அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 07

நீங்கள் இல்லாத வெற்று வகுப்பில் எனக்குச் சலிப்பாக உள்ளது

ன்று எங்கள் பள்ளி வாழ்க்கையின் கடைசி 170வது – நாள்.

குழந்தைகள் வரும் முன் எல்லாவற்றையும் தயார் செய்யும் பொருட்டு நான் மிகவும் சீக்கிரமாகவே வந்து விட்டேன்.

தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் எழுத்துப் பயிற்சியிலும் கணிதப் பாடத்திலும் செய்த முதல் மற்றும் கடைசி வேலைகளை வைக்கிறேன். முதல் எழுத்துப் பயிற்சியின் போது (செப்டம்பர் மாதம் 8-ம் தேதி) தெளிவற்ற கையெழுத்தில் குழந்தைகள், எழுத்துகளுக்குப் பதில் வட்டங்களால் முதல் வார்த்தைகளை “எழுதியுள்ளனர்”: நான்கு வட்டங்கள் “அம்மா“, “அப்பா“, ஐந்து வட்டங்கள் – ”தாயகம்”… கடைசி வேலையை இவர்கள் நேற்று செய்தார்கள். “நான் பள்ளியில் என்ன கற்றுக் கொண்டேன்” எனும் தலைப்பிலான கட்டுரையாகும் இது. கணிதப் பாடத்தில் முதல் பயிற்சி (செப்டம்பர் 9) “ஒன்று” என்னும் எண் வரிசையாக எழுதுதல், வரைகணித வடிவங்களுக்கு வண்ணம் பூசுதல். கடைசி கணிதப் பாடத்தில் (மே 16-ம் தேதி) தாமே உருவாக்கிய கணக்குகளைப் போட்டனர், வரைகணித வடிவங்களை வரைந்தனர். ஒவ்வொரு குழந்தையின் இந்த 4 வேலைகளும் இன்று ஸ்டேன்டில் உள்ளன. அதே சுவரில் ஒரு பெரிய வெள்ளைத் தாளை மாட்டி, அருகே மேசையில் வண்ணப் பென்சில்களை வைத்தேன். தாளின் மேல் “எனது பள்ளி வாழ்க்கை“ என்று எழுதப்பட்டுள்ளது; இதில் குழந்தைகள் வரைய வேண்டும். தாழ்வாரத்திலும் வகுப்பறையிலும் புகைப்படங்களை மாட்டினேன். இதில் ஒவ்வொரு குழந்தையும் அவனுடைய பள்ளி வாழ்க்கையின் ஒரு தருணத்தில் காட்சியளிக்கிறான் – சிலர் யோசனையில் மூழ்கியிருக்கின்றனர், சிலர் இடத்திலிருந்து எழுந்து ஏதோ கத்துகின்றனர், சிலர் கொட்டாவி விடுகின்றனர், சிலர் அருகில் உள்ளவருடன் பேசுகின்றனர், சிலர் நடனமாடுகின்றனர், சிலர் பூங்காவில் எறும்புகளைக் கவனிக்கின்றனர்… இப்படங்களை இதற்கு முன் குழந்தைகள் பார்க்கவில்லை. ஒரு சிறு ஆல்பம் நான் தயாரித்தேன், அதில் 40 பக்கங்கள், செப்டெம்பரின் முதல் நாட்களில் ஒவ்வொரு குழந்தையும் “நான் சிறுவனாக இருந்த போது” என்ற தலைப்பில் சொன்னவற்றைப் பற்றிக் குறிப்புகள் எழுதியுள்ளேன்.

இந்த அதிசயங்களின் மூலம் குழந்தைகள் எப்படி வளர்ந்துள்ளனர் என்று அவர்களுக்குக் காட்டவும், பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகள் எப்படி மாறி, பெரியவர்களாகி விட்டனர் என்று காட்டவும், நான் என்ன சாதித்துள்ளேன் என்று பார்க்கவும் நான் விரும்புகிறேன்.

எல்லாம் செய்தாகி விட்டது. நான் வெற்று வகுப்பில் குழந்தைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். டெஸ்குகளைப் பார்க்கிறேன்.

