மருத்துவர் கண்ணன்

ணக்கம், நாம் இந்த அறிவியல் ஆரோக்கியம் சேனலில், அடுத்து சில காணொளிகளில் புற்றுநோய் சம்பந்தமான காணொளிகளை பதிவேற்றலாம் என முடிவெடுத்துள்ளோம்.

புற்றுநோய் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடுகிறது, அது ஒரு இறப்புச்சான்றிதழ் என எல்லோரும் முடிவெடுத்து விடுகிறோம். ஆனால், அது உண்மையில் அப்படி கிடையாது. இன்றைய அறிவியல் உலகில் பல புற்று நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் பூரணகுணம் என்பது சாத்தியமே.

அதேபோல, பல புற்றுநோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு வாழ்நாளை நீட்டிக்க முடியும். சில புற்று நோய்கள் தான் ஆபத்தானவை என கூறுகிறோம். இதைப் பற்றி உங்களுக்கு விளக்கவே இந்த காணொளி மற்றும் அடுத்தடுத்த காணொளிகளை பதிவேற்ற உள்ளோம்.

இதைப் பற்றி விவாதிப்பதற்கு நம்முடன் மருத்துவர் அழகு கணேஷ் வந்துள்ளார், அவரை வரவேற்போம் வணக்கம்.

கேள்வி : //புற்றுநோய் என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியும்படி எளிமையாக விளக்குங்கள்.//

நம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை வளரும் பிறகு தானாகவே இறந்து போகும். இதுவே செல்லானது இறந்து போகாமல், மேலும் மேலும் வளர்வதையே புற்றுநோய் என நாம் கூறுகிறோம்.

What is cancerஎன்ன கூற வருகிறோம் என்றால், நம் உடலில் செல்லானது, உருவாகி மறைவதும் மீண்டும் உருவாகுவதும் மறைவதும் என சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வருகிறது. இதுவே செல்லானது அழியாமல் வளர்ச்சி அடைந்து கொண்டே போனால், அதைத்தான் புற்று நோய் என கூறுகிறோம்.

கேள்வி : //புற்று நோய் எல்லோருக்கும் வர வாய்ப்புள்ளதா, அப்படி இல்லையென்றால் யாருக்கெல்லாம் வரும்.//

புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், மத வேறுபாடுகள் ஆகியன கிடையாது.

கேள்வி : //எல்லோருக்கும் வரும் என தடாலடியாக கூறிவிட்டீர்கள். யாருக்கெல்லாம் வர வாய்ப்புகள் அதிகம். அந்த ரிஸ்க் ஃபேக்டர்-ஐ கூறி விளக்குங்கள்.//

முதலில் புகைப்பிடிப்பவர்கள் அல்லது புகையிலையை உட்கொள்பவர்கள் இவர்களுக்கு வாய்ப் புற்று நோய், கணைய புற்று நோய், சிறுநீரகப் புற்று நோய் ஆகியன வர வாய்ப்புகள் அதிகம். அடுத்ததாக உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி –  உடல் உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆண், பெண் இருபாலருக்கும் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அதேபோல சிலர் கெமிக்கல் தொழிற்சாலைகளிலும், டையிங் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் அது சார்ந்த புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி : //முன்பைவிட தற்போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அறிவியல் நம்மிடம் உண்டு. இதை கணக்கில் கொண்டு தற்போது புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா? என்பதை கூறுங்கள்.//

இதை நாம் இரண்டாக பிரித்துப் பார்க்கலாம் முன்பெல்லாம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 50 அல்லது 60தான். ஆனால், இன்றைக்கோ சராசரி ஆயுட்காலம் என்பது 70 அல்லது 80. ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் நீடிக்கும் பொழுது அவர்களுக்கான புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். எளிமையாக கூற வேண்டுமானால், வயதாகும்போது புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

தற்போது சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால் புற்றுநோயின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேபோல் முந்தைய காலங்களில் காய்கறி ஆகட்டும் அல்லது உணவு பண்டங்கள் ஆகட்டும் உடனடியாக உண்ணும் பழக்கம் நம்மிடம் இருந்தது. ஆனால் இன்று அதை பதப்படுத்தி வைப்பதும் சீக்கிரம் கெடாமலிருக்க பூச்சிக்கொல்லிகளை சேர்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் புற்றுநோயானது ஏற்படுகிறது.

