அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 09

மாபெரும் ருஷ்ய எழுத்தாளா லேவ் டால்ஸ்டாய் கண்டுபிடித்த மூன்று விதிகள் இப்படிப்பட்ட நிலையின் சாரத்தை விளக்குகின்றன.

முதல் விதி: ”ஆசிரியர் எப்போதுமே தன்னையறியாமல் தனக்கு மிகவும் வசதியாக பாடம் சொல்லித் தரும் முறையைத் தேர்ந்தெடுக்க விரும்புவார்”. தன்னையறியாமலேயே இதைச் செய்வது பரவாயில்லை, இதை மன்னித்து விடலாம். ஆனால் அவர் வேண்டுமென்றே, பகுத்தறிவுடன் இதைச் செய்ய முற்பட்டால் இதை அவருடைய தொழில் துரோகம் என்று கூறலாம்.

இரண்டாவது விதி: “பாடம் சொல்லித் தரும் முறை ஆசிரியருக்கு எவ்வளவுக் கெவ்வளவு வசதியானதோ அவ்வளவுக்கவ்வளவு அது மாணவர்களுக்கு வசதிக் குறைவானது”. எந்த முறைகளில் ஆசிரியரின் உழைப்பு எளிதாக்கப்படுவதால் குழந்தைகள் “இம்சிக்கப்படுவார்களோ” அவற்றை சகல விதங்களிலும் தவிர்க்க வேண்டும் என்பது தெளிவு. எனவே, இதிலிருந்து மீளும் வழியைத் தேட வேண்டும். லேவ் டால்ஸ்டாயின் மூன்றாவது விதி இதைப் பற்றிக் கூறுகிறது. இதை நான் ”முதுமொழியாக” ஏற்கிறேன்:

“எந்தப் பாட முறையில் மாணவர்களுக்குத் திருப்தியோ அந்தப் பாடமுறை தான் சரியானது.”

தன் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் இல்லாமல் பாடம் சொல்லித் தருவதென ஆசிரியர் முடிவு செய்யும் போது அவர் இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டும். ஒன்று, குழந்தைகள் முன் உள்ள தனது புனிதமான கடமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அல்லது ஆசிரியர் வேலைக்காலம் என்றழைக்கப்படும் பல ஆண்டுகளை அமைதியாக வேலை செய்து கழிக்க வேண்டும். புதிய, ஆக்கப்பூர்வமான பாதையைத் தேர்ந்தெடுத்த, ஒவ்வொரு குழந்தையின் மனதையும் தொடும் வழியைத் தேடும் ஆசிரியர் புத்திசாலியான, அறிவுத் தாகமுள்ள குழந்தைகளின் புதிய தலைமுறையைக் கண்டு உற்சாகமடைவார். தன் கைகளில் தடியேந்திய ஆசிரியரோ ஒவ்வொரு ஆசிரியர் கூட்டத்திலும், “என்ன குழந்தைகள், ஒன்றும் செய்ய விரும்புவதில்லை, படிக்க ஆசைப்படுவதில்லை! ஆறு வயதுக் குழந்தைகள் கூட, அவர்களைப் பார்த்துக் கத்தாவிடில், அச்சுறுத்தாவிடில் பாடங்களில் அமைதியாக உட்காருவதில்லை” என்று சலித்துக் கொள்வார்.

இந்த இரண்டாவது ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்ததும் தன் ஆறு வயதுக் குழந்தைகளைப் பார்த்துப் பின்வருமாறு சொல்லுவார்: “எனக்கு விளையாட்டுத் தனம் பிடிக்காது! யார் நன்றாகப் படிக்கவில்லையோ, யார் சரியாக கவனிக்கவில்லையோ அவர்களுக்கு பெயில் மதிப்பெண் போடுவேன். பெயில் மதிப்பெண் என்றால் என்ன தெரியுமா? தெரிந்து கொள்வீர்கள்! எங்கே, இப்போது கைகளைக் கட்டிக் கொண்டு கேளுங்கள்!”

