பற்றினார். 1924 ஜனவரி 3-ம்10 தேதி சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை உட்பட அந்த ஆண்டில் முசோலினி தொடர்ந்து பல உணர்ச்சிகரமான, நாடி நரம்புகளை முறுக்கேறவைக்கும் உரைகளை நிகழ்த்தினார். எனினும் பழைய சித்தாந்த அடிப்படையிலும், கட்சியின் ஆரம்பகால வடிவங்களுக்குத் திரும்பும் வகையிலும் இத்தாலி முழுவதிலும் ஃபரினாஸ்ஸி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றால் முசோலினியின் உரைகளால் எந்தப் பலனும் கிட்டியிருக்காது.

பாசிஸ்டுக் கட்சி எவ்விதம் தனது செயல்முறைகளை மாற்றிக் கொண்டது என்பதையும், கட்சிக்கும் அரசுக்குமுள்ள உறவுகள் பிரச்சினையும், பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்க உரிமையை ஒழுங்கமைக்கும் பிரச்சினையும் எவ்வாறு சமாளிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம்.

ஏற்கெனவே நாம் பார்த்தது போல் 1925-ம் வருடம் ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது ஃபரினாஸ்ஸியாலும் பழைய கட்சி அணியினராலும் பாசிசம் காப்பாற்றப்பட்டது. இது முக்கியமான தகவலாகும். இதனை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒரு தீவிர அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வெகுஜன இயக்கங்கள் விரிவடையும் ஒவ்வொரு சமயத்திலும் உடனே பாசிசம் இவ்வகையான சூழ்ச்சிகளில் இறங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறுதான் 1932-1933-ல் இளைஞர் பிரச்சினை எழுந்தது. வெகுஜன இயக்கங்கள் வளர்ந்தன. நமது கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது. அப்போது பாசிசம் தனது பழைய கட்சி அணிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

ஆனால், இன்று கட்சி அணிகள் பிரச்சினை, பாசிஸ்டுக் கட்சிக்கு 1924-ம் ஆண்டில் இருந்ததுபோல் இல்லை. முன்னர் போல் இனியும் அபாயகரமானதாக இல்லை. பாசிஸ்டுக் கட்சி பெரிதும் வலுவடைந்துள்ளது. அரசுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளது. பழைய குட்டிபூர்ஷுவா சித்தாந்தம் அடிப்படையில் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. இன்று, பழைய கட்சி அணியினர் செல்லாக் காசுகளாகி விட்டனர். ஒரு பகுதியினர் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டனர். இன்னொரு பகுதியினர் வெஞ்சிறையில் தள்ளப்பட்டுவிட்டனர். குடி பெயர்ந்தோர் இடையிலிருந்து சில சமயங்களில் அவர்கள் ஆத்திரமூட்டுபவர்களாகத் தலைகாட்டுகின்றனர் அல்லது பாசிஸ்டுக் கட்சியால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். எனினும் முன்னர் போல் கட்சியின் கொள்கையை நிர்ணயிக்கும் அளவுக்கு அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இல்லை. கட்சிக்கும் அரசுக்கும் இடையேயான உறவு பற்றிய விவாதம் முன்போல் எவ்வகையிலும் கூர்மையானதாகவோ, காரசாரமானதாகவோ இல்லை.

1932-ல் அங்கீகரிக்கப்பட்டு இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள திட்டம் நாட்டில் நடைமுறையில் தற்போது நிலவும் உறவுகளைப் பிரதிபலிக்கிறது. ஆனால், அதனைச் செயல்படுத்தும்போது பாசிஸ்டுக் கட்சிக்கு பல உள் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. அநேக மோதல்கள் நிகழ்கின்றன. பலர் தீர்த்துக்கட்டப்படுகின்றனர். பலரது பொறுப்புகள் மாற்றப்படுகின்றன.

இந்த மாற்றம் 1927-ல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது எனக் கூறலாம். பூர்ஷுவாக்களின் தீர்மானமான சக்திகள் பாசிஸ்டுக் கட்சி அமைப்பின் பகுதியாக இருந்தன. ஊதியம் பெறும் ஊழியர்களும் அதிகாரிகளும் ஏற்கெனவே பாசிஸ்டுக் கட்சியில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆலைத் தொழிலாளர்களும் பண்ணைத் தொழிலாளர்களும் இன்னமும் ஓரளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இது 1927-ம் ஆண்டில் இருந்த நிலைமை.

இவ்விதம், அரசுடன் பாசிஸ்டுக் கட்சிக்குள்ள உறவு குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயிலிருந்தது. தீர்வு நோக்கி அது முன்னேறிக் கொண்டிருந்தது. பாசிஸ்டுக் கட்சியின் உள் கட்டமைப்பு மாற்றப்பட்டு வந்தது.

நடைமுறையில், பாசிஸ்டுக் கட்சி, ஒரு கட்சி என்ற நிலையைக் கைவிட்டுவிட்டது. இங்கு அதன் தருக்கரீதியான வளர்ச்சியை நீங்கள் காணலாம். அது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குப் படிப்படியாக மாறி உயர் மட்டத்தை அடைந்ததைப் பார்க்கலாம். பாசிஸ்டுக் கட்சி ஒரு கட்சியாக இருப்பதை நிறுத்திக் கொண்டது. அது குறித்த எல்லா விவாதமும் முடிவுக்கு வந்தது.

அரசியல் வாதங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. பாசிஸ்டுக் கட்சி தனது கொள்கையில் ஏதேனும் மாற்றம் செய்யும்போது, வேறு எந்தக் குடிமகனையும் போலவே அதன் உறுப்பினர்கள் இது குறித்த செய்தியைப் பத்திரிகைகளில்தான் படிக்கிறார்கள். கட்சியின் கொள்கையை வகுப்பதில் அவர்கள் எவ்வகையிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. உட்கட்சி ஜனநாயகம் என்பது அரிதினும் அரிதாகிவிட்டது. அதிகாரவர்க்க அடிப்படையில் கட்சி மேலிருந்து ஒழுங்கமைக்கப்படுகிறது.

உச்சியில் இயக்ககம் (Directorate) இருக்கிறது. இது பாசிசத்தின் மாமன்றத்தால் (Grand Council) தேர்ந்தெடுக்கப்படுகிறது. இத்தனைக்கும் இந்த மாமன்றம் என்பது ஒரு கட்சி அமைப்பல்ல; அரசாங்க அமைப்பு. இதில் கட்சி, அரசு, வங்கிகள், தொழில்துறை முதலியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். பாசிசத்தின் இந்த மாமன்றம் பாசிசத்துடன் பிணைந்துள்ள இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தின் தலையாய குழுக்களை ஸ்தாபனரீதியாக உருவகப்படுத்துகிறது எனலாம். இங்கிருந்துதான் இயக்கம் தனது அதிகாரத்தைப் பெறுகிறது. இயக்ககத்திலிருந்து அந்த அதிகாரம் உள்ளூர் இயக்ககங்களுக்கும் அடிமட்டத்திலுள்ள பாசிஸ்டு அமைப்புகளின் தலைவர்களுக்கும் பிரிந்து செல்லுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்பு :

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti).

10. கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க