கேள்வி: //சீமான் அரசியலை எந்தெந்த அளவு கோள்களை கொண்டு மதிப்பிடுவது? அல்லது சீமான் அரசியலை பகுப்பாயவும்.//

– ராஜேந்திரன்

ன்புள்ள ராஜேந்திரன்,

ஏற்கனவே நீங்கள் “நாம் தமிழர்” பற்றிக் கேட்டிருந்தீர்கள். அப்போது நாம்தமிழர் கட்சி குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள், உங்களது சந்தேகம் என்ன என்று கேட்டிருந்தோம். அதற்கு நீங்கள் இப்போதும் பதிலளிக்கவில்லை. கேள்வி பதில் பகுதி பொருளுள்ள வகையில் அமைய வேண்டுமென்றால் உங்களைப் போன்ற நண்பர்கள் உண்மையிலேயே கேள்விகள், சந்தேகங்கள் கேட்டால் பதிலளிக்க பயனுள்ளதாக அமையும். பரவாயில்லை, இப்போது பதிலளிக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக சீமான் கருதுகிறார். நேர்காணல்களில் கட்சியையும் அவரையும் தொடர்புபடுத்தி ஏகப்பட்ட ‘நான்கள்’ வருகின்றன. அதனால்தான் பேரா. அருணனோடு நடந்த விவாதத்தில் சவால் விடும்போது சவாலில் தோற்றுவிட்டால் என் கட்சியை கலைத்து விடுவேன் என்றார். ஆகையால் நாம் தமிழர் கட்சியின் வாழ்வும் இருப்பும் சாவும் சீமானின் கையில்தான் இருக்கிறது. நாம் தமிழரின் நிரந்தரத் தலைவரும், தேர்தலில் வென்றால் ஒரே முதல்வரும் சீமான்தான். இது வாரிசு அரசியலுக்கு இணையான அரசியல்தான். கூட்டுத்துவம் இல்லாமல் ஒரு நபரை மட்டும் மையப்படுத்தி ஒரு கட்சி அல்லது இயக்கம் வளர்வது கடினம். அப்படியே வளர்ந்தாலும் அந்த வளர்ச்சியின் காலம் மிகவும் வரம்பிற்குட்பட்டது. இது முதல் விசயம்.

seemanவந்தேறிகள் ஆளக்கூடாது, தமிழன்தான் ஆளவேண்டும் என்று அனைத்து பிரச்சினைகளுக்கும் இனவாத அரசியலை முன்வைத்து உணர்ச்சியாக பேசுகிறார். யார் வந்தேறி, யார் தமிழன் என்ற கேள்வி தமிழ்ச் சாதிகள்தான் அதாவது ஆதிக்க சாதிகள்தான் தமிழர்கள் என்று வருகிறது. அந்த வகையில் அவருடைய தமிழ் தேசிய அரசியலில் சாதியம் கலந்திருக்கிறது. தமிழனுக்கு பொற்கால வரலாறு உண்டு, இன்று தமிழன் ஏமாந்து விட்டான், தமிழினத்தை மீட்க வேண்டும் என்பதையெல்லாம் நா புடைக்க, நரம்பு மிடுக்க அவர் பேசுகிறார். மேலோட்டமான அரசியல் புரிதலில் இருக்கும் மக்கள் பிரிவினரை இந்த உணர்ச்சிமயமான முழக்கம் ஆரம்பத்தில் ஈர்க்கும். மராட்டிய மாநிலத்தில் இப்படித்தான் “மதராசிகளை விரட்ட வேண்டும்” என்று பால் தாக்கரே பேசி தனது சிவசேனாவை வலுப்படுத்தினார். இன்று அந்த முழக்கம் அங்கேயே எடுபடுவதில்லை. சிவசேனாவும் பாஜக-வின் இளைய பங்காளியாக தேய்ந்து போனது. இது இரண்டாவது விசயம்.

சீமான் தனது மாற்று அரசியலாக தேர்தல் அரசியலையே முன்வைக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று தான் கூறும் மாற்று அரசியல் தீர்வுகளை அமல்படுத்துவேன் எனக் கூறுகிறார். அதன்படி நாம்தமிழர் கட்சி இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற வாய்ப்பில்லை. தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக வைப்போம். அப்போதும் அவரால் அவர் கூறியவற்றை செய்ய வாய்ப்பேதுமில்லை. கார்கள் எனப்படும் மகிழுந்து தயாரிப்பை நிறுத்துவேன், அதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது, ஏராளமான நீர் விரயமாகிறது என்கிறார். மகிழுந்து தேவைப்படுவோருக்கு வெளிநாட்டில் அதாவது ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வேன் என்று கூறுகிறார்.

படிக்க:
காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !
♦ தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !

இப்படி அனைத்திற்கும் ஒரு மாற்றைக் கூறி தமிழகத்தின் பஞ்ச பூதங்களையும் காப்பாற்றி சிங்கப்பூர் போல மாற்றுவேன் என்கிறார். கார் தயாரிப்பை நிறுத்தி இறக்குமதி செய்வது என்பது தேர்தல் அரசியலில் நடக்கிற காரியமா? இவை மத்திய அரசுடன் சம்பந்தப்பட்டதோடு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற முறையில் தனியார்மயம், தாராளமயத்தின் அடிப்படையில் தமிழகத்தில் கார் உற்பத்தி நடைபெறுகிறது. இதை எப்படி சீமானால் நிறுத்த முடியும்? பேச்சுக்கு நிறுத்துவதாகக் கொண்டால் ஒரு நீதிமன்ற உத்திரவு போதும் அதை செல்லாது என்று மாற்ற. மேலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்தான் தேர்தல் அரசியலில் நிற்கவே முடியும். இன்று கல்வி, சுகாதாரம் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. விரைவுப் பேருந்துகள் வழிதடத்தில் ஆம்னி பேருந்துகள் தனியார்மயமாகி கொள்ளையடித்து வருகின்றன. சீமான் இவற்றை அரசுடைமையாக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அதனால்தான் தனியார் கல்வியின் தரத்துக்கு ஏற்ப அரசு கல்வியை மாற்றுகிறேன் என்று தற்காப்பாக பேசுகிறார். அந்த தரத்திற்குரிய காசுக்கு எங்கே போவார்?

எனவே தேர்தல் அரசியலில் சீமான் கூறும் எதையும் அமல்படுத்த முடியவே முடியாது. அது போகாத ஊருக்குரிய அரசியலே அன்றி வேறல்ல. இந்த அமைப்பு முறையே இன்றைய சமூக அரசியல் பொருளாதார சீரழிவுகளுக்கு காரணம் எனும் போது அந்த அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு தேடுவது அடிப்படையிலேயே தவறானது. இது மூன்றாவது விசயம்.

சீமான்ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும் சீமான் இவர்களை கடுமையாக விமரிசிக்கவில்லை. அடக்கி வாசித்தார்.  நாம்தமிழர் கட்சி திராவிட இயக்கத்தையே முதன்மையான எதிரியாக கருதுவதால் திமுக, திக போன்றவற்றை எதிர்ப்பது போல அதிமுக, பாஜக-வை எதிர்ப்பதில்லை. இதனால் பலநேரம் நாம் தமிழர் கட்சி தமிழ் ஆர்.எஸ்.எஸ் போன்றே காட்சி தருகிறது. இனவாதம் இயற்கையாகவே மதவாதம், சாதியவாதத்தோடு தொடர்புடையது என்பதற்கு இது ஒரு சான்று. இது நான்காவது விசயம்.

சென்ற 2019 பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏறக்குறைய மூன்று சதவீதம் வாக்கு கிடைத்திருப்பது எப்படி? மக்கள் தேர்தல் அரங்கில் எப்போதும் புதியவர்கள், புதிய கட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். திமுக, அதிமுகவின் அரசியலால் ஏமாற்றமடைந்து புதிய சக்திகள் என்ற முறையில் அப்படி ஆதரவு தருகிறார்கள். ஏற்கெனவே ஆரம்பத்தில் விஜயகாந்த் கட்சிக்கு அப்படி மக்கள் ஆதரவு தந்தார்கள். இன்று தேமுதிகவே திமுக – அதிமுக போல பழைய கட்சியாக மாறிவிட்டது. சென்ற  தேர்தலில் நாம் தமிழருக்கு இணையாக கமல்ஹாசனது கட்சிக்கும் மக்கள் வாக்களித்தார்கள். அதுவும் புதிய கட்சி என்ற முறையில்தான். நாளை ரஜினி நின்றாலும் அப்படி ஓரளவு பிரிவு மக்கள் வாக்களிப்பார்கள். இருப்பினும் இந்த தேர்தல் முறை யாரையும் தின்று செரித்துவிட்டு சந்தர்ப்பவாதிகளாக மாற்றும் என்பதால் புதிய கட்சிகளின் மீதான மக்களின் புதிய மோகம் தற்காலிகமாக ஓரிரு தேர்தலோடு முடிந்து விடும் ஒன்று. ஆதலால் இந்த புதிய கட்சிகள் இறுதியில் திமுக, அதிமுகவோடு கூட்டணி அமைத்து தமது அரசியல் இருப்பை உறுதி செய்கிறார்கள். நாம் தமிழரும் அப்படி கூட்டணி அரசியல் இன்றி தனிக்கடை போட்டு ரொம்ப நாள் ஓட்ட முடியாது. இது ஐந்தாவது விசயம்.

நாம் தமிழர் கட்சியை புரிந்து கொள்ள இந்த அளவுகோல்கள் போதுமா?

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்