கேள்வி : //அசைவம் உட்கொள்வதால் புற்றுநோய் உண்டாகுமா.//

அசைவம் என்று பொதுமைப்படுத்தி கூறிவிட முடியாது ரெட் மீட் அதாவது சிவப்பு மாமிசம் உட்கொள்வதால், குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள். எனவே அசைவம் மட்டும் உட்கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது கிடையாது. கூடுதலாக அசைவத்தோடு சேர்த்து பச்சை காய்கறிகள் உட்கொண்டால் புற்றுநோய் வரும் வாய்ப்பானது குறைகிறது.

படிக்க :
♦ ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
♦ புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ

கேள்வி : // புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன? ஆரம்பத்திலேயே அவற்றை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் வாய்ப்புகள் நம்மிடம் உள்ளதா?//

இப்போது வாய் புற்றுநோய் என எடுத்துக் கொண்டோமானால், வாயில் ஏற்படும் புண் ஆறாமல் நீண்டகாலம் இருக்கும். குறிப்பாக வாயில் பல் அல்லது வேறெங்கிலும் புண்ணானது ஏற்பட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அந்தக் காயமானது குணமாகும். அதுவே, நீண்டகாலம் ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் வயிற்றில் தொந்தரவு ஏற்படும் போது குடல் புண் அல்லது வாயு பிரச்சினையாக இருந்தால் அது அதிகபட்சம் நான்கு வாரங்களில் குணமடையும். அப்படி குணமடையாமல் நீண்டகாலமாக நீடித்தால் அது குடல் புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை நாம் எண்டாஸ்கோப்பி அல்லது வேறு பரிசோதனைகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக மார்பகப் புற்றுநோய் சிலருக்கு மார்பகங்களில் ஏதேனும் கட்டி சிறுவயதிலிருந்தே இருக்கிறது என்றால் அது பிரச்சினை இல்லை. அதுவே சிலருக்கு மார்பகங்களில் ரத்தம் கசிவது, புதிதாக கட்டி உருவாவது அல்லது நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டு நீண்டகாலமாக நீடித்தால் அது மார்பக புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் இருமல், சளி; பொதுவாக இருமல், சளி என்றால் அது 4 வாரங்கள் அல்லது 2 வாரங்களுக்குள் சரியாகும். அப்படி இல்லாமல் நீண்ட நாட்களாக நீடித்தால் அது நுரையீரல் புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இங்கு காச நோய்க்கும் இதே போன்ற அறிகுறிகள் தென்படும் ஆதலால் காசநோய்க்கான மருத்துவம் எடுத்துக் கொண்டு இருப்போருக்கும் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நம் உடலில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகவேண்டும். இரண்டு அல்லது நான்கு வாரங்கள் வரை அது குணமடைகிறதா என்று பார்க்கலாம். அப்படி குணமடையவில்லை என்றால் அந்த உறுப்பில் புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டால், நாம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம், ஒருவருக்கு உடலில் அனிமியா பாதிப்பு உள்ளது என்றால், அதனால் அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும், மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாம் உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்ளும் போது நமக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கூட வேண்டும். அப்படி கூடவில்லை என்றால் நாம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

இதேபோல்தான் இன்னஇன்ன அறிகுறிகளால்தான் புற்றுநோய் ஏற்படும் என்று நாம் கூற முடியாது. எனவே நாம் எந்த நோயாக இருந்தாலும் அது குறிப்பிட்ட கால அளவில் குணமடையவில்லை என்றால் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவ்வாறு செய்யும்போது அதை எளிதில் குணப்படுத்த நம்மிடம் வசதிகள் உண்டு.

கேள்வி : //புற்று நோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனைகள் என்னென்ன என்பதை விளக்குங்கள்.//

அடிப்படை பரிசோதனையானது உடலிலுள்ள பாகங்களை பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு வாய்புற்றுநோயை கண்டறிவதற்கு மருத்துவர் டார்ச் லைட் அடித்து பார்த்தும் அல்லது தொட்டுப் பார்த்தும் கண்டறிந்து விடுவார் அப்படியும் தென்படவில்லையானால் ஒரு சிடி ஸ்கேன் மூலம் கண்டறிந்து விடுவார்.

