குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 07
ஆறு வயதுக் குழந்தைகளின் மகிழ்ச்சிகளும் வருத்தங்களும்
ஆனால் இந்த அதிசயம் எனக்கு வருத்தத்தையும் அளித்தது. எல்லாக் குழந்தைகளின் மனதும் அமைதியாக இல்லை. பலருக்குப் பல கஷ்டங்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியும், இதைப் பற்றி மறைக்காமல் குழந்தைகள் எழுதுவார்களென நான் எதிர் பார்த்திருக்க வேண்டும். என் அன்புச் சிறுவனே, சிறுமியே! உண்மையிலே இப்படிப்பட்ட துக்கமா உங்களை ஆட்கொள்கிறது?
“மலர்கள், பறவைகள், என் மாஷா பொம்மை எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. மாஷா புத்திசாலிப் பெண். நன்கு படிக்கிறாள், நான் சொல்வதைக் கேட்கிறாள். நாங்கள் சேர்ந்து தூங்குகிறோம், நான் அவளுக்குக் கதை சொல்கிறேன். விரைவில் அம்மா திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். இதில் எனக்கு சம்மதமில்லை. என்னை போர்டிங் பள்ளியில் சேர்க்கப் போவதாக அம்மா சொன்னாள். அங்கு நன்றாயிருக்குமாம். ஆனால் நான் அம்மாவுடன் இருக்க விரும்புகிறேன். இரவில் அம்மா தூங்கும் போது நான் விழித்தெழுந்து அழுகிறேன்.”
அந்தத் தாய்க்கு மகளின் இக்கட்டுரையைக் காட்டுவதா? நிச்சயமாகக் கூடாது! அவளை எனக்குத் தெரியும் – அவள் தன் விருப்பப்படி செயல்படக் கூடியவள், அவளது அழகால், மனதின் முரட்டுத்தனத்தையும் இரக்கமற்ற தன்மையையும் மூடி மறைக்க முடியாது. அவள் தன் மகளின் திறந்த மனதைப் பற்றி அறிந்தால், குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக ஒருவேளை தண்டிக்கலாம். அந்தத் தாயோடு கலந்து பேச வேண்டுமா? ஆம், கட்டாயம் பேச வேண்டும். போர்டிங் பள்ளியில் மகளைச் சேர்க்காமலிருக்க ஒருவேளை அவளை ஒப்புக் கொள்ளச் செய்ய முடியலாம். தன் குழந்தையின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பறித்துக் கொண்டு சொந்த மகிழ்ச்சியைப் பெற முடியாது என அவளுக்கு சொல்வேன்.
ஆறு வயதுச் சிறுமி தாயன்பு இல்லாமல் அவதியுறும் போது அது என்ன மகிழ்ச்சி? இன்னமும் தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் உணராத ஒரு குழந்தையை மறுக்கும் ஆணிற்குப் பெண்ணின் அன்பைப் பெற அருகதையில்லை என்று சொல்லலாமா? என் அன்புச் சிறுமியே! சொந்தத் தாயின் தாக்குதலிலிருந்து உனது மென்மையான இதயத்தை என்னால் காப்பாற்ற இயலுமா?..
“எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்று என்னால் இன்னமும் சொல்ல முடியாது. அம்மா என்னை உலாவ அழைத்துச் செல்லும் போது மகிழ்ச்சியடைகிறேன். என் தாய் பத்திரிகைத் துறையில் இருக்கிறாள், எனக்கு ஏராளமான சுவாரசியமான விஷயங்களைச் சொல்கிறாள். ஆனால் அம்மா சில சமயங்களில் அழுகிறாள், இது எனக்கு வருத்தம் தருகிறது. அப்பா அம்மாவோடு சண்டை போட்டு, பிரிந்து செல்ல வேண்டும் என்கிறார். முன் போல் அப்பா என்னுடன் நட்புக் கொள்வதில்லை. இனி என்ன நடக்குமென எனக்குத் தெரியாது. இன்னொரு நகரத்திற்குப் போகலாம் என்கிறார் அம்மா. எனக்கு இதில் மிகவும் வருத்தம்.”
