அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 06

மார்ச் 7: “சின்ன” விஷயங்களைப் பற்றி

காலை. வகுப்புத் துவங்கும் மணி இன்னமும் அடிக்கவில்லை.

நான் கரும்பலகையில் பயிற்சிகளை எழுதுகிறேன். சில சிறுவர் சிறுமியர் என்னிடம் ஓடி வந்து ”இலிக்கோ அழுகிறான்” என்றனர்.

இலிக்கோ பொறுமையுள்ள சிறுவன். அவன் அழுகிறான் என்றால் உண்மையில் ஏதோ நடந்துள்ளது என்று பொருள். “ஏன் அழுகிறான்?”

இலிக்கோ, மேல்கோட்டுகளை மாட்டும் இடத்தில் மூலையை நோக்கியபடி நிற்கிறான்.

“ஏனெனில் சான்த்ரோ அவனைத் தொந்தரவு செய்தான்!”

”இலிக்கோவிற்கு முடி வெட்டியிருக்கின்றனர், சான்த்ரோ ஏதோ கேலி செய்கிறான்!”

ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? சான்த்ரோவை அருகே அழைத்து, அவன் மோசமாக நடந்து கொண்டதாக எல்லோருக்கும் கேட்கும்படி சொல்லி, இலிக்கோவிடம் மன்னிப்புக் கேட்கும்படி கூறலாம். இது ஒரு வழி.

என்னிடம் ஓடி வந்த சிறுமிகளிடம், இப்படி நண்பனுக்கு விரோதமான வகையில் நடந்து கொண்டதற்காக சான்த்ரோவை வெட்கப்படும்படி சொல்லலாம். இது இரண்டாவது வழி.

இலிக்கோவை அருகே அழைத்து, அவனுக்கு எப்படி முடிவெட்டியுள்ளனர் என்று பார்த்து, “நீ அழகாக, உண்மையான ஆண் மகனைப் போல் ஆகியிருக்கிறாய். எனக்கும் சிறு வயதில் இப்படி முடி வெட்டிக் கொள்ளப் பிடிக்கும்” எனலாம். யாராவது அவனைக் கேலி செய்ததை குறிப்பிடாமலிருக்கலாம். இது மூன்றாவது வழி.

இந்த சம்பவத்திற்கு எவ்வித முக்கியத்துவமும் தராமல், “நான் வேலையாய் இருக்கிறேன்” என்று சிறுமிகளிடம் சொல்லலாம். இது நான்காவது வழி. வேறு வழிகளும் இருக்கக் கூடும். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது? நான் சான்த்ரோவைத் தண்டித்தால் இதன் மூலம் வகுப்பு நண்பர்கள் முன் அவனை நான் இழிவுபடுத்தியதாக ஆகக் கூடும். ஒருவேளை அவன் இலிக்கோவை கேலி செய்யவே விரும்பவில்லையோ? கேலி செய்யக் கூடாதுதான், ஆனால் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்வதும், நாசூக்காக, கவனமாக நடக்கத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதல்ல.

சான்த்ரோவை வெட்கப்படுத்தும்படி, கண்டிக்கும்படி சிறுமிகளிடம் சொன்னால் அவர்கள் அவனை வெட்கப்படுத்தும் ”முறையில்” பின் சான்த்ரோ சிறுமிகள் மீது குற்றம் சாட்டுவான். அப்போது புதிய பிரச்சினை தோன்றும். இதைத் தீர்ப்பது இன்னமும் சிக்கலாயிருக்கும்.

நிலவரத்தைச் சுமுகமாக்க, எனது செல்வாக்கை மட்டும் பயன்படுத்தினால் (“நீ அழகாகி விட்டாய்”) ஒருவேளை மற்றவர்கள் (என்னை ஆதரிக்க வேண்டும் என்பது தெரியாமலேயே) என்னை ஆதரிக்காமலிருக்கலாம்.

இலிக்கோவின் புண்படுத்தப்பட்ட சுயமரியாதையை புனர் நாட்ட குழந்தைகள் என்னை ஆதரிக்க வேண்டியது அவசியம். இப்படி நடந்தால் சான்த்ரோ தானாகவே கண்டிக்கப்பட்டவனாவான். தன் நடத்தையைப் பற்றி சான்த்ரோ யோசித்துப் பார்க்கும்படி செய்ய, இதே போல் எதிர்காலத்தில் நடக்காமலிருக்க நான் அவனுடன் நேருக்கு நேராக, விளையாட்டுத்தனமின்றிப் பேச வேண்டும். – நான் தொடர்ந்து கரும்பலகையில் பயிற்சிகளை எழுதிய படியே அருகில் உள்ள சிறுவர்களிடம் சன்னமான குரலில் சொல்கிறேன்:

“நான் இப்போது இலிக்கோவை அருகே அழைத்து அவனுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும். சரியா?” சிறுவனைக் கூப்பிடுகிறேன்: ”இலிக்கோ, அந்தப் பெரிய ஸ்கேலைக் கொண்டு வா!”

இலிக்கோ கண்ணீரைத் துடைத்து விட்டு, ஸ்கேலைக் கொண்டு வருகிறான்.

சான்த்ரோ தூரத்தில் நிற்கிறான். குழந்தைகள் என்னிடம் முறையிட்டது அவனுக்குத் தெரியும், எனவே, தொலைவில் நின்று என்ன நடக்கும் என்று பார்க்கிறான்.

“நீ முடி வெட்டிக் கொண்டாயா?” என்று நான் வியப்பும் மகிழ்ச்சியுமாகக் கேட்கிறேன். ”எங்கே காட்டு பார்க்கலாம்!”

இலிக்கோ மெதுவாகத் தொப்பியைக் கழட்டுகிறான்.

“திரும்பு! உனக்கு முடிவெட்டியவர் திறமையானவர் போல் தெரிகிறது! நன்கு முடி வெட்டியிருக்கிறார்! சிறு வயதில் எனக்கு இம்மாதிரி ஒட்ட வெட்டிக் கொள்ளப் பிடிக்கும். ஆனால் அப்போதெல்லாம் இது மாதிரி அழகாக வெட்ட மாட்டார்கள். என்னைப் பார்த்து சிறுவர்கள் சிரித்தனர், கேலி செய்தனர். ஆனால் நான் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. இரண்டு, மூன்று வாரங்களில் தலை நிறைய முடி வளர்ந்து விட்டது… இப்படி உன்னை எனக்கு அதிகம் பிடிக்கிறது, நீ உண்மையான ஆண்மகன் போலிருக்கிறாய். அப்படித்தானே, சிறுவர்களே?”

படிக்க:
கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !
100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை

உடனே சிறுமிகளும் சிறுவர்களும் என்னை ஒரு மனதாக ஆதரித்தனர். அப்போது தான் வகுப்பறையில் நுழைந்தவர்கள் கூட, நடந்தது என்ன என்று தெரியாமலேயே நான் சொல்வதை ஆமோதித்தனர்.

ஏல்லா: “இலிக்கோ இப்படியிருப்பது எனக்குப் பிடித்துள்ளது!”

கீகா: “எனக்கும் இப்படி முடிவெட்டிக் கொள்ள ஆசையாக உள்ளது!”

இயா: “நன்றாகத்தானே இருக்கிறது! நீ ஏன் தொப்பியைக் கழற்ற வெட்கப்படுகிறாய்?”

“பாருங்கள், உங்களுக்காக எப்படிப்பட்ட கணக்குகளை நான் தயார் செய்கிறேன்!” என்று வேண்டுமென்றே எல்லோர் கவனத்தையும் இலிக்கோ முடி வெட்டியதைப் பற்றிய பேச்சிலிருந்து திசை திருப்புகிறேன்.

பாடவேளையின் போது குழந்தைகள் என் காதில் தம் விடைகளைச் சொன்ன போது நான் சான்த்ரோவை அணுகி அவன் காதில் மெதுவாகச் சொன்னேன்: “இந்தக் கணக்கை நீ சரியாகப் போட்டாய். ஆனால் நீ இலிக்கோவிடம் நடந்து கொண்ட விதம் நன்றாக இல்லை! நீ உண்மையான ஆண்மகனாக இருக்க விரும்பினால் இடைவேளையின் போது இலிக்கோவிடம் சென்று “என்னை மன்னித்து விடு, இலிக்கோ, நான் உன்னைக் கேலி செய்ய விரும்பவில்லை” என்று சொல். நீ எப்படி இதைச் செய்கிறாய் என்று நான் பார்த்துக் கொண்டிருப்பேன்!”

சிறிது நேரம் கழித்து இலிக்கோவிடம் சென்று காதில் மெதுவாகச் சொன்னேன்: “சான்த்ரோ உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடு, எல்லாவற்றையும் மறந்து விட்டதாகச் சொல். சரியா?”

இவர்கள் இதே மாதிரி நடந்து கொண்டனர்…… முதல் இடைவேளையின் போது சிறுமிகள் தேன்கோவையும் வாஹ்தாங்கையும் என்னிடம் அழைத்து வந்தனர்.

