அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 03

டிசம்பர் 4. ரகசியக் கூட்டங்கள்

“சிறுவர்களே, எல்லோரும் எழுந்திருங்கள்.”

சிறுவர்கள் எழுந்திருக்கின்றனர்.

“நீங்கள் இன்று சீக்கிரம் கீழே சென்று சாப்பிடும் இடத்தில் சாப்பிட்டு விட்டு உடனே மேலே வாருங்கள்! இன்று நமக்கு ஒரு ரகசிய பேச்சு இருக்கும். புரிந்ததா? உட்காருங்கள்!“

“எதைப் பற்றி? என்ன ரகசியம்?” என்று சிறுமிகளுக்குத் தெரிந்து கொள்ள ஆர்வம்.

”இந்த ரகசியத்தைப் பற்றி நான் சிறுவர்களுடன் மட்டுமே பேசுவேன்! உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியக் கூடாது! மேற்கொண்டு கேட்காதீர்கள்! எப்படியிருந்தாலும் சொல்ல மாட்டேன்…”

நான் சிறுவர்களுடன் என்ன ரகசியமாகப் பேச விரும்புகிறேன்?

சிறுமிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்.

அதுவரை ஒவ்வொரு முறையும் பாடம் துவங்கவோ முடியவோ மணியடிக்கும் போது, “சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!” என்று கூறி, இதன் மூலம் எப்போதும் சிறுமிகள் முன் செல்ல வழி விட வேண்டும், அவர்களைப் பிடித்துத் தள்ளக் கூடாது என்று நினைவுபடுத்தினேன். சிறுமிகளுக்குத் தொந்தரவு தரக் கூடாது, இப்படிச் செய்தால் யாரையும் நான் மன்னிக்க மாட்டேன் என்பதை மூன்று மாதப் பள்ளி வாழ்க்கையில் சிறுவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். ஆனால் சிறுவர் சிறுமியர் உறவை ஒழுங்கு படுத்தும் விஷயத்தில் இதோடு நின்றுவிடுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. மேற்கொண்டு எப்படிச் செல்வது? “ஏல்லா மேல் கோட்டைக் கழற்ற உதவு! நீயாவிற்கு மேல்கோட்டை எடுத்துக் கொடு!” என்று ஒவ்வொரு முறையும் அந்தந்த சிறுவனிடம் கூறுவதா, அல்லது சிறுமிகளுக்கு உதவுவதை வகுப்பில் ஒரு பழக்கமாக்குவதா? சில சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு உதவப் பிடிக்கவில்லையென எனக்குத் தெரிகிறது.

”இயாவிற்கு மேல்கோட்டை எடுத்துக் கொடு!” என்று நான் கியோர்கியிடம் சொல்கிறேன்.

கியோர்கி இடத்தை விட்டு அசையவில்லை.

“சிறுமிக்கு மேல்கோட்டை எடுத்துத் தா!” என்று நான் திரும்பச் சொல்கிறேன்.

அவன்: ”அவளே எடுத்துக் கொள்ளட்டும்!”

“அவளாகவே எடுத்து அணிந்து கொள்ள முடியும். ஆனால் நீ உதவினால் நன்றாயிருக்கும்.”

அவன்: “உதவ மாட்டேன், அவளே எடுக்கட்டும்!..”

எலேனா தாழ்வாரத்தில் கீழே விழுந்து அழுதாள். “அவள் எழுந்திருக்க உதவு!” என்று நான் தீத்தோவிடம் சொல்கிறேன்.

தீத்தோ மெதுவாக நகர்ந்து, அழும் சிறுமியிடம் சென்று எவ்வித இரக்கமும் இல்லாமல் சொல்கிறான்: “எழுந்திரு, என்ன புலம்புகிறாய்!”

”சிறுமி எழுந்திருக்க உதவு, அவளைச் சாந்தப்படுத்து!” என்று சூரிக்கோவை அனுப்புகிறேன்.

சூரிக்கோவும் அவசரப்படாமல் எலேனாவிடம் சென்று முரட்டுத்தனமாக கையைப் பிடித்துத் தூக்குகிறான்.

“சரி, சரி, எழுந்திரு” என்கிறான்.

