அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 14

“குழந்தைகளே, இன்று யாரை விண்வெளி வலவர்களாகத் தேர்ந்தெடுப்பது?”

ஆம், எப்போதுமே “யாரைத் தேர்ந்தெடுப்பது?”, “யாரை அனுப்புவது?”, “ நீங்களே சொல்லுங்கள்!” என்று தான் கேட்கின்றேனே தவிர “யார் விரும்புவது?” என்று எப்போதுமே கேட்பதில்லை. “என்னைத் தேர்ந்தெடுங்கள்!.. என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!” என்று குழந்தைகள் தம்மைத் தாமே முன்மொழிய, நான் அவர்கள் மத்தியிலிருந்து விண்வெளி வலவர்கள், கட்டமைப்பாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில், அவர்கள் தம்மைத் தாமே தேர்ந்தெடுப்பதையே நான் விரும்புகிறேன். யாராவது கவனிக்கப்படாமலிருந்தால் மட்டுமே நான் தலையிடுவேன். விண்வெளி வலவர் விளையாட்டு, எல்லைக் காவல் வீரர் விளையாட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விளையாட்டு, எதுவாயிருந்தாலும் எங்கள் வகுப்பில் எல்லோரும் பங்கேற்பார்கள்.

இதோ குழந்தைகள் மூன்று விண்வெளி வலவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் விண்கப்பலில் அமர்கின்றனர்.

“பூமியில் சந்திப்போம்! போய் வருகிறோம்!” பூமியில் தங்குகின்ற நாங்கள் கைகளை ஆட்டுகிறோம்: “பயணம் சிறக்கட்டும்!… மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்!”

“ஊ ஊ ஊ ஊ…” ராக்கெட் பறந்து போய் விட்டது. பயணத்தில் முதல் நாள்… இரண்டாவது நாள்….

நாங்கள் வானொலி ஒலிபரப்புக்களைக் கேட்கின்றோம். நான் அறிவிப்பாளனாகிறேன்: “நமது வீரம் மிகு விண்வெளி வலவர்களாகிய சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் ஏற்கெனவே ஆறு நாட்களாக விண்வெளியில் பறக்கின்றனர். அவர்கள் அங்கு நிறைய ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்களுக்கு ஓய்வு நாள்.”

“விண்வெளியிலிருந்து நேரடியாக வரும் ஒலிபரப்பைப் பார்க்கின்றோம்: சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் தம் கரங்களில் அட்டைப்பெட்டியின் விளிம்பைப் பிடித்த படி (இது தான் தொலைக்காட்சிப் பெட்டியின் திரை) பேசுகின்றனர்.

சூரிக்கோ: “நிலம், கடல் தெரிகிறது… இதோ நம் பள்ளி…” (பார்வையாளர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.)

தேயா: “வானம் மிக அழகாக உள்ளது. பூமி மிக அழகாக இருக்கின்றது! நான் பயப்படவில்லை, இதோ போன்தோ தான் பயப்படுகிறான்.” (பார்வையாளர்கள் சிரிக்கின்றனர்.)

போன்தோ: “தேயா சும்மா சொல்கிறாள், நான் பயப்படவில்லை . இன்று நான்… நான்… அதாவது… ராக்கெட்டிலிருந்து விண்வெளிக்கு வெளியே வந்தேன்!…” (பார்வையாளர்கள் கை தட்டுகின்றனர்.)

இதோ தரையிறங்கும் நேரம் வந்து விட்டது.

விண்வெளி வலவர்கள் விண்கப்பலிலிருந்து வெளிவருகின்றனர். காத்திருந்தவர்கள் இவர்களை வரவேற்கின்றனர்.

“வணக்கம்!…”

“வணக்கம்…”

“உங்களை பூமியில் காண்பது குறித்து மகிழ்ச்சி…..”

“நன்றி.”

“களைப்பாய் உள்ளதா?”

“இல்லை!…”

“அப்படியெல்லாம் இல்லை!”

“மீண்டும் பறக்க விரும்புகின்றீர்களா?”

“ஆம், விரும்புகிறோம்!..”

“நீங்கள் வீரர்கள்!”

விண்வெளி வீரர்கள் வரிசைகளின் இடையே நடந்து செல்ல, இவர்களின் கரங்களைப் பிடித்துக் குலுக்குகின்றனர். அவர்கள் தம்மிடங்களில் அமர, விளையாட்டு முடிவடைகிறது. ஒவ்வொரு புதிய “பறத்தலின் போதும் ஒவ்வொரு முறை புதிதாக விளையாடும் போதும் ஏராளமான பாவனைகள், புதுப்புதுக் கற்பனைகள், புதிது புதிதாக விளையாடுகிறோம், ஏனெனில் களைப்பேற்படுவதேயில்லை”.

