அதானிக்கு 100 கோடியை அள்ளிக் கொடுக்கும் மோடி டெண்டருக்குத் தடை ! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கில்  மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் என்.எல்.சி. நிறுவனம், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமாகும். கடந்த 10 ஆண்டுகளாக ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கத்திலிருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கப்பல் மூலமாகக் கொண்டு வரப்படுகிறது.

மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, ரயில் மூலம் ஒரிசாவில் உள்ள மத்திய அரசின் பாரதீப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கப்பலில் ஏற்றப்பட்டு, கடல் வழியாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அனல்மின்நிலையம் வந்து சேரும். இவ்வாறு நிலக்கரியை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பிற்கு, என்.எல்.சி  நிறுவனம், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கும். இதற்காக டெண்டர் கோரப்படுவது வழக்கம்.

கடந்த 2010-ல் கோரப்பட்ட டெண்டரில் மத்திய அரசின் பாரதீப் துறைமுகம் வழியே நிலக்கரியைக் கொண்டு வர வேண்டும் என்பதே நிபந்தனை. காரணம் போக்குவரத்துச் செலவை என்.எல்.சி-தான் வழங்கும். அச்செலவு நம் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படும்.

ஒடிசாவில் அதானிக்கு சொந்தமான தாம்ரா என்ற துறைமுகம் உள்ளது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 25.01.2017-ல் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் நிலக்கரியை மத்திய அரசின் பாரதீப் அல்லது அதானியின் தாம்ரா வழியாகக் கொண்டுவரலாம் என்ற நிபந்தனை சேர்க்கப்படுகிறது. அதன்பின் 22.09.2018-ல்  கோரப்பட்ட ஒப்பந்தத்தில் அரசின் பாரதீப் துறைமுகம் வழியாக 70% நிலக்கரியும் (28,73,360 மெட்ரிக் டன்) மற்றும் அதானியின் தாம்ரா துறைமுகம் வழியாக 30%(12,31,440 மெட்ரிக் டன் ) நிலக்கரியும் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்பவர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்படுகிறது. இதனால் செலவு அதிகமாகும் எனப் பலர் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் மீண்டும் தேர்தலுக்கு முன் அவசரமாக 10.04.2019 அன்று மீண்டும் அதே நிபந்தனையுடன் டெண்டர் பிறப்பிக்கப்படுகிறது.

அரசின் பாரதீப் துறைமுகம், மகாநதி நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் உள்ளது. ஒப்பீட்டளவில் பாரதீப் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு பக்கம் (1213 நாட்டிகல் மைல்). ஆனால் அதானியின் தாம்ரா துறைமுகம் 1276 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ளது. அதானி துறைமுகத்தில் கட்டணமும் சிலவற்றில் வெளிப்படையாக இல்லை. இவ்வாறு, ரயில் மற்றும் கடல் வழி தூரம் அதிகமாக உள்ளதால் என்.எல்.சிக்கு ஆகும் அதிக செலவு 101 கோடி. இந்தத் தொகை முழுவதும் அதானிக்கு நேரடியாகச் செல்கிறது. இது தவிர இந்த டெண்டரிலும் அதானி நிறுவனம் பங்கேற்கிறது. எனவே நிலக்கரியை கொண்டு வருபவர், துறைமுக கட்டணத்தை நிர்ணயிப்பவர் எல்லாம் அதானியே.

கடைசியில் இந்த 101 கோடியும் நம் மீதான மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் போல அரசின் பாரதீப் ஒழிக்கப்படும். அதானி துறைமுகம் வழியே மட்டும் நிலக்கரி கொண்டுவரும் நிலை உருவாகும்.

படிக்க:
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
♦ மோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …

இந்த அநீதியை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் ம. லயனல் அந்தோணிராஜ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, 16.04.2019 அன்று நீதிபதிகள் திரு.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்திற்காக மூத்த வழக்கறிஞர் திரு.டி.செல்வராஜ், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆஜராகினர்.

அதானிக்கு ஆதரவான என்எல்சி-யின் நிலையை அறிந்த நீதிபதிகள், அரசுத் துறைமுகத்தை விட்டுவிட்டு, தனியாருக்கு முக்கியத்துவம் கொடுப்பதேன்? இதற்கான காரணம் என்ன? எனக் கேட்டு, அதானியின் துறைமுகம் வழியாக கட்டாயம் நிலக்கரியைக் கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

நிலக்கரி, துறைமுக ஊழல்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. நமக்குத் தெரிந்தது ஒன்று, தெரியாதது ஓராயிரம். அதானியின் சொத்து மதிப்பு உயர்வதன் ரகசியம் இப்போது தெரிகிறதா?

அதானி டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் படங்கள் :

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றிம் மீது அழுத்தவும் )


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 94434 71003.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க