மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் படுதோல்விக்கும் பா.ஜ.க.-வின் வெற்றிக்குமான காரணங்கள் என்ன? 2014 மக்களவைத் தேர்தலில் 17.02% வாக்குகளையும் 2 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க., இன்று 40.25% வாக்குகளையும் 18 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. 2014-ல் 30% வாக்குகளைப் பெற்று 2 இடங்களை மட்டுமே பெற்ற மார்க்சிஸ்டு கட்சியின் வாக்குவீதம் 6.28% ஆகச் சரிந்து விட்டது.

பா.ஜ.க.வும் திருணமுல் காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு மதவெறியைத் தூண்டியதால் ஏற்பட்ட மதரீதியான முனைவாக்கத்தின் காரணமாக ஜனநாயக உணர்வுக்கான வெளி இல்லாமல் போய்விட்டதாகவும், வாக்காளர்கள் அதற்குப் பலியாகிவிட்டதாகவும், இதுதான் தங்களது தோல்விக்குக் காரணமென்றும் கூறியிருக்கிறார் யெச்சூரி.

தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு பா.ஜ.க. திட்டமிட்டே முஸ்லிம் எதிர்ப்பு இந்துவெறியைத் தூண்டியது என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால், எதிர்த் தரப்பிலிருந்து இந்து எதிர்ப்பு முஸ்லிம் மதவெறியும் தூண்டப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. இது பா.ஜ.க.-வின் பக்கம் சாய்ந்து விட்ட பெரும்பான்மை சமூகத்தை தாஜா செய்து, மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவரும் பொருட்டு வேண்டுமென்றே உண்மையைத் திரிக்கின்ற தந்திரமாகும்.

மேற்கு வங்க பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ் காரக்பூர் சதார் தொகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடத்திய ராம நவமி ஊர்வலம்.

மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சியும் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் திடீரென்று இந்தத் தேர்தலிலோ, திருணமுல் ஆட்சிக்கு வந்ததன் விளைவாகவோ நடந்து விடவில்லை. மாறாக, மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சிதான் மமதாவை ஆட்சியில் அமர்த்தியது. “நாடாளுமன்றத்தை வர்க்கப் போராட்டத்துக்கான கருவியாகப் பயன்படுத்தப் போகிறோம்” என்று தேர்தல் பங்கேற்புக்கு விளக்கம் சொல்லி, பிறகு தேர்தல் பாதை மூலமாகவும், தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்ட வடிவங்கள் மூலமாகவும் புரட்சியை நோக்கிச் செல்லப்போவதாகத் தமது சந்தர்ப்பவாதத்துக்குப் பொழிப்புரை கூறி, இறுதியில் சட்டமன்ற, நாடாளுமன்றப் பதவிகள் இல்லாமல் உயிர்வாழவே முடியாது என முதலாளித்துவக் கட்சிகளின் நிலைக்குத் தாழ்ந்து, ஊழல், கிரிமினல்மயம் உள்ளிட்ட எல்லாத் தீமைகளும் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் குடியேறிவிட்டன.

மூன்று பத்தாண்டுகள் வங்கத்தில் ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்டு கட்சி, அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு மக்களின் மீது அதிகாரம் செலுத்துகின்ற இன்னொரு ஒடுக்குமுறைக் கருவியாகவே மாறிவிட்டது. சிங்குர், நந்திகிராம் பிரச்சினைகளில் புத்ததேவ் அரசு புதிய தாராளவாதக் கொள்கையின் வெறி பிடித்த முகவராகச் செயல்பட்டது மட்டுமின்றி, கட்சி அணிகள் என்று கூறிக்கொண்ட குண்டர் படைகள் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே களத்தில் நின்றன.

இப்போராட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த மமதாவின் கட்சி, அதனினும் கொடியது என்பதை விரைவிலேயே அனைவருக்கும் புரிய வைத்தது. கடந்த 8 ஆண்டுகளில் மார்க்சிஸ்டு கட்சியினர் பலரைக் கொலை செய்ததுடன், அவர்களது கட்சி அலுவலகங்களையும் திருணமுல் கட்சிக் குண்டர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

படிக்க :
♦ பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை

மமதா கட்சியினரின் ரவுடித்தனத்தை எதிர்கொள்ள இயலாத நிலையில்  இருந்த மார்க்சிஸ்டு கட்சியின் அணிகளும் சரி, மக்களும் சரி, “சட்டத்தின் ஆட்சி”யை யாரேனும் நிலைநாட்ட மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்த சூழல், வங்கத்தில் பா.ஜ.க. காலூன்றுவதற்கு மிகவும் பொருத்தமான தருணமாக அமைந்துவிட்டது.

“ஒழுங்கை” இந்துத்துவத்துடனும், “மதச்சார்பின்மையை” ரவுடித்தனத்துடனும் இணைத்துப் பெரும்பான்மை சமூகத்தை நம்ப வைப்பதில் சங்கப் பரிவாரம் வெற்றி பெற்று விட்டது. “மோடியின் ஆட்சி வந்தால், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்” என்ற நம்பிக்கை நகர்ப்புற நடுத்தரவர்க்கதினரிடமே நிலவுவதாகப் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அது மட்டுமல்ல, “தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு பா.ஜ.க.-வுக்கு வாக்களிப்பதும், அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடுவதும்தான் தீர்வு” என்று மார்க்சிஸ்டு கட்சியினரே கருதியதன் விளைவுதான் மார்க்சிஸ்டு கட்சியினரின் வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க.வை நோக்கித் திரும்பியதற்குக் காரணமாகும்.