இப்படிப்பட்ட உதவியில் அச்சிறுமியால் எழ முடியவில்லை போலும். சூரிக்கோ இரண்டு கைகளையும் விட்டு விட, அவள் மீண்டும் தரையில் விழுந்து இன்னமும் உரக்கக் கத்துகிறாள். அவன் என்னிடம் திரும்பி வந்து அவள் மீது குற்றஞ் சாட்டுகிறான்:

“ ‘எழுந்திரு’ என்று சொல்லி நான் உதவுகிறேன். அவளோ எழுந்திருக்க விரும்பாமல் அழுகிறாள்!”

இறுதியாக, நான் சொல்லாமலேயே சாஷா அவளிடம் ஓடிச் சென்று, முழங்காலிட்டு அருகே அமர்ந்து, தலை முடியைத் தடவியபடி ஏதோ அன்பாகச் சொன்னான். சிறுமி மௌனமானாள். சாஷா இரண்டு கைகளையும் நீட்ட, அவள் அவற்றைப் பற்றிக் கொண்டு எழுந்தாள். அவள் கண்ணீரைத் துடைக்கக் கூட சாஷா உதவினான்.

என் வகுப்புச் சிறுவர்கள் அனைவரும் மென்மையான உணர்வுடையவர்களாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன், சக மாணவ மாணவியர் மீது இவர்கள் அக்கறை காட்ட வேண்டுமென விரும்புகிறேன். இவர்களை இப்பாதையில் அழைத்துச் செல்வதற்காக ரகசியப் பேச்சு நடத்துவதென முடிவு செய்தேன்.

ஏன் ரகசியப் பேச்சு? இதற்கு சில காரணங்கள் உண்டு.

முதலாவதாக, சிறுவர்களிடம் நான் என்ன சொல்கிறேன் என்று சிறுமிகள் தெரிந்து கொள்ளும் அவசியம் எதுவும் இல்லை. இல்லாவிடில், ”சிறுமிகளுக்கு மேல் கோட்டு எடுத்துத் தரும்படி சொல்லியிருக்கின்றார்கள் இல்லையா? எங்கே சீக்கிரம் தா!” என்றெல்லாம் அவர்கள் சொல்லக் கூடும். சிறுவர்களின் அன்பான அக்கறையை அவர்கள் கண்டிப்பான கடமையாக மாற்றுவார்கள். அப்போது ஆண்களின் அக்கறை எனும் நீதி நெறி தன் அழகியல் சேவையையும் தார்மிக அடிப்படையையும் இழந்து விடும். சிறுமிகளுக்கு நாங்கள் என்ன பேசினோம் என்று தெரியாவிடில், தம் சிறுவர்களின் ஒவ்வொரு செயலையும் நன்றியுணர்வோடு ஏற்பார்கள்.

இரண்டாவதாக, கதவு மூடியிருக்கும் போது சிறுவர்களுடன் அதிக வெளிப்படையாகப் பேசி, ஆண்களின் மேன்மையைப் பற்றி நன்கு விளக்க முடியும். இந்தப் பேச்சின் ரகசியத் தன்மை, தம்மை வேறு – விதமாகப் பார்க்கும்படி சிறுவர்களைக் கட்டாயப்படுத்தும்; ஏனெனில் இவர்களுடன் முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கருத்தாழத்தோடு பேசுகின்றனர், இவர்களை நம்புகின்றனர், எனவே இவர்கள் பெரியவர்களாகி விட்டனர் என்று பொருள்!

மூன்றாவதாக, குழந்தைகளுக்கு எப்போதுமே ரகசியங்கள் பிடிக்கும். இம்மாதிரியான நடவடிக்கை – இவர்களது செயற்பாட்டை ஊக்குவிக்கும். இது நம் ரகசியம்” என்றால் இது மிக முக்கியம்” என்று பொருள். அது தவிர ரகசியம் குழந்தைகள் விளையாட்டின் மிக அழகிய அம்சங்களில் ஒன்று. குழந்தைகள் ரகசியம் பேசுகின்றனர். எதைப் பற்றி? உலகம் பூராவிற்கும் தெரிந்ததை அவர்கள் ரகசியமாகப் பேசலாம். விஷயம் என்னவெனில், ரகசியத்தின் உட்பொருள் என்ன என்பதல்ல, ரகசியம் உள்ளதுதான் முக்கியம். என் வகுப்புச் சிறுவர்களுக்கு ரகசியம் வேண்டும், சிறுமிகள் பால் அவர்கள் ஆண்களுக்கு உரிய அக்கறை காட்ட வேண்டுமென நான் விரும்புகிறேன். இப்படியாக எங்கள் ஆசைகள் சந்திக்கின்றன- நான் அவர்களுக்கு ரகசியக் கட்டளைகளை இட, அவர்கள் அவற்றை நிறைவேற்றட்டும்.

