அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 10

மாயா மட்டும் நோய்வாய்ப்படாதிருந்தால்….

… என்றும் போல் இன்றும் எனது பாடங்களுக்கான திட்டத்தை மேசையில் வைத்து, இதன் பல அம்சங்கள். மனப்பாடமாகத் தெரியும் என்ற போதிலும் அடிக்கடி பார்ப்பேன்.

குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை எனது முழு இசைக் குறியீடுதான் வழி நடத்த வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லை, ஏன் ஒரு வேளை இது அவசியமற்றதாகக் கூட இருக்கலாம். ஏனெனில் எனது முழு இசைக் குறியீடு குழந்தைகளின் உண்மையான உணர்வுகள், அக்கறைகள், புதியவற்றை அறியும் ஆர்வங்கள் முதலியவற்றை பிரதிபலிக்கும், இவர்களுக்கு மகிழ்ச்சிகரமான பள்ளி நாளை வழங்கும், இவர்களின் முன்னோக்கிய அணி நடையை வழிநடத்தும், சுயமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையின் அடிப்படையில் அவர்களை வளர்க்கும். எனது பூர்வாங்க யோசனைகளுக்கும் குழந்தைகளின் விருப்பங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றினால் அப்போது நான் தேர்ந்தெடுத்த முறையின் குறைகள் உடனே வெளிப்படும். இது குழந்தை வளர்ப்பின் புறவயப் பொருளாக குழந்தைகளையும் அகவயப் பொருளாக என்னை நானேயும் ஆழமாக அறிந்து கொள்ள அடிப்படையைத் தரும்.

நான் கரும்பலகையில் கணிதப் பாடத்திற்கான கடைசிக் கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். தாழ்வாரத்திலோ ஏற்கெனவே பள்ளி நாள் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேன்மேலும் வலுத்து வரும் குழந்தைக் குரல்களில் ஒரு சில தனிப்பட்ட வார்த்தைகள் மட்டும் காதில் விழுகின்றன.

“பத்து முக்கோணங்கள்!”

“இல்லை, எட்டுதான், என்ன பந்தயம்!”

“இங்கே என்ன வார்த்தை வருமென நான் கண்டு பிடித்து விட்டேன்!”

“இது என்ன பெரிசு! நானும் தான் கண்டு பிடித்து விட்டேன்!”

“சொல்!“

“விண்வெளி!”

“இல்லை, வானொலி!”

“இங்கேயுள்ளதை என்னால் வாசிக்க முடியும்:111, 111.”

“இந்த எழுத்துகளைக் கொண்டு நான் மூன்று வார்த்தைகளை உருவாக்கி விட்டேன்.”

“இது என்ன பெரிசு! ஐந்து வார்த்தைகளை உருவாக்கு, அப்போது பெருமையடித்துக் கொள்ளலாம்.”

“இதோ பார், எவ்வளவு சுவாரசியமான கணக்கு!”

“இதை நாம் கணிதப் பாடத்தில் போடுவோம்.”

“இந்த எண்கள் ஏன் சதுரங்களுக்குள் எழுதப்பட்டுள்ளன என்று சொல்லட்டுமா?”

“வேண்டாம், நானே கண்டுபிடிப்பேன்!”

சிலர் தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையை விட்டு அகல, புதிதாக சிலர் வந்து, இதுவரை நடந்த விவாதத்தைத் திரும்ப வேறு விதங்களில் நடத்துகின்றனர்.

இனிய மின்சார மணி ஒலிக்கிறது.

“குழந்தைகளே, வகுப்பறையினுள் வாருங்கள்! சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”

கணிதப் பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

“குழந்தைகளே, வணக்கம்!”

“வணக்கம்!”

“என்ன புது விஷயங்கள்?”

மாயா: “எனக்கு ஜூரமாக உள்ளது. அம்மா விடமாட்டேன் என்றாள். ஆனாலும் நான் கேட்காமல் வந்துவிட்டேன்.”

நான்: “ஜூரமா? இப்போது உனக்கு எவ்வளவு ஜூரம் என்று பார்ப்போம்.”

ஆசிரியரே! நீங்கள் வகுப்பறையில் எப்போதும் முதலுதவிப் பெட்டியை வைத்திருங்கள், குழந்தைகளின் நோய்களைப் பற்றி, குறிப்பாகத் தொற்று நோய்கள் பற்றியும் இவை எப்படித் தோன்றுகின்றன என்பது பற்றியும் அறிந்திருங்கள்! ஆசிரியரே! நீங்கள் முதலுதவி மருத்துவராயும் இருக்க வேண்டும்.

மாயா: (பயந்தபடியே) “எனக்கு ஜூரம் இருந்தால் நீங்கள் என்னை வீட்டிற்கு அனுப்பி விடுவீர்களா?”

நான்: “பார்ப்போம். நீ அம்மா சொல்வதைக் கேட்க வேண்டும்!”

“நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா?” என்று அவள் கேட்கிறாள்.

“சொல்!” என்கிறேன் நான். அவள் ஓடி வருகிறாள்.

“ஆனால் காதில் தான் சொல்வேன்” என்று அவள் கூறுகிறாள்.

நான் குனிய, அவள் என் காதருகே வருகிறாள். ஆனால் ஒன்றும் பேசாமல் மௌனம் சாதிக்கிறாள்.

“இல்லை, அப்புறம் சொல்வேன்” என்று சொல்லி விட்டுத் தன்னிடத்திற்கு ஓடுகிறாள். ,

லேலா: “நான் ஒரு புதிய படம் வரைந்திருக்கிறேன். இதை வகுப்பறையில் மாட்டலாமா?”

நான்: “உனக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் மாட்டலாமே.”

என் வரைவகுப்புக் குறியீட்டின் இரண்டாவது பகுதிக்கு வருகிறேன்: “நாம் இன்று என்ன படிக்கப் போகின்றோம் தெரியுமா?”

நான் என்னென்ன கணக்குகள், பயிற்சிகளை அவர்களுக்குத் தயாரித்துள்ளேன் என்று குழந்தைகள் கேட்டதும், விரைவிலேயே பாடத்தைத் துவங்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குத் தோன்றுகிறது.

“முதலில் மாயாவிற்கு எவ்வளவு ஜூரம் என்று பார்ப்போம்.”

அவள் வெப்பமானியை என்னிடம் நீட்டுகிறாள். அதில் 38.3°C உள்ளது. உடனே மருத்துவரைக் கூப்பிட வேண்டும், பெற்றோர்களை வரவழைக்க வேண்டும்!

மாயா பதட்டப்படுகிறாள்: “வீட்டிற்குப் போக மாட்டேன்!”

“இரண்டு, மூன்று நாட்கள் படுத்திருந்தால் சரியாகி விடும். பின் பள்ளிக்கு வரலாம்” என்று நான் சாந்தப் படுத்துகிறேன்.

குழந்தைகளும் பதட்டப்பட்டு, அவளை சாந்தப்படுத்துகின்றனர்:

“நோயோடு விளையாடக் கூடாது!”

“நான் உனக்கு போன் செய்து, வகுப்பில் நடந்ததை எல்லாம் சொல்வேன்.”

“மாயா, புத்திசாலிப் பெண்ணாயிரு!”

மருத்துவர் வந்து சிறுமியை அழைத்துச் செல்கிறார்.

“பார்த்தீர்களா, மாயா எப்படிப்பட்டவள், அவள் உங்கள் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள், பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள்! எனவே தான் ஜூரம் இருந்தும் இங்கு வந்திருக்கிறாள், உங்களுடன் சேர்ந்து இருக்க ஆசைப்படுகிறாள்!”

இராக்ளி: “அவளைப் பார்த்தால் பாவமாயுள்ளது!”

சூரிக்கோ: “அவளுக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாகி விடும்!”

நான்: “வாருங்கள், பாடத்தைத் தொடருவோம்!”

ஆனால் ஏற்கெனவே 15 நிமிடங்கள் கழிந்து விட்டன. எனவே, நான் திட்டமிட்டிருந்ததில் 1/3 பங்கை (கவன உணர்வை வளர்க்கும் பயிற்சிகள்) சுருக்கமாக நடத்துகிறேன். எஞ்சிய பகுதி திட்டமிட்டபடியே நடக்கிறது.

“பாடம் எப்படி இருந்தது?” என்று பாட இறுதியில் நான் கேட்டதற்கு லாலி பின்வருமாறு பதில் சொன்னாள்:

“மாயா மட்டும் நோய்வாய்ப்படாமலிருந்தால் பாடம் இன்னமும் மகிழ்ச்சிகரமான தாயிருக்கும். நான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு இப்போது எப்படியுள்ளது என்று தெரிந்து கொள்ள முடியுமா?”

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !

நாங்கள் எல்லோருமே மாயாவிற்காகக் கவலைப்பட் டோம் என்று தெரிந்தது.

இதோ மருத்துவர் வருகிறார்.

“மாயாவிற்கு எப்படியுள்ளது?”

“பயம் ஒன்றுமில்லை. அவளுக்கு ஜலதோஷம். அம்மா வந்து அழைத்துச் சென்று விட்டாள். பாடத்தை விட்டுச் செல்வதற்காக அவள் அழுது கொண்டிருந்தாள்.”

குழந்தைகள் அமைதியடைந்தனர். முதல் 10 நிமிட இடைவேளை திட்டமிட்டபடியே உற்சாகமாகக் கழிந்தது. கரும்பலகையிலிருந்த கணக்குகளைப் போட்டோம். அடுத்து தாய் மொழிப் பாடத்தைத் துவக்குகிறேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க