அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 17

கூடுதல் பள்ளி நேரம்: பன்முக நடவடிக்கை

திங்கட்கிழமை முதல் கூடுதல் பள்ளி நேரம் ஆரம்பமாகும். அதாவது வகுப்புகள் முடிந்த பின் குழந்தைகள் 6-7 மணி நேரத்தைப் பள்ளியில் கழிப்பார்கள். இந்நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? அவர்கள் பள்ளியில் சலிப்போடு உட்கார்ந்திருக்க விடக்கூடாதல்லவா!

தான் வளர்க்கப்பட வேண்டுமெனக் குழந்தை விரும்புகிறான் என நான் நம்புகிறேன். ஆனால் அக்குழந்தையால் இதை வாய்விட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் இதை அவன் இன்னமும் முழுமையாக உணரவில்லை. ஓய்வு நேரம், என்றழைக்கப்படுவதை அவன் விரும்புவதில்லை. இச்சமயத்தில் என்ன செய்வதென அவனுக்குத் தெரியாது. குழந்தை சும்மாயிருக்கலாம் என்றால் என்ன பொருள்? விரும்பமானதைச் செய் என்று பொருளா? ஆனால் அவன் என்ன விரும்புகிறான் என்பது அவனுக்கு என்ன வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது.

குழந்தை ஓடியாடித் திரியும் தன்மையுள்ளவன், சுறுசுறுப்பானவன். என்ன செய்வது என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாவிடில் சுதந்திரம், ஓய்வு நேரம் என்பதெல்லாம் அவனைப் பொறுத்தமட்டில் ஒன்றையுமே குறிப்பதில்லை. கூடுதல் பள்ளி நேரத்தின் போது பல்வேறு விதமான, உணர்ச்சிகரமான, புதியவற்றை அறியும் விஷயங்களுக்கும் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யாவிடில் குழந்தைகளுக்குச் சலிப்பேற்படுமென நான் உறுதியாக நம்புகிறேன். குழந்தைகளுக்குப் பிடித்தவற்றைச் செய்யவல்ல உற்சாகமான, அன்பான ஆசிரியர்களுக்காக அவர்கள் ஏங்குவார்கள். நாள் பூராவும் குழந்தைகள் குறிப்பிட்ட நோக்கமின்றி ஓடியாடி, அலைந்து திரிந்து, சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் முற்றிலுமாக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர், இவையெல்லாம் அவர்களுடைய முழுத் திருப்தியின் வடிவம் என்று யாரும் எண்ண வேண்டாம். பல விதங்களில் சலிப்பை வெளிப்படுத்தலாம், விஷயமின்றி குழந்தை அங்குமிங்கும் அலைந்து திரிந்தால் அவன் தன் சலிப்பை இதன் மூலம் வெளிப்படுத்துகிறான் என்று என்னால் நிச்சயம் கூற முடியும்.

எனது சக ஆசிரியர்களைப் போன்றே நானும் என் வகுப்புக் குழந்தைகளைப் பன்முக ரீதியாக வளர்க்க முயல்கிறேன், அவர்களின் அறிவு, உழைப்பு, தார்மிக, மானுட, அழகியல், உடற்கூறு வளர்ச்சிக்குப் பாடுபடுகிறேன். குழந்தையிடம் உருவாகும் மனநிலையில் இந்த அம்சங்கள் அனைத்தும் சீரிசைவாக இணைய வேண்டும், பரஸ்பரம் செயலாக்கம் புரிய வேண்டும் (ஏனெனில் மனநிலை என்பது மேற்கூறிய பண்புகளின் வெறும் கூட்டல் அல்ல, இது சீரிசைவான முழுமை) என்று விழைகிறேன். எனது இந்த ஆசை எதார்த்தமாக பன்முக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மீது அக்கறை காட்டுகிறேன். இவற்றில் எனது ஆறு வயதுக் குழந்தைகள் பங்கேற்கலாம், ஏனெனில் நடவடிக்கை தான் வளர்ச்சிக்கும் மனிதன் உருவாவதற்கும் தேவையான நிபந்தனையாகும்; ஒன்றுடன் ஒன்று செயல் நோக்கமுள்ள வகையில் தொடர்பு கொண்ட நடவடிக்கைகள் மட்டுமே சீரிசைவான, பன்முக வளர்ச்சிக்கான நிபந்தனையாக முடியும்.

ஆசிரியர்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது – குழந்தைகளுக்கு உற்சாகமான கூடுதல் பள்ளி நேரத்தை அளிக்க இயலாது. எங்களுக்கு உதவி வேண்டும். எந்த விதமான உதவி வேண்டும்? யாரிடமிருந்து?

பெற்றோர்களிடமிருந்து உதவி வேண்டும். பாடங்கள் முடிந்த பின் என் வகுப்புக் குழந்தைகளின் கூடுதல் பள்ளி நேரத்தை சிந்தித்துப் பார்க்கிறேன்: இந்த வகுப்பறையில், தாழ்வாரத்தில், பள்ளி முற்றத்தில், பூங்காவில் எப்படியிருக்குமென யோசித்துப் பார்க்கிறேன். அவர்களுடன் எப்படி பொழுதைக் கழிக்கலாம்?

வகுப்பறையில் மேசைகள் அகற்றப்பட்டு விட்டன. அறையின் நடுவில் நாற்காலிகள் மட்டும் அரை வட்ட வடிவத்தில் போடப்பட்டுள்ளன. சிலர் உட்கார்ந்திருக்கின்றனர்,

சிலர் நிற்கின்றனர். குழந்தைகளிடம் மரக் கரண்டிகள், முக்கோணங்கள், கஞ்சிரா, பேரிகைகள், கிசிலோஃபான் எனும் இசைக் கருவி முதலியன உள்ளன. இது சந்த இசைக் குழு. கோச்சாவின் தந்தையாகிய வலேரி மாமா உருவாக்கியுள்ள இசை நாடகத்தை இவர்கள் நடத்துகிறார்கள். சமீபத்தில் தான் இவர் என்னிடம் வந்து, “வீரமுள்ள முயல்” எனும் இசை நாடகத்தைத் தான் எழுதியுள்ளதாக மகிழ்ச்சியோடு அறிவித்தார்; சில பாடல்களைப் பாடிக் காட்டினார். அவை எனக்குப் பிடித்திருந்தன, சந்தமும் இசைநயமும் உள்ளவையாக, பாட எளிமையானவையாக இருந்தன. குழந்தைகளுக்கு இசை வகுப்புகள் நடத்தவும் இசைக் குழுவை தோற்றுவிக்கவும் இவர் ஒப்புக் கொண்டார். இந்த உற்சாகமான, இசைநேயமுள்ள மனிதர், அதிசயமான இசையுலகை குழந்தைகளுக்குத் திறந்துகாட்ட முயலுகிறார். இந்தக் கூடுதல் பள்ளி நேரத்தில் நடக்கப் போவதை நான் இப்படித்தான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

“நாம் இப்போது எந்த காட்சியை நடித்துக் காட்டுகிறோம்?”

“வீரம் மிக்க முயல் சிங்கத்திடம் செல்ல இருக்கையில் மற்ற மிருகங்கள் இதை வழியனுப்புகின்றன.”

“நமது இசைக்கருவிகள், பாடல் எதை வெளிப்படுத்த வேண்டும்?”

”மற்ற மிருகங்கள் முயலின் மீது இரக்கம் காட்டுகின்றனவா?”

“முயலை விட்டுப் பிரிவது குறித்து மற்ற மிருகங்கள் – கவலை கொள்கின்றன.”

“நாம் துக்கத்தை, வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், முயல் ஒருவேளை திரும்பாமல் இருக்கலாம்.”

”நீ உனது கிசிலோஃபான் கருவியில் இதை எப்படி வாசிப்பாய்? பேரிகையில்….. இப்படியில்லை, நாம் இசையின் மூலம் அச்சத்தையும் முயலுக்கான கவலையையும் வெளிப்படுத்த வேண்டும். தயாரா…”

இசைக்குழு இசைக்க, வலேரி மாமா கையை ஆட்டி, சைகை காட்டி, குரல் எழுப்பி இசைக்குழுவை வழி நடத்துகிறார்.

“நான் இப்போது உங்களுக்குச் சிறிது வாசித்துக் காட்டட்டுமா?” என்று இறுதியில் அவர் குழந்தைகளைக் கேட்டுவிட்டு, பியானோ முன் அமருகிறார். குழந்தைகள் அவரைச் சுற்றிக் குழுமுகின்றனர்.