அதுவே, மார்பகப் புற்றுநோயானால் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது மேமோகிராம் போதுமானவை. குடல் புற்று நோயானால் அது எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். அதேபோல் மலக்குடல் புற்று நோயை கண்டறிய டொர்னோஸ்கோஃபி பரிசோதனை உண்டு.

அதேபோல் பெண் உறுப்புகள் சார்ந்த புற்று நோயைக் கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் போதுமானவை. எந்த ஒரு உறுப்பாக இருந்தாலும் அது என்ன வகையான கட்டி என்று பரிசோதனை செய்து பார்ப்பதற்கு முதலில் இமேஜிங் என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். பிறகு பயாப்சிக் மேற்கொள்வார்கள்.

ஏனென்றால், எந்த ஒரு கட்டியாக இருந்தாலும், அதை நாம் புற்றுநோய் என கூறிவிடமுடியாது. பயாப்சி பரிசோதனை செய்து கொண்ட பிறகுதான் நாம் உறுதி செய்ய முடியும்.

கேள்வி : //பயாப்ஸி என்று கூறுகிறீர்களே அப்படி என்றால் என்ன.//

பயாப்ஸி என்பது திசு பரிசோதனை அதாவது உடம்பில் உருவாகக்கூடிய கட்டியின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதனை செய்வார்கள். பொதுமக்களிடம் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் கட்டி பரவும் என யூகிக்கிறார்கள். இது தவறு, இதற்குக் காரணம் பயாப்சி பரிசோதனை மேற்கொண்ட பின், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதுதான் கட்டி பரவுவதற்கான காரணமே தவிர, பயாப்சி பரிசோதனை மேற்கொள்வதால் கட்டி பரவாது.

பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் தான், அது புற்றுநோயா, இல்லையா என்பதை நாம் உறுதி செய்ய முடியும். நாம் முன்னமே கூறியது போல் மார்பகங்களில் உண்டாகக்கூடிய கட்டியானது காச நோயாகவும் இருக்கலாம் அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம். அதை உறுதி செய்ய நாம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். எனவே, பயாப்சி என்பது புற்றுநோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
♦ இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?

கேள்வி : //புற்றுநோய்க்கு என்ன வகையான மருத்துவம் மேற்கொள்வார்கள்? உதாரணத்திற்கு கட்டியை எடுத்து விடுகிறார்களே.. அதுதான் புற்றுநோய்க்கான மருத்துவமா? அல்லது வேறு என்ன என்பதை விளக்குங்கள்.//

முன்பு எப்படி என்றால் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றி விடுவதே மருத்துவமாக இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. புற்று நோய்க்கான மருத்துவம் என எடுத்துக்கொண்டால், அதை நாம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

ஒன்று அறுவைசிகிச்சை, இரண்டு புற்றுநோய்க்கான மருந்துகளை கொடுப்பது, மூன்றாவது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு முறையும் புற்றுநோய் உண்டான இடத்தை மட்டுமே மையமாக வைத்து மேற்கொள்ளும் மருத்துவம்.

அதேபோல் நாம் இரண்டாவதாகக் கூறிய கீமோதெரபி முறை, அந்தப் புற்றுநோய் உடம்பில் வேறு எங்கும் பரவி இருக்கிறது என்றால் அதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவம். உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவம் உண்டு, சிலவற்றிற்கு ஆரம்பநிலையிலேயே அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்படும். சிலவற்றிற்கு ஆரம்பத்தில் கீமோதெரபி மருத்துவம் மேற்கொண்டு கட்டியை சுருக்கி விட்டு பிறகு அறுவை சிகிச்சையை மேற் கொள்வோம். சிலவற்றிற்கு மூன்று முறையும் கலந்து மருத்துவம் மேற்கொள்ளப்படும். மிகவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்று நோய்க்கு மட்டுமே அறுவை சிகிச்சையானது போதுமானது.

இதில் நாம் என்ன எளிமையாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்றால், புற்றுநோய்க்கான வைத்தியம் நேரடியாக இதுதான் என்பது கிடையாது. முதலில் அந்த புற்றுநோய் அந்த இடத்தில் மட்டும்தான் உள்ளதா, அல்லது உடலில் பிற பாகங்களுக்கும் பரவி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.

