PP Letter head ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். சார்பாக
உச்சநீதிமன்றமே சிரமேற்கொண்டு இருப்பதுதான் தீர்ப்பின் சாரம் !

ட்டத்தின் ஆட்சி, மதச்சார்பின்மை மட்டுமல்ல சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையும் நொறுக்கப்பட்டு இருக்கிறது. அரசின் அனைத்து அதிகார பீடங்களும் பாசிசமயமாகிக்கொண்டு இருக்கும் இச்சூழலில், இந்த  நாட்டில் நீதியை நீதிமன்றம் பெற்றுத்தரும் என்று 70 ஆண்டுகளாக வழக்காடியவர்களுக்கும் அதை நம்பியவர்களுக்கும் தான் இத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருக்கும். மோடியின் 2.0 பாசிச ஆட்சியில் இதை விட வேறு  நியாமான தீர்ப்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? இனி சிறுபான்மை மக்களுக்கான இடம் எது என்பதை இத்தீர்ப்பின் மூலம் அரசு நிறுவியிருக்கிறது. நவம்பர் மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று சுப்ரமணியசாமி கூறியது போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

 அயோத்தி பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்  என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த இடத்திலேயே  இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். விரும்பிய தீர்ப்புதான் வரும் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் மோடி அரசும் யோகி அரசும் சில நாட்களாகவே வெளிப்படுத்தி வந்ததை அனைவராலும் எளிதில் உணர முடிந்தது.

உ.பி. யோகி அரசு பெருமளவு போலீசை குவித்தது மட்டுமின்றி எட்டு தற்காலிகச் சிறைகளையும் உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே உ.பி. காவல்துறை தலைவர்களை அக்டோபர் மாதம் அழைத்துப் பேசினார். நவம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தீர்ப்பு வரலாம் என்று செய்தி பரப்பப்பட்டதற்கு மாறாக திடீரென ஒன்பதாம் தேதி என அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இஸ்லாமியர்களை அச்சத்தில் உறைய வைத்துவிட்டு இத்தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர்  (1500 சதுர மீட்டர்) நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் வழக்கு. ஆனால் அதை விட்டுவிட்டு ராமர் கோயில் கட்ட உத்தரவிட்டிருக்கிறது. இந்த இடத்தை யாரும் உரிமை கோர முடியாது, அது அரசுக்குச் சொந்தம் என்று கூறிவிட்டு, மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அந்த மொத்த இடத்தையும் அதனிடம் ஒப்படைத்து ராமர் கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பு அளிப்பது என்ன நியாயம்? ‌ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதுதான் இந்துக்களின்  நம்பிக்கையே தவிர, பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் பிறந்தார் என்பது அல்ல. அயோத்தியில் இன்றும் பல ராமர் கோயில்களில் பூசாரிகள் தங்கள் கோயிலில்தான் ராமன் பிறந்தான் என்று கூறிவருகின்றனர். ராமன் அயோத்தியில் பிறந்தான் என்பது அடிப்படையற்ற நம்பிக்கை. ஆனால் பாபர் மசூதி 450 ஆண்டு ஆதாரத்துடன் கூடிய உண்மை வரலாறு.

இந்துக்களின் தரப்புக்கு இவ்வளவு தெளிவாக உத்தரவிட்ட நீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் ஒதுக்க வேண்டும் அதில் சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக் கொள்ளலாம் என ’கருணை’ காட்டி பாதிக்கப்பட்ட இசுலாமியர்களுக்கும் நியாயம் வழங்கியிருப்பதாக பாசாங்கு செய்திருக்கிறது. இத்தீர்ப்பு. ராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். சார்பாக உச்சநீதிமன்றமே சிரமேற்கொண்டு இருப்பதுதான் தீர்ப்பின் சாரம். பாபர் மசூதி இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தால் கரசேவை செய்யப்பட்டிருக்கிறது.

படிக்க:
அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

ஓராண்டுக்கு முன் இப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆட்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினர். அது உண்மைதான் என்பதை இந்தத் தீர்ப்பு மூலம் மெய்ப்பித்திருக்கிறார்கள். தனது அரசியல் எதிரியான ப.சிதம்பரத்தை பழிவாங்க மொத்த நீதித்துறையையும் எப்படி மோடி அரசு ஆட்டி வைக்கிறது என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-வின் விருப்பங்களை மீறி எந்த நீதிமன்றமும் செயல்பட முடியாது என்பதுதான் இன்றைய எதார்த்தம். நாடு முழுவதும் தனது பாசிச அதிகாரத்தை நிலைநாட்ட தேர்தல் உள்ளிட்ட அனைத்து பெயரளவு ஜனநாயகத்தையும் ஒழித்து வருகிறது  பார்ப்பன  – பா.ஜ.க. கும்பல்.

இன்று மராட்டியத்தில் வெட்கமற்ற முறையில் குதிரை பேரத்தில் இறங்கி இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் அது பற்றி மூச்சுவிடாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கல்வித் திட்டம், தேசப்பாதுகாப்புக்கு ஆபத்து, பயங்கரவாத அச்சுறுத்தல் என்று பீதியூட்டி  பாசிச ஒடுக்குமுறைக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்கும் என்பதற்கான அடிப்படை தகர்ந்து கொண்டே வருகிறது. இது அபாயத்தின் அறிகுறி. அயோத்தியோடு இது ஒரு போதும் நிற்கப்போவதில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். – இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்த்து முறியடித்துத்தான் நியாயத்தை நிலைநாட்ட முடியும்  என்பதையே  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

தோழமையுடன்,
தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.