அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 11

எங்களுடைய கண்காட்சி

தாழ்வாரத்தில் நான்கு மேசைகளைக் கொண்டு வந்து போடுகிறோம். தயாரான பொருட்களைக் குழந்தைகள் வகுப்பறையிலிருந்து வெளியே கொண்டு வந்து மேசைகளில் வைக்கின்றனர். எப்படி வைத்தால் பார்க்க வசதியாயிருக்கும், அழகாயிருக்கும் என்று விவாதிக்கின்றனர்.

முதல் மேசையில் நான்கு அழகிய தொகுப்பேடுகள்: “அறிவின் மூல ஊற்று” (முதல் பிரிவும் இரண்டாவது பிரிவும்); “மக்கள் கவிதை” (முதல் பிரிவும் இரண்டாவது பிரிவும்).

வகுப்பிலும் தாழ்வாரத்திலும் உள்ள கரும்பலகைகளில் நான் குழந்தைகளுக்கு அடிக்கடி பழமொழிகளையும் முது மொழிகளையும் எழுதியிருக்கிறேன். குழந்தைகள் இவற்றை இடைவேளைகளின் போது படிப்பார்கள், பலர் மனப்பாடம் கூடச் செய்து விட்டனர். ஒரு நாள் நான் அவர்களிடம் “வாருங்கள், பழமொழிகளையும் முதுமொழிகளையும் தேடுவோம்! இவற்றில் மக்களின் பகுத்தறிவு உள்ளது” என்று முன்மொழிந்தேன். வீட்டில் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்த பழமொழிகள், முதுமொழிகளைச் சேகரிக்குமாறு கூறினேன். குழந்தைகள் தாள்களில் எழுதப்பட்டிருந்த பழமொழிகளையும் முதுமொழிகளையும் வகுப்பிற்குக் கொண்டு வரத் தொடங்கினர். சிலர் வாசகத்தின் அருகே மலர்களையும் வேறு பல வடிவங்களையும் வரைந்தனர். ஒரு விசேஷ காலைப் பாடம் நடத்தி அதில் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த பழமொழிகளைப் படிக்கலாம் என்று முன்மொழிந்தேன். இதில் நான் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினேன்:

“வாருங்கள், இப்படிச் செய்யலாம்: நீங்கள் பழமொழிகள், முதுமொழிகளை எழுதியுள்ள தாள்களை எல்லாம் சேர்த்துத் தைப்போம். விக்டர் இவற்றை நாடாவால் கட்டுவான், பழமொழிகள், முதுமொழிகளின் அழகிய தொகுப்பு நூல்கிடைக்கும். இதற்கு என்ன பெயர் வைப்பது?”

“அறிவின் மூல ஊற்று” என்ற பெயரை வைப்பது என்று முடிவு செய்தோம். உடனடியாக அட்டைக்கு ஏற்பாடு செய்யுமாறு நீயாவிடமும் மாக்தாவிடமும் கூறினோம். இவ்வாறாக பழமொழிகள், முதுமொழிகளடங்கிய இரண்டு தொகுப்பு நூல்கள் கிடைத்தன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 50 பழமொழிகள் உள்ளன.

இந்தத் தொகுப்பு நூல்கள் தான் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

பெரியவர்களின் உதவியோடு கிராமியக் கவிதைகளைக் கண்டெடுத்து, மனப்பாடம் செய்து, விசேஷ காலைப் பாடத்தில் படிக்குமாறு ஏப்ரலில் நான் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறினேன். விசேஷ காலைப் பாடம் சுவாரசியமானதாக இருந்தது. பின் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து, இரண்டு அழகிய அட்டைகளைத் தயாரித்தோம், இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் கிடைத்தன. வீட்டில் உள்ளவர்களுக்குக் காட்டுவதற்காக இவற்றை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். இப்படித்தான் இந்த நான்கு புத்தகங்களும் (இவை குழந்தைகளின் சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் உள்ளடக்கியுள்ளன) தோன்றின.

இரண்டாவது மேசையில் ஒரு ஆல்பத்தை வைத்தோம். “விருப்பமிருந்தால் நம்புங்கள், இல்லாவிட்டால் வேண்டாம்!” என்று இதற்குத் தலைப்பு தந்தோம். இதில் அசாதாரண இயற்கைச் சம்பவங்கள் பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வந்த பத்து செய்திகள் கத்தரித்து ஒட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் தான் சிறுவர்கள் இதைத் துவங்கினர், அடுத்த கல்வியாண்டில் இதைத் தொடருவார்கள்.