இதோ இது மாரிக்கா உட்காருமிடம். இந்தச் சின்னஞ் சிறு மாணவி வகுப்பறையில் நுழைந்ததுமே என்னிடம் வந்து, “வணக்கம்!” என்று சொல்லுவாள், பின் என்னைப் பற்றி ஏதாவது கேட்பாள். நான் ஏதாவது புதிதாக அணிந்திருந்தால் கண்டிப்பாகச் சொல்லுவாள்:

“இன்று எவ்வளவு அழகாக இருக்கின்றீர்கள்!” பின் புதிய பொருளைத் தொட்டுப் பார்ப்பாள். “உனக்காகத்தான் இன்று நான் அழகாக உடையணிந்து வந்திருக்கிறேன். உனக்குப் பிடித்துள்ளதா?” என்று பதில் சொல்வேன்.

அவள் புன்முறுவல் பூத்தபடி என்னைக் கட்டிக் கொள்வாள்.

சமீபத்தில் ஒரு நாள் அவள் அம்மா வந்து, பள்ளி நேரத்திற்கு முன்னதாகவே மாரிக்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினாள்.

“இல்லை, நான் போகமாட்டேன்!” என்று மாரிக்கா உறுதியாக மறுத்து விட்டாள்.

அம்மா என்னென்னவோ சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் பயன் தரவில்லை.

“ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?” என்று அம்மா கோபமாகக் கேட்டாள்.

“நான் பிடிவாதம் பிடிக்கவில்லை! இது பள்ளிக்கூடம்!”

“அப்படியெனில் இனி உன்னைப் பள்ளிக்கே அழைத்து வர மாட்டேன்.”

“அழைத்து வர மாட்டாயா? நான் உன்னை வேலைக்குப் போக விடாவிடில் எப்படியிருக்கும்?”

நான் மாரிக்காவிடம் அம்மா சொல்லுவதைக் கேட்குமாறு கூறவில்லை என்ற அதிருப்தியோடும், இன்னும் ஒரு முறை மகளை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வர வேண்டுமே என்ற எண்ணத்தோடும் அம்மா திரும்பிச் சென்றாள்.

இதோ இங்குதான் சுருட்டை முடியுடைய, ஓய்வற்று அலைந்து திரியும் சிறுவன் அமர்ந்திருப்பான். இவன் விஷயத்தில் எனது போதனை முறை எதுவும் பலிக்கவில்லை.

நவம்பர் இறுதியில் கூட அவனால் வார்த்தையில் ஒலிகளைப் பிரிக்க இயலவில்லை, எழுத்துகளையும் எண்களையும் குழப்பினான், எந்த எழுத்தையும் எண்ணையும் காட்டினாலும் அது நான்கு என்றான். பிப்ரவரி ஆரம்பத்தில் ஒரு சில எழுத்துகளைக் கற்றுக் கொண்டாலும் இவற்றைக் கொண்ட எளிய அசைகளைக் கூட அவனால் படிக்க இயலவில்லை. நான் அவனை எதையாவது வரையச் சொன்ன போது அவன் ஒரு தாறுமாறான வடிவத்தை வரைந்தான், அது ஒரு முக்கோணம் போலிருந்தது, அதன் ஓரத்தில் சிறு வட்டங்கள் இருந்தன. “இது வீடு, இந்த வட்டங்கள் சக்கரங்கள்” என்றான் அவன். பின் இதே மாதிரி வரைந்து, பந்தயக் கார் என்றான். அனேகமாக, இந்தப் பல்பொருள் படத்திலும் பல அர்த்தமுள்ள “நான்கு” என்ற எண்ணிலும் ஏதோ ஒரு விசேஷ அர்த்தம் இருக்க வேண்டும், இதை நான் கண்டுணர வேண்டும்.

நீண்ட காலத்திற்கு அவனால் வகுப்பு ஒழுங்கு முறைகளுக்குப் பழகிக் கொள்ள முடியவில்லை. தானாக எழுந்து வகுப்பில் அங்குமிங்கும் நடந்தான், மேல்கோட்டை எடுத்து அறையின் நடுவில் உதறுவான். ஒரு முறை அவன் வகுப்பில் விசிலடிக்கத் துவங்கிய போது மற்ற குழந்தைகளே அவனிடம் தொந்தரவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர். அவனிடம் அன்புடன் நடந்து கொள்ளுமாறும் அக்கறை காட்டுமாறும் குழந்தைகளிடம் சொல்ல நான் பெரும் பாடுபடவேண்டியிருந்தது.

