“கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை” : மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை கேலி செய்யும் பிரக்யா தாகூர் !

மோடி கொண்டுவந்த விளம்பரத்திட்டங்களில் அவருக்குப் பிடித்தத் திட்டம் ‘ஸ்வச் பாரத்’. நாட்டையே தூய்மையாக்குவேன் என ஒவ்வொரு காந்தி ஜெயந்தி தினத்தின் போது, துடைப்பத்துடன் குப்பைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய, சாமானியனாய் கிளம்பிவிடுவார் நமது பிரதமர்.

அவரது அமைச்சரவை சகாக்கள், பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் நாட்டை கூட்டிப் பெருக்கக் கிளம்பிவிடுவார்கள். அண்மையில்கூட நாடாளுமன்ற வளாகத்தை சுத்த செய்ய, நடிகை ஹேமமாலினி துடைப்பத்துடன் ‘சண்டை’யிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

மோடியும் பாஜகவினரும் நாட்டை தூய்மையாக்கும் பணியில் தீவிரமாக இருக்க, இந்துத்துவ பயங்கரவாதி என்ற குற்றச்சாட்டுடன் எம்.பி. ஆகியிருக்கும் பிரக்யா தாகூர் ‘நாங்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என தனது தலைமையை கேலி செய்யும் விதமாகப் பேசியிருக்கிறார்.

தூய்மை செய்வதற்கென்ற சாதியை ஒதுக்கியிருக்கும் இந்துத்துவத்தை முன்னிறுத்தக்கூடிய மோடி உள்ளிட்ட பாஜகவினர் விளம்பரத்துக்காகவாவது ‘துடைப்பத்தை’ பிடித்திருக்கிறார்கள். பிரக்யா சிங் போன்றவர்கள், வெளிப்படையாகவே தங்களுடைய பார்ப்பனிய சாதி முகத்தை இப்படியான பேச்சுக்கள் மூலம் கொட்டி விடுகிறார்கள்.

படிக்க:
ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
♦ நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

2008-ல் காவி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிரக்யா தற்போது பிணையில் வெளியே உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போபால் தொகுதியில் வென்றார் இவர். அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் பிரக்யா;

“எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்… நாங்கள் இங்கே சாக்கடையை சுத்தம் செய்ய வரவில்லை. இது புரிந்ததா? நிச்சயம் உங்களுடைய கழிப்பறையை சுத்தம் செய்ய வரவில்லை. நாங்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோமோ அதை நேர்மையாக செய்வோம். முன்பும் அதைத்தான் சொன்னோம். எதிர்காலத்திலும் அதைத்தான் சொல்வோம்” எனக் கூறியுள்ளார்.

எம்.பி. பணி என்பது எம்.எல்.ஏக்களுடன், கார்ப்பரேட்டுகளுடன் மக்கள் பிரதிநிதிகளுடன் ‘வளர்ச்சி’ பற்றி கைக்கோர்ப்பதாகும் எனவும் பிரக்யா பேசியிருக்கிறார். பிரக்யாவின் கூற்று பிரதமரின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தை வெற்று திட்டமாக்கியிருக்கிறது என காங்கிரஸ் பகடி செய்துள்ளது.

மக்களவை உறுப்பினரான அசாசுதீன் ஓவாசி, இந்தியாவில் சாதி, வர்க்க ஒடுக்குமுறைகளை மீண்டும் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையே பிரக்யா தாகூரின் கூற்று சொல்கிறது என விமர்சித்துள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேதான் மகாத்மா என காவி விசத்தை கக்கியிருந்தார் பிரக்யா. பொது சமூகத்திலிருந்து கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, மோடி இப்படியெல்லாம் பேசக்கூடாது என செல்லமாக தட்டிக் கொடுத்தார். பாஜக சார்பில் பிரக்யாவின் கருத்தை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் முடிந்தவுடன் சத்தமில்லாமல் கலைக்கப்பட்டது.

இப்போது சாதி விசத்தை கக்கியிருக்கும் பிரக்யா, அதன் மூலம் மோடியின் செல்ல திட்டம் பாஜகவினரின் மனங்களைக்கூட தூய்மை செய்யாது என நிரூபித்திருக்கிறார்.


கலைமதி
நன்றி : தி வயர்.