மூன்றாவது மேசையில் “குழந்தைகள் தாமாகவே செய்த வேலைகளின் முதல் தொகுப்புகள்” இருக்கின்றன. ஜனவரியில் என் குழந்தைகளிடம் பின்வருமாறு கூறினேன்:

“நூலாசிரியர்களாக விரும்புகின்றீர்களா?” என்று கேட்டு, இதற்கு என்ன பொருள் என்று விளக்கினேன். “இந்த நூல்களில் உங்களுடைய சிறந்த எழுத்துப் பயிற்சிகளையும், நீங்கள் போட்ட சிறந்த கணக்குகளையும் சேர்க்கலாம். உங்களுடைய கருத்துக்கள், கதைகள், நீங்களே கண்டுபிடித்துப் போட்ட புதிர்கள், உங்களுடைய கணக்குகள், படங்கள், மாடல்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். அதாவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் எல்லாவற்றையும் இவற்றில் சேர்க்கலாம். பக்கங்களை நீங்கள் அழகுபடுத்தலாம்… நூலிற்குப் பெயரை நீங்களே யோசித்து முடிவு செய்யுங்கள்!”

எனது முந்தைய ஆறு வயதுக் குழந்தைகளின் ஒரு சில நூல்களை நான் காட்டினேன். “உங்களுடைய நூல்கள் இப்படி இருக்கும்!” இந்நூல்களைக் கண்டு குழந்தைகள் பரவசமடைந்தனர்.

லேரி: “ஏன் இங்கு ‘முதல் தொகுதி’ என்று எழுதப்பட்டுள்ளது?”

“ஏனெனில் தமது இரண்டாவது நூலை, இரண்டாவது தொகுதியை இரண்டாவது. வகுப்பிலும் மூன்றாவது தொகுதியை மூன்றாவது வகுப்பிலும் நான்காவது தொகுதியை நான்காவது வகுப்பிலும் உருவாக்கினார்கள்.”

இந்தத் தடிமனான, அழகிய நூல்களைக் குழந்தைகள் – முன் வைக்கிறேன்.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் நிச்சயமாக தம் சொந்த நூல்களின் ஆசிரியர்களாக விரும்பினர். எனது “முதுமொழிகளில்” ஒன்று பின்வருமாறு ஒலிக்கிறது:

உடனடியாக செய்யத்தக்க சுவாரசியமான விஷயங்களைத் தான் குழந்தைகளுக்கு முன்மொழிய வேண்டுமே தவிர எப்போதாவது செய்ய வேண்டியவற்றை முன்மொழியக் கூடாது; இந்த விஷயங்களை நிறைவேற்றும் முகமாக இவர்கள் எடுத்து வைக்கும் முதலடிகள் முதல் வெற்றிகளுக்கு இவர்களை இட்டுச் செல்ல வேண்டுமே தவிர முதல் கசப்பான தோல்விகளுக்கு இட்டுச் செல்லக் கூடாது.

“நாங்கள் எப்போது எங்கள் நூல்களைச் செய்வோம்?” இக்கேள்வி உடனேயே வகுப்பின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்தது.

“ஏன் தள்ளிப் போட வேண்டும்! இப்போதே துவங்குவோம்!”

குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்கள், ஓவியங்கள், மாடல்கள் அடங்கிய கோப்புகளை ஒவ்வொருவருக்கும் அளித்தேன். அவர்கள் அலமாரியிலிருந்து கோந்து, கத்தரிக்கோல், வண்ணப் பேனாக்கள், காகிதம் முதலியவற்றை எடுத்தனர். எப்படித் தேர்ந்தெடுப்பது, வெட்டுவது, ஒட்டுவது, அழகுபடுத்துவது, காகிதங்களை வரிசைப்படுத்துவது, நாடாவால் கட்டுவது என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறேன். குழந்தைகள் தங்கள் நூலின் தலைப்பைப் பற்றியும் அட்டையை எப்படி அழகுபடுத்துவது என்பதைப் பற்றியும் என்னுடன் ஆலோசனை செய்தனர். உழைப்புப் பாடவேளையிலும் ஓவியப் பாடவேளையிலும் எல்லோரும் உற்சாகமாக காரியத்தில் மூழ்கினர். அன்று ஒவ்வொருவரிடமும் “தூக்கணாங்குருவி”, “ரோஜா”, “கழுகு”, “சூரியன்”, “மகிழ்ச்சி”, “நட்சத்திரம்”, “வசந்தம்”, “ஓடை”, “மலர் தோட்டம்” என்று தனித் தனி நூல்கள் உருவாயின.

நாங்கள் வகுப்பறையில் இந்த நூல்களுக்காக ஒரு மேசையை ஒதுக்கினோம். ஒவ்வொருவரும் தத்தம் நூல்களை எடுத்து அதில் புதியவற்றைச் சேர்க்கலாம், நண்பரின் நூலை எடுத்துப் பார்க்கலாம்.

