பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரி என அலையலையாய் மோடி அரசு ஏவிய தாக்குதலில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கடந்த ஐந்தாண்டுகளில் அங்குலம் அங்குலமாக கழுத்தறுபட்டுச் செத்துப் போயின. இந்தக் கொலைச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே விரல்விட்டு எண்ணக்கூடிய சில தரகு முதலாளிகள் மட்டும் வீங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தியப் பொருளாதாரம் பாதாளத்திற்குள் பாய்ந்த அதே நேரம், பங்குச் சந்தை குறியீட்டெண்கள் வானத்தில் பறந்தன. விசித்திரமான இந்த வளர்ச்சி மாடலின் விளைவாகப் பலனடைந்த கார்ப்பரேட் குழுமங்களில் பிரதானமானது அதானி குழுமம்.
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விற்பனை செய்வதற்கான 126 ஒப்பந்தங்களை வழங்கியது மத்திய மோடி அரசு. இவ்வாறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் சில கவனத்திற்குரிய விசயங்கள் உள்ளன. முதலில் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன் காங்கிரசு அரசின் ஒன்பதாண்டு காலத்தில் வழங்கப்பட்ட இதேபோன்ற ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கையே 35தான். மோடி பதவி ஏற்றபின் நான்காண்டுகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையோ 63.

இரண்டாவதாக, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டாலும் எரிவாயுவைக் கடத்துவதற்கான குழாய் வலைப்பின்னல்கள் இன்னமும் முழுமையாகப் போட்டு முடிக்கப்படவில்லை. மார்ச் 2017 வரை சுமார் 17,753 கி.மீ. தொலைவிற்கு குழாய்கள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி செயல்பாட்டுக்கு வர மேலும் சுமார் 13,000 கி.மீ. தொலைவிற்கு குழாய் அமைக்கப்பட வேண்டும். மிக முக்கியமான விசயம் என்னவென்றால், சுமார் 23 நிறுவனங்கள் கலந்து கொண்ட டெண்டரில் அதானி குழுமம் மட்டும் 25 ஒப்பந்தங்களை வென்றுள்ளது. நேரடியாக 15 ஒப்பந்தங்களையும், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் மூலம் 10 ஒப்பந்தங்களையும் அதானி குழுமம் பெற்றுள்ளது.
அதானி குழுமத்தின் திடீர் வளர்ச்சி மலைக்கச் செய்யக் கூடியது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான மும்பைக்கான மின் பகிர்மான நிறுவனம், ஜி.எம்.ஆர். நிறுவனத்திடமிருந்து அதன் சத்தீஸ்கர் நிலக்கரி, மின் உற்பத்தி நிறுவனம், எல்&டி நிறுவனத்திடமிருந்து சென்னையை அடுத்துள்ள துறைமுகம், இராஜஸ்தானில் உள்ள கே.இ.சி. நிறுவனத்தின் மின் பகிர்மானக் கட்டமைப்பு, தமிழகத்தில் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்றின் 51 சதவீத பங்குகள் என அதானி குழுமம் கடந்த சில வருடங்களில் ஏராளமாக வாங்கிக் குவித்துக் கொண்டே வந்துள்ளது.
உள்கட்டுமானத் துறைகளில் முதலீடு செய்ததைப் போலவே, அலகாபாத்தில் கழிவு நீர் சுத்திகரிப்புக்கான ஒப்பந்தத்தையும் வென்றுள்ளது. இந்தாண்டு (2019) பிப்ரவரி மாதம் ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான டெண்டரை மத்திய அரசு அறிவித்தது. விமான நிலைய நிர்மாணம் மற்றும் நிர்வாகத்தில் அனுபவமுள்ள ஜி.எம்.ஆர். போன்ற நிறுவனங்களோடு அத்துறையில் கிஞ்சிற்றும் அனுபவமில்லாத அதானி குழுமமும் மேற்படி டெண்டரில் போட்டியிட்டது. இறுதியில் அந்த ஆறு விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமமே வென்றுள்ளது.
மின் உற்பத்தி, மின் பகிர்மானம், துறைமுகங்கள் எனத் தான் ஏற்கெனவே கால்பதித்துள்ள துறைகளிலும் தனது முதலீட்டைப் பன்மடங்கு அதிகரித்துள்ள அதானி குழுமம், இன்னொருபுறம் ஸ்வீடனைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்டான ஸாப் நிறுவனத்தோடு சேர்ந்து கூட்டுப் பங்கு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் ஆளில்லா விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.
