சென்னை அடையாறு காந்தி மண்டபம் அருகே இருக்கும் புற்றுநோய் மருத்துவமனையின் நுழைவாயிலில் சாலையோர இளநீர்க்கடை வைத்திருக்கிறார் சவுந்தர்ராஜன்.
“மயிலாடுதுறையிலிருந்து பஞ்சம் பொழக்க 40 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தேன். தூரத்து உறவினர்கள் ஆரம்பத்தில் எனக்கு சிறு உதவிகள் செய்ய, பல வேலைகளுக்குப் பிறகு இளநீர்க்கடையை நிரந்தரமாக்கிக்கொண்டேன்.” என்றவரிடம் “வியாபாரம் எல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்டோம்.
“சாலையோர ரவுடிகள், கார்ப்பரேசன் அதிகாரிகள் மற்றும் போலீசு இவர்களின் அடி, உதை, மிரட்டல் எல்லாத்தையும் பாத்துட்டேன். துணிந்து நின்ன பிறகுதான் ஏதோ அரைவயிறு கஞ்சியாவது குடிக்க முடியுது. இதுவும் மாதத்தில் 10 நாள் , பக்கத்தில் காந்தி மண்டபம், கவர்னர் மாளிகை இருப்பதால் விஜபிக்கள் வருகிறார்கள் என்று எல்லாக் கடைகளையும் போலீசு துரத்திவிடும். பொழப்பு கெடும். அந்த நாட்களில் கை செலவுக்கு டீக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுவோம். கடன் வாங்கி ஓட்டுவோம்.” என்றவாறு அடுத்து வந்த வாடிக்கையாளருக்கு இளநீரை சீவிக் கொடுத்தார்.
“உங்க வீடு எங்கைய்யா.. குடும்பமெல்லாம் எங்க இருக்காங்க?” என்றதும் சற்று சலிப்போடு தொடர்ந்தார், “ இந்த சிரமத்திற்கு மத்தியில் எனக்கு பொறந்தது மூனும் பொண்ணு. அதுங்கள கட்டிக்கொடுத்து சீர்சனத்தி செய்வதற்குள் என் வயசு முடிந்துவிட்டது. இப்போது என் பொண்டாட்டிக்கு வயதானதால் உடல்நிலை சரியில்லை. குறைகாலத்தில் அதை வைத்து கஷ்டப்படுறேன்.
இந்தத் தள்ளுவண்டியை ரெடி செய்வதற்கு 30 ஆயிரமாச்சு. சரக்குப் போடுவதற்கு 10 ஆயிரம். முன்பெல்லாம் நாளொன்றுக்கு 200 காய் போவும். இப்போ வெறும் 50 காய் போறதே பெரும்பாடாயிருக்கு.
தினமும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். கோயம்பேடு போயி வண்டி நிறைய சரக்கு போட்டுகிட்டு காலை 7 மணிக்கு திரும்புவேன். அந்நேரத்திலேயே கடை திறந்தால்தான் நாளு காய் விக்கும். காலை, மதியம் சாப்பாடெல்லாம் வெளியிலதான். வீட்டுல உடம்பு சரியில்லங்கிறதால நேரத்துல எழுந்து சமைக்க முடியாது.
பக்கத்தில் இருக்கிற சாப்பாடு தள்ளுவண்டிக்காரர்களிடம் வாங்கி சாப்பிடுவேன். நாள் முழுதும் வெயிலிலேயே நிப்பதால் உடம்பு அநியாயமா சூடாகும். ஓயாமல் சாலையில் வண்டி போவதால் புகை மூக்கையும் கண்ணையும் ரொப்பும். அதனாலே எப்போதும் பாதி கண்ணுலதான் பாக்குற மாதிரி இருக்கும். கண் பார்வையும் மோசமாகிட்டு வருது. ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுகிறேன். எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது. அந்த பயம் வேறு. பயத்தை வெளியில் காட்ட முடியாது.
இளநீர் குடிப்பவர்கள் சீக்கிரம் வெட்டவில்லை என்று பக்கத்து கடைக்குப் போய் விடுவார்கள், அதனால் வியாபாரம் படுத்துவிடும். ஏதோ என்னோட காலமும் ஓடுது.
இப்போது இளநீர் விலையும் ஏறிவிட்டது என்று குடிப்போர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். புயலால் தஞ்சாவூர் வரத்து நின்று விட்டது. லாபமும் முன்பு மாதிரி இல்லை. எல்லா பணமும் சரக்கு வாங்குவதற்கே சரியாக இருக்கிறது. மார்கெட்டில் நாளுக்கொரு விலை சொல்கிறார்கள். மீதி காலத்தை எப்படி ஓட்டப் போகிறேன் என்றே கவலையாக இருக்கிறது., படுத்தால் தூக்கம் வருவதில்லை.” என்று கூறி முடித்தார்.
“உடம்பு சூட்டுக்கு நடுவுல ஒரு இளநீரக் குடிச்சுக்க வேண்டியதுதானே?” என்றோம். நம்மை வித்தியாசமாகப் பார்த்தார். நாங்க தினமும் இளநீர் குடிச்சா குடும்பம் நடத்த வேண்டாமா? ஒவ்வொரு பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல. இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? என்று நம்மைப் பார்த்தார்.
மேலும் படங்களுக்கு :
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
–வரதன்