முதல் ஆசிரியரோ நிச்சயமாக இப்படியெல்லாம் ஒரு போதும் சொல்ல மாட்டார். “குழந்தைகளே, எங்கே எனக்கு சிரித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்! எனக்கு உங்கள் சிரிப்பு பிடிக்கும். தயவு செய்து சிரியுங்கள்! சரி, இப்போது சொல்லுங்கள், எது உங்களுக்குப் பிடிக்கும் – கதையா, கவிதையா? சரி, கதை சொல்வேன். வசதியாக உட்காருங்கள்! ஒரு ஊரில்…” என்று இவர் கூறுவார். இந்த ஆசிரியர் குழந்தைகளின் மனதைத் தொட மிகக் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்: இங்கே தன் கல்வி போதனை முறையியலையும் குழந்தை வளர்ப்பு முறையையும் தன்னைத் தானேயும் அன்றாடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளுடன் கலந்து பழகி மகிழ்ச்சியைத் தருவதற்காக இதைச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யும் போது, வகுப்பறையில் எப்படி ஒழுங்கைப் பேணிக்காப்பது, “தடியின்றி”, மதிப்பெண்கள் இன்றி குழந்தைகளை எப்படி சாந்தப்படுத்துவது எனும் கேள்வி எழுகிறதா? குழந்தைகளுக்கு ஏதோ நல்லதைக் கூற விரும்புகிறோம், எதையாவது சொல்லித் தர வருகிறோம், அவர்களோ சத்தம் போடுகின்றனர்… “அமைதியாக இருங்கள்!” என்று கூறுகிறோம், அவர்கள் கேட்கவில்லை. என்ன செய்வது? நன்கு சத்தமாகக் கத்துவதா, விரலை ஆட்டி பய முறுத்துவதா, நடத்தை மோசம் என்று எழுதப் போவதாகக் கூறுவதா? அப்போது எல்லாம் அடங்கி, அமைதி நிலவுமா? இங்கே உறுதியான பதிலைத் தருவதோ நேரடியான சிபாரிசுகளைக் கூறுவதோ எவ்வளவு கடினம் தெரியுமா! ஏனெனில் கட்டுப்பாட்டைப் பற்றிய பிரச்சினையே அதிகாரத் தொனியிலான கல்வி முறையில் தான் வருகிறது. அதிகாரத் தொனியில் குழந்தைகளை வளர்த்து, படிப்பு சொல்லித் தரும் போது அடிக்கடி குரலை உயர்த்த நேரிடுகிறது:

“ஏ! உன்னால் வாயை மூட முடியுமா முடியாதா?” ஆனால் குழந்தைகள் நடந்தவற்றை ஒரே நிமிடத்தில் மறந்து விட்டு, அதிக சுவாரசியமான காரியத்தில் ஈடுபடுவதற்காக இந்த அதிகார வலையிலிருந்து மீண்டும் விடுபட முயன்றால், வகுப்பில் ஆசிரியர் எவ்வளவு தடவை தான் மிரட்ட முடியும், திட்ட முடியும்? எனவே, இப்படி ஒழுங்கை நிலை நாட்டும் முறைகளை விட்டு விட்டுக் குழந்தைகளின் பாலான உறவு முறைகளை மாற்றலாம்; கல்வி போதித்தல், குழந்தை வளர்ப்பு முறைகளை மாற்றலாம், வகுப்பில் பொதுவில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த முயலலாம்.

இவை எல்லாவற்றையும் தான் லேவ் டால்ஸ்டாய் “பள்ளியின் ஆன்மா” என்றார், இவருடைய கருத்துப்படி இது தான் “கல்வியின் சாரம், வெற்றி”. “இந்த ஆன்மா ஒரு சில விதிகளுக்கும் ஆசிரியரின் தீய செல்வாக்கிற்கும் உட்பட்டது, அதாவது இந்த ஆன்மாவை அழிக்காமலிருக்க ஆசிரியர் ஒரு சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, பள்ளியின் ஆன்மா எப்போதும் மாணவர்களின் சிந்தனையில் ஆசிரியரின் தலையீட்டிற்கு தலை கீழ் விகிதத்திலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்திலும், பாட நேரத்திற்கு தலை கீழ் விகிதத்திலும் இருக்கும், இத்தியாதி.