பிறகு நாம் மேல் கூறிய மூன்று வகையான புற்று நோய்க்கான மருத்துவத்தில் எதை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்கு ஒரு குழு தேவைப்படும். அந்தக் குழுவில் அறுவை சிகிச்சை நிபுணர்களும், கீமோதெரபி மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் சிலர் உடலில் ஏதோ ஒரு உறுப்பில் கட்டியை கண்டறிந்த பின் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு. சிறிது காலம் கழித்து உடலில் பிற பாகங்களில் கட்டி பரவி, ரொம்பவும் முற்றிய நிலையில் மருத்துவமனையை வந்து அடைகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகதான் கூறுகிறோம் அந்தந்த நிபுணர்களைக் கொண்ட குழுதான் இதை முடிவு செய்ய வேண்டும் என்று.

சுருக்கமாக ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு செல்வது நல்லது ஏனென்றால் அங்குதான் மூன்று துறைகளின் சேர்ந்த மருத்துவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.

கேள்வி : //நாம் கூறுகிறோம் அல்லவா இத்தனை வசதிகள் நம்மிடம் உண்டு என்று, இருந்தும் ஏன் மக்கள் காலம் கடந்து மருத்துவமனையை அடைகிறார்கள்.//

இது மிகவும் நல்ல கேள்வி, இதற்கு சோஷியல் ஸ்டிக்மா என்று பொருள். உதாரணத்திற்கு, ஒருவர் சர்க்கரைநோய் அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கான சிகிச்சை முறையையும் மேற்கொள்கிறார்கள் என்றால் அதைப்பற்றி பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கலந்துரையாடுகிறார்.

சர்க்கரை நோய் என்றால் நான் அதற்காக இன்சுலின் எடுத்துக் கொண்டேன் என்றும், அதுவே மாரடைப்பு என்றால் அதற்காக நான் ஸ்டன்ட் வைத்துள்ளேன் என்றும், அது உடலுக்கு எந்த வகையான தீங்கும் ஏற்படுத்தாது என்றும் கலந்துரையாடுகிறார். இதுவே ஒருவர் தனக்கு புற்றுநோய்க்கான அறிகுறி நன்றாகவே தென்படுகிறது என்றாலும், அதை தனது காலத்தின் இறுதி கட்டம் என்று நினைத்துக்கொண்டு, பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கூற அஞ்சுகிறார்கள்.

தன்னை இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு நோய் நம்மை பீடித்துவிட்டது என அஞ்சி யாரிடமும் கூறாமல் விட்டு விடுகிறார்கள். இந்த ஸ்டிக்மாதான் முதல் காரணம். படிக்காத மக்கள் மட்டுமல்ல படித்தவர்களும் இதையேதான் செய்கிறார்கள். ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பார். ஆனால், முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுவார்.

நீங்களே இப்படி செய்யலாமா? என வினவினால், பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறினால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் கூறவில்லை என்பார். அவர்கள் தன்னை தன் பேரக் குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி வைத்து விடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். சிலர் இதை தொற்றுநோய் போலவும் பாவிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் ஆரம்பநிலையில் அணுகாமல், நோய் முற்றிய நிலையில் வருகிறார்கள். அப்படி வரும்போது எங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறது.

சுருக்கமாக மற்றும் என்றால் அதைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் கூறுகிறார் அவரும் அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை அடைகிறார். ஆனால், புற்றுநோயைப் பொறுத்தவரை ஒருவர் தனக்கு இந்த தொல்லை இருக்கிறது என்பதையே உணர மறுக்கிறார். அப்படி வந்தாலும் அதை வெளியில் கூறுவதற்கு தயக்கம் காட்டுகிறார். எனவே மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை, மருத்துவர்கள் நாங்கள் ஓரளவுக்கு தான் முயற்சி செய்ய முடியும்.

படிக்க :
♦ சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
♦ ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி

மக்கள்தான் இதைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறவேண்டும். எனவே முதலில் புற்றுநோய் என்றால் அது தொற்றுநோய் அல்லாமல் அதுவும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களைப் போன்ற ஒன்று தான் என்பதை உணரும் பக்குவம் வேண்டும்.