2013-ம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டே செயல்பட்டு வந்த அதானி, இன்று இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. இன்றைய தேதியில் இந்தியாவின் சுமார் 260 நகரங்களில் அதானி குழுமம், தனது ஏதோவொரு தொழில் நிறுவனத்தை இயக்கி வருகின்றது. நிலக்கரி துரப்பணம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள், ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஆயுத உற்பத்தி என அதானி குழுமம் கடந்த வெகுசில ஆண்டுகளிலேயே தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியிருப்பதை அந்நிறுவனத்தின் அறிக்கையே குறிப்பிடுகின்றது.
கடந்த நான்காண்டுகளைப் பொருத்தவரை இந்திய உள்கட்டுமான நிறுவனங்கள் பெரும் சவால்களைச் சந்தித்துத் தோல்வியைத் தழுவியுள்ளன. குறிப்பாக உச்சநீதிமன்றம், கடந்த 2014 செப்டெம்பரில் 200 நிலக்கரித் தொகுதிகளுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்திருந்தது. அதைத் தொடர்ந்து எரிசக்தி மற்றும் கனிம வளங்களைத் துரப்பணம் செய்ய அனுமதி வழங்கும் அரசின் கொள்கை முடிவுகள் மாறின. இதன் விளைவாக உள்கட்டுமானத் துறையில் செயல்பட்டு வந்த நிறுவனங்கள் கடனில் விழுந்து தமது தொழிற் பிரிவுகளை விற்கும் நிலைக்கு ஆளாகின.
படிக்க :
♦ ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !
♦ மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
அதே சமயம், இந்திய அரசு நெடுஞ்சாலைகள், எரிவாயு பகிர்மானம் உள்ளிட்ட உள்கட்டுமானத் துறைகளைத் தனியாருக்கு வாரிக் கொடுக்க டெண்டர்களை அறிவித்து வந்தது. ஒருபக்கம் தமது தொழில்கள் நலிவடைந்து வந்த நிலையில் புதிய துறைகளுக்குள் நுழையவோ, இருக்கும் தொழில்களை விரிவுபடுத்தவோ மூலதனமின்றி பிற நிறுவனங்கள் தமது தொழில்களின் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்தன. இந்நிலையில் அதானி குழுமம் பிற நிறுவனங்களிடமிருந்து பங்குகளை வாங்கியதோடு புதிய தொழில்களிலும் தயக்கமின்றி நுழைந்தது.
அதானி குழுமம் தனது பல்வேறு துணை நிறுவனங்களில் செய்த முதலீடுகளும், கையகப்படுத்தல்களுக்காக செய்த முதலீடுகளும் எவரையும் வியப்பில் ஆழ்த்தும். ரிலையன்சின் மின்பகிர்மானப் பிரிவை ரூ.12,300 கோடிக்கும், ஜி.எம்.ஆரின் துணை நிறுவனத்தை ரூ. 5,200 கோடிக்கும், காட்டுப்பள்ளி துறைமுகத்தை ரூ. 1,950 கோடிக்கும் வாங்கியுள்ளது அக்குழுமம். அதே போல தனது புதிய தொழில் திட்டங்களிலும் ஏராளமாக முதலீடு செய்துள்ளது. உதாரணமாக, கடந்தாண்டு அதானி குழுமம் வென்றுள்ள எரிவாயு பகிர்மானத்திற்கான உட்கட்டமைப்புக்கு மட்டும் சுமார் ரூ.24,000 கோடி முதலீடு செய்தாக வேண்டும்.

அதே போல ஆந்திராவில் அமைக்கவுள்ள தனது டேட்டா சென்டரில் அடுத்த இருபது ஆண்டுகளில் ரூ. 70,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ள அதானி நிறுவனம், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 53,000 கோடியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே உள்ள தொழில்பிரிவுகளான அதானி கேப்பிடலில் ரூ. 500 கோடியும், ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு ரூ. 940 கோடியும் ஒதுக்கியுள்ளது. அதாவது சென்ற 2018-ம் ஆண்டு மட்டும் அதானி குழுமம் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்த தொகை ஏறத்தாழ ரூ. 49,000 கோடி. மேலும், சுமார் ரூ. 1,67,000 கோடி மதிப்பில் தனது எதிர்கால விரிவாக்கத் திட்டத்திற்காக முதலீடு செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் வியப்புக்கும் நமது கவனத்திற்கும் உரிய விசயம் என்னவென்றால், அதானி குழுமத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் படியே அதன் மொத்த ஆண்டு வருவாய் ரூ. 77,000 கோடி. இதில் வரி செலுத்தியது, ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை கழித்தால் இலாபமாக எஞ்சுவது வெறும் ரூ. 20,141 கோடிதான். அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் அதானி குழுமத்தின் நிகர இலாபம் ரூ. 23,000 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமத்தின் நிகர இலாபத்தில் பணமாக வெளியே எடுக்கக் கூடிய தொகை வெறும் ரூ. 7,062 கோடிதான்.
