பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 22
பாசிஸ்டுக் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஆபேரா பாலில்லா1 போன்ற அதன் இணை அமைப்பு ஒன்றின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பாலில்லா, பாசிஸ்டைவிட அதிகம் செயலூக்கத்துடன் இருப்பதைக் காணலாம். எல்லா இணை நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். பரந்த வெகுஜனப் பகுதியினருடன் ஆனால் அதிகம் செயல்படாத மையத்துடன் கூடிய ஒரு பெரிய கட்சி நிறுவனம் இருந்து வருவதைப் பார்க்கிறோம். குறிப்பிட்ட நலன்களின் அடிப்படையில் வெகுஜனப் பகுதிகளை ஒழுங்கமைக்க இந்த மையம் பாடுபடுகிறது; பாசிசம் அடைய விரும்பும் ஸ்தூலமான குறிக்கோள்களுக்கு ஏற்ப தனது ஸ்தாபன வடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டு இப்பணியை அது செய்கிறது.
பாசிஸ்டு நிறுவனங்கள் முழுவதையும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். படைப் பிரிவு, படை அணி – பிரசாரம், தொழிற் சங்கம் ஆகியவையே அவை. இந்த மூன்று வகைகளுக்கும் இடையிலான வேறுபாடு அவ்வளவு அதிகமில்லை. படைப்பிரிவை முதல் வகையைச் சேர்ந்த அமைப்புக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இளம் பாசிஸ்டுகளை இரண்டாவது வகையில் சேர்க்கலாம். பாசிஸ்டுத் தொழிற்சங்கங்கள் மூன்றாவது வகைப்பாற்பட்டவை. இந்த அமைப்புகளிடையே சில பொது அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, படைப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று வருவோர்க்கும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இளம் பாசிஸ்டுகளுக்கும் இடையே சில பொது அம்சங்கள் காணப்படுகின்றன. சிவில் ஊழியர் சங்கங்கள் (குமாஸ்தாக்கள், ரயில்வே ஊழியர்கள் முதலானோர்) தொழிற்சங்கங்களை ஒத்திருக்கின்றன. ஆனால் அவை தொழிற்சங்கங்கள் அல்ல.
இந்த அமைப்புகள் சிலவற்றைப் பற்றி இப்போது ஆராய்வோம். முதலில் படைப்பிரிவுடன் ஆரம்பிப்போம். இது பற்றிய தகவல்கள் நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. எனினும் நமக்குத் தேவைப்படும் விவரங்கள் எல்லாம் இருப்பதாகக் கூற முடியாது. இது குறித்து எவரேனும் அதிக விவரங்கள் தந்தால் நலமாக இருக்கும். படைப்பிரிவின் சட்ட திட்டங்கள் கிடைக்குமாயின் உகந்ததாக இருக்கும்.
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் இரண்டு அடிப்படை அம்சங்களைக் காட்டவில்லை. ஒன்று, பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இன்று வரையிலும் படைப்பிரிவு அடைந்துவந்துள்ள மாற்றம்; இரண்டு, படைவீரர்கள் எந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அல்லாமல் அவர்களது கடமைகள், அவர்களது ராணுவப் பொறுப்புகள் அடிப்படையில் அதன் உள் கட்டமைப்பின் அடுக்கமைவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள். பத்து வருடம் சேவை செய்யக் கூடிய அடிப்படையான ஒரு மையக் கருவை இன்று படைப்பிரிவு பெற்றிருக்கிறது. இது ஒரு முக்கியமான அம்சமாகும்.
இதற்கு முன்னர் இவ்வாறிருந்ததில்லை. முன்னர், படைப்பிரிவு ஸ்குவாட்ரிஸ்டுகளின் ஓர் அமைப்பாக இருந்தது. இன்றைய கட்டத்தை அடைவதற்கு அதற்குக் கால அவகாசம் பிடித்தது, அரசு எவ்வகையிலும் பொறுப்பேற்க விரும்பாத செயற்பாடுகளில் ஸ்குவாட்ரிஸ்மோ வடிவில் படைப் பிரிவைப் பயன்படுத்தவே ஆரம்பத்தில் பாசிசம் விரும்பிற்று. எல்லாத் துறைகளிலும் சர்வாதிபத்தியத்தைக் கட்டி வளர்க்க ஆரம்பித்தபோதுதான் படைப்பிரிவு தனது இப்போதைய வடிவத்தை எழுதத் தொடங்கிற்று.
இன்று, இந்தப் படைப்பிரிவு தொழில்முறை படை வீரர்களைக் கொண்ட ஒரு மையத்தைக் கொண்டிருக்கிறது. அது இரண்டு பணிகளை ஆற்றுகிறது: ஓர் அரசியல் காவல் படையாக அச்சொல்லின் பரந்த அர்த்தத்தில் அது செயலாற்றுகிறது – காவல் படையாக மட்டுமன்றி, சமூக ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் அது செயல்படுகிறது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்; அண்மை ஆண்டுகளில் இந்த மக்கள் படையை மிகத் தீவிரமான சந்தர்ப்பங்களில்தான் பாசிசம் பயன்படுத்தி வருகிறது; சிறு சிறு இயக்கங்களைச் சமாளிப்பதற்கு ஒரு காவல் படையாகவும் கரபியனரியாகவும் மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கு அவநம்பிக்கையை ஓரளவு பிரதிபலிக்கிறது.
