அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 04

டிசம்பர் 6. பிறந்த நாள்

குழந்தைக்கு சந்தோஷம் தர நிறைய சாக்லேட்டு தர வேண்டுமென்றோ, நூற்றுக் கணக்கான விளையாட்டுச் சாமான்களைப் பரிசளிக்க வேண்டுமென்றோ, எண்ணற்ற முறை முத்தமிட வேண்டுமென்றோ, இடையறாது ஏராளமான அன்பு வார்த்தைகளைப் பேச வேண்டுமென்றோ அவசியமில்லை. உண்மையான மகிழ்ச்சியைப் பெற, சந்தோஷமாக இருக்க அவனுக்கு சிறிதளவே போதும். ஒரு மணி நேரம் அவனுடன் விளையாடுங்கள் – அவன் சந்தோஷமடைவான்; சாதாரண தாளையும் எளிய பென்சிலையும் தாருங்கள் – அவன் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியென பாருங்கள்; வீட்டிற்கு சீக்கிரம் வாருங்கள்- அவனுடைய மகிழ்ச்சிகரமான குதிப்பால் வீடே அதிரும்; இரவு அவனுக்கு ஒரு கதை சொல்லுங்கள் – அவன் உலகிலேயே மிக சந்தோஷமான மனிதனாக உறங்குவான்.

உங்களுடைய மென்மையான, அக்கறை மிக்க உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள், அவன் எப்போதும் சந்தோஷமானவனாக இருப்பான் என்று என்னால் உறுதி கூற முடியும், இது அவனது அன்றாட மகிழ்ச்சிகளின் தீரா மூல ஊற்றாகும். ஆண்டிற்கு ஒரு முறை, அவனுடைய பிறந்த நாளன்று, தனக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் தனது தனித்துவம் உயர்ந்துள்ளதை, தான் பெரியவன் ஆனதை உணரும்படி ஏதாவது செய்யுங்கள். அவனுடைய மகிழ்ச்சிக்கு முடிவே இருக்காது.

ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாளையும் வகுப்பில் கொண்டாடுகிறோம். குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது பற்றிய இந்தச் சிந்தனைகள் இதன் தொடர்பாக என் மனதில் உதித்தன.

இன்று நாங்கள் மாரிக்காவின் பிறந்த நாளைக் கொண்டாடினோம். காலையில் குழந்தைகளுக்கு முகமன் கூறிய பின் நான் கம்பீரமாக அறிவித்தேன்:

“உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்று நம் மாரிக்காவிற்குப் பிறந்த நாள்!”

குழந்தைகள் சந்தோஷமாகக் கை தட்டுகின்றனர்.

“நீங்கள் அவளுக்கு என்ன வாழ்த்து சொல்ல விரும்புகின்றீர்கள்?”

சான்த்ரோ: “மாரிக்கா, எப்போதும் அன்பான சிறுமியாக இரு!”

தாம்ரிக்கோ: “உன் தாய் நாட்டை விரும்பு!”

தீத்தோ: “உன் பெற்றோர்களை மதித்து நட. படிப்பில் உன் வெற்றிகளால் அவர்களுக்கு சந்தோஷம் தா!”

விக்டர்: “மாரிக்கா, நான் உன்னைத் தொந்தரவு செய்தேன், ஞாபகம் உள்ளதா? இனி அப்படிச் செய்ய மாட்டேன்.”

தேக்கா: “ உன் அறிவால் நீ புகழ் பெற வேண்டும்!”

கோச்சா: ”துணிவுடைய பெண்ணாயிரு!”

ஏக்கா: “நன்கு, அழகாக எழுது!”

நீக்கா: ”நன்கு ருஷ்ய மொழி பேசக் கற்றுக் கொள்!”

லாலி: ”நீ ஒருமுறை கூட உடல் நலம் குன்றி பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.”

இராக்ளி: “மிகச் சிக்கலான கணக்குகளை நீ முதலில் போட வேண்டும்!”

எல்லோரும் வாழ்த்துகளைக் கூறினர். அந்த நேரத்தில் மாரிக்கா கரும்பலகையருகே நின்று புன்முறுவல் பூக்கிறாள், தலையை ஆட்டுகிறாள், ”நன்றி” என்று சன்னமான குரலில் கூறுகிறாள். கண்களில் மகிழ்ச்சி ஒளி.

“குழந்தைகளே! உங்கள் சார்பாக மாரிக்காவை வாழ்த்தி, அவளுக்கு இந்தக் கதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறேன். அதில் ‘எங்கள் அன்பு மாரிக்கா! உனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் விரும்புகிறோம். நீ அன்பானவள்! உன் வகுப்பு மாணவர்கள்’ என்று எழுதினேன்.”

புத்தகத்தை மாரிக்காவிற்குத் தருகிறேன். குழந்தைகள் கை தட்டுகின்றனர், மாரிக்காவிற்கோ மகிழ்ச்சி பொங்குகிறது.

”மாரிக்காவிற்காக இன்று எந்த மாதிரி கேள்விகளைத் தயாரித்திருக்கிறேன் பாருங்கள்!”