குழந்தைகளின் உற்சாகத்தை வழிநடத்தும் அவசியமே எனக்கு இல்லாமல் போயிற்று. நான் மேசையை நெருங்கி ஏதாவது ஒரு நூலை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன், பின் எப்போதாவது (இடைவேளையில், உலாவும் போது அல்லது ஒரு வேளை பாடநேரத்தில் அவர்கள் பதில் சொல்லும் போது) “உனது “வசந்தம்” (“நட்சத்திரம்”…) நூலின் புதிய பக்கம் எனக்குப் பிடித்துள்ளது. இன்னும் என்னவற்றையெல்லாம் இதில் சேர்க்கப் போகிறாய்?”

சில சமயங்களில் இடைவேளையின் போது நான் 2-3 நூல்களை எடுத்து வந்து புரட்டிப் பார்ப்பேன். அப்போது குழந்தைகள் என்னைச் சூழ்ந்து நின்று “இது யாருடைய நூல்? உங்களுக்குப் பிடித்துள்ளதா?” என்று கேட்டபடி இருப்பார்கள். சில சமயம் ஒரு நூலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அந்த நூலின் ஆசிரியரிடம் அனுமதி கேட்பேன்: “என் பிள்ளைகளுக்குக் காட்டுவேன்”. யாரை வேண்டுமானாலும் அழைத்து “குழந்தைகளின் இந்த நூல்கள் எவ்வளவு சுவாரசியமானவை பாருங்கள்” என்று கூறுவேன்.

ஆம், எல்லாம் இவ்வளவு எளிமையானவையாக இருந்தன, மழைக்குப் பின் காளான்கள் வளருவதைப் போல் நூல்கள் விரைவாக அதிகரித்தன.

இந்நூல்கள் எல்லாம்தான் இப்போது மூன்றாவது மேசையில் உள்ளன.

நான்காவது மேசையில் சின்னஞ் சிறு நூல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். ஒரு பத்திரிகையின் பக்கத்தில் பாதி அளவுள்ள ஒரு தாளில் கதை டைப் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். 8 பக்கமுள்ள ஒரு நூல்கிடைக்க, தாளை மூன்று முறை மடித்து, பக்கங்களை ஒட்ட வேண்டும், முதல் பக்கத்தில் நூல் ஆசிரியரின் பெயர், கதையின் பெயர், தேதி முதலியவற்றை எழுத வேண்டும்; கதையை கவனமாகப் படித்து உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; கதைக்கேற்றபடி அட்டையின் மேலும் பின்னும் அலங்கரிக்க வேண்டும்; அட்டையின் இரண்டாவது பக்கத்தில் அலங்கரித்த ஓவியரின் பெயரை எழுத வேண்டும்; பத்திகள் ஆரம்பமாகும் போது முதல் எழுத்துகளை அலங்கரிக்க வேண்டும்; மேற்கோளில் உள்ள வார்த்தைகளின் பொருளை எழுத வேண்டும்; காலியான பக்கங்களில் கதைக்கேற்ற படங்களை வரைய வேண்டும்; கதையின் இறுதியில் கதைப் பொருளுக்கு ஏற்ற சில கேள்விகளை எழுத வேண்டும்; இப்படி வடிவமைக்கப்பட்ட நூலை நண்பர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இப்படி வடிவமைக்கப்பட்ட நூலைப் பற்றி வகுப்பில் விவாதம் நடத்தினோம். ஓவியங்கள், அட்டைகள், மேற்கோள் வார்த்தைகளின் விளக்கங்கள், கதையின் பொருளுக்கேற்ற கேள்விகள் ஆகியவற்றை, இவ்வாறாக கதையையே விவாதிப்போம். இவ்வாறாக மூன்று கதைகள் உருவாயின. இம்மாதிரியாகப் புதியவற்றை அறிவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று…… கண்காட்சி வேலைகள் முடிந்தன. “வாருங்கள், எல்லாம் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம்!” என்கிறாள் மாயா.

படிக்க :
ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

நாங்கள் கண்காட்சி அரங்கைச் சுற்றி வருகிறோம். தம் புகைப்படங்களைக் கண்டதும் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. தம் முதல் எழுத்து வேலைகளைக் கண்டதும் இவர்களுக்கு சந்தோஷம், வியப்பு. இவர்களுக்கு தம் கண்காட்சியில் திருப்தி. ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்கின்றனர். தமது இசை நாடக அறிவிப்பைத் தொங்க விடுகின்றனர்.

“இப்போது நாம் நம் மரங்களிடம் செல்லலாம்!” என்று நான் சொல்லியதும் வாளியையும் இரண்டு மண்வெட்டிகளையும் எடுத்தபடி நாங்கள் சத்தமிட்டுக் கொண்டு மாடிப்படியில் இறங்குகிறோம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க