அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 12

ண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகள் மத்தியில் அதிகம் நிலவினால் எப்படியிருக்கும்? கட்டுப்பாடு அதிகமாகும், தப்புகள் குறையுமா? குழந்தைகளிடம் மனச்சாட்சியும் பொறுப்புணர்வும் கூடுமோ? இல்லை, இப்படி நடக்காதென்றே எனக்குத் தோன்றுகிறது. அனேகமாக இதற்கு மாறாக நடக்கக் கூடும். அச்சுறுத்தப்பட்ட குழந்தைகள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள், ஆனால் யாரைக் கண்டெல்லாம் அவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுடனெல்லாம் பூசல் மனப்பாங்கில் இருப்பார்கள்; பரஸ்பரம் ஒருவர்பால் ஒருவர் கடுமையாக நடப்பார்கள்; பிறர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வு, மென்மை, உதவும் மனப்பாங்கு முதலியன குறையும்” என்று நான் சொல்லும்போது இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கு மாறாக வேறொரு சூழல் தோற்றுவிக்கப்படலாம் என்பதை மனதில் இருத்தியே இப்படிக் கூறுகிறேன்.

அதில் குழந்தையின் மனச்சாட்சியை தட்டியெழுப்பி, உணர்வுப் பூர்வமான “நான்” எனும் உணர்வை வளரச் செய்து, இரக்கம், அன்பு, பிறர்க்கு செவிமடுக்கும் உணர்வு போன்றவற்றை வளர்க்கும் அக்கறை மேலோங்கியிருக்கும். நிச்சயமாக, ஒரு தனி நபரின் குண நலன்கள் இவற்றுடன் நின்று விடுவதில்லை : அத்தனிநபர் இன்னமும் இறுதியானவராக, செயல்முனைப்பானவராக, ஒரு இலட்சிய அடிப்படையை உடையவராக இருக்க வேண்டும். இந்த ஆசிரியர் பாதையில் செல்லத்தான் நான் விரும்புகிறேன். இதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாது, ஏனெனில், இப்பாதையில் இதுவரை யாரும் சென்றதில்லை, எனவே, இதில் சில ஆசிரியர் தவறுகளைச் செய்யும் அபாயத்தை மேற்கொள்கிறேன்.

குழந்தைகளின் முரட்டுத்தனத்தைக் கண்டுதான் நான் எல்லாவற்றிற்கும் மேலாக அஞ்சுகிறேன். சில சமயங்களில் அவர்கள் ஒருவர்பால் ஒருவர் எப்படி இரக்கமற்று நடந்து கொள்கின்றனர்! அதிலும் குறிப்பாக ஒரு தனிப்பட்ட குழந்தைக்கு எதிராகப் பல குழந்தைகள் நிற்கும்போது எப்படியிருக்கும் தெரியுமா! ஒரு சிறுவன் வேண்டுமென்றே தப்பு செய்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் (குழந்தைகள் எப்போதுமே காரண காரியங்களைப் பார்க்க மாட்டார்கள்). கவனக்குறைவான ஆசிரியர் குழந்தைகளைப் பார்த்துப் பின்வருமாறு கூறுவார்: “அவன் நம்மை எப்படி கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டான் பார்த்தீர்களா? அவனது செயலைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? அவனை எப்படித் தண்டிப்பது?”

குழந்தைகளின் மதிப்பீடுகளைக் கண்டு நான் பயப்படுகிறேன். ஏனெனில் இவர்களைப் பொறுத்தமட்டில், வேண்டுமென்றே மேசை விரிப்பின் மீது இங்க் பாட்டிலைக் கொட்டி சிறு கறையை ஏற்படுத்தியவனை விட தற்செயலாக, தெரியாமல் பெரும் கறையை ஏற்படுத்தியவன் அதிகம் குற்றம் செய்தவனாவான். அவன் கெட்டவன், கொடியவன், அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது, அவனைப் பள்ளியிலிருந்து கூட விரட்டலாம் என்றெல்லாம் குழந்தைகள் கூறுவார்கள். கவனக்குறைவான ஆசிரியர் இப்படிச் செய்து இதை நியாயப்படுத்தக் கூட செய்வார், கூட்டு வளர்ப்பு என்று இதற்குப் பெயரிடுவார். ஆனால் இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்: இது கூட்டு வளர்ப்பா, கூட்டாக குழந்தையை இழிவுபடுத்தி அழித்தொழிப்பதா?