கரும்பலகையை மூடியிருந்த திரையை திறக்கிறேன். தாய் மொழிப் பாடத்திற்கான பயிற்சியில் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் புதிரில் உரிய எழுத்துகளை எழுதினால் “மாரிக்கா” என்ற பெயர் வரும். குழந்தைகள் இதை விரைவிலேயே கண்டுபிடிக்கின்றனர். எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் இதைச் சொல்லுமாறு சைகை செய்கிறேன்.

”மாரிக்கா!” என்று வகுப்பு முழுவதும் உரக்கக் கூவுகிறது.

மற்ற சாதாரண கேள்விகள் அனைத்திற்கும் மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக பதில் சொல்கின்றனர்.

இடைவேளையின் போது இவளை ஒரு ஸ்டேன்ட் அருகே இட்டுச் செல்கிறோம். இது இரண்டு மீட்டர் அகலமும் ஒன்றரை மீட்டர் உயரமும் உடைய ஒரு மரப்பலகை. இதில் குழந்தைகளுக்கு ஒரு வயது கூட நிரம்பாதபோது எடுத்த புகைப்படங்கள் உள்ளன. அப்படங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. குழந்தைகள் குறும்புத்தனமாகப் பார்க்கின்றனர். குழந்தைகள் இவற்றைப் பார்த்து மகிழ்கின்றனர். இப்புகைப்படங்கள் ஸ்டேன்டின் மேல் பகுதியில் உள்ளன, கீழ்ப் பகுதிக்கு ஒரு விசேஷம் உள்ளது. பிறந்த நாளன்று குழந்தையை இந்த ஸ்டேன்டின் அருகே அழைத்துச் சென்று, அவனை அருகே நிறுத்தி, உயரத்தை அளக்கிறோம், தேதியை அருகே எழுதி, பெற்றோர்கள் கொண்டு வரும் புதிய புகைப்படத்தை ஒட்டுகிறோம். ஸ்டேன்டில் பல குழந்தைகளின் பிறந்த நாள்களும் குறிக்கப்பட்டு விட்டன. இப்போது மாரிக்காவின் உயரத்தை அளந்து, அருகே தேதியை எழுதி, புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இந்த வைபவத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இன்னும் மூன்று முறை மாரிக்காவின் உயரத்தை அளந்து அவள் எப்படி வளர்ந்திருக்கிறாள், எல்லாக் குழந்தைகளும் எப்படி வளர்ந்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

கணிதப் பாடத்திலும் மிகச் சிக்கலான கணக்குகளை மாரிக்காவை கௌரவிக்கும் முகமாகப் போடுகிறோம்.

ஓவிய வகுப்பிலும் ஒவ்வொருவரும் மாரிக்காவிற்காக வரைகின்றனர். ஒரு அழகிய அட்டை தயாராக உள்ளது, குழந்தைகள் தாம் வரைந்தவற்றின் பின் வாழ்த்துகளை எழுதி இதில் வைக்கிறார்கள் (எல்லா எழுத்துகளையும் தெரிந்தவர்கள் எழுதுகிறார்கள்). பின் கர ஒலியோடு மாரிக்காவிற்கு இதை வழங்குகிறோம்.

கடைசிப் பாடவேளையின் போது கலை நிகழ்ச்சியை நடத்துகிறோம். மாரிக்காவை கௌரவிக்கும் முகமாக நடக்கும் அதில் சிலர் கவிதை வாசிக்கின்றனர், சிலர் நடனமாடுகின்றனர், சிலர் பாடுகின்றனர்.

நாள் இறுதியில் சிறுமி அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பாள். அவள் வேறு ஏதோ மாதிரியானவளாக, நாணம் உள்ளவளாக, சிந்தனையுள்ளவளாக மாறியிருக்கிறாள். அவளிடம் மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் மிகுந்திருக்கும்.

நாள் முடிகிறது. ஒவ்வொருவராக மாரிக்காவை நெருங்கி, மீண்டும் புன்முறுவல் பூத்து, வாழ்த்துக் கூறி விடைபெறுகின்றனர். வீட்டிற்குச் சென்று தம் மகிழ்ச்சியை உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்ள அவள் அவசரப்படுகிறாள்.

மாரிக்காவின் பிறந்த நாளை இப்படித்தான் கொண்டாடினோம்.

“அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனின் பிறந்த நாளையும் இதே போல் கொண்டாட நான் சமீபத்தில் திட்டமிட்டிருந்தேன். அன்று அவன் விசேஷ அலங்காரத்துடன் வந்திருந்தான், எல்லோர் கவனத்தையும் கவர்ந்தான்.

“இது அயல்நாட்டுக் காலணி; இதுவும் அயல் நாட்டுக் கோட்டு! இன்று மாலை எங்கள் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். எனக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும்.”

இவ்வாறாக அவன் வகுப்புகள் துவங்கும் முன்னரே தம்பட்டம் அடிக்கத் துவங்கினான், அவனது பிறந்த நாளைப் பற்றிச் சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கும் சந்தர்ப்பத்தையே அவன் எனக்குத் தரவில்லை.