“இன்னமும் கொஞ்சம் வாசியுங்கள்!” என்கின்றனர் குழந்தைகள். அவர் இன்னமும் வாசிக்கின்றார். குழந்தைகளுக்கோ வலேரி மாமாவை விடவே விருப்பமில்லை…..

லேவானின் தந்தையாகிய நுக்ஸார் மாமாவும் குழந்தைகளிடம் வருவார். இவரும் உற்சாகமானவர், அன்பானவர், இளைஞர், ஒப்பேரா, பாலே நாடகமன்ற நாட்டியக் கலைஞர்.

“உங்களுக்கு நாட்டிய மொழியைச் சொல்லித் தரட்டுமா?” குழந்தைகளுக்கு விருப்பம்தான்: நாட்டியமும் புன்சிரிப்பு மிக்க இளைஞரும்.

“நான் இப்போது உங்களுக்கு என்ன சொல்லப்போகிறேன் தெரியுமா?” என்று அவர் அங்கேயே சில நடன அம்சங்களைச் செய்து காட்டுவார்.

பின்னர் இவர் குழந்தைகளை வட்டமாக நிற்கச் செய்து பாலே நடன அம்சங்களைச் சொல்லித் தர ஆரம்பிப்பார். நுக்ஸார் மாமா கண்டிப்பானவர், ஒரே மாதிரியான பாவனையைப் பன்முறை செய்து காட்டும்படி செய்வார் என்ற போதிலும் குழந்தைகளுக்கு இந்த வகுப்புகள் பிடிக்கும். களைப்படைவார்களா? களைப்படைந்தால் நீக்ஸார் மாமா இவர்களை வட்டமாக உட்கார வைத்து நடனங்களைப் பற்றி சுவாரசியமான கதைகளைச் சொல்லுவார், எல்லோருக்கும் புரியக் கூடிய இந்த வியத்தகு “நடன மொழி” பற்றிக் கூறுவார்.

“ஞாயிற்றுக்கிழமை ஒப்பேரா, பாலே அரங்கின் காலைக் காட்சிக்கு வாருங்கள். நான் நடனமாடப் போகிறேன். பின்னர் உங்களுக்கு என்ன பிடித்தது, என்ன பிடிக்கவில்லையென்று சொல்லுங்கள்…”

நீனோவின் தந்தையாகிய கீவி மாமாவுடன் பேசுவதும் சுவாரசியமாக இருக்கும். இவர் பொம்மலாட்ட அரங்கில் பணிபுரிகிறார். மழை பெய்யும் போது வீதியில் மனிதர்கள் எப்படி நடப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறி துவங்குவார். லேலா வெட்கப்படுகிறாள். ஏல்லாவிற்கு விருப்பமில்லை. மாக்தாவிற்கு சரியாக வரவில்லை. மாயாவோ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு அறையில் அங்குமிங்கும் நடந்து காட்டுகிறாள்.

“மழையில் இப்படியா நடப்பார்கள்?” என்று பார்வையாளர்கள் மறுப்பு தெரிவிப்பார்கள்.

லேரி தலையைப் பத்திரிகையால் மூடியபடி “நடை பாதை” விளிம்பில் கவனமாக நடக்கிறான். அவன் முற்றிலுமாக நனைந்து விட்டான், வழுக்கி, “குட்டையில்” வேறு விழுந்து விட்டான், எழுந்திருக்க முயன்று மீண்டும் விழுகிறான்; யாரோ அவனுக்கு எழ உதவுகின்றனர்; அருகேயுள்ள வீட்டு வாசலை நோக்கி ஓடுகிறான், அங்கே கும்பலாயிருந்தாலும் மழை கிடையாது.

கற்பனையான ஊமை நாடகம் மகிழ்ச்சிகரமானது, எல்லோருக்கும் புரியக் கூடியது. குழந்தைகள் சிரிக்கின்றனர், கை தட்டுகின்றனர். கீவி மாமாவும் நடித்துக் காட்டுகிறார்.

“நான் யார் மாதிரி நடிக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று அவர் செய்து காட்டுகிறார்.

“முதியவர் மாதிரி!”

“சரி, இப்போது?”

“நீங்கள் இளைஞர்கள் இருவர்களைப் போல் நடித்தீர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர்!”

“இப்போது?”

குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். கீவி மாமா சிறுமியைப் போல் நடித்தாரென சிலரும், நாயுடன் உள்ள சிறுவனைப் போல் நடித்தாரென வேறு சிலரும் கூறுகின்றனர். ஆனால் லேரி மட்டுமே கண்டு பிடித்தான்:

“நீங்கள் ஒரு சிறுமியைப் போல் நடித்தீர்கள். ஆனால் அவள் மழையில் நடக்கவில்லை, மாறாக சூரியன் பிரகாசிக்கும் சூழலில் இருக்கிறாள்.”

பின் கீவி மாமா மகிழ்ச்சிகரமான ஒரு கவிதையை சோகமயமான குரலில் படித்து, தான் படித்தது சரியா, இல்லையெனில் ஏன் என்று கேட்பார். பாடம் முடிவை நெருங்கும். ”நீங்கள் நாடக மொழியைக் கற்பீர்கள்” என்று விடை பெறுகையில் குழந்தைகளைப் பார்த்து கீவி கூறுவார்.

இந்த இசை, நாட்டிய, நுண்கலை, நாடக வகுப்புகள் குழந்தைகளின் அழகியல் உணர்வையும் ரசனையையும் வளர்க்கும். “தன்னை வெளிப்படுத்தும் போது மனிதன் வளருகிறான். தன் உணர்வுகளைப் பாடலில், நடனத்தில், ஊமை நாடகத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் மனிதன் தன்னை நன்கு உணருகிறான்” என்று சோவியத் ஆசிரியரியலின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகிய நதேழ்தா கான்ஸ்தன்தீனவ்னா குரூப்ஸ்கயா கூறினார்.

தனிப்பட்ட கலைகளைப் பயிற்றுவிப்பதன் சாரத்திற்குப் பொது அடிப்படை இருக்க வேண்டுமென நான் யோசிக்கிறேன். எது இப்படிப்பட்ட அடிப்படையாக இருக்க முடியும்? சய்கோவ்ஸ்கியின் இசைத் தட்டைப் போட்டு இதற்கேற்ப மனதில் தோன்றுவதை வரையும்படி குழந்தைகளிடம் சொல்லலாமா? இது நல்லது. என்றாலும் இசை, வரைதல், நடனம், நாடகம் (இவற்றையெல்லாம் ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கூடுதல் பள்ளி நேரத்தில் சொல்லித்தர விரும்புகிறேன்) ஆகியவற்றை இணைப்பது எது?

இதில் பிரச்சினை எதுவும் இருக்கக்கூடாது. எல்லா விஞ்ஞானங்களையும் போன்றே எல்லா வகையான கலையம்சங்களுக்கும் பொதுவானது யதார்த்தமாகும். ஆனால் கலை பிரதிபலிக்கும் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனியான பட்ட மரம் ஒன்றை ஓவியர் வரைகிறார். இதில் ஒரேயொரு இலை மட்டும் எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கிறது. ஓவியர் இதில் எதை பிரதிபலிக்கிறார்? இந்த மரத்தை இந்த இலையுடன் காட்டவா இவர் விரும்பினார்? ஒரு இசையமைப்பாளர் இசையை அமைக்கும் போது ஒலிகளின் இணைப்புதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதா?

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

உண்மையான கலைப் படைப்புகள் எல்லாவற்றிலும் மனிதர்களின் பால், இயற்கையின் பால், தன்மீது, மொத்தமாக வாழ்க்கையின்பால் தனி நபருக்குள்ள உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிகரமான உறவு பிரதிபலிக்கிறது. சிம்பனி இசை, சித்திரம், உடலின் வளைவு, நெளிவுகள் இவையெல்லாம் மனித மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள், நாட்டங்களின் பல்வேறு விதமான வெளிப்பாடுகளாகும். ஒவ்வொரு கலைப் படைப்பிலும் யதார்த்தம் – கலைஞன், இவனுடைய உலகக் கண்ணோட்டம், போராட்டம் – உருக்கொண்டு நிற்கிறது. ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு விதத்தில் – ஒலி, வண்ணம், நெளிவு சுழிவுகள் மூலம் – இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது…. கலைப் படைப்பைப் புரிந்து கொள்ள இந்தக் கலையின் மொழி தெரிந்திருக்க வேண்டும், எப்படி கிரகிப்பது, எப்படிக் கேட்பது, எப்படிப் படிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க