சிறுவனே, இந்தக் கோடை விடுமுறையின் போது நிறைய புத்தகங்களைப் படித்து, நிபுணர்களுடன் கலந்து பேசி செப்டம்பரில் உனக்கான ஒரு போதனை முறையுடன் கண்டிப்பாக வருவேன். இயற்கையன்னை உனக்குத் தராததை அல்லது பறித்துக் கொண்டதைத் திரும்பப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எல்லாம் சரியாகி விடும் என்ற நன்னம்பிக்கை எனக்குள்ளது. ஏனெனில் இது இல்லாவிடில் உனக்கு உதவ முடியாது. மேலும் நீயும் அன்பானவனாகி, படிப்படியாக படிப்பின் மீது ஆர்வம் காட்டுவதால் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறாய். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்! எனக்கு வேறு வழியில்லை!…..

இதோ இந்தக் கடைசி டெஸ்க் தாத்தோவின் இடம்.

“தாத்தோ, நீ என்ன படிக்கிறாய்?“

“டாமஸ் ஸாயரின் அதிசாகசங்கள்”.

இது நவம்பரில் நடந்தது.

“இப்போது என்ன படிக்கிறாய், தாத்தோ?”

“கேக்கெல்பெரி ஃபினின் அதிசாகசங்கள்”.

இது ஜனவரியில் நடந்தது.

“தாத்தோ, உன் கைகளில் என்ன புத்தகம்?”

“ரகசியத் தீவு”.

“இதை நீ படிக்கிறாயா?”

பாதி படித்து விட்டேன். பெரிதும் சுவாரசியமாக உள்ளது!

இது ஏப்ரலில் நடந்தது. அனேகமாக, இன்று தாத்தோ தான் கோடை விடுமுறையில் எந்தப் புத்தகங்களைப் படிக்கப் போகிறான் என்று கூறுவான். சண்டை போடாமல் இரு, நீ படித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களுக்குச் சொல், நான் உனக்கு சிக்கலான கணக்குகளைக் கொண்டு வந்து தருவேன். கொண்டு வரட்டுமா?..

…இதோ இந்த இடத்தில் இன்று யாரும் உட்கார மாட்டார்கள், ஒரு மாதமாக இந்த இடம் காலியாக உள்ளது. அம்மா தன் மகனோடு மாஸ்கோவிற்குச் சென்று விட்டாள். குழந்தைகள் இச்சிறுவனை அடிக்கடி நினைத்துப் பார்த்து ஏங்குகின்றனர். சமீபத்தில் தேன்கோ என்னிடம் சொன்னான்: “நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. அவன் நம்மிடம் திரும்பி வந்து அற்புதமான கவிதைகளைப் படித்தான். அவனால் எப்படி இவ்வளவு கவிதைகளைப் படிக்க முடிந்தது என்று நாம் ஆச்சரியப்பட்டோம். நாம் கை தட்டினோம், பின் நான் விழித்துக் கொண்டேன்!”

நேற்று கணிதப் பாடத்தில் குழந்தைகளுக்கு மிகவும் சிக்கலான ஒரு கணக்கைத் தந்தேன். “கரும்பலகையில் நான் இரண்டு கோடுகளை வரைந்திருக்கிறேன். நீங்கள் இவற்றைக் கற்பனையில் பார்க்க வேண்டும், ஏனெனில் இவற்றை நான் இப்போது காட்டப் போவதில்லை. ஒரு கோட்டின் நீளம் “x” செ.மீ., மற்றதன் நீளம் 15 செ.மீ., இரண்டின் நீளத்தையும் சேர்த்தால் 22 செ.மீ. வரும். முதல் கோட்டின் நீளம் எவ்வளவு?” கணக்கை எழுத்து வடிவில் எழுதாமல் அவர்களால் இதைப் போட முடியவில்லை. அப்போது ஏக்கா சொன்னாள்: “இப்போது அவன் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும், அவன் இக்கணக்கைப் போட்டிருப்பான்”. ஆம், இந்தச் சிறுவனின் தந்தை தான் தன் மகனைப் பற்றி யோசிக்காமல், தாயை விவாகரத்து செய்தார். அத்தாய் மகனுடன் மாஸ்கோ சென்றாள்.

சிறுவனே! நிச்சயம் நீ நல்ல மனிதனாவாய், மனிதர்களின் மீது உள்ள நம்பிக்கையை இழக்காதே! தந்தை இப்படி யோசனையின்றி நடந்து கொண்டதால் உனக்கு மிகவும் பிடித்தமான நபரை நீ இழந்து விட்டாய். நமது உண்மையான ஆண் பிள்ளை சங்கத்தில் உனக்குத்தான் முதன் முதலாக புரோமித்தியஸ் பட்டம் வழங்கினோம். நீ புரோமித்தியஸ் போல் வளர்ந்து பெரியவனாவாய், சிறுவனே! நாங்கள் உனக்கு அடிக்கடி கடிதங்களை எழுதுவோம். நேற்று உனது 38 வகுப்பு நண்பர்களும் உனக்கு கடிதங்களை எழுதினார்கள். அவர்கள் என்ன எழுதினார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த 38 சந்தோஷ செய்திகளும் ஏற்கெனவே விமானத் தபாலில் அனுப்பப்பட்டு விட்டன என்று நம்புகிறேன்…