ரிலையன்ஸ், டாடா போன்ற பிற இந்தியத் தரகு முதலாளிகளிடம் இருந்து அதானி பெரிதும் வேறுபடும் புள்ளி ஒன்று உள்ளது. அதாவது முந்தையவர்களிடம் உள்ள குழும நிறுவனங்களில் ஏதாவது ஒன்றாவது அபரிமிதமான இலாபம் கொழிக்கக் கூடியதாக இருக்கும். ரிலையன்சுக்கு எண்ணெய் என்றால், டாடாவுக்கு டி.சி.எஸ். இப்படி ஒரு தொழில் பிரிவில் கிடைக்கும் அபரிமிதமான இலாபத்தை மற்ற தொழில்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு பிற கார்ப்பரேட் குழுமங்களுக்கு உள்ளது. ஆனால், அதானியின் குழுமத்தைச் சேர்ந்த எந்த நிறுவனமும் இவ்வாறு அபரிமிதமான இலாபம் கொழிக்கக் கூடியதாக இல்லை.
படிக்க :
♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!
♦ அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !
எனில், அதானி குழுமம் எந்த அடிப்படையில் இப்படி வீங்கிக் கொண்டே செல்கிறது?
எந்த அடிப்படையும் இன்றி அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன்களைக் கொண்டே அதானி வீங்குகின்றது. அதானி குழுமத்திற்கு பொதுத்துறை வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன்களைக் குறித்து முறையான தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், நிதித்துறையைச் சேர்ந்த சிலரும், நிதித்துறையை நெருக்கமாக கவனித்து வரும் ஊடகங்களில் சிலவும் (குறிப்பாக புளூம்பர்க் பத்திரிகை) மேற்கொண்ட மதிப்பீட்டின்படி அந்நிறுவனத்தின் கடன் குறைந்தபட்சம் ரூபாய் ஒரு இலட்சம் கோடியாக இருக்க வேண்டும் என மதிப்பிடுகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்குவது, வாங்கிய கடனைக் கொண்டு தனது துணை நிறுவனம் ஒன்றின் பங்குகளை வாங்குவது, அப்படி வாங்கிய பங்குகளை அடமானம் வைத்து மேலும் கடன் வாங்குவது, வாங்கிய கடனை ஏதேனும் ஒரு துணை நிறுவனத்தில் முதலீடு செய்வது, முதலீடு செய்வதால் அதிகரிக்கும் அந்நிறுவனத்தின் பங்குகளை மேலும் அடமானம் வைத்துக் கடன் வாங்குவது எனத் தலைசுற்ற வைக்கும் நடைமுறைகளை அதானி குழுமம் பின்பற்றுகிறது. மேலும், தனது துறைமுகங்களின் பங்குகளை வெளிநாட்டு பங்குச் சந்தையில் விற்பது, மின் பகிர்மான வழித்தடங்களை அடமானம் வைப்பது அல்லது பகுதி அளவுக்கு விற்பது என நிதியைத் திரட்டுகிறது அதானி குழுமம்.

எந்த வளர்ச்சியும் இன்றி வெறுமனே கடன்களின் மூலம் மட்டுமே வீங்கிப்பெருத்து வரும் அதானி குழுமம், மோடி அரசுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது. வரவுக்கு மிஞ்சிய அளவில் கடன், எந்தத் தொழில் வளர்ச்சியும் இன்றிக் கடன் மூலம் வளர்ச்சி என அஸ்திவாரமில்லாத மாளிகையைக் கட்டியெழுப்பி இருக்கும் அதானி, மோடியுடனான தனது நெருக்கத்தின் மூலம் பங்குச் சந்தையின் ஊகபேரங்களைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.
இதன் விளைவு தவிர்க்கவே முடியாத நிலையில் ஒருநாள் நிகழவிருக்கும் அதானி குழுமத்தின் வீழ்ச்சி இந்திய நிதிச் சந்தையையும் இந்தியப் பொருளாதாரத்தையும் தன்னோடு சேர்த்து புதைகுழிக்குள் இழுத்து விடும்.
குணா
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |