பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 24

பால்மிரோ டோக்ளியாட்டி
டோக்ளியாட்டி

நாம் ஏற்கெனவே பாலில்லாவைப் பற்றிப் பார்த்தோம். இப்போது இளம் பாசிஸ்டுகளைப் பற்றிப் பரிசீலிப்போம். 1930-ல் பாசிஸ்டு சர்வாதிகாரத்தைத் தோற்றுவிக்க முயற்சி நடைபெற்ற மிக நெருக்கடியான கட்டத்தில் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அச்சமயம் நெருக்கடி ஆரம்பித்திருந்தது. வெகுஜனங்களின் கோபாவேசம் அதிகரித்து வந்தது. கம்யூனிஸ்டு கட்சியின் பணி தீவிரமடைந்திருந்தது. கத்தோலிக்க இளைஞர்களின் பிரச்சினை 2 இன்னமும் தீர்க்கப்படாதிருந்தது.

இளைஞர் முன்னணியிலிருந்து விடுபட்டு கட்சியில் சேருவதற்கு இடைப்பட்ட காலத்தில் இளம் மக்களை அணி திரட்டும் பிரச்சினை 1930-ல் பாசிஸ்டுக் கட்சியை எதிர் நோக்கிற்று. பாசிஸ்டுக் கட்சிக்கு அரசியல் வாழ்க்கை ஏதும் இல்லை. இதர நிறுவனங்களில் இது போன்று இளம் மக்களை ஒன்று திரட்ட முடியாது. இளைஞர்கள் பதினெட்டு வயதை அடைவதற்கும் பாசிஸ்டுக் கட்சியில் சேருவதற்கும் இடையே ஓர் இடைவெளி இருந்தது. இளம் பாசிஸ்டுகள் அமைப்பை நிறுவுவதன் மூலம் இந்த இடைவெளியை அடைக்க பாசிஸ்டுக் கட்சி முற்பட்டது.

இந்த அமைப்பு உருவானபோது அதில் 3 இலட்சத்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். 1931-ல் இது 8 இலட்சத்துக்குத் தாவிற்று. (கத்தோலிக்க நிறுவனங்களுக்கு எதிராக அப்போது போராட்டம் நடைபெற்று வந்தது); ஆனால் 1932-ம் ஆண்டிலோ இது ஐந்து இலட்சமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மொத்த உறுப்பினர்களில் ஏறத்தாழ பாதிப்பேரை இழந்தது. ஏனென்றால் 1932-ம் ஆண்டை எண்ணற்ற போராட்டங்களின் ஆண்டு எனலாம். கம்யூனிஸ்டுக் கட்சி வளர்ச்சியடைந்த ஆண்டு எனக் கூறலாம். இளம் பாசிஸ்டுகளின் எண்ணிக்கை சுருங்கி வந்தபோது இளம் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை விரிவடைந்த ஆண்டு எனவும் இதனைச் சொல்லலாம். முடிவாக, ஏராளமான இளம் பாசிஸ்டுகள் நம் பக்கம் வந்த ஆண்டாகவும் இது இருந்தது. எமிலியா, டுஸ்கேனி போன்ற இடங்களில் இந்த ஆண்டில்தான் நாம் பிரம்மாண்டமான ஸ்தாபன வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம்.

இதனால் பாசிசம் மூர்க்க வெறியுடன் நமக்கு எதிராகவும் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இளம் பாசிஸ்டுகள் நிறுவனம் இந்த ஆண்டில் 3 இலட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களை அதிகமாகப் பெற்றது. ஆனால் 1933-ல் மீண்டும் 4 இலட்சத்து 50 ஆயிரமாக வீழ்ச்சியடைந்தது.

உறுப்பினர்கள் சேர்ப்பதில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடும் இந்த ஊசலாட்டங்களுக்கு ஓரளவு காரணமாகும். இளம் மக்களுக்குத் தொழில் ஏதும் இல்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடந்தன. வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. பல்கலைக் கழகங்களில் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் மாணவர்கள் எல்லாமே தங்களுக்கு மூடப்பட்டிருப்பதைப் பார்த்தார்கள். இதனால் வெகுஜனப் பகுதியினரிடையே உறுதியின்மையும், ஊசலாட்டமும், தடுமாற்றமும் அதிகரித்தன. புரட்சிகர சித்தாந்தம் இவர்கள் மத்தியில் எளிதாக ஊடுருவக்கூடிய நிலைமை உருவாயிற்று. இந்த ஊடுருவலைத் தடுக்க பாசிசம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது.

படிக்க:
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பிரச்சினை குறித்துப் பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சில பிராந்தியங்களில் இந்த உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் சுய விருப்ப அடிப்படையில் நடைபெறுகிறது. வேறு சில இடங்களில் நிர்ப்பந்த முறையில் நடைபெறுகிறது. இதில் ஒரு வேறுபாடு நிலவுவது தெளிவு. ஆனால், ஒரு பொதுப் படப்பிடிப்பை நோக்கும்போது, இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேரும்படித் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிர்ப்பந்தங்களை வயது வந்தோரைக் கட்சியில் சேருமாறுத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நிர்ப்பந்தங்களுடன் ஒப்பிடுவது என்பது சாத்தியமல்ல. இளம் மக்களிடம் சென்று நீ சேரவில்லை என்றால் உனக்கு வேலை இல்லை என்று கூறமுடியாது! ஏனென்றால் எப்படியிருந்தாலும் அன்றைய நிலைமையில் இளம் மக்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான்! ஆதலால் இந்தப் பயமுறுத்தல் அவர்களை அச்சுறுத்த முடியாது.

எனவே, பாசிஸ்டுகள் இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பிரச்சினைக்கு வேறு வகையில் பரிகாரம் காண முனைந்தனர்; அதிகார வர்க்க நிர்ப்பந்தத்தைக் கொண்டு “சுய விருப்ப” அடிப்படையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்; இதில் வன்முறையைப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்கவில்லை.

ஆக, இளம் பாசிஸ்டுகள் பல்வேறு திட்டங்களுடன் எவ்வாறு பெருமளவில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், இதர நிறுவனங்களின் உறுப்பினர்களைவிட இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேருவதற்கு இவர்கள் எவ்வாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதையும், எத்தகைய கடினமான கடமைப் பொறுப்புகளும் கட்டுப்பாடுகளும் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இவற்றை மனத்திற் கொள்ளவில்லை என்றால், இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்தின்பால் நமது இளைஞர் சம்மேளனம் கைக்கொள்ளும் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியாது. இளம் பாசிஸ்டுகள் அமைப்பின் இந்த இயல்பு காரணமாகவே அதன் விஷயத்தில் நமது இளைஞர் சம்மேளனம் பின்பற்றும் கொள்கை குறிப்பாக முனைப்பானதாகவும் துணிகரமானதாகவும் இருந்து வருகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

2. கத்தோலிக்க இளைஞர்களின் பிரச்சினை : ஆபேரா நாசியோனலே பாலில்லாவை எல்லா வாலிபர் ஸ்தாபனங்களுக்கும் ஒரு அரசு ஏகபோக அமைப்பாகப் பாசிஸ்டுகள் கண்டனர். இந்த இலட்சியத்தை அடைய கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைக்க வேண்டியிருந்தது. கத்தோலிக்க சாரணர்களிடையே முதலில் ஆக்கிரமிப்பு நடந்தது. அவை 1926-1928-க்கு உட்பட்ட காலத்தில் பல்வேறு உத்தரவுகளால் கலைக்கப்பட்டன.

சமூக, தொழிலாளர் அல்லது அரசியல் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளும் கத்தோலிக்க செயல்பாட்டு ஸ்தாபனங்கள் எல்லாவற்றின் மீது ஆட்சி ஒரு பெரும் தாக்குதலைத் தொடுத்தது. அதனுடைய பிரதான குறி இத்தாலிய கத்தோலிக்க வாலிபர் கழகமும் இத்தாலிய கத்தோலிக்க பல்கலைக்கழக சம்மேளனமும் போப் பதினொன்றாவது பயஸ் பலாத்காரத்திற்கு கண்டனம் தெரிவித்து சுற்றறிக்கை அனுப்பினார்.

ஆனால் அடிப்படையாக பாசிசத்தைக் கண்டித்தல்ல. இதற்கு அடுத்து, பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, கத்தோலிக்க ஸ்தாபனங்கள் ஆன்மீகம் சம்பந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை வாட்டிகன் வெகுவாக குறைத்து, பாசிச எதிர்ப்பிலிருந்து விலகிச் செல்லுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. “மத சம்பந்தமான நோக்கங்கள் கொண்ட பொழுதுபோக்கு, கல்வி நடவடிக்கைகளுக்கு” மட்டுமே அவற்றின் செயல்பாடுகளின் களம் என்று கட்டுப்படுத்த வாட்டிகன் ஒத்துக் கொண்டது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க