கேள்வி : //மூடநம்பிக்கை, கடவுள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை பெரியார் கடுமையாக விமர்சித்தது மற்றும் கேள்வி கேட்டதை போல தற்கால தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லையே? ஏன்? எதனால்?//

– அறிவரசு

ன்புள்ள அறிவரசு,

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று அண்ணாதுரை காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிட்டது. கருணாநிதி உயிருடன் இருந்தபோது சில தருணங்களில் அவர் லேசாக நாத்திகப் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையின் போது அவர் எழுப்பியது ஒரு சான்று. அதனால்தான் விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் அவரது தலையை வெட்ட வேண்டும் என்று அப்போது பேசினார்கள். மேலும் இறக்கும் வரையிலும் அவர் பார்ப்பனப் பண்டிகைகளுக்கு (தீபாவளி போன்ற) வாழ்த்துச் சொல்வதில்லை. அவரது மறைவுக்கு பின்னர் திமுக-வில் அப்படி கொஞ்சமாக பேசக்கூட ஆள் இல்லை.

ADMK Mansoruஅதிமுக-வை ஒரு திராவிட இயக்கம் என்றே எடுத்துக் கொள்ள முடியாது. அம்மா காலத்தில் மண் சோறு சாப்பிட்டு அலகு குத்தி காவடியாட்டம் எடுத்தம் கட்சி அது. அம்மா காலத்திலும் சரி அடிமைகள் எடப்பாடி, ஓபிஎஸ் காலத்திலும் சரி அவர்கள் இந்துத்துவ பாஜக-வின் இயல்பான இளைய பங்காளியாக இருக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் பங்கேற்கும் இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் நாத்திகப் பிரச்சாரத்தை கையில் எடுப்பதில்லை. மட்டுமல்ல அப்படி பேசினால் இந்துக்களிடமிருந்து தாம் தனிமைப்படுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். திருவண்ணாமலை தீபத்திற்கும், தீபாவளிக்கும் தீக்கதிர் சிறப்பு மலரே வெளியிடுகிறது. இவர்களே இப்படி என்றால் மற்ற ஓட்டுக் கட்சிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

கட்சி பெயரில் திராவிடம், முற்போக்கு என்றெல்லாம் வார்த்தைகளை வைத்திருக்கும் விஜயகாந்த் நல்ல நேரம் பார்த்துத்தான் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அதுவும் சாமி முன் துண்டுச் சீட்டுகளை போட்டு பயபக்தியுடன் எடுக்கப்பட்ட பெயர்தான் தே.மு.தி.க. அத்திவரதருக்கு அதிக நேர தரிசனம் கேட்டதுதான் அவரது இப்போதைய அரசியல் கோரிக்கை. ரஜினியோ தனது அரசியலையே ஆன்மீக அரசியல் என்று அறிவித்து விட்டார். அதன் படி இவர் ஆர்.எஸ்.எஸ்., பாஜக வழி அப்பட்டமான இந்துத்துவ அரசியல் பேசக்கூடியவர். சீமானைப் பொறுத்த வரை நிறையவே தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆக பேசுகிறார். ஆகவே நாம் தமிழர் கட்சியும் ஆத்திகத்திற்கு ஆதரவான கட்சிதான்.

படிக்க:
கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?
♦ வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

திராவிடர் கழகம் பெரியார் கொள்கைகளை வெளியீடுகளாக கொண்டு வருகிறது, அவர்கள் பத்திரிகைகளில் எழுதுகிறது என்பதைத் தாண்டி மக்களிடையே ஊக்கமாக நாத்திகப் பிரச்சாரம் செய்வதில்லை. ஒரு வர்த்தக நிறுவனம் போல நிலைபெற்று விட்ட பின்னர் அவர்கள் அரசியல் அரங்கில் பேசுவதும் செய்வதும் குறைந்து விட்டது. இவர்களிடமிருந்து பிரிந்த பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவ்வப்போது நாத்திகப் பிரச்சாரத்தை அரசியல் ரீதியாக செய்கிறார்கள். விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் ஊர்வலத்தை நடத்துவது போன்று சில போராட்டங்களை செய்கிறார்கள்.

ம.க.இ.க போன்ற அமைப்புகளும் அரசியல் ரீதியாக இந்துத்துவத்தை எதிர்த்து இயக்கம் நடத்தும் போது இந்துமத மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். ராமன் பட எரிப்பு, திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தஞ்சை தமிழ் மக்கள் இசை விழா, அசுரகானம் போன்ற பாடல் ஒலிப்பேழைகள், தில்லையில் தமிழில் பாடும் போராட்டம் ஆகியவை சில சான்றுகள். எனினும் இவையெல்லாம் அத்திவரதருக்கும், குடந்தை மாகமகத்திற்கும் திரளும் பக்தர் வெள்ளத்திற்கு போதுமானவை அல்ல.

பெரியார் பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்த புராண, இதிகாச புரட்டுக்களை அம்பலப்படுத்துவது அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார். இன்று பாஜக – ஆர்.எஸ்.எஸ் அணி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. அவர்கள் தாம்தான் இந்துக்களின் ஏகபோக பிரதிநிதியாக மக்களிடையே பேசுகிறார்கள். உண்மையில் அவர்கள் பார்ப்பன மற்றும் சில ஆதிக்க சாதிகளின் பிரதிநிதிகள் மட்டுமே பெரும்பான்மையான ‘இந்துக்களுக்கு’ அவர்கள் பிரதிநிதி இல்லை என்பதை சமூகநீதி பேசும் கட்சிகள் உரத்துப் பேசுவதில்லை. அவ்வகையில் அவர்கள் இந்து மதத்தை விமர்சித்தால் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள்.

உண்மையில் இந்து மதம், இந்துக்கள் என்ற அடையாளம் இங்கே யதார்த்தத்தில் நிலவவில்லை. சாதிதான் இந்துமதத்தின் ஆன்மா. அவ்வகையில் ஆதிக்க சாதி சங்கங்களை ஆர்.எஸ்.எஸ் வளைத்துப் போட்டிருப்பதால் இங்கே ஆதிக்க சாதி வெறியர்களும் நாத்திகப்  பிரச்சாரத்திற்கு எதிராக இந்துத்துவத்தின் குரலை பேசுகிறார்கள். சென்னையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஆன்மீகக் கண்காட்சியில் பல்வேறு ஆதிக்க சாதி சங்கங்கள் கலந்து கொள்வது ஒரு சான்று. இப்படி சாதிவெறியும், மதவெறியும் சேர்ந்து இங்கே வளர்கிறது.

மொழி, பண்பாடு, பக்தி அனைத்திலும் பார்ப்பனியம் ஆதிக்கம் செய்கிறது என்ற உண்மையை பிரச்சாரம் செய்யும் போது அது இந்துக்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்துவதில்லை, மாறாக இந்துமதவெறி அமைப்புக்களைத்தான் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது. இந்த உண்மையை முற்போக்கு இயக்கங்கள் உணர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்யும் போது பெரியார் கொள்கைகளுக்கு இங்கே ஒரு தொடர்ச்சி இருக்கும்.

நன்றி!

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க