“கிராமப்புற ஏழை இந்துக்கள்தான் பா.ஜ.க.-வின் முக்கியமான சமூக அடித்தளம். இதை வைத்துப் பார்த்தால், முஸ்லிம்களின் ஆதரவு இல்லாத இடதுசாரிக் கட்சியைப் போல பா.ஜ.க. தோற்றமளிக்கிறது” என்று கிண்டலாக எழுதுகிறார், காவிப் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.

மே.வங்கத்தின் இந்த வீழ்ச்சி திடீரென்றும் நிகழ்ந்து விடவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். -ஆல் நடத்தப்படும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மாநிலம் முழுவதும் தோன்றியிருக்கின்றன. சங்கப் பரிவாரத்தின் பல்வேறு அமைப்புகளும் கிராமப்புறங்கள் முதல் பழங்குடி மக்கள் பகுதிகள் வரையில் மாநிலம் முழுவதும் எல்லா இடங்களிலும் பெருகியிருக்கின்றன. அந்த மாநிலத்தின் பண்பாட்டுக்கே அறிமுகமில்லாத ராமன் வழிபாடும், அனுமன் கோயில்களும் மாநிலம் முழுவதும் பெருகியிருக்கின்றன. ராமநவமி ஊர்வலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பஸிர்ஹாட், துலாகோரி ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்திருக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்திலுள்ள பஸிர்ஹாட் பகுதியில் நடந்த மதக் கலவரம். (கோப்புப் படம்)

மமதாவின் அரசு இவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மார்க்சிஸ்டு கட்சியும் இந்துத்துவ பாசிசம் தலையெடுப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. எனவே, எந்தவிதத் தடையும் இல்லாமல் பார்ப்பன பாசிச சக்திகள் அங்கே வளர்ந்திருக்கின்றன.

வங்காளத்தின் மக்கள் தொகையில் 27% முஸ்லிம்கள் என்பதால், இந்து வெறியைத் தூண்டுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மே.வங்க முஸ்லிம்களில் பலர் சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் அவர்களை வங்கதேசத்துக்கு அனுப்பவேண்டுமென்றும் பா.ஜ.க. மேற்கொண்ட பிரச்சாரத்தையும் நடவடிக்கைகளையும் மமதா எதிர்த்த காரணத்தினால், மமதாவை முஸ்லிம் ஆதரவாளர் என்று பா.ஜ.க. முத்திரை குத்தியது.

பா.ஜ.க. வின் இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் முஸ்லிம் எதிர்ப்பு இந்து வெறியைப் பரவச் செய்வதில் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக, மதச்சார்பற்றவர்களாகத் தங்களைக் கூறிக்கொண்ட வங்காளத்தின் இந்து நடுத்தர வர்க்கத்தினர், பண்பாட்டுரீதியாகவும், கருத்தியல்ரீதியாகவும் மிதவாத இந்துத்துவ கருத்துகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். குறிப்பாக, புதிய தாராளவாதக் கொள்கைகளின் ஆதாயத்தை நுகர்ந்து, சமூக உணர்வை இழந்திருக்கும் நடுத்தர வர்க்கம் இந்துத்துவத்துக்கு எளிதில் பலியாகியிருக்கிறது.

படிக்க :
♦ தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
♦ வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

“மமதா பானர்ஜி பிறப்பால் முஸ்லிம் என்பதனால்தான், அவர் முஸ்லிம்களை ஆதரிக்கிறார்” என்று சங்கப் பரிவாரம் கிளப்பிவிட்ட மட்டரகமான பொய்ப் பிரச்சாரத்தை, உண்மை என்று கொல்கத்தா நகரின் படித்த இந்து நடுத்தர வர்க்கத்தினரே நம்பத்தொடங்கி விட்டனர் என்று கூறுகிறார் ஒரு மே.வங்கப் பத்திரிகையாளர்.

பெரும்பான்மைச் சமூகத்தின் மதரீதியான சாய்வைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குகிறது மார்க்சிஸ்டு கட்சி. விநாயகர் ஊர்வல எதிர்ப்பு, ராமராஜ்ய ரதயாத்திரை எதிர்ப்பு, ராமர் பால எதிர்ப்பு, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, சங்கராச்சாரி எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகள் தமிழகத்தில் நடந்ததைப் போல, அங்கே நடந்ததில்லை.

பன்மைத்துவம் என்ற பெயரில் பார்ப்பன இந்து மதத்தையும், ஒருமைப்பாடு என்ற பெயரில் பார்ப்பன இந்து தேசியத்தையும் வழிமொழிவதே வலது,  இடது கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக இருந்ததால், கருத்தியல்ரீதியாக இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து நிற்கும் அடிப்படையே அக்கட்சியினருக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆகவே, மார்க்சிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள் கூண்டோடு பா.ஜ.க.-வுக்கு வாக்களித்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மருதையன்
புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart