2019 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தள் கூட்டணி நாற்பதில் முப்பத்தொன்பது தொகுதிகளை வென்றதற்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்களும் ஒரு காரணமென்று கூறப்பட்டது. சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சியின் அருகதை என்ன என்பதை அம்மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த இளஞ்சிறார்களின் மரணம் அம்பலப்படுத்திவிட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் அம்மாநிலத்தைத் திடீரெனத் தாக்கிய ஒருவித மூளை அழற்சி நோயினால் ஏறத்தாழ 500 சிறுவர்கள் இறந்து போயிருக்கக்கூடும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பீகார் மாநில அரசு இம்மூளை அழற்சி நோயினால் 824 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களுள் 157 சிறுவர்கள் மட்டுமே இறந்துபோனதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. இம்மூளை அழற்சி நோயின் மையப் பகுதியாக இருந்த முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 150- மேற்பட்ட சிறுவர்கள் இறந்து போனதைச் சமூக அக்கறையுள்ள மருத்துவர்கள் அம்பலப்படுத்திய பிறகும், அம்மாநில அரசு சாவு எண்ணிக்கையைத் துணிந்து குறைத்துக் காட்டிவருகிறது. உண்மையான புள்ளிவிவரங்களைத் தமக்குச் சாதகமாக மறைத்தும், கூட்டியும், குறைத்தும் காட்டுவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கைவந்த கலை என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.

இம்மூளை அழற்சி நோய் மருந்து மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத கொள்ளை நோயும் அல்ல; குணப்படுத்த முடியாத மர்ம நோயும் அல்ல. ஒரு முப்பது ரூபாய் பெறுமான டெக்ஸ்ட்ரோஸ் என்ற திரவ மருந்தைப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நரம்பு வழியாகச் செலுத்தியிருந்தால், பெருவாரியான சிறுவர்களை, ஏன் அத்துணை சிறுவர்களையும்கூடக் காப்பாற்றியிருக்க முடியும். அம்மலிவான மருந்தைக்கூட வாங்கிக் கையிருப்பில் வைத்திருக்காமல் இயங்கி வந்திருக்கின்றன அரசு மருத்துவமனைகள். எனவே, இச்சாவுகளை அரசின் அலட்சியத்தால் விளைந்த கொலைகள் என்றே கூறலாம்.

சிறுவர்கள் வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டதால்தான் மூளை அழற்சி நோய் ஏற்பட்டு மரணமடைய நேரிட்டதாகக் கூறிவருகிறது நிதிஷ் குமார் அரசு. பன்றிக் காய்ச்சலுக்குப் பன்றிகளைக் குற்றஞ்சுமத்துவது எந்தளவிற்கு நகைக்கத்தக்கதோ, அது போன்றது பீகார் அரசு கூறியிருக்கும் காரணம்.

பா.ஜ.க. கூட்டணி மெச்சிக்கொள்ளும் பீகார் வளர்ச்சியின் இலட்சணம் : ஒரே படுக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் அவலம்.

கடுமையான கோடைக் காலம், அப்பருவத்தில் பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டப் பகுதிகளில் விளையும் லிச்சிப் பழங்கள், சிறுவர்களின் அகால மரணங்கள் – இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றபோதும், இந்த மரணங்களுக்கான அடிப்படையான காரணம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் நிலவும் வறுமையும் ஏழ்மையும்தான்.

லிச்சிப் பழங்கள் உண்ணத் தகுந்தவைதான் என்றபோதும், அப்பழங்களை ஆரோக்கியமில்லாத குழந்தைகள், அதாவது தினந்தோறும் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறைப் பட்டினியால் வாடும் குழந்தைகள் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்கிறது, மருத்துவ அறிவியல். அப்படி உண்டுவிட்டால், அப்பழங்களில் சுரக்கும் ஒருவித இரசாயனம் இரத்தத்திலுள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) அளவைக் குறைத்துவிடும். அரைகுறைப் பட்டினியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் இயக்கம் குறைந்த சர்க்கரையை ஈடுகட்டும் அளவிற்கான சர்க்கரையை வளர்சிதை மாற்றத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக அக்குழந்தைகளின் மூளை இயக்கம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்று மரணித்துவிடுகின்றன. இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயின் அறிகுறிகள் தென்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து, அவர்களுக்கு 10% டெக்ஸ்ட்ரோஸ் என்ற மருந்தை நரம்பு வழியாகச் செலுத்தித் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தால், அவர்களைச் சாவிலிருந்து காப்பாற்றிவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பீகார் மாநில அரசு முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளின் பட்டினியையும் போக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் அம்மலிவான மருந்தையும் வாங்கி வைக்கவில்லை. விளைவு, கொத்துக்கொத்தாக சிறுவர்களின் அகால மரணங்கள்.

♦♦♦

பீகார் மாநிலமே மிகவும் பின்தங்கிய, வறுமை நிறைந்த மாநிலம் என்றாலும், ஜூன் மாதத்தில் நடந்த குழந்தைகளின் மரணங்கள் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் அதிகம் நடந்திருக்கின்றன. இதற்குக் காரணம் அம்மாவட்டத்தில் வறுமையும் பட்டினியும் தாண்டவமாடும் அளவிற்கு லிச்சித் தோட்டங்களும் நிறைந்துள்ளன.

லிச்சித் தோட்டங்கள் ஆதிக்க சாதியான பூமிகார் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமானவை. லிச்சிப் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும் மே, ஜூன் மாதங்களில் பழங்களைப் பறிப்பது, அவற்றைத் தரம் பிரித்து வகைப்படுத்துவது ஆகிய வேலைகளைச் செய்வது மல்லா, சாஹ்னி, மஜ்ஹி, சமர், பஸ்வான் ஆகிய தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள். மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன சிறுவர்களுள் ஆகப் பெரும்பான்மையானவர்கள் இந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான்.

இப்பெண்கள் லிச்சிப் பழங்களைப் பறிப்பதற்கு அதிகாலை நான்கு மணிக்குத் தோட்டத்திற்குச் சென்று காலை பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்கள். இதற்கு இவர்களுக்குக் கிடைக்கும் கூலி அதிகபட்சமாக அறுபது ரூபாய்தான். அறுவடை முடிந்துவிட்டால் இந்தக் கூலியும் கிடைக்காது. உள்ளூரில் இருந்தால் வயித்தைக் கழுவக்கூட வருமானம் கிடைக்காது என்பதால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் கூலித் தொழிலாளர்கள் வேலை தேடி டெல்லி வரையிலும் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இதனால் அம்மாவட்டத்திலுள்ள அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் குடும்பங்களில் மூன்று வேளை உணவு என்பது குதிரைக் கொம்பு போன்றது.

முசாஃபூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்க்க வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்.

பெண்கள் பழங்களைப் பறிப்பதற்குத் தோட்டங்களுக்குச் செல்லும்போது சிறுவர்களும் அவர்களோடு கூடவே செல்வதும், தோட்டத்தில் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதும் வழமையாக நடைபெறுகின்ற நிகழ்வு. ஆனால், காலையில் பழங்களைச் சாப்பிட்ட சிறுவர்களுள் யார் யாருக்கெல்லாம் அன்றிரவு போதிய உணவு கிடைக்கவில்லையோ, அச்சிறுவர்கள் மறுநாள் அதிகாலையில் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படுவது உறுதி. இப்படித்தான் இந்நோய் முசாஃபர்பூர் மாவட்டத்தைத் திடீர்ச் சூறாவளி போலத் தாக்கியிருக்கிறது.

மருத்துவ அவசர ஊர்திப் பற்றாக்குறை, குழந்தை மருத்துவர் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை – இப்படிப் பல பற்றாக்குறைகளின் காரணமாகவே முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் கிட்டதட்ட 150 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போயுள்ளன. இந்நோய் தாக்கிய மற்ற பகுதிகளில் இறந்த சிறுவர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால், அது 500- தொடும் என்பது மருத்துவர்களின் கணக்கு.
இவ்வகையான மூளை அழற்சி நோய் பீகார் மாநிலத்தைத் தாக்குவது இது முதன்முறையல்ல. 1995 ஆண்டு தொடங்கியே கடந்த 24 ஆண்டுகளாக இந்நோய் கோடைப் பருவத்தில், லிச்சிப் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும் வேளையில் சிறுவர்களைத் தாக்கிக் காவு கொண்டுவருவதாக மருத்துவர்கள் அருண்ஷா, ஜேகப் ஜான், முகுல்தாஸ் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 1995-க்கு முன்பாகவும் மரணங்கள் நடந்திருக்கலாம், ஆனால், அது தொடர்பாக எந்தவொரு பதிவுகளும் இல்லை என்கிறார்கள் அம்மருத்துவர்கள். 2012 தொடங்கி 2018 முடிவுள்ள ஏழு ஆண்டுகளில் இந்நோய்க்கு 292 சிறுவர்கள் பலியாகியிருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க:
காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

இந்த நோய்க்கு இப்படியொரு நீண்ட வரலாறு இருந்தாலும், பீகார் மாநில அரசு இந்நோய்க்கான அடிப்படைக் காரணம் என்ன, அதனை ஒழிப்பதற்கு சமூகரீதியாகவும் மருத்துவரீதியாகவும் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனும் விதத்தில் எந்தவொரு முயற்சியையும் இதுநாள்வரை எடுக்கவில்லை. அதேசமயத்தில் மருத்துவர்கள் அருண் ஷா, ஜேகப் ஜான், முகுல்தாஸ் ஆகிய மூவரும் தமது சொந்த முயற்சி மற்றும் நிதி ஆதாரங்களைக் கொண்டு இந்நோய்க்கும் பட்டினிக்கும், இந்நோய்க்கும் லிச்சிப் பழங்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்து, அதனை அறிக்கையாக மருத்துவ இதழ்களில் வெளியிட்டுள்ளனர். மைய அரசும் அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வும் மேற்சொன்ன மருத்துவர்கள் நடத்திய ஆய்வு முடிவுகளை உறுதி செய்திருக்கிறது.

இந்நோயை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் இம்மருத்துவர்கள். குறிப்பாக, நோய் தாக்கக்கூடிய பருவத்திலாவது சிறுவர்களுக்கு இரவு நேரங்களில் சூடான, சத்தான உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். இரண்டாவதாக, நோய் தாக்கக்கூடிய பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, நோய்த் தாக்கக்கூடிய பருவத்தில் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கோரும் இம்மருத்துவர்களது அறிக்கை, இறுதியாகத்தான் மருத்துவ வசதிகளைப் பற்றிப் பேசுகிறது. அதிலும்கூட, மாவட்டத் தலைமை மருத்துவமனைகளைவிட ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவது, மருத்துவர் தொடங்கி காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும் எனக் கோருகிறது.

பீகார் மாநில அரசோ இப்பரிந்துரைகளுள் எந்தவொன்றையும் உருப்படியாக நடைமுறைப்படுத்த வில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் கோடைப் பருவத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக்கூட நடத்தவில்லை. காரணம், ஆளுங்கட்சிக் கூட்டணியும் அரசு இயந்திரமும் தேர்தல் வேலைகளில் இறங்கி, மக்களைக் கைவிட்டுவிட்டன.

தேசிய ஊரக சுகாதாரத் திட்டம், மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், பொது விநியோகத் திட்டம், குழந்தைகளின் சத்துக் குறைவின்மை திட்டம் என விதவிதமான திட்டங்கள் ஏழைக் குழந்தைகளின் நலன்களுக்காக பீகாரில் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், ஒன்று அந்தத் திட்டங்கள் வெறும் ஏட்டளவில் உள்ளன அல்லது ஊழலுக்குப் பயன்படுகின்றன என்பதுதான் உண்மை.
எடுத்துக்காட்டாக, துணை சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் சூடான உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியில் 71 சதவீதமும்; இத்திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 38 சதவீதமும் சுருட்டப்படுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார் மும்பையைச் சேர்ந்த மருத்துவரும் இந்திய மருத்துவர் இதழின் ஆசிரியருமான சோஹம் டி.பாதுரி.

இந்நோய் கொத்துக்கொத்தாக பீகார் மாநிலக் குழந்தைகளைக் காவுவாங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் மைய அரசு தனது பட்ஜெட்டைத் தயாரித்துக் கொண்டிருந்தது. எனினும், ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்நோயை ஒழிப்பது குறித்து எந்தவொரு வார்த்தையும் கிடையாது.

மூளை அழற்சி நோயால் பீகார் மாநிலக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக இறந்துகொண்டிருந்த வேளையில் மோடி அரசும், பா.ஜ.க. கட்சியும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதை நினைவுப்படுத்திப் பாருங்கள். குழந்தைகள் மரணத்தைப் பேரிடராகவோ, உடனடியாகக் கவனம் கொடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சினயாகவோ அவர்கள் கருதவில்லை. மாறாக, அச்சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவரை முசுலீம் நோயாளியின் உறவினர்கள் தாக்கியதைத் தேசியப் பிரச்சினையாக உருமாற்றி, மம்தா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தார்கள். பீகார் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதைவிட, மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.

♦♦♦

2022-ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுள் 31.4 சதவீதக் குழந்தைகள் நோஞ்சான் குழந்தைகளாக இருக்கும்.

த்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் சவலைப் பிள்ளைகளாக வளரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருந்தாலும், உண்மையில் இது நாடு தழுவிய பிரச்சினையாகும். இந்திய அரசும் ஐ.நா.சபையின் சர்வதேச உணவுத் திட்டக் கழகமும் இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளுள் ஒரு குழந்தை, அதாவது இந்தியக் குழந்தைகளுள் 31.4 சதவீதக் குழந்தைகள் சத்தான உணவின்றி நோஞ்சான் குழந்தையாக வளரும் என்றும், இதனை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டுமெனில், தற்போது சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அறிக்கையை வெளியிட்டிருக்கும் மோடி அரசு அதற்குப் பொறுப்பாக நடந்துகொள்ள மறுப்பதை, பட்ஜெட் ஒதுக்கீடுகளே எடுத்துக்காட்டுகின்றன. பீகார் உள்ளிட்டு, இந்திய நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதைப் பற்றிப் பேச மறுக்கும் மோடி, அதற்கு மாறாக, 2024-ல் 350 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றப் போவதாக உதார்விட்டு வருகிறார். கேக்கை எந்தளவிற்குப் பெரிதாகச் செய்கிறோமோ, அந்தளவிற்கு கேக்கின் பங்கு அனைவருக்கும் கிடைக்கும்” என இதற்கு உவமானம் சொல்கிறார்.

பிரெஞ்சு மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகூடக் கிடைக்காமல் போராட்டத்தில் குதித்தபோது, அந்நாட்டு மகாராணியாக இருந்த மேரி அண்டாய்னேட், ரொட்டி கிடைக்கவில்லையென்றால் என்ன? கேக் சாப்பிடுங்கள்” எனத் திமிராகவும் வக்கிரமாகவும் கூறினாளாம். பீகார் மாநிலக் குழந்தைகள் இரவில் ஒரு கவளம் சோறு கிடைக்காமல் செத்துப் போய்க் கொண்டிருக்கும் தருணத்தில், பிரதமர் மோடியோ இதோ கேக் தயாராகிக் கொண்டிருக்கிறது” என்றவாறு பேசி வருகிறார்.
அம்மகாராணியின் தலையை கில்லட்டினில் வைத்துக் கொய்து எறிந்தது, பிரெஞ்சு புரட்சி. மோடியை வரலாறு என்ன செய்யக் காத்திருக்கிறதோ?!

குப்பன்.

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க