அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 05

குழந்தைகளின் வயதுச் சிறப்பியல்புகளுக்கேற்ற வேகத்தில் பாடம் நடத்தும் கோட்பாடு

சிரியர் எந்த வேகத்தில் பாடத்தை நடத்த வேண்டும் என்ற பிரச்சினை உள்ளதா என்ன? ஆசிரியரியல், போதனை முறை, தனிப்பட்ட முறைகள் ஆகியவை சம்பந்தமான பாட நூல்களின்படி பார்த்தால் இப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. ஒரு வேளை உண்மையிலேயே இல்லையோ? அப்படியெனில் இப்படிப்பட்டதொரு பரிசோதனையைச் செய்து பாருங்கள்: நீங்கள் அவசரப்படும் போது மிக மெதுவாகச் சென்று பாருங்கள். ஐந்து நிமிடங்கள் இப்படி நடந்து பாருங்கள் (இதற்கு மேல் அனேகமாக உங்களால் முடியாது), சாதாரண வேகத்தில் நடந்தால் ஏற்படுவதை விட இரு மடங்கு அதிக களைப்பு தோன்றும் என உறுதியாக நம்புகிறேன். அல்லது கூட இருப்பவருடன் மிக மெதுவாகப் பேசுங்கள்: நீங்கள் மட்டுமின்றி (சிந்தனையின் வேகத்திற்குத் தடையிடுவதால்) உங்களைக் கேட்பவரும் (நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்படுவதால்) களைத்துப் போவீர்கள். உங்களைக் கேட்பவர், அவருக்கு ஏற்ற அதிக வேகத்தில் பேசினால் கிரகிப்பதை விட மெதுவாகப் பேசும் போது குறைவாகவே கிரகிப்பார்.

ஆறு வயதுக் குழந்தையைக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஓடாமல், அசையாமல், நேராக, அமைதியாக உட்காரச் சொல்லுங்களேன் பார்க்கலாம். இப்படிப்பட்ட “ஓய்வால்” குழந்தைக்கு ஏதாவது பயனுண்டா? இம்மாதிரியான ஒரு மணி நேர “ஓய்வை” அவனால் தாங்கத்தான் முடியுமா? குழந்தை ஓடுகிறான், குதிக்கிறான், அவசர அவசரமாக உரக்கப் பேசுகிறான், எப்போதும் எங்கோ விரைகிறான். ஆனால் இதையெல்லாம் அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. இவனுடைய வளர்ந்து வரும் தேவைகள் தான் இவ்வாறு ஓடவும் “பொங்கியெழவும்” வைக்கின்றன. அதனால் குழந்தையால் அங்குமிங்கும் ஓடித்திரியாமல், உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்க முடியாது. அவன் வேகமாகத்தான் வளர்ந்து வலுப்பெறுகிறான், இந்த வேகம் அதிகமானதாக நமக்குப் படலாம், ஏனெனில் இது நமது அமைதியான வேகத்திற்கு ஏற்றதாயில்லை; ஆனால் இவ்வேகம் அவனுக்கு இயல்பானது, சாதாரணமானது. குழந்தைகளுக்கென தனியான உடற்கூறு ரீதியான வேகமும் மூளை ரீதியான வேகமும் உள்ளது என்பதை நமது அமைதி மறக்கச் செய்கிறது.

எனவே, பாடம் சொல்லித் தரும் வேகம், குழந்தைகளுடன் கலந்து பழகும் வேகம் எங்கெல்லாம் மெதுவான படக் காட்சிகளில் வரும் வேகத்தைப் போல் உள்ளதோ அங்கெல்லாம் குழந்தை களைப்படைவான், மெதுவாக நடக்கும்படி, அமைதியாக இருக்கும்படி, சத்தம் போடாதிருக்கும் படி அவனை கட்டாயப்படுத்தினால் எப்படிக் களைப்படைவானோ அதே மாதிரி களைப்படைவான். இறக்கைகள் மட்டும் இருந்தால் அவன் சிறகடித்துப் பறப்பான்!.. குழந்தைகளுடைய வளர்ச்சி வேகத்திற்கேற்ப, அவர்களுடைய உள்சக்திகளின் இயக்கத்திற்கேற்ப கல்வி போதிக்க வேண்டும்.

இசையில் உள்ளதைப் போன்றே கல்வி போதிக்கும் தத்துவத்திலும் நடைமுறையிலும் விஷயங்களைத் துல்லியமாகக் குறிப்பிடும் வழிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!

எந்த ஒரு இசையமைப்பாளரும் இசையின் எந்தப் பகுதியை எப்படி, எந்த பாவனையில், எந்த வேகத்தில் இசைக்க வேண்டுமெனக் குறிப்பிடாமல் இசையை அமைப்பதில்லை. அப்போது தான் இசை முழுமை பெறும், கேட்பவரின் மனதையும் உணர்ச்சிகளையும் தொடும்.

சின்னஞ்சிறு மனிதனின் மனதையும் இதயத்தையும் பாடங்கள் கவருவதில் ஆசிரியர்களுக்கும் இதே மாதிரியான அக்கறையில்லையா என்ன! எனவே, ஒவ்வொரு போதனை விஷயத்தையும் (அல்லது “போதனை இசையையும்”) பாடத்தில் எந்த தொனியில், எந்த வேகத்தில் செய்வது என்று யோசித்து முடிவு செய்தால் நன்றாயிருக்குமோ! இவையெல்லாவற்றையும் வேகத்தின் நோக்கிலும் தொனியின் நோக்கிலும் தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் எப்போதோ இதை நன்கு உணர்ந்து கொண்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட, கணக்குகளை எப்படி குழந்தைகளுக்குத் தருவது, இந்த “இசையை” வகுப்பில் எப்படி இசைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் நன்கு யோசிக்காமலேயே என்னால் பாடத் திட்டத்தை தீட்ட முடிந்திருந்தது. எப்படிப்பட்ட உணர்வற்ற தொனியில், எப்படிப்பட்ட வேகத்தில் நான் எளிய கணக்குகளை என் குழந்தைகளுக்குத் தந்தேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கும் போது, இவற்றைப் போட அவர்கள் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள், ஏன் அவ்வளவு விருப்பமின்றி பாடங்களில் கலந்து கொண்டார்கள் என்று எனக்குப் புரிகிறது. அந்த வகுப்புகளை – போதனை முறையை – இப்போது போதனை “இசை” என்று என்னால் சொல்ல முடியாது. முன்னர் என் பாடங்களை நான் பின்வருமாறு நடத்தினேன்.

“என்னைப் பாருங்கள்!” என்று வகுப்பைப் பார்த்துக் கூறினேன். சிறிது இடைவெளி.. “கவனமாகக் கேளுங்கள்!…”

சொல்லித் தரும் தொனியில் அழுத்தந் திருத்தமாக உச்சரித்தேன்: “6 உடன் எதைச் சேர்த்தால் 10 வரும்?”

கட்டளையிடும் குரலில் சொன்னேன்: “எல்லோரும் யோசியுங்கள்!…”

மெளனம்.

“யாருக்கு விடை தெரியுமோ கையைத் தூக்குங்கள்.”

எச்சரித்தேன்: “மற்றவர்கள்?”

கண்டிப்புடன் கூறினேன்!

“எல்லோரும்!… எல்லோரும்!…”

வகுப்பைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னேன்: “சரி, லேரி! நீ சொல்!”

லேரி மெதுவாக, எச்சரிக்கையோடு சொல்கிறான்: “4 ஐக் கூட்ட வேண்டும்…”

நான் எரிச்சலோடு சொன்னேன்: “இல்லை, அப்படியில்லை! முழு பதிலைச் சொல்ல வேண்டுமென நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா!”

பின் மீண்டும் அதே மாதிரியான சொல்லித்தரும் தொனியில் அழுத்திக் கூறினேன்:

“ஆறுடன் சேர்க்க வேண்டும்….. கட்டளையிட்டேன்: தொடர்ந்து சொல்!” லேரி: “ஆறுடன் நான்கைச் சேர்த்தால் பத்து வரும்!” ஏளனமாக: “அப்படித்தான். உட்கார், எப்படி பதில் சொல்ல வேண்டுமென மறந்து விடாதே!”

இதே மாதிரியாகத் தொடரும்.

இதில் பொதுவாக விஞ்சி நிற்பது அதிகாரத் தொனி, பாடம் நடத்தப்படும் வேகம் மெதுவானது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். புதியவற்றை அறியும் மகிழ்ச்சியும் ஆசிரியருடன் கலந்து பழகும் மகிழ்ச்சியும் குழந்தைகளுக்குக் கிட்டவில்லை என்பது ஒரு புறமிருக்க இப்படிப் பட்ட பாடங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்குமா என்ன!

இப்போது இதே மாதிரியான பாடத்தை இன்று நான் எப்படி நடத்துகிறேன் என்று பார்ப்போம்.

உறுதியோடு, விரைவாக, ஆர்வந்தரும் வகையில் சொல்கிறேன்:

“குழந்தைகளே! குனியுங்கள்! (சிறிது இடைவெளி.) கண்களை மூடுங்கள்!”

மெதுவான குரலில், சற்றே எச்சரிக்கும் குரலில் சொல்கிறேன்:

“கணக்கைத் திரும்பச் சொல்ல மாட்டேன்!“ ,

மெதுவாக, அமைதியாக, சிறு இடைவெளிகளுடன் சொல்கிறேன்:

“நான் ஒரு எண்ணை நினைத்திருக்கிறேன்…. அதனுடன் 6 ஐச் சேர்த்தால் 10 வரும்.” விளையாட்டுத் தொனியில் கேட்கிறேன்:

“நான் நினைத்துள்ள எண் எது? விரல்களால் காட்டுங்கள்!“

குழந்தைகள் தலையை உயர்த்தாமல், கண்களைத் திறக்காமல் விடையை விரல்களால் காட்டுகின்றனர். விரைவாக வகுப்பு முழுவதையும் சுற்றி வந்து, ஒவ்வொரு குழந்தையையும் அணுகுகிறேன், மெதுவாக விரல்களைத் தொட்டு சன்னமான குரலில் சொல்கிறேன் (விடை சரியானதாக இருந்தால்):

“சரி… நன்றி….. சரியான விடை… நல்லது!…”

விடை தவறாயிருந்தால் நம்பிக்கையேற்படுத்தும் தொனியில் (“உன்னால் முடியும்”) காதில் சொல்கிறேன்:

“தப்பு!… இன்னொரு முறை யோசி!… நான் உன்னிடம் திரும்பி வருகிறேன்!…”

எல்லோரையும் பார்த்து வந்ததும் உடனே உறுதியோடு:

“இரண்டாவது கணக்கு.” சிறு இடைவெளி. “10 லிருந்து எதைக் கழித்தேன் என்று மறந்து விட்டேன். ஆனால் எஞ்சியிருப்பது 7.”

கவர்ச்சிகரமாக, விரைவாக: “நான் மறந்து விட்ட எண் எது?” மீண்டும் ஒவ்வொரு குழந்தையையும் அணுகி காதில் மெதுவாகச் சொல்கிறேன்:

“சரி!… நன்றி!… இன்னும் ஒரு முறை யோசி!…” பின் மெதுவாக, ரகசியமாக சொல்கிறேன்: “விடுகதை சொல்லட்டுமா?”

குழந்தைகளும் தலையை உயர்த்தாமல், கண்களைத் திறக்காமல் சொல்கின்றனர்:

“சொல்லுங்கள்!”

உயிர்த்துடிப்போடு, உற்சாகமாக, சன்னமான குரலில் சொல்கிறேன்:

“ஒவ்வொரு வரும் 1-லிருந்து 5-க்குள் எதையாவது ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள்!”

இடைவெளி (எண்ணை நினைத்துக் கொள்ள அவகாசம் தருகிறேன்).

மெல்லிய குரலில் கேட்கிறேன்: “நினைத்து விட்டீர்களா ?”

குழந்தைகள் சன்னமான குரலில் பதில் சொல்கின்றனர்:

“நினைத்துக் கொண்டோம்.”

“அந்த எண்ணோடு 3-ஐக் கூட்டுங்கள்.” இடைவெளி (கூட்ட நேரம் தருகிறேன்). சன்னமான குரலில்: “கூட்டி விட்டீர்களா?”

குழந்தைகள் மெதுவாக: “கூட்டிவிட்டோம்.” கவர்ச்சிகரமாக, சன்னமான குரலில்: “இன்னும் 2-ஐக் கூட்டுங்கள்… கிடைத்த விடையிலிருந்து நீங்கள் முதலில் நினைத்த எண்ணைக் கழியுங்கள்!… இன்னும் 1-ஐக் கழியுங்கள்.”

இடைவெளி. “உங்களுக்குக் கிடைத்த விடையைச் சொல்லட்டுமா?” குழந்தைகள் ஆர்வமாக: “சொல்லுங்கள்!”

உறுதியோடு, சந்தோஷமான குரலில் கூறுகிறேன்: “தலையை உயர்த்தி என்னைப் பாருங்கள்!”

பின் விரைவாக, தீர்மானகரமாக கரும்பலகையில் ஒரு எண்ணை எழுதி, குழந்தைகள் பார்க்காமலிருக்க மூடுகிறேன்.

உற்சாகமாக, விரைவாக: “என்ன விடை கிடைத்தது? எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்!”

கையை அசைத்ததும், குழந்தைகள் உரக்க, ஒரே குரலில் பதில் சொல்கின்றனர்:

“நான்கு!” உடனே கரும்பலகையை திறந்து காட்டுகிறேன். “என்ன, சரியா ?”

குழந்தைகள் வியப்போடும் மகிழ்ச்சியோடும்: “ஆம்!” நானும் மகிழ்ச்சியாக: ”நான் எப்படிக் கண்டு பிடித்தேன் என்று சொல்லட்டுமா?”

குழந்தைகள் மகிழ்ச்சியோடும் பொறுமையின்றியும்: “சொல்லுங்கள்!”

இதே போல் தொடரும்.

இந்த போதனை இசையின் வேகம் என்ன? இது உயிரோட்டமுள்ளது, விரைவாக முன் செல்லக் கூடியது.

தொனி எப்படிப்பட்டது? பிரதான தொனி, ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவது, உறுதியளிப்பது, கவர்ச்சிகரமானது. முரட்டுத்தனம், எரிச்சல், பதட்டத்திற்கு இதில் இடமேயில்லை.

படிக்க:
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

பாடம் நடத்தும் வேகமும் பாவனையும் தொனியும் குழந்தைகளிடம் கல்வியின் பாலான மகிழ்ச்சிகரமான உறவை வளர்ப்பதற்கும் அவர்கள் பாடங்களை முழுமையாக கிரகிக்கவும் பெரிதும் முக்கியமானது என்று நம்புகிறேன். எனவே, பாடவேளைகளில் பள்ளி மாணவர்களுக்கு எந்த வேகத்தில், எந்தத் தொனியில் பாடம் நடத்துவது, எந்த வேகத்தில் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறுவது என்பதையெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பது அவசியமாகி வருகிறது. இந்த விஷயத்தில் தான்தோன்றித்தனம், தன்னிச்சையான போக்கு, குறிப்பாக அறிவின்மை ஆட்சி செலுத்தக் கூடாது!

♦♦♦

தாழ்வாரத்தில் கரும்பலகையருகே ஒலிக்க வேண்டிய முன் தயாரிப்பையடுத்து தலா 35 நிமிடங்களுக்கு நான்கு பாடங்கள் நடக்கும் (ஜனவரி முதல் நான் மினி-பாடங்களை நடத்துவதில்லை). இரண்டு சிறு இடைவேளைகளும் ஒரு பெரிய இடைவேளையும் உண்டு. 122-வது பள்ளி நாளின் திட்டத்தில் நான் எழுதியுள்ளபடி இந்தப் பாடங்கள், இடைவேளைகளின் சாரத்தை விளக்குவேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க