குழந்தைகளும் விசேஷமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. “அவனுக்கு என்ன சொல்லி வாழ்த்துவது?”

குழந்தைகள் சொன்னார்கள்: “தம்பட்டம் அடித்துக் கொண்டு திரியாமலிருக்கட்டும்!”

“சிறுமிகளுடன் எப்படிப் பழகுவது என்று தெரிந்து கொள்ளட்டும்!”

“புத்திசாலியாகட்டும்!”

“அவன் நாகரிகமாக நடக்கக் கற்றுக் கொண்டால் நாங்கள் அவனை விரும்புவோம்!”

“அவன் கத்துகிறான்! தன் குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்துகிறான்!”

“பொய் பேசாமலிருக்கக் கற்றுக் கொள்ளட்டும்!”

இந்த வாழ்த்துகளை நான் தடுத்து நிறுத்த வேண்டிவந்தது. ஏனெனில் சிறுவன் தலையைக் குனிந்தபடி அழத் தயாரானான்.

“குழந்தைகளே, அவனுடைய மனது அன்பானது என்று எனக்குத் தெரியும், அவன் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறான். அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாருங்கள்!”

குழந்தைகள் கர ஒலி எழுப்பினர். நான் புத்தகத்தைப் பரிசளித்தேன்.

கரும்பலகையை மூடியிருந்த திரையை விலக்கி, அன்றைய பாடங்கள் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணித்து, குழந்தைகள் சற்று முன் அவன் மனதில் ஏற்படுத்திய காயத்தை சரி செய்யத் தயாரானேன். அறுவைச் சிகிச்சை மருத்துவர் “இதயத்தைத் திறந்து” காயத்தை சரி செய்ய நுண்ணிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு தயாராவதைப் போல் நான் தயாரான போது, எச்சரிக்கையின்றி கதவை ஒரு தட்டுத் தட்டி உள்ளே எட்டிப் பார்த்த அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மா” என்னை ஒரு நிமிடம் வகுப்பறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தாள்.

“கதவை மூடுங்கள், இப்போது பாடம் நடக்கிறது!” என்றேன் நான்.

“ஒரு நிமிடம் தான், நீங்கள் என்ன பயப்படுகின்றீர்கள்?”

குழந்தைகள் முன் தாறுமாறாக எதுவும் நடந்து விடக் கூடாதே என்பதற்காக நான் வெளியே தாழ்வாரத்திற்கு வந்தேன்.

இருதய அறுவை சிகிச்சையை துவங்குவதற்காக மேசையருகே இருக்கும் மருத்துவரை பல இனிப்புப் பண்டங்களை காட்டுவதற்காக இதுவரை யாரும் வெளியே அழைத்ததில்லை.

“இங்கே கேக் உள்ளது, எல்லோருக்கும் போதும், சாக்லேட்டுகள், பணியாரம், நாற்பது பாட்டில்கள் லெமனேட். இன்று என் மகனுக்குப் பிறந்த நாள்! குழந்தைகள் கொண்டாடட்டும்! நீங்களும் அவனிடம் அன்பாக இருங்கள்!”

“ஒன்றும் வேண்டாம்! எல்லாவற்றையும் திரும்ப எடுத்துச் செல்லுங்கள்!” என்று நான் கண்டிப்புடன் கூறுகிறேன்.

அவளோ: “பயப்படாதீர்கள், இவையெல்லாம் வீட்டில் செய்தது, ஒன்றும் ஆகாது!”

“எது எப்படியானாலும் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவதென எங்களுக்கு ஒரு முறை உள்ளது. இவையெல்லாம் இல்லாமலேயே கொண்டாடுவோம்.”

அவள்: “அநாவசியம். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும், அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நீங்களும் அவர்களுக்கு சந்தோஷம் தரத்தானே விரும்புகின்றீர்கள்! இதோ உங்கள் வகுப்புக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோஷம்!”

மணியடித்து, குழந்தைகள் அனைவரும் வகுப்பறையிலிருந்து வெளியே வந்தனர். “அதிகாரத் தொனியுள்ள அம்மா” உடனேயே அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினாள். குழந்தைகள் முன் அந்த அம்மாவுடன் சச்சரவை வளர்க்க நான் விரும்பவில்லை. குழந்தைகள் கேக், சாக்லேட் ஆகியவற்றோடு அந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மாவின்” மகனுடைய பிறந்த நாளையும் “சாப்பிட்டனர்”, ஆம், அச்சிறுவனின் பாலான தம் உறவையோ, அவனைப் பற்றிய கருத்தையோ சிறிது கூட மாற்றவில்லை.

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

இதைப் பற்றி நான் நிறைய நினைக்கிறேன். அப்போது தாழ்வாரத்தில் நான் எப்படி நடந்திருக்க வேண்டும்? இன்னும் கடுமையாக, உறுதியாக, முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? குழந்தைகள் இனிப்புகளை வாங்கக் கூடாதென தடுத்திருக்க வேண்டுமோ? ஆனால் இப்போது இது முக்கியமல்ல, குழந்தையின் தன்மையை மேற்கொண்டு எப்படி உருவாக்குவது என்பது தான் முக்கியம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க