த்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார் கல்லூரி மாணவி ஒருவர். சின்மயானந்தாவின் ஆசிரமத்துக்குள் இயங்கும் சட்டக் கல்லூரியில் படித்த அந்த மாணவியை மிரட்டி, அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகார்களை உ.பி. போலீசில் அளித்திருந்தபோதும் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சமூக ஊடகங்கள் மூலமாக சின்மயானந்த் குறித்து முக்கிய வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக அந்தப் பெண் கூறியிருந்தார்.

சின்மயானந்தை காப்பாற்ற பாஜக-வினர் பல தரப்பிலிருந்து முயற்சித்தனர். விளைவாக இவ்வளவு புகார்கள் எழுந்தபோது அவர் மீது ஒரு வழக்கு கூட பதியப்படாமல் இருந்தது. தன்னிடம் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் உள்ளன என அந்தப் பெண் கூறியிருந்த நிலையில், சின்மயானந்த் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

chinmayanand arrestஇந்திய தண்டனை சட்டம் 376 – C, 342, 354 – D, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சின்மயானந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவி அளித்த பாலியல் வல்லுறவு பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவில்லை. புகார் அளித்த மாணவியின் மீதே மிரட்டி பணம் பறித்தல் பிரிவின் கீழ் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு.

குற்றம்சாட்டப்பட்ட நபர், சக்திவாய்ந்தவராக உள்ளபோது, பாதிக்கப்பட்டவருக்கு எதிராக நீதியின் சக்கரங்கள் நகர்வதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. உ.பி.போலீசு நத்தை வேகத்தில் இந்த வழக்கில் செயல்பட்டதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆகஸ்டு 24-ஆம் தேதி, முதன்முதலாக சின்மயானந்துக்கு எதிராக கல்லூரி மாணவி தனது முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தன் கல்லூரில் முதன்மையான அதிகாரி தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்றும்படியும் தனக்கு நீதி பெற்றுத் தரும்படியும் முதலமைச்சர் ஆதித்யநாத்தையும் பிரதமர் மோடியையும் அந்தப் பெண் கேட்டிருந்தார்.

அதற்கு அடுத்த நாள் அந்தப் பெண் காணாமல் போய்விட்டதாக அவருடைய அப்பா போலீசில் புகார் தெரிவித்தார். தனது மகள் சின்மயானந்தால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக அவர் புகாரில் கூறியிருந்தார். அதே நேரத்தில் சின்மயானந்தின் வழக்கறிஞர் அந்தப் பெண்ணும் அவருடைய தந்தையும் மிரட்டி பணம் பறிக்க திட்டமிடுவதாக புகார் அளித்தார்.

படிக்க:
குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
♦ பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !

ஆகஸ்டு 30-ஆம் தேதி மாணவி, இராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு, உ.பி. கொண்டுவரப்பட்டார். ஒரு நாள் கழித்து, மாணவியின் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உ.பி. அரசாங்கத்தை அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம். இந்த புலனாய்வை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

தனது கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து கிடைக்கக்கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்ட சதி இது, என சின்மயானந்த் தரப்பு மீண்டும் ஒரு ‘காரணத்தைக்’ கூறியது.

சாமியார் சின்மயானந்தின் பாதக செயல்களை அம்பலப்படுத்திய சட்ட மாணவி.

செப்டம்பர் 9-ஆம் தேதி, அந்தப் பெண் முதல்முறையாக, பாஜக தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறினார். முன்பு பாலியல் துன்புறுத்தல் செய்தார் எனக் கூறியிருந்தார். இப்போது, சின்மயானந்த் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் ஓராண்டுக்கும் மேல் உடல்ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.

அடுத்த நாள் வெளியான ஒரு வீடியோவில், நிர்வாணமாக சின்மயானந்த் இருப்பதும் ஒரு பெண் அவருக்கு மசாஜ் செய்துவிடுவது போன்றும் இருந்தது. இந்த வீடியோவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு சாமியாரிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தியது.

செப்டம்பர் 14-ஆம் தேதி அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் ஹாஸ்டலில் குளிக்கும்போது தன்னை சின்மயானந்தின் ஆட்கள் படமாக்கியதாக கூறினார். இந்த வீடியோவை வைரலாக்கிவிடுவதாக மிரட்டி தன்னை பாலியல் வல்லுறவு செய்தததையும் அதையும் படமாக்கியதையும் அந்தப் பெண் கூறினார். அதன்பின், அவர் சொன்னதுபோல வேறு வழியின்றி நடந்துகொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

படிக்க:
பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !
♦ ஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி

அதோடு, சிறப்பு புலனாய்வு குழுவிடம் தான் மறைத்து வைத்திருந்த காமிரா மூலம் எடுத்த 43 வீடியோக்களையும் அளித்தார். அதன்பின், உடல்நலமில்லை எனக்கூறி சின்மயானந்த் மருத்துவமனையில் சேர்ந்தார்.

இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை, செப்டம்டர் 20-ஆம் தேதி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். ஒரு மாத கால புகார்களுக்குப் பிறகு இறுதியாக கைது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர் தெளிவாக பாலியல் வல்லுறவு புகார் கூறியிருந்தபோதும் அந்தப் பிரிவின் கீழ் பாஜக சாமியார் மீது புகார் பதியப்படவில்லை.

Chinmayanand-Hospital
சாமியார் சின்மயானந்தின் நாடகம்.

“இதுதான் நடக்கும் என எனக்குத் தெரியும். இங்கே நீதி என்று ஒன்று இல்லை. சிறப்பு புலனாய்வு குழுவிடம் நான் எப்படி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டேன் என்பதை கூறிவிட்டேன். ஆனாலும் பிரிவு 376 சேர்க்கப்படவில்லை. சின்மயானந்த் கைது செய்யப்பட்டிருப்பதன் பின்னால் உள்ள திட்டம் என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. சிறப்பு புலனாய்வு குழுவின் செயலில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்கிறார் அந்தப் பெண்.

அதோடு விட்டார்களா என்றால் இல்லை… இவர் மீதும் இவருடைய மூன்று பெண் நண்பர்கள் மீதும் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிப்பட்டதில், மூவர் கைதாகி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

“இது நீதியை முழுமையாக கேலி செய்வதைப் போன்றதாகும். ஒரு பக்கம் எங்களுடைய புகாரை கேட்கவேயில்லை. இப்போது எங்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில் பாதிக்கப்பட்டவர் யார்?” எனக் கேட்கிறார் பெண்ணின் தந்தை.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு சாதகமாக காவி அதிகார வர்க்கம் துணை நின்றதைப் போல, இந்த சாமியாரை காப்பாற்றவும் துணை நிற்கின்றன. நீதியை பெற முடியாது என தெரிந்தே மீண்டும் மீண்டும் துணிச்சலோடு காவிகளோடு மோதிக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண். அடிப்படைவாதிகளின் ஆட்சியில் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, நீதிக்கும் வாய்ப்பில்லை.


– அனிதா
நன்றி
: த வயர்.