அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 01

தனிநபர் (கடைசி, 170-வது நாள்)

லா இருநூறு பக்கங்களைக் கொண்ட நான்கு பெரிய நோட்டுப் புத்தகங்களில் எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் படிப்பு சொல்லித் தந்ததைப் பற்றியும் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் எனது மனப்பதிவுகளை நாட் குறிப்பாக எழுதியுள்ளேன். என் கண் முன்னரே அவர்கள் வளர்ந்த போதிலும் எனது வியப்பை என்னால் மறைக்க இயலவில்லை. இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு பாய்ச்சல் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கல்வியாண்டு முடிந்து நான் நீண்ட நாட்களுக்குக் குழந்தைகளிடமிருந்து விடைபெறும் போதும் ஒரு சோகமயமான மகிழ்ச்சி என்னைத் தழுவும். அவர்களுக்காக மகிழ்ச்சியடையும் நான் அதே சமயம் அவர்களை விட்டுப் பிரிய வேண்டியுள்ளதே என்று வருந்துகிறேன். எங்களுக்குக் கவலை தந்த விஷயங்கள், மகிழ்ச்சியளித்த சம்பவங்கள், எங்கள் ஏமாற்றங்கள், நாங்கள் எப்படி வாழ்ந்தோம், கல்வி கற்பதிலும் வளர்ப்பிலும் எப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் எங்கள் முன் தோன்றின, நாங்கள் இவற்றை எப்படிச் சமாளித்தோம் ஆகிய எல்லாமே இந்தப் பெரிய நோட்டு புத்தகங்களில் உள்ளன.

ஒவ்வொரு குழந்தையின் மன நிலையும் எப்படி உருவாகியது என்பது பற்றிய உண்மைகள் இதில் உள்ளன. என் வகுப்புக் குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒரு தனி நபராக உருவாக்க நான் முயன்றேன், ஏனெனில் மனிதர்களின் மகிழ்ச்சிக்கான நவீனப் போராளியை இந்தத் தனிநபரில் தான் நான் காணுகிறேன். இலட்சியங்கள், நோக்கங்கள், சித்தம், அறிவு, உணர்வுகள், மனிதநேயம் ஆகியவற்றின் மிகச் சிறப்பான, ஈடு இணையற்ற கலவையாகத்தான் நான் மனிதனைப் பார்க்கிறேன். எனது சின்னஞ்சிறு வகுப்பு மாணவர்களிடம் முதல் நாளிலிருந்தே இந்தக் கலவையை ஏற்படுத்த ஆரம்பித்தேன்; மூன்றாண்டுகள் கழித்து இவர்கள் பள்ளி வாழ்க்கையின் அடுத்த படியில் காலடி எடுத்து வைப்பார்கள், அப்போது எனது சக ஆசிரியர்கள் இப்பணியைத் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் இந்தத் தனித்துவத்தை நான் எப்படிப் படைத்தேன்? 800 பக்கங்களில் அடங்கியுள்ள ஏராளமான விஷயங்களைப் பார்க்கிறேன்; இவை பின்வரும் முக்கிய முடிவிற்கு என்னை இட்டுச் செல்கின்றன.

தன்னைத் தானே சுயமாக அறிந்து கொள்ளும் போது, சுயமாக தன் நிலையைத் தானே நிர்ணயம் செய்யும் போது, தன்னுடன் நடக்கும் போராட்டத்தில் தான் தனிநபர் உருவாகிறான்; குழந்தை வளர்ப்பும் கல்வி போதனையும், குழந்தையை இப்பாதையில் வழிநடத்தி, இப்போராட்டத்தில் அவன் வெற்றி பெற உதவுவதைத் தான் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

மேற்கூறிய போராட்டத்தில் தோல்வி ஏற்படக் கூடும். ஆறு வயதுக் குழந்தைகளின் விஷயத்தில் மேற்கூறிய கருத்து நிலை திட்டவட்டமான உட்பொருளைப் பெறுகிறது; அதாவது பெரும் கவனம் தேவைப்படுகிறது, ஏனெனில், தன்னுடனேயே நடக்கும் இப்போராட்டம் தனிநபரின் உயர்விற்கு மட்டுமின்றி அழிவிற்கும் வழிகோலக் கூடும், மோசமான சூழலில் தன்னைத் தானே சுயமாக அறியும் குணமும், சுயமாகத் தன் நிலையை நிர்ணயிக்கும் தன்மையும் குழந்தையின் மனதில் கீழான கருத்துக்களையும் உறவு முறைகளையும் தோற்றுவிக்கக் கூடும்.

இந்த நோக்கிலிருந்து என் நாட்குறிப்புகளைத் திருப்பிப் பார்ப்பதென முடிவு செய்தேன்.

செப்டம்பர் 5. வார்த்தைகள், வாக்கியங்களின் வீரதீரம்

முன்னர் நான், வார்த்தைகளும் வாக்கியங்களும் எளியவையாக, புரியக் கூடியவையாக இருக்கின்றனவா என்று பார்த்துத் தேர்ந்தெடுத்தேன். உதாரணமாக, வார்த்தைகள் தெட்டத் தெளிவானவையாக, குழந்தைகளுக்கு புரியக் கூடியவையாக இருக்க வேண்டும் (டெஸ்க், சூரியன், வெங்காயம்); வாக்கியங்களும் இதே மாதிரியானவையாக இருக்க வேண்டும் (குழந்தைகள் முற்றத்தில் விளையாடுகின்றனர்; கீகா தோட்டத்திற்கு உலாவச் சென்றான்; அப்பா மகளுக்குப் பரிசு கொண்டு வந்தார்). இப்படிப்பட்ட வாக்கியங்களும் வார்த்தைகளும் “இதற்கென்ன பொருள்?” என்று அவர்களை சிந்திக்க வைக்காது; எனவே, இவை வார்த்தைகள், வாக்கியங்களைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுத் தர உதவுமென நான் எண்ணினேன்…

ஆனால், தாய் மொழிப் பாடத்தின் போது, அதாவது நாட்டுப் பற்றையும் தனிநபர் உணர்வுகளையும் வளர்க்க வேண்டிய பாடத்தில் இப்படிப் பட்ட முழு முறையியல் விஷயங்களை ஏன் தர வேண்டும்? உள்ளடக்கத்தில் எளிய, புரியும்படியான, ஆனால் தனிநபர் உணர்வுகளைப் படைக்கும் நிபந்தனையை உட்பொருளாகக் கொண்ட வார்த்தைகள், வாக்கியங்களைக் கொண்டே குழந்தைகள் இவற்றைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொள்ளலாம். தாய் மொழிப் பாடப் பயிற்சிக்கு விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதில் இப்படிப்பட்ட அணுகுமுறையை வார்த்தைகள், வாக்கியங்களின் வீர தீரக் கோட்பாடு என்றழைக்கலாமா? வார்த்தைகள், வாக்கியங்களை இந்தக் கோட்பாட்டின் படிதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென நான் கூறவில்லை, ஆனால் இது பயிற்சிகளின் சாரத்தைச் செழுமைப்படுத்தும், இவற்றிற்கு பன்முகத் தன்மையை அளிக்கும், இவற்றிற்கு வளர்ப்புப் போக்கைத் தரும்.

இன்று அட்டைவில்லைகளின் உதவியோடு பின்வரும் வாக்கியத்தைக் கரும்பலகையில் எழுதினேன். “புரோமித்தியஸ் நெருப்பை எடுத்துச் சென்றான்!”

“இந்த வாக்கியத்தை எல்லோரும் சேர்ந்து ‘படியுங்கள்’!”

குழந்தைகள் ஒரே குரலில் இதைப் படித்தனர்.

“புரோமித்தியஸ் யார்?” என்று நீக்கா என்னைக் கேட்டான்.