இன்றைய பொருளாதார முரண்பாடுகளின் வர்க்கத்தன்மையைப் புரிந்து கொள்வது எளிது; சாதாரண விவசாயிகள் கூட அதனைப் புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் கலகக் கொடி தூக்கும் விவசாயிகளுக்கு எதிராக மக்கள் படையைச் சேர்ந்தவர்கள் மிகப்பல சந்தர்ப்பங்களில் செயல்படுவதில்லை; மாறாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுதாபமே காட்டுகின்றனர். எனினும் இந்தப் போக்கில் மற்றொரு அம்சமும் பொதிந்துள்ளது: மிகப்பரந்த சமூக இயக்கங்களிலும், உள்நாட்டுப் போரிலும் தலையிடுவதற்கு இந்தப் படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு அதற்கு உண்மையான இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
படிக்க:
♦ ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !
♦ விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !
சிறு அளவிலான ஸ்தல சச்சரவுகளைச் சமாளிப்பதற்கு அல்லாமல் மிகப்பரந்த வெகுஜன இயக்கங்களைக் கடுமையாக ஒடுக்குவதற்கு அது தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் பணியை இராணுவப் பணியுடன் ஒப்பிடலாம். ஆனால் அதேசமயம் அரசியல் கட்டுப்பாடும் அதன்மீது திணிக்கப்படுகிறது. உள்நாட்டுப் போரில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், டாங்கிகள் முதலிய எல்லாவிதமான ஆயுதங்களையும் கையாள்வதற்கு இன்று இப்படைப் பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. இதுவல்லாமல், போர் விமானங்கள், வானொலி, விஷ வாயு முதலியவற்றைப் பயன்படுத்தவும் அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசியல் போதனையும் அதற்கு அளிக்கப்படுகிறது.
அதன் இரண்டாவது பணி இத்தாலிய இராணுவ அமைப்பு சம்பந்தப்பட்டதாகும். இந்தப் படைப்பிரிவு எதிர்கால அதிகாரிகளின் அணியாக அமைந்திருக்கிறது. இதன் பணி ரெய்ச்ஸ்வரின் கீழ் படைக்கலைப்பு செய்யப்பட்ட ஜெர்மனியில் பூர்த்தி செய்யப்பட்ட பணியை ஒத்ததாகும்; இன்று இது 1 இலட்சம் வரை தொழில்முறை படைவீரர்களைப் பயிற்றுவித்து வருகிறது. மக்கள் படையை ஒரு இராணுவப் பிரிவாக்கும் முயற்சி இந்தப் போக்கில் வெளிப்படுவதைக் காணலாம். அவசியமாகும்போது வெகுஜனங்களையும் இராணுவ சேவைக்கு அழைக்க முடியும். எனவேதான் இத்தாலிய ஆயுதப்படைகளைப் பற்றி எண்ணும்போது சில கண்டிப்பான சேவை விதிகளைக் கொண்ட இராணுவத்தை மட்டுமே கருத்தில் கொள்ளக் கூடாது. மக்கள் படை இருப்பதால் கட்டாய இராணுவ சேவைக் காலத்தைப் பாசிசத்தால் குறைக்க முடியும். பிரான்ஸ் உட்பட ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த இதர நாடுகளிலுள்ளவற்றிலிருந்து மாறுபட்ட வகையைச் சேர்ந்த ஒரு இராணுவ அமைப்பை பாசிசத்தால் அமைக்க முடிந்திருக்கிறது. பாசிசத்தின் இராணுவ அமைப்பு ஏற்கெனவே நன்கு பயிற்சி பெற்ற அணிகளையும், வெகுஜனங்களை ஆயுதபாணிகளாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது, இவ்வகையான இராணுவ அமைப்பை உருவாக்குவதில் மக்கள் படை ஒரு கேந்திரப் பங்காற்றுகிறது.
(தொடரும்)
அடிக்குறிப்புகள் :
1. ஆபேரா பாலில்லா : 1926 ஏப்ரலில் அமைக்கப்பட்ட ஆபேரா நாசியோனலே பாலில்லா: இத்தாலிய குழந்தைகள், இளைஞர்களின் பள்ளிக்கு வெளியிலான நடவடிக்கைகளை இதன் மூலம் ஆட்சி கட்டுப்படுத்தியது. ஆரம்பத்தில் சிறுவர்களுக்காக பல இணை ஸ்தாபனங்களாக இவை அமைக்கப்பட்டிருந்தன (பாலில்லா, பதினான்காம் வயதில் முன்னணிப் படை வீரர்களாகி இராணுவத்திற்கு முந்திய பயிற்சி பெற்றனர்). இளம் பெண்களுக்கும் (சிறிய இத்தாலியர்கள் இளம் இத்தாலியர்களாக ஆயினர்). 1930-ல் பதினெட்டு முதல் இருபத்தி ஒன்று வயதான இளைஞர்களுக்கு இளம் பாசிஸ்டுகள் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !