அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 09

கல்வி முறையியல் தவறுகள்

னது கற்பனையில், எனது முழு இசைக் குறியீட்டில் இன்றைய பள்ளி தினம் மேற்கூறியவாறு தான் காட்சியளிக்கிறது. இது இதே மாதிரி இருக்குமா? ஒரு வேளை சிறிது மாறுபடலாம்.

நான் திட்டமிட்டிருந்த எல்லாவற்றையும் குழந்தைகளிடம் கேட்க முடியாமல் போகலாம். எப்போதும் அதிகமான விஷயங்களுக்கு, கேள்விகளுக்குத் தயாராவதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான், திடீரென ஓய்வு நேரம் கிடைத்தால் நேரடியாகப் பாடவேளையின் போதே அவ்வளவு முக்கியமற்ற, சுவாரசியமற்ற விஷயங்களைப் பற்றி யோசித்து முடிவு செய்வதைத் தவிர்க்கலாம். வகுப்பில் அவர்கள் செய்ய முடியாதவற்றை பின்னர் அவர்கள் தாமாகவே பதில் கண்டுபிடிக்க விட்டு விடலாம் – கரும்பலகையில் இவை எழுதப்பட்டிருந்தால் அதை அழிக்காமல் விட்டு விடலாம், தாளில் எழுதப்பட்டிருந்தால் கரங்களில் வினியோகித்து விடலாம்.

முறையியல் தவறின் காரணமாக ஏற்படும் இன்னொரு விதமான மாற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டும்.

இதோ ஒரு உதாரணம்.

கணக்குகளைத் தாமாகவே உருவாக்க குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க நான் அக்டோபர் நடுவிலேயே திட்டமிட்டிருந்தேன்.

“பாடப் புத்தகத்தின் 26-வது பக்கத்தைத் திறவுங்கள்… 2-ம், 6-ம்! அங்கே ஒரு படம் உள்ளது. அதைப் பார்த்து நீங்களே ஒரு கணக்கைத் தயாரியுங்கள்.”

அப்படத்தில் ஒரு புறம் 4 கோழிக் குஞ்சுகள் சேர்ந்தாற் போலும் ஒரு புறம் ஒரு கோழிக் குஞ்சு தனியாகவும் உள்ளன. இந்தத் தனியான குஞ்சு அந்த 4 குஞ்சுகளை நோக்கி ஓடுகிறது. எனவே, ஒரு கூட்டல் கணக்கு உருவாக்கப்பட வேண்டும்; “முதலில் 4 கோழிக் குஞ்சுகள் இருந்தன, இன்னுமொரு குஞ்சு ஓடி வந்தது. இப்போது எவ்வளவு கோழிக் குஞ்சுகள் உள்ளன?”

முறையியல் சிபாரிசுகளின்படி, குழந்தைகள் கணக்கை உருவாக்கிய பின், நான் பின்வரும் கேள்விகளை அவர்களிடம் கேட்க வேண்டும்: “கணக்கில் எவ்வளவு நிபந்தனைகள் உள்ளன?… அவற்றைச் சொல்லுங்கள்!… கணக்கில் என்ன கேள்வி உள்ளது?… எப்படி கணக்கை எழுதுவது?.. கணக்கைப் போடுங்கள்!… என்ன விடை கிடைத்தது?”

கணக்கு, அதன் நிபந்தனைகளைப் புரிந்து, யோசித்து முடிவு செய்ய குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது தான் இதன் நோக்கம்.

“சரி, கணக்கை யோசித்து விட்டீர்களா?”

நீக்கோ பதில் சொல்கிறான்: “கோழிக் குஞ்சுகள் தானியத்தைக் கொறிக்கின்றன”.

“இதுவல்லவே கணக்கு! கணக்கை உருவாக்க வேண்டும், வாக்கியத்தை அமைக்க வேண்டாம்.”

நீயா சொல்லுகிறாள்: 4 கோழிக் குஞ்சுகள் இருந்தன, இன்னுமொன்று ஓடி வந்தது. ஆக 5 கோழிக் குஞ்சுகள் உள்ளன”.

“நீங்கள் கணக்கை உருவாக்க வேண்டுமே தவிர விடையைச் சொல்ல வேண்டாம்.”

ஏக்கா சொல்லுகிறாள்: “4 கோழிக் குஞ்சுகள் இருந்தன. இன்னுமொரு குஞ்சு ஓடி வந்தது. இப்போது எவ்வளவு கோழிக் குஞ்சுகள் உள்ளன? இப்போது 5 கோழிக் குஞ்சுகள் உள்ளன”.

அதே பக்கத்தில் உள்ள இன்னொரு படத்தைப் பார்த்து ஒரு கணக்கை உருவாக்குமாறு முன்மொழிகிறேன். அதே மாதிரி நடக்கிறது.

விக்டர்: “பறவைகள் மரத்தின் மீது உட்கார்ந்திருக்கின்றன.”

நான்: “இது வாக்கியம். நமக்கு வேண்டியது கணக்கு.”

தாம்ரிக்கோ: “மரத்தில் 5 பறவைகள் உட்கார்ந்திருந்தன. ஒரு பறவை பறந்து விட்டது. 4 பறவைகள் மீதியுள்ளன”.

நான்: “நீ கணக்கிற்கான விடையை அல்லவா சொல்லுகிறாய்!”

கியோர்கி: “5 பறவைகள் இருந்தன. ஒரு பறவை பறந்து விட்டது. எவ்வளவு பறவைகள் மரத்தில் மீதியுள்ளன? 4 பறவைகள் மீதியுள்ளன.”

இல்லை, இந்தக் கணிதப் பாடத்தில் கணக்குகளை உருவாக்கக் குழந்தைகளுக்கு என்னால் சொல்லித்தர இயலவில்லை, எனது கேள்விகள் அவர்களது யோசனைகளைத் தட்டி விடவில்லை .

ஆனால் எனது கேள்விகள் மட்டுமா இதற்குக் காரணம்?

இங்கே இக்குழப்பத்திற்கான இரண்டு அம்சங்களை நான் கண்டுபிடித்தேன்.

முதலாவதாக, இந்தக் கணித மினி-பாடத்திற்கான இக்கேள்விகளைக் கேட்ட போது, அதற்கு முன் தாய்மொழி மினி – பாடம் இருந்ததை நான் கவனத்தில் கொள்ளவில்லை. தாய்மொழிப் பாடவேளையில் நாங்கள் வாக்கியங்களை அமைப்பதில் பயிற்சி பெற்றோம். நான் அப்போது குழந்தைகளுக்குப் படங்களைக் காட்டி வாக்கியங்களை அமைக்கச் சொன்னேன். ஐந்து நிமிட இடைவேளைக்குப் பின் நாங்கள் கணிதப் பாடத்தை ஆரம்பித்தோம். ஆனால் குழந்தைகளின் மனதிலிருந்து முந்தைய பாடவேளை அகலவேயில்லை. எனவே தான், கணிதப் பாடத்தின் போது, “கணக்கை உருவாக்குங்கள்” என்று நான் கூறியதை “வாக்கியங்களை அமையுங்கள்” என்று அவர்கள் புரிந்து கொண்டனர். எனவே தான், “கோழிக் குஞ்சுகள் தானியத்தைக் கொறிக்கின்றன” என்று இலிக்கோவும், “பறவைகள் மரத்தில் உட்கார்ந்திருக்கின்றன” என்று விக்டரும் கூறினார்கள்.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

“இதற்கு முன் நாம் வாக்கியங்களை அமைத்தோம். இப்போது கணக்குகளை உருவாக்குவோம்” என்று தெளிவாக, புரியும்படி குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். மேலும், எப்படி கணக்கை உருவாக்குவது என்று நினைவு படுத்தவேண்டும். இப்படிச் செய்தால் நாம் ஒன்று சொல்ல, குழந்தைகள் அதை வேறு மாதிரி புரிந்து கொள்ளும் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

இரண்டாவது அம்சம் முறையியலிலேயே அடங்கியுள்ளது. உணர்வு பூர்வமான கல்வியை எளிதாக்குவதற்காக நாம் எல்லாவற்றையும் செய்யப்போக, சில சமயங்களில் தலைகீழாக நேர்ந்து விடுகிறது. காட்சிக் கருவி கல்வி முறை பற்றிய முற்றிலும் திட்டவட்டமானதாயில்லாத கோட்பாட்டைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி பாடநூல் எனக்கு ஒரு படத்தை முன்மொழிந்தது; இதில் 4 கோழிக் குஞ்சுகள் தனியாகவும், இவற்றை நோக்கிச் செல்லும் ஒரு குஞ்சு தனியாகவும் வரையப்பட்டுள்ளன. இன்னும் என்ன வேண்டும் என்று தோன்றும்.

எல்லாம் கண் முன் தெளிவாக உள்ளது. 4 கோழிக் குஞ்சுகள் இருந்தன, இன்னுமொன்று ஓடி வந்தது. இப்போது எவ்வளவு உள்ளன? “என்ன குழந்தைகளே, இவ்வளவு எளிய கணக்கை அமைப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? எல்லாம் தான் கண் முன் உள்ளனவே! உங்கள் திறமைகளுக்கு எல்லைகளே இல்லையென்றும் உங்களால் பொதுமைப்படுத்திச் சிந்திக்க முடியுமென்றும் உங்களுக்குக் குறிக்கணிதம் சில சமயங்களில் ஒரு விளையாட்டு என்றும் நவீன மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனரே!” ஆனால், 20 வரை சுலபமாகக் கூட்டவும் கழிக்கவும் தெரிந்த என் வகுப்புக் குழந்தைகளுக்கு இவ்வளவு சுலபமான வேலையைச் செய்ய முடியவில்லை.

ஆனால், எண்ணிக்கை ரீதியில் இப்படி கண் முன் வைக்கப்பட்ட இந்தப் பயிற்சி உண்மையிலேயே நமது கேள்விகளின் பதில்களைக் குழந்தைகள் புரிந்து கொள்வதை எளிதாக்குகிறதா? சில சமயங்களில் கல்வி முறை குழந்தையின் மன நிலையிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, கண்கூடான கோட்பாட்டை எப்படிப் பரவலாகப் பயன்படுத்துகிறது என்று நான் நன்கு உணர்ந்து கொண்டேன். “குழந்தைகள் பிம்பங்களின் மூலம் தான் சிந்திக்கின்றனர், மனோதத்துவ இயல் இதை நிரூபித்துள்ளது” என்று ஒரு கல்வி முறையியல் நிபுணர் கூறி பாடநூலில் 4 கோழிக் குஞ்சுகளின் படத்தையும் இவற்றை நோக்கிச் சொல்லும் இன்னுமொரு குஞ்சின் படத்தையும் வரைவார். இதோ பிம்பம், இப்போது கணக்கை உருவாக்க வேண்டும்.

ஆனால் குழந்தைக்கோ கணக்கை உருவாக்க கடினமாக உள்ளது. ஏன்? பிம்பங்களின் மூலம் சிந்திக்கின்ற திறமையை அவன் இழந்து விட்டானா? இதுவல்ல விஷயம். விஷயம் என்னவெனில், இங்கே பிம்பங்கள் கணக்கையே பொருளற்றதாக்கி விட்டன. ஏன் கணக்கை உருவாக்க வேண்டும்? இதை உருவாக்குவதற்கான காரணம் எங்கே உள்ளது? இங்கு தான் எல்லாம் தெட்டத் தெளிவாக உள்ளதே: 5 கோழிக் குஞ்சுகள். அவ்வளவுதான்! கணக்கும் விடையும். ஏதாவது தெரியாத ஒன்றைக் கண்டு பிடிக்கத்தான் கணக்கு தேவை, இங்கே அந்தத் ”தெரியாதது” ஏற்கெனவே தெரிந்த தாக்கப்பட்டுள்ளது. குழந்தை புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறான்: “கணக்கை உருவாக்கு” என்று நாம் சொன்னதை, “கணக்கைப் போடு” என்று அவன் புரிந்து கொள்கிறான். எனவே உடனே, எவ்வித பெரும் யோசனைகளும் இன்றி அதைப் போட்டு விடையைத் தருகிறான். குழந்தைகள் யோசிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நாம் கண்கூடாகத் தருபவற்றில் பதிலை கண்கூடாகக் காட்டும் அம்சம் (இது யோசிப்பதை அகற்றி விடும்) இருக்கக் கூடாது. பார்த்தீர்களா! கல்வி போதிக்கும் நிகழ்வுப் போக்கு எவ்வளவு சிக்கலானதாக சில சமயங்களில் மாறுகிறது.

எனது முறையியல் தவறினால் சமீபத்தில் இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மனித நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவம் குறித்துக் குழந்தைகளுடன் உரையாடுவதென முடிவு செய்தேன். “மரத்திற்குப் பலம் வேர்கள், மனிதனுக்குப் பலம் நண்பர்கள்” என்ற ஜார்ஜிய பழமொழியின் உதாரணத்தில் இதைச் செய்வதென தீர்மானித்தேன். “’மரத்திற்கு எது பலம் தருகிறது? மனிதனுக்கு எது பலம் தருகிறது?” என்று கேள்விகள் கேட்க வேண்டும்; பின் குழந்தைகளின் பதில்களின் அடிப்படையில் இவர்களை மானுட நட்பைப் பற்றிய பேச்சிற்கு இட்டுச் செல்ல வேண்டும்; “மனிதனுக்குப் பலம் நண்பர்கள் என்று ஏன் மக்கள் கூறுகின்றனர்?” என்று கேட்க வேண்டும் என்பது என் திட்டம். ஆனால் எல்லாம் முற்றிலுமாக மாறியது.

நான் பழமொழியைக் கரும்பலகையில் எழுத, குழந்தைகள் அதைப் படித்தனர்.

“சரி, மரத்திற்குப் பலம் எது?” என்று நான் கேட்டேன்.

“வேர்கள்!”

“மனிதனுக்கு ?”

கோத்தே சொல்கிறான்: “எலும்புக் கூடு.”

“என்ன?!” என்று நான் வியப்போடு கேட்டேன்.

“மனித உடலுக்கு அடிப்படை எலும்புக் கூடு.”

பழமொழியின் மறைபொருளை கோத்தே புரிந்து கொள்ளவில்லையா என்ன?

“எலும்புக் கூட்டில் உடல் எப்படி நிலையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது?” என்று மற்ற குழந்தைகள் கேட்டனர்.

“மனிதனுக்கு முதுகெலும்பு இல்லாமலிருந்தால் அவனால் நிலையாக இருக்க முடியாது. முதுகெலும்பு இங்கே ஆரம்பமாகி இங்கே முடிகிறது!” என்று விரல்களால் சுட்டிக் காட்டியபடியே கோத்தே கூறினான்.

“கோத்தே சொல்வது சரி.. வரைந்து காட்டட்டுமா?”

மனித உடலின் உள் உறுப்புகளின் அமைப்பைப் பற்றிய படத்தை எனக்குப் பரிசாக வழங்கிய அதே சிறுவன் தான் இதற்குக் காரணம். இப்போது அவன் மனித எலும்புக் கூட்டைப் பற்றிய புதிய விவரங்களை அறிந்து கொண்டிருக்கிறான். அவன் தன் படங்களைக் குழந்தைகளுக்குக் காட்டி எங்கே விலா எலும்பு, எங்கே மண்டை ஓடு என்றெல்லாம் விளக்கினான்; கோத்தேவிடமும் தன் ஞானத்தை அவன் பகிர்ந்து கொண்டிருக்கிறான். கோத்தே புதிய விவரங்களின் மனப்பதிவில் இருந்ததால் “மனிதனுக்கு பலம் எது?” என்ற என் மறைமுகமான கேள்விக்கு நேரடியாகப் பதில் சொன்னான்.

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்

இந்த விஷயம் மற்ற குழந்தைகள் மத்தியில் பேரார்வத்தை ஏற்படுத்தியது .

“அவன் எலும்புக் கூட்டை வரைந்து காட்டட்டும்!” என்று அவர்கள் கேட்டனர்.

இவ்வாறாக, நட்புறவைப் பற்றிய ஆசிரியரியல் இசை, மனித எலும்புக் கூட்டின் அமைப்பைப் பற்றிய பேச்சால் மாற்றப்பட்டது…..

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க