…நடுவரிசையில் உள்ள இந்த இரண்டாவது டெஸ்கும் இன்று காலியாக இருக்கும். இங்கிருந்த சிறுமியை போர்டிங் பள்ளியில் சேர்த்து விட்டனர். இவளுக்காகவும் குழந்தைகள் ஏங்குகின்றனர். இவளுக்கும் 38 கடிதங்கள் அனுப்பப்பட்டன. நானும் அந்த போர்டிங் பள்ளி இயக்குநருக்கு எழுதினேன்… நாளை நானே நேரில் சென்று பேசுவது நல்லது…

…மூன்றாவது வரிசை, மூன்றாவது டெஸ்க். இங்கே கோச்சா உட்காருகிறான்.

அவன் எப்போதும் எதையாவது, ஆமையை அல்லது சிவப்புக் கல்லைத் தேடுவான்.

சமீபத்தில் ஏதோ தலைமையகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொன்னான்.

“என்ன தலைமையகம்?” என்றேன் நான்.

“பூமியடித் தலைமையகம். நாங்கள் ஒரு குழியைக் கண்டுபிடித்தோம். அதன் மீது பெரிய அட்டைகளைப் போட்டு மூடினோம். அதைப் பெரிது செய்ய ஆரம்பித்தோம், அப்போது ஒரு செத்த நாயைக் கண்டுபிடித்தோம். அதை வெளியில் இழுத்தோம்.”

“யார் அந்த ’நாங்கள்’?”

“அது ரகசியம், ஆனால் உங்களுக்குச் சொல்லுவேன். தலைமையகத்தில் நான் இவர்களைச் சேர்த்திருக்கிறேன்…” அவன் தன் ஆறு நண்பர்களின் பெயர்களை என் காதில் சொன்னான்.

“நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?”

“இன்னமும் தெரியாது!”

இவனுடன் என்ன செய்வதென எனக்குத் தெரியும். நீங்களே செய்த விளையாட்டுப் பறவைகளின் பந்தயம் நடத்துமாறு அல்லது விண்வெளிவீரர்கள் பற்றிய கண்காட்சி நடத்துமாறு அல்லது 1941-1945-ல் பாசிசத்திற்கு எதிராக நடந்த மாபெரும் தேசபக்த யுத்த சம்பவங்கள் பற்றித் தாத்தாமார்களிடமிருந்து அறியுமாறு அல்லது கதைப் போட்டி நடத்துமாறு திடீரென உங்களுக்கு ரகசிய கட்டளைகளைப் பிறப்பிக்கலாமே! இதைப் பற்றி விரிவாகப் பேச இப்போது முடியாது, மீண்டும் கூடும் போது பேசுவோம்.

ஆனால் உனக்கு நமது பொது ரகசியம் பற்றி தெரியாது! நாங்கள் எல்லோரும் உனக்கு ”எதிராக” சதி செய்துள்ளோம்!

“வலேரி மாமா வந்து விட்டார்!” என்று உன் தந்தை வகுப்பறையில் நுழைந்ததும் எல்லா குழந்தைகளும் கத்தினார்கள்.

உன் நண்பர்களும் நீயும் பள்ளி வாயிலருகே அவருக்காக அடிக்கடி காத்திருக்கின்றீர்கள். அவர் உங்களுக்கான இசையுடன் மட்டுமின்றி அன்புடன், பாசத்துடன், புன்முறுவலுடன் எப்போதும் வருவார். அவர் இசையைப் பற்றி சுவாரசியமாக விளக்கினார், பியானோவில் உங்களுக்காக வாசித்துக் காட்டினார், இசை நாடக ஒத்திகைகளை நடத்தினார்… ஆனால் உன் குடும்பத்தில் நடந்த சோகத்தைப் பற்றி உனக்கு மட்டும் தான் தெரியாது.

“அவருக்கு ஒரு விபத்து நேர்ந்து தொலைதூர நகரத்தில் மருத்துவமனையில் இருக்கிறார். குணமாகும் வரை நீண்ட நாட்களுக்கு அவர் அங்கிருப்பார்!” என்று உன்னிடம் இப்படிச் சொன்னார்கள்.