சிறுவர்கள் வகுப்பறையில் நுழைந்ததும் நான் கதவை மூடி விட்டு அவர்களை என்னருகே அமரச் செய்து மெதுவான குரலில் விளையாட்டுத் தொனியின்றி, உறுதியோடு பேசலானேன்:

”நான் நம் வகுப்பில் உண்மையான ஆண் பிள்ளைகள் சங்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். யாருக்கெல்லாம் உண்மையான ஆண் பிள்ளையாக ஆசையோ கையைத் தூக்குங்கள்!”

சிறுவர்கள் பிரமித்துப் போயுள்ளனர். முதலில் சாஷா கையைத் தூக்கினான். பிறகு எல்லோரும் கைகளை உயர்த்தினர்.

“அப்படியெனில், உங்களில் ஒவ்வொருவரும் உண்மையான ஆண் பிள்ளையாக விரும்புகின்றீர்கள், இல்லையா?” என்று கேட்டபடி நான் ஒரு நிமிடம் ஒவ்வொருவரின் கண்களையும் உற்று நோக்குகிறேன். ”உண்மையான ஆண் பிள்ளை எப்படியிருக்க வேண்டுமெனத் தெரியுமா?” என்று நான் அவர்களைக் கேட்கவில்லை. எனது வகுப்புச் சிறுவர்களுக்கு இது நிச்சயமாகத் தெரியாது. பதில் எங்களைக் குழப்ப மட்டுமே செய்யும். கூட்டங் கூடிப் பேசுவதற்காக அவர்களை நான் அழைக்கவில்லை, நிபந்தனைகளைக் கூறி அவற்றை நிறைவேற்றுமாறு கோரவே நான் அவர்களை அழைத்தேன். அடுத்த கூட்டங்களில் நாங்கள் கலந்து பேச முடியும்; அனேகமாக அவற்றில் சிறுவர்கள் ஏதாவது பழகும் விதிகளை மீறினால் அது பற்றி விவாதிக்க வேண்டியிருக்கும், அல்லது எங்கள் சிறுமிகள், அம்மாக்கள், பாட்டிமார்கள், சகோதரிகளுக்கு மகிழ்ச்சிகரமான அதிசயங்களைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கும். பெண்மணியின் பால் முரட்டுத் தனமாக நடக்கும் வயது வந்த மனிதனை, பெண்மணிக்கு உதவாமல், அக்கறை காட்டாமல் தொந்தரவு செய்பவரை உண்மையான ஆண்மகன் என்று சொல்லலாமா என்பது குறித்து இப்போது பேசுவோம். குழந்தைப் பருவத்திலிருந்து தான் உண்மையான ஆண் பிள்ளையாக வளர முடியுமெனக் குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும்.

“உண்மையான ஆண் பிள்ளைகள் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருக்க விரும்பினால், இன்று முதல் நீங்கள் நமது சங்க விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்கின்றீர்களா?”

”சரி!” என்று சன்னமான குரலில் சிறுவர்கள் கூறுகின்றனர்.

“இன்று இரண்டு விதிமுறைகளை மட்டும் கூறுவேன். முதலாவது: ஒவ்வொரு சிறுமியின் விஷயத்திலும் கவனமானவர்களாக, மென்மையானவர்களாக, அக்கறை காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இந்த விதியை திருப்பிச் சொல்லுங்கள் பார்க்கலாம்!” குழந்தைகள் திரும்பச் சொல்கின்றனர்.

இரண்டாவது: ”சிறுமிகள் மேல்கோட்டு அணியவும் கழட்டவும் உதவ வேண்டும். இதை திருப்பிச் சொல்லுங்கள் பார்க்கலாம்!”

பின்னர் சிறுமிகளுக்கு எப்படி மேல் கோட்டை எடுத்துத் தருவதென்று பயிற்சி செய்து பார்க்கும்படி சிறுவர்களிடம் கூறினேன்.