அனேகமாக, இப்படிப்பட்ட கேள்விகள் தான் கல்வி நிபுணர்களை அச்சுறுத்தக் கூடும்; “புரோமித்தியஸ் நெருப்பை எடுத்துச் சென்றான்” என்ற வாக்கியத்திற்குப் பதில் “தாத்தா நெருப்பை மூட்டினார்” என்ற வாக்கியத்தைச் சொல்ல இவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த அச்சம் வீணானது இப்படிப்பட்ட கேள்விகள் வருவது நல்லதுதான். நான் குழந்தைகளிடம் சொன்னேன்.

“புரோமித்தியஸ்’ என்ற இப்பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! வீட்டிற்குப் போனதும் புரோமித்தியஸ் பற்றிய புராணக் கதையைச் சொல்லுமாறு பெரியவர்களிடம் கேளுங்கள். சரி, இப்போது சொல்லுங்கள்: இந்த வாக்கியத்தில் எவ்வளவு வார்த்தைகள் உள்ளன?”

இந்த வாக்கியத்தில் ஒரு பண்டைய கதை அடங்கியிருப்பதானது, சரியாகச் சொன்னால், இதன் வீரதீரத் தன்மை, இதன் வார்த்தைப் பகுப்பாய்விற்கும், வார்த்தைகளை மாற்றிப் போடவும், எந்த வரிசையில் வார்த்தைகள் இருந்தால் நன்றாயிருக்கும் என்று கவனிக்கவும் சிறிது கூட இடையூறாக இல்லை.

ஒலிப் பகுப்பாய்வு முறையைக் கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு “குடிமகன்” எனும் வார்த்தையைத் தந்தேன். இதில் ஒலிகளின் வரிசையைக் கண்டுபிடித்து, வட்டக் குறியிடுவது, “பாட்டி” என்று நன்கு தெரிந்த ஒரு வார்த்தையின் விஷயத்தில் இவற்றைச் செய்வதை விட எவ்விதத்திலும் அதிகச் சிக்கலானதாக இருக்கவில்லை.

வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் பொது முறைகளை கிரகிப்பதில் எனது வகுப்புக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க நான் சில வாக்கியங்களையும் வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்தேன்.

வார்த்தைகள்: தாய்நாடு, மனிதன், வீரன், சித்தம், உழைப்பு, கட்டுமானம், முயற்சி, போராட்டம், கடமை, மென்மை, அன்பான, நாகரிகமான, நேர்மையான, இன்ன பிற.

வாக்கியங்கள்: நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்; நல்லதைச் செய்ய விரைந்து செல்; மக்களுக்கு மகிழ்ச்சியைத் தா; உழைப்பு மனிதனை மேன்மைப்படுத்துகிறது; சிறுவயதிலிருந்தே நேர்மையானவனாக இரு.

இந்த வார்த்தைகள், வாக்கியங்களின் உட்பொருளை நான் ஒரு போதும் குழந்தைகளுக்கு விளக்க மாட்டேன். அவசியமெனில், பெற்றோர்களிடம் சென்று கேட்குமாறு சொல்வேன். “நேர்மை”, “கடமை” என்றால் என்ன, அல்லது “நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்” என்றால் என்ன பொருள் என்றெல்லாம் பெற்றோர்களிடம் கேட்கட்டும்.

படிக்க:
குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !
மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

வார்த்தைகள், வாக்கியங்களின் இப்படிப்பட்ட சாரம் குழந்தைகளுக்கு என்ன தரும்? வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் முறைகளை கிரகிக்க இது நிச்சயமாக இடையூறு செய்யாது, ஒருவேளை இன்றைய குழந்தைகள் எப்போதாவது வீரஞ்செறிந்த வகையில் சிந்திக்க உதவுக் கூடும். இவ்வாறாக, பின்வரும் முதுமொழியை” எழுதுகிறேன்:

மொழிப் பயிற்சிகளின் உட்பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது இன்று குழந்தை அந்தந்தப் பேச்சு, எழுத்து முறையை கிரகிப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், வெகுவிரைவிலோ, நீண்ட காலத்திற்குப் பின்னரோ அக்குழந்தை தனி நபராக மாறுவதற்குரிய அடிப்படைகளில் ஒன்றாக இது விளங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க