இல்லை, நண்பர்களின் மெளனமான இரக்கத்தைப் பள்ளிச் சிறுவன் உணருமாறு செய்வதும், அவன் செய்த காரியத்தைப் பற்றிய பொதுவான கருத்தை அவனை நோக்கி தனிப்பட்ட முறையில் கூறாமல் பொதுவாகக் கூறி அவன் அதை உணர உதவுவதும், தான் உடைத்த பூந்தொட்டிக்காக, தன் குற்றத்தால் நண்பனின் காலில் ஏற்பட்ட காயத்திற்காக அவன் வருந்துவதும் நல்லது. இதைத்தான் என்னால் கூட்டு வளர்ப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

என் வகுப்பில் இன்னமும் கூட்டு இல்லை. இக்குழந்தைகள் இன்று இருபதாவது தடவையாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு மற்ற அனைவரின் பெயர்கள் கூட முழுமையாகத் தெரியாது, இவர்கள் இன்னமும் எல்லோருடனும் நட்புக் கொள்ளவில்லை, பொது நோக்கத்தை இன்னமும் இவர்கள் உணரவில்லை. கூட்டுணர்வு என்பது கூட்டான, செயல் முனைப்பான நடவடிக்கையில்தான் பிறக்கிறது. நாங்கள் இப்போதுதான் இந்நடவடிக்கையையே துவக்குகின்றோம். எனவே, இவர்களை ஒருவர்பால் ஒருவர் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வழிகோலுவது சிறந்ததல்ல, அன்பின் அடிப்படையில் இவர்கள் நெருங்கி வரும்படி செய்ய வேண்டுமே தவிர முரட்டுத்தனமான நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அல்ல….

…இதோ அவன் உடைந்து போன பூந்தொட்டியின் முன் நின்று கொண்டிருக்கிறான், மண் தரையில் சிந்திக்கிடக்கிறது, செடி கீழே கிடக்கிறது. கசப்பானதொரு காட்சி! நான் திட்ட வாய்திறந்தாலே போதும், குழந்தைகள் அவன் மீது பாய்ந்து விடுவார்கள். எனது சிறு ஏளனப் புன்னகை போதும், குழந்தைகள் தம் ஏளனத்தால் அவனை அழித்தே விடுவார்கள். ஆனால் இப்படிச் செய்யக்கூடாது. மெளனமான இரக்கம், அக்கறை பற்றிய ஒரு சில பாடங்களை நான் அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறேன். நூற்றுக் கணக்கான இடைவேளைகளில் இன்னமும் இதே போன்ற பிரச்சினைகளை நான் பன்முறை தீர்க்க வேண்டியிருக்குமென எண்ணுகிறேன். நான் செடியைக் குனிந்து எடுக்கிறேன்.

படிக்க:
சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !
கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !

“இப்படிச் செய்யலாமா, யார் இதைச் செய்தது? இப்போது செடியைக் காப்பாற்றுவது முக்கியம்!” குழந்தைகள் இரைந்து கிடப்பவற்றை அள்ளுகின்றனர்.

“நமது வாளியை எடுத்து வாருங்கள். நாளை வரை செடியை அதில் வைத்திருப்போம்.”

செடியை வாளியில் வைக்கின்றோம்.

““பார்த்தீர்களா, உடைந்த தண்டிலிருந்து எப்படி இரத்தம் வருகிறது. இந்த வெள்ளைத் திரவம்தான் இதன் ரத்தம்!…”

“இது ஒரு மூலிகைச் செடி என்று அம்மா சொல்லியிருக்கிறார்” என்று நாத்தோ சொல்கிறான்.

“தண்டு முறிந்த இடத்தில் அதற்கு வலிக்குமா?”

நான்: “அதற்கு மட்டும் பேச முடிந்தால் அது என்ன சொல்லும்?”

“என் மீது பாவமாயில்லையா?” என்று சொல்லும்.”

“ஏன் ஜன்னல் அருகேயிருந்து கீழே தள்ளினாய்? எச்சரிக்கையாயிருக்க வேண்டும்” என்று சொல்லும்.”

“நான் உங்களுக்கு இனி மருந்துச் செடியாக இருக்க மாட்டேன்” என்று கோபம் கொண்டு சொல்லும்.”

“இல்லை, அது அப்படி சொல்லாது, அது அன்பான செடி.”

நான்: “நாளை பூந்தொட்டி கொண்டு வந்து என்னை அதில் நடுங்கள். விரைவில் எனக்கு சரியாகும்படிப் பராமரியுங்கள்” என்றும் சொல்லும்.”

“அதற்குத் தேவையான பூந்தொட்டியையும் மண்ணையும் நான் கொண்டு வருவேன்.”

“நானும் தொட்டியைக் கொண்டு வருவேன்.”

இதோ மணி அடித்தாகி விட்டது. தரை சுத்தப்படுத்தப் பட்டு விட்டது. செடி வாளியில் உள்ளது. நாளை அதை வேறொரு தொட்டியில் நடுவோம் – அவன் தான் ஒரு தொட்டியையும் மண்ணையும் கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளானே. இப்போது வகுப்பறைக்குள் வர வேண்டும்.

“சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவிலிருக்கட்டும்.”

குழந்தைகள் வகுப்பறைக்குள் வந்து கொண்டிருக்கையிலேயே ஒரு வாக்கியத்தைப் பன்முறை திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அப்போது தான் இது மறக்காது, ஏனெனில் எனக்கு ஒரு முது மொழியாகும்:

வளர்ப்புப் பணிக்கு ஆரம்பமோ, முடிவோ, இடைவேளைகளோ இல்லை.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க