அன்றைய தினம் (நீ பள்ளியில் இல்லை) நடந்ததைக் கேள்விப்பட்டதும் குழந்தைகள் அழுதனர். உனது மென்மையான இதயத்தில் காயம் ஏற்படாமலிருக்க, உரிய நேரம் வரை இந்தப் புனிதமான பொய்யைக் காப்பதென நாங்கள் முடிவு செய்தோம்.

…இங்கே தேயா உட்காருகிறாள். எங்கே நிமிர்ந்து நேராக உட்கார்! எழுதும் போது கூன் போடக் கூடாது!..

…அருகே தேயாவின் சகோதரன் லேரியின் இடம். நிதானமாகப் பேசு, உன் கழுத்து புடைத்து விடுகிறது…

…இது தீத்தோவின் டெஸ்க். ஆண் பிள்ளையாக இரு! இருட்டில் பயப்படாதே!..

…இங்கே ரூசிக்கோ உட்காருகிறான். உனது முன் யோசனையும் திறமையும் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. ஆனால் ஏன் பொய் சொல்கிறாய்? இந்தத் தீய பழக்கத்திலிருந்து உன்னை விடுவிக்க நான் வழிகளைத் தேடுகிறேன்…

…இது நீயாவின் இடம். நீ என்ன வரைகிறாய்? கையில் பூ ஏந்திய ஒரு சிறுவனின் படமா? இதை யாருக்குப் பரிசளிக்கப் போகிறாய்? எனக்கா? நன்றி, நீயா! இதை என் அறையில் மாட்டி வைப்பேன்!..

…அருகே நாத்தோவின் இடம். நீ என்ன முணுமுணுக்கிறாய்? புதிய கவிதைகளைப் படித்து விட்டாயா? எப்போது எங்களுக்கு இவற்றைச் சொல்வாய்? இப்போதா?…

…இந்த டெஸ்கில் விக்டர் உட்காருகிறான். என்ன விஷயம், சிறுவனே? நான் உனக்கு ஒரு சிக்கலான கணக்கைத் தரட்டுமா? இது என்னிடம் தயாராயுள்ளது. மேசையிலிருந்து எடுத்துக் கொள்!..

…இது இலிக்கோவின் இடம். ஜார்ஜிய மொழி உச்சரிப்பை நன்கு கற்றுக் கொண்டாயா?..

…இங்கே எலேனா உட்காருகிறாள். அதிகமாக வெட்கப்படாதே! பயப்படாதே, உன் திறமைகளை நம்பு!

…இது ஏல்லாவின் இடம். உன் தங்கை பேச ஆரம்பித்து விட்டாளா? அவள் பேசும் முதல் வார்த்தை என்ன என்று கவனித்து சொல். என் வாழ்த்துகளை அவளுக்குச் சொல்!..

…இங்கே கோத்தே உட்காருகிறான். எங்கே பியானோவில் உன் பாட்டை வாசி, எல்லோரும் உன்னைக் கேட்கின்றனர்…

…இங்கே கீகா உட்காருகிறான். நீ ஏன் இன்று சோகமாக இருக்கிறாய்? அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்களா? வருத்தப்படாதே, அவளுக்கு விரைவில் உடல் நலம் சரியாகி விடும்! அவளுக்கு உனது கதையைப் பரிசாக எடுத்துச் செல். இது அவளுக்குப் பிடிக்கும்!..

படிக்க:
பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !
வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

…இது லேலாவின் இடம். உனக்கு என்னம்மா ஆயிற்று? நீயே உன்னைத் தண்டித்துக் கொள்கிறாயா? எதற்காக? தப்பு செய்து விட்டாயா? எப்போது? சரி, உனக்கே தெரியும்!..

…இது ஏக்காவின் இடம். தேன்கோவையும் கோத்தேயையும் மன்னிக்க வேண்டும் என்கிறாயா? அவர்கள் இனி இப்படி செய்ய மாட்டார்களா? சரி, நல்லது…

…இது தேக்காவின் இடம். நீ என்ன எழுதியிருக்கிறாய்? 2,500+2,500= 5,000? அற்புதம், சரி! ஏன் சாக்பீசால் டெஸ்கில் எழுதுகிறாய்?.. இங்கே… ஆனால் வகுப்பில் ஒருவரும் இதுவரை இல்லை. குழந்தைகளே, விரைவாக வாருங்கள்! நீங்கள் இல்லாத வெற்று வகுப்பில் எனக்குச் சலிப்பாக உள்ளது!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க