”இவர்கள் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர்” என்று மாயா கோபத்தோடு சொன்னாள்.

நான் என்ன செய்வது? சிறுவர்களைத் தண்டிப்பதா? இவர்கள் தம் செயலைப் பற்றித் தாமே யோசித்துப் பார்க்குமாறு விடுவது தான் நல்லது. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

“குழந்தைகளே, இப்போது நான் இவர்களுக்கு ஒரு வேலை தரப் போகிறேன். இதைச் செய்து முடித்ததும், இப்படி ஒருவருடன் ஒருவர் கலந்து பழகக் கூடாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களென எண்ணுகிறேன். இந்தப் பழமொழிகள் எழுதிய 40 தாள்கள் எல்லோருக்கும் தருவதற்காக எனக்கு வேண்டும்” என்று குற்றம் புரிந்தவர்களைப் பார்த்துக் கூறுகிறேன். ”இந்தப் பக்கத்தை எடுத்துச் சென்று தலா 20 தாள்களில் எழுதி வாருங்கள். இடைவேளைகளில் உட்கார்ந்து எழுதுங்கள். நாளை மறுநாள் முடிக்க வேண்டும். நான் ஏன் இந்த வேலையை உங்களுக்குத் தருகிறேன் என்று புரியும் என எண்ணுகிறேன். இதோ தாள், இதில் எழுதுங்கள்!”

ஒரு தாளில் பின்வரும் நான்கு பழமொழிகளை எழுதித் தருகிறேன்:

நல்ல வார்த்தை வாளையும் கீழே போடச் செய்யும்.

நல்ல வார்த்தையால் உலகம் ஒளிமயமாகும்.

கெட்ட வார்த்தை நண்பனையும் விரோதியாக்கும்.

தீய சொல் இதயத்தில் கல்லாக விழும்.

சிறுவர்கள் இதை வாங்கிக் கொண்டு உடனே எழுத உட்கார்ந்தனர்.

ஒரு வாரத்திற்குப் பின் “நல்ல வார்த்தை – மருந்து” எனும் தலைப்பில் வகுப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்துவேன். தேன்கோவும் வாஹ்தாங்கும் அனேகமாக அதில் தீவிரப் பங்கேற்று தம்மைப் பற்றி நிறையப் பேசுவார்களென எண்ணுகிறேன்…

….பெரிய இடைவேளையின் போது குழந்தைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகள் விளையாட ஆரம்பித்தனர். நீயாவும் ஏல்லாவும் காணாமற்போய் விட்டார்கள் என்பதை திடீரெனக் கண்டுபிடித்தோம். அவர்களைத் தேட ஆரம்பித்தோம். எனக்குக் கவலை உண்டாயிற்று. குழந்தைகளும் கவலைப்படுகின்றனர். அவர்கள் எங்கே போயிருக்க முடியும்? அனுமதியின்றி அவர்கள் எப்படிப் போகலாம் என்று குழந்தைகள் கண்டிக்கின்றனர். இடைவேளை முடிவடைகிறது. இறுதியாக அவர்கள் வயலில் பூத்த பூக்களை கை நிறையக் கொண்டு வருகின்றனர்.

“இது உங்களுக்கு!” என்று கூறி பூக்களை என்னிடம் நீட்டுகின்றனர்.

நான் பதில் சொல்லும் முன்னரே எல்லாப் பக்கங்களில் இருந்தும் குழந்தைகளின் கோபக் குரல்கள் ஒலிக்கின்றன.

”நீங்கள் எங்கே போனீர்கள்? ஏன் அனுமதியின்றி சென்றீர்கள்? எங்கள் விளையாட்டைக் கெடுத்து விட்டீர்கள்!”

“நாங்கள் ஆசிரியருக்கு பூ பறிக்கப் போனோம்” என்று ஏல்லா சமாதானம் சொல்கிறாள்.

”அவருக்கு பூக்கள் எதற்கு, நீங்கள் அவருக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுத்தினீர்கள் தெரியுமா!”

“உங்களுக்காக அவர் எவ்வளவு கவலைப்பட்டார் தெரியுமா!”

“உங்களுக்கு வெட்கமாயில்லையா!”

“நாங்கள் எல்லா இடங்களிலும் உங்களைத் தேடினோம்!”

குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் எப்படி புத்தி சொல்கின்றார்கள் என்பதைப் பார்த்த நான், இந்தப் பொதுக் கோபத்தில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க