ஓ, சிறுவனே, நீ உன் அப்பாவை எப்படி நேசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ அவரைக் கண்டு பெருமிதம் அடைகிறாய். “என் அப்பா…. நானும் அப்பாவும்… அப்பா சொன்னார்” என்றெல்லாம் நீ அடிக்கடி பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அந்த அப்பாவா உன்னுடன் அன்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை?! எளிதில் காயம்பட்டு விடக் கூடிய உன் இதயத்தை விடத் தன் சொந்த உணர்ச்சிகளின் மீதா இந்த அப்பா அதிக அக்கறை காட்டுகிறார்?! இது சுய நலமல்லவா! உனது மேன்மை, அம்மாவின் மீது உனக்குள்ள பிடிப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமலா இவர் உன் அம்மாவைத் தாழ்த்துகிறார்?! கண்டிப்பாக உனது இதயத்தின் இந்தக் கூக்குரலை உனது அப்பாவிற்குக் காட்டுவேன். “அப்பாவாக இருப்பது என்றால் என்ன? உன்னால் என் இடத்தில் இருக்க முடியுமா? எனது மிக நெருங்கிய முதல் நண்பனாகத் திகழும் அப்பாவை இழப்பதை உன்னால் தாங்க முடியுமா?” என்று சில கேள்விகளை நீ உன் அப்பாவிடம் கேள். உன்னால் அப்பாவிடம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியுமா?
பெரியவர்களின் யோசனையின்மை, ஒழுங்கீனம், தம் குழந்தைகளின் பாலான கவனமின்மை முதலியவற்றை அம்பலப்படுத்தவல்ல கேள்விகளை ஏன் குழந்தைகளால் அவர்களிடம் கேட்க முடியாது? எனதருமை சக ஆசிரியர்களே, உங்கள் வகுப்பிலுள்ள ஒரு ஆறு வயதுக் குறும்புக்காரச் சிறுவன் ஒரு நாள் வகுப்பு முடிவில் எழுந்து தீவிர முகபாவத்துடன் பின்வரும் கேள்விகளை உண்மையாகக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்: “ஏன் இப்படி தயாராகாமல் பாடம் நடத்த வருகின்றீர்கள்? ஏன் இந்த மாதிரி சலிப்பான, பழைய முறையில் பாடங்களை நடத்துகின்றீர்கள்? எங்களுடைய வளர்ப்பிற்கு ஏன் உங்களை நீங்களே முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொள்ளவில்லை? இது எவ்வளவு நாள் நீடிக்கப் போகிறது?” நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு வேளை இப்படிச் சொல்வீர்களோ: “ஏ, கள்ளப் பையனே! என்னோடு இப்படிப் பேச என்ன தைரியம் உனக்கு?” இந்த நகைச்சுவையைக் கண்டு பொங்கியெழுந்திருப்பீர்களோ! இப்படி நீங்கள் செய்தால் அது முரட்டுத்தனமான நடவடிக்கையாக இருக்கும். மாறாக, வெட்கத்தால் தலை குனிந்து, முகம் சிவக்க, குற்ற உணர்வோடு “இனி அப்படிச் செய்ய மாட்டேன், வேண்டுமானால் பாருங்களேன்” என்று கூறுவது சிறப்பாக இருக்கும்.
இன்னமும் தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் உணராத ஒரு குழந்தையை மறுக்கும் ஆணிற்குப் பெண்ணின் அன்பைப் பெற அருகதையில்லை என்று சொல்லலாமா? என் அன்புச் சிறுமியே! சொந்தத் தாயின் தாக்குதலிலிருந்து உனது மென்மையான இதயத்தை என்னால் காப்பாற்ற இயலுமா?
அன்பான பெற்றோர்களே, இதே மாதிரியான உங்கள் குறும்புக்கார மகன் உங்களிடையே வேற்றுமைகளைக் கண்டுணர்ந்து பின்வருமாறு கூறினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்: “அன்புள்ள அப்பா! அம்மா! நான் ஒன்றும் உங்களுடன் வந்து ஒட்டிக்கொள்ளவில்லை. நீங்கள் தான் என்னைப் பெற்றெடுத்தீர்கள். எனவே தாயன்பிற்கும், தந்தையின் கவனிப்பிற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் எனக்கு உரிமையுண்டு. நான் மனதார, நெஞ்சாரத்தான் உங்களுடன் ஒன்றி விட்டேன்! எனது உரிமை, உணர்வுகள் மீது இரக்கம் காட்டுங்கள்!” “தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே! நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டால் உனக்கென்ன?” என்று ஒரு வேளை நீங்கள் பதில் சொல்வீர்களோ! இதன் மூலம் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பதற்கு குழந்தைக்கு உள்ள மிகப் புனிதமான உரிமையை நீங்கள் மிதித்து அழிப்பவர்களாவீர்கள். அல்லது ஒரு வேளை தந்தை வெட்கத்தால் முகம் சிவக்க, தாய் கண்ணீர் சிந்த “ஆம், மகனே, நாங்கள் உன் முன் குற்றமிழைத்து விட்டோம்! உனது உரிமையையும் உணர்வுகளையும் பற்றி மறந்து விடாமல், மேற்கொண்டு எப்படி வாழுவது என்று சிந்திப்போம்” என்று மகனிடம் கூறியிருப்பீர்களோ!