படிக்க :
ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !
யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ? | ஆ. ராசா | திருச்சி சிவா | காணொளி

இந்த பள்ளியின் ஆன்மா என்பது ஒரு மாணவனிடமிருந்து இன்னொரு மாணவனுக்கு விரைவில் செல்வது, ஆசிரியருக்கும் கூடச் செல்வது, அனேகமாகக் குரலொலிகளிலும் கண்களிலும் இயக்கங்களிலும் போட்டியின் உக்கிரத்திலும் வெளிப்படுவது; இது ஏதோ ஒரு பெரும் உணர்வு, அவசியம், விலை மதிப்பற்ற ஒரு விஷயம், எனவே, ஒவ்வொரு ஆசிரியரின் லட்சியமாக இருக்க வேண்டியது. உமிழ் நீர் உணவு செரிக்க அவசியம், ஆனால் உணவு இல்லாத போது இது தேவையற்றதாய், அசிங்கமானதாய் இருக்கும். அதே போல் உணர்ச்சிகரமான புதிய ஆன்மா வகுப்பிற்கு வெளியே சலிப்பானது, விரும்பத்தகாதது, ஆனால் மூளைக்கான உணவை கிரகிக்க அவசியமானது” என்று டால்ஸ்டாய் எழுதினார்.

குழந்தைகளுடனான உறவில் இந்த மன நிலையை நிலை நாட்டினால் வகுப்பில் ஒழுங்கு முறை பற்றிய பிரச்சினை முற்றிலும் வேறு விதமாக நிற்கும்: “இந்தப் புத்தூக்கம் பாடமாக இருந்தால் இதை விட சிறந்தது வேறெதுவும் வேண்டாம். இந்தப் புத்தூக்கம் வேறு ஒரு விஷயமாக மாறினால், இதை சரிவர வழிநடத்தாத ஆசிரியர் தான் குற்றவாளி. இந்தப் புத்தூக்கத்திற்குத் தொடர்ந்து உணவளித்து, படிப்படியாக ஊக்குவிப்பது தான் ஆசிரியரின் கடமை…”.

சரி, ஆறு வயதுக் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் வேண்டுமா இல்லையா?

இல்லை, குழந்தைகளுக்கு இவை தேவையில்லை. ஏனெனில் இவை இவர்களின் அறிவுத் தாகத்திற்கு இடையூறாக உள்ளது, பள்ளியில் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக வாழத் தொந்தரவாக உள்ளது.

ஆசிரியர்களுக்கு மதிப்பெண்கள் வேண்டுமா? தமக்குத் தேவையா இல்லையா என்று என் சக ஆசிரியர்களே தீர்மானிக்கட்டும். என்னைப் பொறுத்தமட்டில், குழந்தைகளுடன் நான் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் மகிழ்ச்சியடைய இவை இடையூறாக இருக்கும்.

இப்படியெனில், தம் குழந்தைகள் எப்படிப் படிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் பெற்றோர்களுக்கு மதிப்பெண்கள் தேவையோ?

ஒளிவு மறைவின்றிச் சொல்வேன்: தம் குழந்தைகள் எப்படிப் படிக்கின்றனர் என்பது பற்றிய மதிப்பெண்களைப் பெற்றோர்களுக்குத் தருவது நல்லதல்ல. இந்த மதிப்பெண்களை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? வெறும் மதிப்பெண்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றனரா, படிக்கவில்லையா என்பது குறித்து திட்டவட்டமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை.

உதாரணமாக, கணிதப் பாடத்தில் “பெயில்” என்றால் இவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? பத்துக்குள் கூட்ட குழந்தைக்குத் தெரியாது, “கடைக்கு எட்டு கூடை ஆப்பிள்கள் வந்தன, சில கூடைகள் விற்றுப் போயின, மூன்று கூடைகள் எஞ்சியுள்ளன. எவ்வளவு கூடைகள் விற்றுப் போயின?” என்பது போன்ற கணக்குகளைப் போடும் போது பிழை செய்கிறான் என்றெல்லாம் இந்த மதிப்பெண் பெற்றோர்களுக்கு விளக்குமா என்ன? “கணக்கில் முதல் கூட்டும் எண் எங்கே, இரண்டாவது கூட்டும் எண் எங்கே, மொத்தம் எவ்வளவு?” என்ற ஆசிரியரின் கேள்விகளுக்கு ஏன் இன்று குழந்தை பதில் சொல்லவில்லை என்பதை இந்த மதிப்பெண் விளக்குமா? குழந்தைக்கு எப்படி உதவுவது என்று இந்த மதிப்பெண் பெற்றோர்களுக்கு ஆலோசனை கூறுமா? மதிப்பெண்களால் இப்படிப் பேச முடியாது.

