குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 02
பாடவேளைகளின் உணர்ச்சி பூர்வமான சூழல், புதியவற்றை அறியும் ஆர்வமும், இவர்களுடைய பள்ளி நாள் முழுவதும் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து அதிகரிக்கின்றன அல்லது குறைகின்றன – என்று என் நடைமுறை எனக்கு காட்டுகிறது.
இளமைப் பருவத்தில் எனக்கு சாதாரணப் பாடத் திட்டங்களுடன் வகுப்பறையினுள் நுழையும் துணிவு இருந்தது, இதில் விசேஷப் பிரச்சினைகள் எதுவும் கிடையாது, மற்றவற்றை நடைமுறையே சொல்லுமென நம்பினேன்; இப்போதோ, பல்லாண்டு அனுபவத்திற்குப் பின் ஏதோ பள்ளி நாட்களின் முழு இசைக் குறியீடுகளைப் பற்றிப் பேசுகிறேன். இது விந்தையில்லையா? எப்படியோ, எனக்குத் தெரியாது. இதில் எந்த வித விந்தையையும் நான் பார்க்கவில்லை. எப்படி சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் கலந்து பழகுவது என்று பூர்வாங்கமாக சிந்திக்காமல் என் சின்னஞ்சிறு மாணாக்கர்களைச் சந்திக்க நான் அஞ்சுகிறேன். கண் மூடித்தனமாக வளர்த்து, கல்வி போதிக்கப் பயப்படுகிறேன். எனது முழு அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தாமல் கலந்து பழக அஞ்சுகிறேன். இது தவிர, அப்போது எனக்கு இது ஒரு மகத்தான, ஈடு இணையற்ற ஆசிரியரியல் இசை, இதற்கு என்னிடமிருந்து பெரும் தொழில் திறமையும் அற்புதமான வழிமுறைகளும் தனிப்பட்ட ரசனைகளும் மனிதாபிமானமும் தேவை என்பதெல்லாம் முழுமையாகப் புரியவில்லை .
பாடங்கள் பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டின் ஓர் அங்கம். சிம்பனி இசையைப் போன்றே இப்பாடங்களில் தலைப்புகள் உருவாக்கப்படுகின்றன, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுகின்றது. எப்படிப்பட்ட தலைப்புகள்? என்ன மாதிரியான பிரச்சினைகள்? முன்னர் பாடத் திட்டங்களை உருவாக்கும் போது, உதாரணமாக, பின்வருமாறு என்னால் எழுத முடிந்தது: “’பாடத் தலைப்பு – பத்திற்குள் கூட்டலும் கழித்தலும்”. இத்தலைப்பின் அடிப்படையில் நான் பாடத்தைக் குழந்தைகள் கிரகிக்குமாறு செய்தேன், தலைப்போடு சம்பந்தப்படாத மற்றவற்றின் மீது அவர்கள் கவனம் திசை திரும்பாதவாறு சகல விதங்களிலும் காத்தேன். கூட்டல், கழித்தல் பாடத் தலைப்பிற்கும், வாழ்க்கையில் புதிதாக என்ன நடந்தது, முந்திய நாள் அவர்கள் எதன் மீது அக்கறை காட்டினர் என்ற பேச்சிற்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா என்ன! குழந்தைகள் நேற்று எப்படித் தூங்கினார்கள், தொலைக்காட்சியில் என்ன பார்த்தார்கள், புதிதாக என்ன தெரிந்து கொண்டார்கள், வீட்டில் யாருக்கு உடல் நிலை சரியில்லை என்பவை எல்லாம் எனக்கு எதற்கு?
இவையெல்லாம் அப்போது எனக்கு உண்மையிலேயே தேவையற்றவையாக, பாடங்களுடன் சம்பந்தப்படாதவையாகத் தோன்றின, எனக்கு “சின்ன விஷயங்கள்” என்று தோன்றிய இவற்றின் மீது கவனத்தை சிதறடிக்காமலிருக்க நான் முயன்றேன். வகுப்பறையில் குழந்தை நுழையும் போது தன் மகிழ்ச்சி, ஏமாற்றம், புத்தம்புது மனப்பதிவுகள், இன்ப துன்பங்கள் ஆகியவை அடங்கிய தன் வாழ்வை பள்ளிக்கு வெளியே வைத்து விட்டு வர வேண்டும், வகுப்பில் நான் சொல்லித் தருவதன் மீது மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று நான் பாடுபட்டேன். குழந்தையின் கவனம் திசை திரும்புகையில், சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கையில் “என்ன யோசனை” என்று என்னால் கண்டிப்புடன் அவனைக் கேட்க முடிந்தது. பையிலிருந்து ஒரு சிறு போர் வீரன் பொம்மையை எடுத்து அவன் விளையாடுவதைப் பார்த்து “என்ன இது? பாடவேளையில் என்ன செய்கிறாய்?” என்று என்னால் கூற முடிந்திருந்தது. இப்பொம்மையைக் குழந்தையிடமிருந்து பிடுங்கிக் கொண்டு பெற்றோர்களைக் கூட்டி வரும்படி சொல்ல முடிந்தது; “உங்கள் பையன் பையில் எதை வைக்கிறான் என்று நீங்கள் ஏன் பார்ப்பதில்லை? பாடவேளையில் அவன் கவனம் திசை திரும்புகிறது” என்று பெற்றோர்களிடம் கூற முடிந்தது.
ஆம், என்னால் முன்னர் இப்படியெல்லாம் நடக்க முடிந்தது. ஏனெனில், நான் பின்வருமாறு நினைத்தேன்: “பாடங்கள் என்பது அன்றாட வாழ்விலிருந்து குழந்தையின் கவனத்தைத் திசை திருப்பும் உயர் வடிவமாகும். குழந்தை வகுப்பறையில் நுழைந்து விட்டானா? அவ்வளவு தான். படி! வேறெதையும் நான் ஒப்புக் கொள்வதில்லை!” ஆனால் இன்று, பல்லாண்டுகளுக்குப் பின் நான் இப்படி நடப்பதில்லை. நான் மாறிவிட்டேன், என் போதனை முறையும் மாறிவிட்டது.
அன்புக் குழந்தைகளே! உங்களுக்கு நன்றி! நான் ஆரம்ப வகுப்புகளில் உங்களை வளர்த்தேன். உங்களுடைய ஒவ்வொரு தலைமுறையும் தன் ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் எனக்கு விட்டுச் சென்றுள்ளது. நான்காண்டுகளில் நான் உங்களுக்குப் படிக்க, எழுத, கணக்குப் போட சொல்லித் தந்துள்ளேன், உங்களுக்குப் படிப்பு சொல்லித் தந்தேன். பின், நீங்கள் எப்படி மாறி, வளர்ந்து விட்டீர்கள் என்று ஆச்சரியப்பட்டேன். அனேகமாக, உங்களுக்கு நான் படிப்பு சொல்லித் தருவதை விட என்னை மாற்றியமைப்பது உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.
ஆம், ஆசிரியர்களாகிய நாங்கள் இப்படிப்பட்டவர்கள். ஒரு மாதிரி வேலை செய்யப் பழகிவிட்டால், எங்களது வேலை முறை ஒரு தடவை நடைமுறையில் சரியென நிரூபிக்கப்பட்டு விட்டால், நாங்கள் தப்பே செய்யவில்லை என்றும், கல்வியிலும் குழந்தை வளர்ப்பிலும் சிகரத்தை எட்டிவிட்டதாயும் எண்ணுகிறோம், “எங்கள் போதனை முறையை”, “எங்கள் கோட்பாடுகளைக்” கண்டு பெருமிதம் கொள்கிறோம். ஆசிரியர்களாகிய நாங்கள் எவ்வளவு எளிமையானவர்கள், பார்த்தீர்களா? தன் நடைமுறையில் மூடி மறைந்து கொள்ளும் ஆசிரியர் உங்களை – குழந்தைகளை – வளர்த்து, கல்வி போதிப்பதில் எப்போதாவது சர்வ பொதுவழிகளைக் கண்டுபிடிப்பாரென எண்ணலாமா என்ன? நீங்கள் வாழ்க்கையின் உருவகம்! இவ்வாழ்க்கையோ ஒரு நொடிப்பொழுது கூட நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை இப்படி நிற்காமல் ஓடும் போது, இது இப்படிச் சுற்றிலும் எல்லாவற்றையும் மாற்றும் போது, நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் இப்படி புதிதாகி வரும் போது, உங்களது திறமைகளாலும் வாய்ப்புகளாலும் இப்படித் திக்கு முக்காடச் செய்யும் போது, ஏராளமான ஆறு வயதுக் குழந்தைகள் இப்படி உற்சாகமாகப் பள்ளிக்குப் பாய்ந்து வந்து பல்லாயிரக் கணக்கான வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்கும் போது, எவ்வித இயக்கமும் மாற்றங்களும் இன்றி தன் அறிவுச் சிகரத்தில் அப்படியே உட்கார்ந்திருக்க ஆசிரியருக்கு என்ன உரிமையுள்ளது?
மாறாக, ஆசிரியர் எப்போதும் நாளைய தினத்தை நோக்கி, நாளைய மறுதினத்தை நோக்கிச் செல்ல வேண்டும், உங்களுடைய நாளைய தினத்தை சுவாசிக்க வேண்டும், உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வது போல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும், இப்படித்தான் உங்களைச் சந்திக்கப் பள்ளிக்கு வர வேண்டும். மாறுவது, தேக்கமுற்ற மாதிரிகளிலிருந்து விடுபடுவது ஆசிரியர்களாகிய எங்களுக்குப் பல நேரங்களில் அவ்வளவு சிக்கலாக இருக்கிறதே, என்ன செய்ய? எங்கே எல்லாம் மிகவும் கொதிக்கின்றதோ, எவ்வளவு முனைப்பாக இயங்குகிறதோ அங்கே நாங்கள் அமைதியான வாழ்க்கையைத் தேடுகின்றோமா என்ன?
சோவியத் ஆசிரியர் பி. பிளோன்ஸ்கி அரை நூற்றாண்டுக்கு முன் எங்களை நோக்கி கேட்ட கேள்வி எனக்கு எப்போதுமே ஆழ்ந்த மனப் பதிவை ஏற்படுத்துகிறது. “பள்ளியைப் புதுப்பிப்பதில் அடிக்கடி நீயே முக்கியத் தடையாக இருக்கின்றாயா இல்லையா என்பதைப் பார்த்துக்கொள்” என்று அவர் ஆசிரியர்களைப் பார்த்துச் சொன்னார். இல்லை, இப்படி இருக்கக் கூடாது! வாழ்க்கையைப் படைக்க வேண்டிய ஆசிரியர் விருப்பமின்றியோ, தெரியாமலேயோ, அன்பாலோ, உறுதியோடோ வாழ்க்கைப் போக்கின் வேகத்தைக் குறைக்கக் கூடாது, குழந்தைகளின் முன்னோக்கிய அணி நடையைத் தாமதப்படுத்தக் கூடாது! எனவே, ஆசிரியர் தன் அனுபவத்தை (இது இருபதாண்டு, நாற்பதாண்டு அனுபவமாயிருந்தாலும் கூட) ஏதோ முழுமை பெற்ற ஒன்றாக, ஒவ்வொரு முறையும் குழந்தைகளைச் சந்திக்கும் போது செழுமைப்படுத்தத் தேவையில்லாத ஒன்றாகக் கருதக்கூடாது. குழந்தைகளே! அப்படியே யாராவது தேக்கமுற்று நின்றாலும், நீங்கள் உறுதியாக நின்று, உங்களைப் புதிய முறையில் பார்க்க உதவுங்கள்! உங்களை வளர்த்து, கல்வி போதித்து, மனிதர்களாக்கும் எனது நல்லெண்ணங்களுக்கு இடையூறாக நிற்கும் ஒரு சக்தியாகத்தான் நான் நீண்ட காலமாக உங்களைப் பார்த்து வந்தேன். உங்களை வளர்ப்பதில் நீங்களே என் உதவியாளர்கள் என்று கண்டுகொள்ள ஒரு சில தலைமுறைகள் தேவைப்பட்டன.
தன் வாழ்வின் அதிக சுவாரசியமான, முனைப்பான இயக்கத்திற்கான சூழ்நிலைகளைக் குழந்தை பாடங்களில் கண்டால் இவற்றை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுவான் – என்பதை நான் அறிந்து கொண்டேன்.
என் வகுப்புகளில் எந்தத் தலைப்பு ஒலிக்கிறது? ஆம், முக்கியமான தலைப்பு ஒன்று உள்ளது. இது குழந்தைகளின் வளரும் வாழ்க்கை, இவர்கள் வளர்ந்து பெரியவர்களாவது. இன்றைய பாடங்களை மட்டுமின்றி 170 பள்ளி நாட்களின் எல்லா 680 பாடங்களையும் முன் நிர்ணயிக்கும் இத்தலைப்பை எப்படிக் குறிக்கலாம்? அனேகமாக, குழந்தைகளின் செழுமையான, பன்முக வாழ்விலிருந்து, பாடங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அடிப்படையைத் தனித்துப் பிரிக்க வேண்டும். குழந்தையின் மனநிலை; புதியவற்றை அறியும் ஆர்வம், இந்த ஆர்வம் வெளிப்படும் வடிவங்கள் – “சுயமாகத் தேடிக் கண்டுபிடிப்பது”, “இரகசியங்களைக்” கண்டுபிடிப்பது, பிரச்சினையை சுயமாகத் தீர்ப்பது, “கடினமான” கணக்குகளைப் போடுவது, ஆசிரியரின் “தவறுகளைத்” திருத்துவது, சொந்தக் கருத்தை வலியுறுத்துவது போன்றவை – இந்த அடிப்படையாகும்.
படிக்க:
♦ கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
குழந்தைகள் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் வளர்ச்சியுறவும் பெரும் பொறுமையும் நிதானமான உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த உழைப்பு பொதுவான முன்னோக்கிய அறிதல் நடவடிக்கையில் ஒன்றிணைந்து, வெற்றியினால் ஊக்குவிக்கப்படும் போது குழந்தைகளால் நல்லபடி ஏற்றுக் கொள்ளப்படும்.
இவை நான் முன்மொழியும் போதனை முறைக் கோட்பாடுகளின் அடிப்படையாகும்.
கல்வி போதிப்பது பற்றிய தத்துவத்தில் புதிய போதனைக் கோட்பாடுகளை முன்மொழிவது சாதாரணமானதா? அனேகமாக, கீழே குறிப்பிடப்படவிருக்கும் கருத்து நிலைகள் புதியவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் இவற்றை போதனைக் கோட்பாடுகளாக்குவதை சந்தேகத்தோடு பார்க்கலாம். போதனை முறை கோட்பாடுகளை வரையறுக்க இதுவரை உறுதியான கோட்பாடு இல்லாததால் மூன்று கோட்பாடுகளைத் துணிவோடு முன்மொழிகிறேன்.
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!