அன்புள்ள ஆசிரியர்களே, பெற்றோர்களே, அஞ்சாதீர்கள்! இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமை உங்களுக்கு எப்போதுமே ஏற்படாது, ஏனெனில், உங்கள் குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றாலும் இம்மாதிரியான கேள்விகளை எப்போதுமே கேட்கமாட்டார்கள். நாம் நமது குழந்தை வளர்ப்புப் பணியைச் செம்மையுறச் செய்ய வேண்டுமென அவர்கள் மட்டும் நம்மிடம் கண்டிப்பாகக் கோரினால் நமது வாழ்க்கையின் பல சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமென நான் உறுதியாக நம்புகிறேன். நமது கெட்ட, சிந்தனையற்ற வளர்ப்பின் பயனாய் இன்றைய சிறுவர்களிலிருந்து சில சமயங்களில் துஷ்டர்களும் அறிவிலிகளும் வளர்ந்தால் அதற்குக் காரணம் பெரியவர்களை, பொறுப்பற்ற வளர்ப்பாளர்களை, தாய் தந்தையரை உரிய தருணத்தில் “திருத்த” குழந்தைகளால் முடியாமல் போனதேயாகும். நம்மை நாமே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுமாறு குழந்தைகள் நமக்குச் சொல்கின்றனர், இவர்களின் எதிர்காலம் இக்கேள்விகளுக்கான பதில்களைப் பொறுத்துள்ளது.
விரைவில் மணியடிக்கும். குழந்தைகள் அழகிய தாள்களை என் மேசை மீது அடுக்குகின்றனர்.
“நாளை எனக்குப் பிறந்த நாள். எனவே நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது சிறுவர்களின் கெட்ட நடத்தை எனக்கு வருத்தம் தருகிறது. அவர்கள் நேற்று சண்டை போட்டுக் கொண்டு தாழ்வாரத்தில் ஒருவரையொருவர் அடிக்க ஆரம்பித்தனர். இப்படிச் செய்யலாமா?” (இயா)
“குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட என்னை முற்றத்திற்கு அனுப்பும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். எங்கள் வீட்டு முற்றம் பெரியது. ஆனால் அம்மா என்னை எப்போதாவது தான் விளையாட அனுப்புவார். ஐந்து நிமிடம் கழித்ததும் திரும்பக் கூப்பிடுவார். எனக்கு ஒரே வருத்தமாயிருக்கும்!” (சூரிக்கோ )
“இன்றைய விழா எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு எல்லா எழுத்துகளும் தெரியும், என்னால் படிக்க முடியும். விரைவில் விடுமுறை வந்ததும் கிராமத்திற்குச் சென்று பாட்டி, தாத்தாவுடன் பொழுதைக் கழிப்பேன் என்பதும் எனக்கு சந்தோஷம் தருகின்றன. எது எனக்கு வருத்தம் தருகிறது என்று தெரியவில்லை. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இறந்தது எனக்கு வருத்தம் தந்தது. என்னோடு விளையாட கீவி மாமாவிற்குப் பிடிக்கும், அவர் அன்பானவராய், சந்தோஷமானவராய் இருந்தார்.” (தாத்தோ)
“அப்பா வெளியூர் வேலையை முடித்து விட்டுத் திரும்பியது எனக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. அவர் குழந்தைகள் பாட்டிசைக் குழுவோடு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். எனக்கும் அம்மாவிற்கும் பாட்டிகளுக்கும் பரிசுகளைக் கொண்டு வந்தார். வீட்டில் ஒரே மகிழ்ச்சி. படிக்கக் கற்றுக் கொண்டதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பாட்டிக்கு உடம்பு சரியில்லாதது எனக்கு வருத்தம் தருகிறது.” (கோச்சா)
“முதலில், எனக்கு எதெல்லாம் மகிழ்ச்சி தருகிறது என்று சொல்கிறேன். பள்ளிக்கு என்னைக் கூட்டிச் செல்லும் போது சந்தோஷமாய் உள்ளது. பாடங்கள், நண்பர்கள், ஆசிரியர் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களைச் சந்திக்கும் போது நான் மகிழ்கிறேன். உடம்பு சரியில்லாமல் பள்ளிக்கு வராதிருந்த போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். மழை பெய்யும் போதும் எனக்கு வருத்தமாயிருக்கும். மழைக்காலம் எனக்குப் பிடிக்காது. அப்போது முற்றத்தில் விளையாட முடியாது.” (தாம்ரீக்கோ)
“அன்புள்ள அப்பா! அம்மா! நான் ஒன்றும் உங்களுடன் வந்து ஒட்டிக்கொள்ளவில்லை. நீங்கள் தான் என்னைப் பெற்றெடுத்தீர்கள். எனவே தாயன்பிற்கும், தந்தையின் கவனிப்பிற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் எனக்கு உரிமையுண்டு. நான் மனதார, நெஞ்சாரத்தான் உங்களுடன் ஒன்றி விட்டேன்! எனது உரிமை, உணர்வுகள் மீது இரக்கம் காட்டுங்கள்!”
“தேன்கோ ஒரு மிக அழகிய பேட்ஜை எனக்குப் பரிசளித்தான். தேன்கோ என்னை சந்தோஷப்படுத்தினான். தேன்கோ, உனக்கு நன்றி! அம்மாவும் என்னை சந்தோஷப்படுத்தினாள். சனிக்கிழமை என்னை உலாவ அழைத்து செல்வதாக அவள் கூறியிருக்கிறாள். நாங்கள் மலையில் ஏறுவோம். அப்பா நேற்று நேரங்கழித்து வந்தார், நான் தூங்கி விட்டேன். சீக்கிரம் வந்து என் சைக்கிளை ரிப்பேர் செய்து தருவதாகச் சொல்லியிருந்தார். இது எனக்கு வருத்தமளித்தது.” (வாஹ்தாங்)
இந்த அழகிய தாள்கள் எனக்கு எவ்வளவு விஷயங்களைச் சொல்கின்றன!…
இனிய, மின்சார மணி ஒலிக்கிறது.
“குழந்தைகளே, இரண்டு இரண்டு பேராக நில்லுங்கள்! உலாவச் செல்லலாம்!”
ஆனால் அங்கு என்ன நடக்கிறது? தேயாவைச் சுற்றிக் குழந்தைகள் கூட்டம். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அவள். தலையே தெரியவில்லை. எல்லோரும் எதையோ பார்க்கின்றனர், எதைப் பற்றியோ விவாதிக்கின்றனர். சிலர் பின்னாலிருந்து குதிக்காலால் எம்பிப் பார்க்கின்றனர். சிறுவர்கள் சிறுமியரைத் தள்ளிக் கொண்டு தேயாவை நோக்கிச் செல்கின்றனர்.
“சாஷா! போய் என்ன விஷயமென்று பார்த்துவிட்டு வா!”
“என்னவென்று எனக்குத் தெரியும்!” என்கிறான் சாஷா.
“தேயா தன் முடிகளை எண்ணுகிறாள்!”
“என்ன?!”
“நேற்றும் அவள் தன் முடிகளை எண்ணினாள்.”
தேயாவை என்னிடம் கூப்பிடுகிறேன். குழந்தைகள் புடை சூழ அவள் என்னிடம் வருகிறாள்.
”தேயா, நீ என்ன செய்கிறாய்?”
“என் முடிகளை எண்ண விரும்புகிறேன். இதோ இவ்வளவு முடியை எண்ணி விட்டேன்.”
ரிப்பனால் கட்டப்பட்டுள்ள ஒரு பிடி முடியைக் காட்டுகிறாள்.
“இதில் 200 முடிகள் உள்ளன.”
படிக்க:
♦ காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
♦ கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?
தேயாவின் தலையில் எவ்வளவு முடி இருக்க முடியும் என்று குழந்தைகள் விவாதிக்கின்றனர்: 500, 1000, மில்லியன், டிரில்லியன்… இவை சிறுவர்களின் கணிப்புகள்.
“நீ முடியை எண்ணுவது நல்லது தான். உன் தலையில் எவ்வளவு முடி உள்ளது என்று தெரிந்து கொள்வது சுவாரசியமாயிருக்கும். பூங்காவிற்குப் போகலாம் வாருங்கள். அங்கே தொடர்ந்து எண்ணலாம்.”
நானும் எனது குழந்தைகளும் அதிசய நாட்டில் வாழவில்லையா என்ன?
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!