இன்று எங்கள் பள்ளி வாழ்வின் இருபதாவது நாளன்று, நான் பதினைந்தாவது ருஷ்ய மொழிப் பாடத்தை நடத்துகிறேன். “இது என்ன” என்ற வழக்கமான கேள்வியை நான் இந்த வகுப்புகளில் கேட்பதுமில்லை, “இது நாற்காலி… இது மேசை. இது பெஞ்சு…” என்ற வழக்கமான பதில்களை அவர்கள் சொல்வதுமில்லை. குழந்தைக்கு மேன் மேலும் நிறைய சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால் பேசுவதற்கு சொற்கள்தான் அடிப்படையா என்ன? ஒரு கட்டிட வேலை நடக்குமிடத்தில் கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் (செங்கற்கள், மணல், சிமெண்ட்) உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இவையின்றி, இன்னும் சில இன்றி நிச்சயமாக வீடு கட்ட முடியாது. ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும்? ஆம், இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும். நம் விஷயத்தில் இது வார்த்தைகளையும் மொழிச் சாதனங்களையும் பேச்சாக இணைக்கும் திறமையாகும். இது இல்லாவிடில் பேச முடியாது. இது மேசை, இது நாற்காலி” என்பதெல்லாம் கட்டிடம் கட்டுமிடத்தில் உலாவும் மனிதன் “இது செங்கல், இது மணல்” என்பதற்குச் சமம். ஆனால் அவன் இவற்றை எப்பெயரிட்டு அழைத்தாலும் எவ்வளவு முறை திரும்பச் சொன்னாலும் வீடு தானாக வராது. எனவேதான் பொருட்களைப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் வார்த்தைகளை சேமிக்கும் வழியை நான் நிராகரித்தேன்.

குழந்தை ருஷ்ய மொழியை தனித்தனியாகக் கேட்கக் கூடாது, மொத்தமாக, இதன் இயக்கத்தில், செழுமையில் கேட்க வேண்டும். இந்த முழுமையைத்தான் நான் மொழி நுட்பம் என்கிறேன். ஆசிரியருடனான உரையாடல், தம்மிடையே கலந்து பேசுவது, விசேஷ பேச்சுப் பயிற்சிகள் முதலியன குழந்தைகள் மிகச் சிறப்பாக ருஷ்யப் பேச்சைப் புரிந்து கொள்ள உதவுகின்றன…

...குழந்தைகள் தம் ருஷ்ய மொழி நோட்டுப் புத்தகங்களைத் திறந்தனர் (ஆம், எங்களிடம் இத்தகைய நோட்டுப் புத்தகங்கள் உள்ளன, இவற்றில் பல “குறிப்புகள்”, படங்கள், வரைபடங்கள் இருக்கின்றன.) பேனாக்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

பேசுவதற்கு சொற்கள் தான் அடிப்படையா என்ன? … ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும்? … கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் … இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும்.

“இன்று நாம் நடத்தல் எனும் வார்த்தையைப் பார்போம், இந்த வார்த்தையை வைத்து வாக்கியங்களையும் சிறு கதையையும் உருவாக்குவோம்!” என்கிறேன் நான்.

எல்லோரும் சரிவர வாக்கியங்களை அமைக்கவில்லை, குறிப்பாகச் சரியாக உச்சரிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் உதவ நான் விரைகிறேன். இந்த உதவி பல்வேறு வகைப்பட்டது: சில சமயங்களில் இப்படிச் சொல்லத்தானே நீ விரும்பினாய்?” என்று கேட்டு உதவுகிறேன்; “இப்படிச் சொல்ல வேண்டும். எங்கே திரும்பச் சொல்!” என்று சில சமயங்களில் திருத்துகிறேன்; பல சமயங்களில் குழந்தைகளிலேயே யாரையாவது உதவும்படி வேண்டுகிறேன்: “இலிக்கோ, உனக்கு தான் ருஷ்ய மொழி நன்கு தெரியுமே! இதை எப்படி சரியாகச் சொல்வது?..” இலிக்கோ தன் நண்பர்களைத் திருத்துவான், வாக்கியங்களை எப்படி உருவாக்கி, உச்சரிப்பதென விளக்குவான்.

பின்னால் சிக்கலான வேலை உள்ளது: தாம் உருவாக்கிய வார்த்தைகளின் நுட்பமான உட்பொருள்களை அவர்கள் புரிந்து கொள்ளவும் இச்சொற்களில் எல்லாவற்றையும் பேச்சில் பயன்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவ வேண்டும்.

படிக்க:
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்
முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் தங்கு தடையின்றி உற்சாகமாக ருஷ்ய மொழியில் பேச ஆரம்பிப்பார்கள். உதாரணமாக, மார்ச், ஏப்ரலில் லேலா இடைவேளை சமயத்தில் என்னிடம் வந்து விலங்கியல் பூங்காவில் (அல்லது சர்க்கசில்) எவ்வளவு சுவாரசியமாக இருந்தது, சென்ற சனிக்கிழமையன்று எப்படிப்பட்ட சிரிப்பான சம்பவம் நடந்தது என்று சொல்வாள். அவள் ருஷ்ய மொழியில் பேசுவாள், சில சமயம் ஜார்ஜிய சொற்களைப் பயன்படுத்தினாலும் அவற்றைக் கவனிக்க மாட்டாள். எங்கள் வகுப்புகளில் இவர்கள் குறைகளற்று சரியான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்களுடன் பேசுவார்கள் என்றெல்லாம் நான் உறுதியளிக்கவில்லை. ஆனால், அவர்கள் ருஷ்ய மொழியைப் பயிலுவது குறித்து மகிழ்ச்சியடைவார்கள், இம்மொழியில் உரையாட முயலுவார்கள். இதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க