“இதோ, சிறுமிகளின் மேல்கோட்டுகள் தொங்குகின்றன. அவசரப்படாமல், இழுத்துத் தள்ளாமல் நீங்கள் அந்த இடத்தை நோக்கி செல்கின்றீர்கள்.”

எப்படி மேல் கோட்டுகள் உள்ள இடத்திற்குச் சென்று, அவற்றைக் கழட்டுவது என்று நான் செய்து காட்டுகிறேன்.

“மேல்கோட்டை எடுங்கள்… சிறுமியை நெருங்குங்கள்… சிறுமி தன் கரங்களை நீட்டி அணிய வசதியாக இருக்கும்படி அதைப் பிடியுங்கள்… புரிந்ததா? எங்கே, சாஷா, நீ எப்படிச் செய்கிறாய் காட்டு!” சாஷா சந்தோஷமாகச் செய்து காட்டுகிறான். ”கியோர்கி, தீத்தோ, சூரிக்கோ, இப்போது நீங்கள் மூவரும் செய்து காட்டுங்கள்!”

சாஷாவும் நானும் அவர்களைத் திருத்துகிறோம், மேல் கோட்டை எப்படிப் பிடிக்க வேண்டும், எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனக் காட்டுகிறோம்.

“இப்போது எல்லோரும் மேல்கோட்டுகள் மாட்டப்பட்டுள்ள இடத்திற்கு இடித்துத் தள்ளாமல் செல்லுங்கள் பார்க்கலாம். மேல்கோட்டைக் கீழே போடாமல் இருப்பதும், குழப்பாமல் இருப்பதும் மிக முக்கியம்.”

இதை சிறுவர்கள் சில தடவைகள் செய்து பார்த்துக் கற்றுக் கொண்டனர், இறுதியில் அமைதியாக, சரிவரச் செய்ய ஆரம்பித்தனர். “உட்காருங்கள்!”

மீண்டும் அருகருகே உட்கார்ந்தோம். சிறுமிகள் கதவைத் தட்டுகின்றனர்: “கதவைத் திறவுங்கள்!” “உண்மையான ஆண் பிள்ளை ரகசியத்தை வெளியிடக் கூடாது” என்று நான் சொல்கிறேன். நாம் எவ்வளவு பேர் என்று எண்ணுங்கள்!” அவர்கள் எண்ணினர். என்னையும் சேர்த்து 22 பேர்கள். 23-வது நபருக்கு நம் ரகசியம் தெரியக் கூடாது!” மௌனம். நாங்கள் ஒருவரையொருவர் ஏதோ முக்கியமானதை, தீவிரமானதைப் பற்றிச் சிந்திக்கும் சதிகாரர்களைப் போல் பார்க்கிறோம். சிறுமிகளுக்கோ பொறுமையில்லை. “திறவுங்கள், எங்களை உள்ளே விடுங்கள்!” நான் கதவைத் திறக்கிறேன்.

படிக்க:
பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
சிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன ? | தோழர் ராஜு உரை | காணொளி

“என்ன பேசினீர்கள்?” என்று என்னை நோக்கி கேள்விகளைத் தொடுக்கின்றனர்.

நாங்கள் தீவிர முகபாவத்தோடு இருக்கிறோம். ரகசியத்தை வெளிவிடவில்லை.

“எதைப் பற்றியுமில்லை!”

பாடவேளை முடிந்து, சிறுமிகளுக்கு மேல் கோட்டுகளை எடுத்துத் தரும் நேரம் வந்த போது எல்லா சிறுவர்களும் உண்மையான ஆண் பிள்ளைகளாவதில் ஒரு மனதான முனைப்பைக் காட்டினர். ஆனால் ஒரு சில சிறுமிகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை, எப்படி நடந்து கொள்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. இதைப் பார்க்க வருத்தமாயிருந்தது.

பரவாயில்லை, சிறுமிகளே! விரைவிலேயே உங்களுடனும் இது போன்ற கூட்டம் நடத்துவேன். சிறுவர்கள் மீது எப்படி அக்கறை காட்ட வேண்டும், ஆண்களின் கவனத்தை எப்படி மதிக்க வேண்டும் என்பதை நீங்களும் உணர வேண்டுமல்லவா?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க