ஆனால் இவை உள்ளவற்றை மிகைப்படுத்திச் சொல்ல வல்லவை: “குழந்தையை கவனி! அவன் ஒன்றையும் சொல்ல விரும்பவில்லை!” நல்ல, உயர்ந்த மதிப்பெண்கள் பெரும் மகிழ்ச்சியைத் தருமென்று நினைக்கின்றீர்களா? பல சமயங்களில் இவை பெற்றோர்களை சாந்தப்படுத்தி குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெரும் சுய திருப்தியை ஏற்படுத்தும்: “இவன் எவ்வளவு புத்திசாலி! நன்றாகப் படிக்கிறான், எனவே நமது உதவி இவனுக்குத் தேவையே இல்லை!”

இப்போது ஒரு வருத்தம் தரத்தக்க சந்தர்ப்பத்தை நினைத்துப் பார்ப்போம். குழந்தைக்கு உடல் நலமில்லை. அப்போது ஆசிரியரைக் கூப்பிட மாட்டோம், மாறாக மருத்துவரை அழைத்து குழந்தையின் உடல் நலத்தைப் பரிசீலிக்கச் சொல்வோம். மருத்துவர் தொண்டையைப் பார்த்து விட்டு, நாக்கைப் பரிசோதித்து விட்டு, நுரையீரலை காதுக் குழாய் மூலம் கேட்டு விட்டு, ஜுரத்தை அளந்து விட்டு, பின் குழந்தையின் உடல் நிலைக்கு “பெயில் மதிப்பெண்” போட்டு விட்டுப் போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அம்மா இந்த மதிப்பெண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்வாள்? இதை மாத்திரையாக உள்ளுக்குள் விழுங்க முடியாது, தைலமாக உடலின் மீது பூச முடியாது. “குழந்தைக்கு உடல் நிலை மோசம்! அவனுக்கு உதவ வேண்டும்!” என்று மட்டுமே இந்த பெயில் மதிப்பெண் கத்துகிறது. குழந்தையின் மோசமான உடல் நிலை பற்றிய இந்த மதிப்பீடு பெற்றோர்களை சரியான சிகிச்சைப் பாதைக்கு அழைத்துச் செல்லுமா? நிச்சயமாக இப்படிப்பட்ட உத்தரவாதம் கிடையாது.

எனவே உடல் நலம் சரியில்லாத குழந்தையின் பெற்றோர்களுக்கு பெயில் மதிப்பெண் தருவது பெரிதும் ஆபத்தானது. இது எல்லோருக்கும் புரியக் கூடியது, எனவே உடல் நலத்தைப் பற்றி மதிப்பெண்களின் மூலம் அறிய யாரும் நினைக்கக் கூட மாட்டார்கள். நோய்வாய்ப்பட்ட குழந்தையை பரிசீலித்த பின் நல்ல, அன்பான டாக்டர் குழந்தைக்கு என்ன நோய், இதற்கான காரணங்கள் என்ன, சிக்கலின்றி விரைவில் குணமடைய என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்களுக்கு விளக்குவார். இந்த டாக்டர் தன் பையிலிருந்து சீட்டை எடுத்து மருந்து எழுதுவார்,

இதை எப்படி, எவ்வளவு முறை சாப்பிடவேண்டும் என்று விளக்கிச் சொல்லுவார்.

கணிதப் பாடத்தில் பெயில் மதிப்பெண் பெற்ற குழந்தையின் பெற்றோர்களிடம் யார் வந்து, வீட்டில் என்ன, எப்படி சொல்லித் தர வேண்டும் என்று விளக்குவார்? பெற்றோர்கள் மந்திரவாதி – ஆசிரியர்களாக மாற வேண்டும்; இவர்களின் ஒரே வழி எப்போதும் போல் பொழுதுபோக்கு இன்பங்களைத் தடை செய்வதாகும். மந்திரவாதி-மருத்துவரின் மருந்துகள் மனிதனின் உடல் நலத்திற்கு எப்படி ஆபத்தானவையோ அதே போல் மந்திரவாதி – ஆசிரியரின் வழிகளும் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாகும். சில சமயங்களில் இந்த இரண்டு துறைகளிலுமே எல்லாம் நன்றாக முடியும் – குழந்தை வளர்ப்பு முறை சரியான தாகப்படும், மருந்தும் நோயைக் குணப்படுத்தக் கூடும். ஆனால் இது தற்செய்லானது, ஒரு நியதியல்ல.

எனவே, பள்ளியின் ஆன்மாவைக் குலைக்காமல் இருக்க குழந்தைகளின் படிப்பைப் பற்றிய எவ்வித மதிப்பெண்களையும் பெற்றோர்களுக்குத் தராமலிருப்பதே நல்லது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க