மருத்துவர் கூறிய உதாரணம் போல ஒருவர் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், அவரை குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரு தீண்டத்தகாதவர் போலவே கருதுவார்கள். ஒரு நிகழ்ச்சிக்குத் செல்கிறார் என்றால் அங்கும் அவரை தனிமைப்படுத்தி அறிவுரைகளை மட்டுமே கூறுவார்கள். இதன் காரணமாகவே அவர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்து விடுவார். உண்மையில் அவர் புற்றுநோயால் அவஸ்தைப் படுவதை விட இந்த வகையான மன உளைச்சலால் அவஸ்தைப்படுவது தான் அதிகம். எனவே நாம் இவற்றில் இருந்து வெளியே வரவேண்டும்.

இதை தெரிவிக்கும்போதே நான் புற்றுநோய் பற்றிய மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என விரும்புகிறேன். புற்று நோய் என்றால் வலி அதிகமாக இருக்கும் என எண்ணுகிறார்கள் அது தவறு, பெரும்பாலான கட்டிகள் வலியில்லாமல்தான் ஏற்படும். மிகவும் முற்றிய நிலையில் தான் வலியை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் வலி உண்டாகக்கூடிய கட்டிகள் புற்று நோயாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சீழ்க் கட்டி இருக்கிறது என்றால் அது வலியை ஏற்படுத்தும் பின்பு குணமாகும். அது புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதுவே எந்த வலியும் இல்லாமல் ஒரு கட்டி இருக்கிறது, வளர்கிறது என்றால் அதுதான் புற்றுநோயாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.

கேள்வி : //கடைசியாக முடிப்பதற்கு முன் புற்றுநோய் பற்றி இணையதளத்தில் நாம் தேடுகிறோம் என்றால் நம்பத்தகுந்த இணையதளங்கள் சிலதை குறிப்பிடுங்கள்.//

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர்களோ இணையதளத்தை அணுகினால் அதில் பெரும்பாலும் தவறான விஷயங்கள் தான் வரும், யாரோ ஒருவர் பிளாக் எழுதி இருந்தால் அதிலிருந்துதான் தகவல்கள் தென்படும்.

NCCN.ORG என்ற அனைத்துலக தகவல் மையம் உள்ளது. இந்த இணையதளத்தில் மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும் அல்லது நோயாளிகள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற எல்லா விஷயங்களும் உள்ளது. இதை வாசிப்பதன் மூலம் நோயாளிகள் தான் சரியான மருத்துவத்தை தான் மேற்கொள்கிறோமா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இன்னொன்று CANCER.ORG இது அமெரிக்க புற்றுநோய் அசோசியேஷனுடைய வலைத்தளம். இந்த இணையதளத்திலும் எளிய முறையில் ஒவ்வொரு புற்றுநோய்க்கும் என்ன வகையான மருத்துவம் என்பது போன்ற தகவல்கள் உள்ளன.

இதை நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், மருத்துவரை நோக்கி இதில் இப்படி உள்ளது நீங்கள் ஏன் இந்த மருத்துவத்தை மேற்கொள்கிறீர்கள் என கேட்கக்கூடாது. இதை நிலைமைகள் தான் தீர்மானிக்கும். இதைப்பற்றி நாம் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைதளங்கள் உதவும். ஆனால், நமக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்கிற தார்மீக உரிமை மருத்துவருக்குதான் உண்டு என்பதை உணர்ந்துகொண்டால், நமது மருத்துவம் எளிமையாக முடியும்.

இந்த காணொளியில் புற்றுநோய் பற்றிய ஒரு பொதுவான விவாதத்தை தான் தொடங்கியுள்ளோம். அடுத்த காணொளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பற்றிய முழு விளக்கங்களை எடுத்துரைக்கிறோம். நன்றி.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

1 மறுமொழி

  1. //அசைவம் என்று பொதுமைப்படுத்தி கூறிவிட முடியாது ரெட் மீட் அதாவது சிவப்பு மாமிசம் உட்கொள்வதால், குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள்.//

    முற்போக்குகளா புரிஞ்சுதா.. உங்களுக்கு தான் இந்த தகவல், அதுனால அளவுக்கு அதிகமா, விலை கம்மியா இருக்கேன்னு அடிக்கடி மாட்டுக்கறியை வாங்கி தின்னு தொலையாதீங்க, இல்லாட்டி அவ்ளோதான், குடியிருக்கிற வீட்டை வித்தாலும் உங்களை காப்பாத்த முடியாது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க