அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 14

ஆறு வயதுக் குழந்தைகளின் நாளைய தினம் பற்றிய சிந்தனைகள்

னது பழைய, விசுவாசம் மிக்க மேசையே, வணக்கம்! அன்றாடம் குழந்தைகளை விட்டுப் பிரிந்ததும், அன்றைய தினம் நடந்ததைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் அடுத்த நாளைத் திட்டமிடவும் உன்னிடம் விரைந்து வந்தேன். உன் மேல் நோட்டுப் புத்தகங்கள், படங்களைப் பரப்பி வைத்து அவற்றில் மூழ்கினேன், சின்னஞ் சிறு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகளை உருவாக்கினேன், இவர்களுடன் எம்மாதிரியான பேச்சுகள் வரும் என்று கற்பனையில் பார்த்தேன், மொத்தத்தில் அடுத்த நாளுக்கான பாடத் திட்டத்தைத் தீட்டினேன்.

ஒரு ஆற்றில் குச்சி அடித்துச் செல்லப்படுவதைப் போல் ஒரு நாள் ஆசிரியரை இட்டுச் சென்றால் அது ஆசிரியருக்கு ஏற்ற நாளாகாது; ஒரு ஆற்றில் ஒருவன் இலக்கை நோக்கி படகை ஓட்டுவது போல் ஆசிரியர் நாளைத் திட்டமிட்டுச் செலவிட்டால் தான் ஆசிரியருக்கேற்ற நாளாகும். இங்கே ஆற்றை வாழ்க்கையோடு ஒப்பிடலாம்.

எனது ஆறு வயதுக் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நான் யோசித்துப் பார்த்தேன். அவர்களை டெஸ்கில் உட்கார வைத்ததன் மூலம் நான் அவர்களின் குழந்தைப் பருவத்தைப் பிடுங்கியதாகப் பல சமயங்களில் எனக்குப் பட்டது. ஆசிரியர்களும் குழந்தை வளர்ப்பாளர்களும் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் சொல்லித் தருவதற்காகக் குழந்தைகளை எங்கே உட்கார வைத்தாலும் இந்த சின்னஞ் சிறியவர்களிடம் குழந்தைப் பருவத்தைப் பிடுங்கியதாக எனக்குத் தோன்றியது.

எனது சிந்தனைகளில் எனது சக ஆசிரியை நத்தாலியா மிஹைலவ்னா கார்ச்சாவுலியை நினைத்துப் பார்த்தேன்.

இருபது வருடங்களுக்கு முன் இவர் ஜார்ஜியாவில் முதன் முதலாக ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பும் ஆரம்பக் கணிதமும் நர்சரிப் பள்ளிகளில் சொல்லித் தர துவங்கிய போது இவருக்கு வயது எழுபதைக் கடந்திருந்தது. ஒரு முறை அவர் வகுப்பில் அமர்ந்து குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது நத்தாலியா மிஹைலவ்னா திடீரென என் காதில் மெதுவாகக் கூறினார்: “இக்குழந்தைகள் நிறைய சாதிப்பார்கள். ஆறு வயதுக் குழந்தைகளுக்கு உண்மையான குழந்தைப் பருவத்தைத் தர இவர்களுக்கு படிப்பு சொல்லித் தர வேண்டும்!”

அப்போது இந்தச் சொற்கள் முரணுரையாகத் தோன்றின. “குழந்தைகளின் குழந்தைப் பருவத்தில் ஒரு வருடத்தை ஏன் பிடுங்க வேண்டும்? எதற்கு அவசரம்?” என்று ஒரு சில விஞ்ஞானிகள் கூறினர். உண்மையான குழந்தைப் பருவத்தை இவர்களுக்கு அளிப்பதற்காகப் படிப்பு சொல்லித் தர வேண்டும் என்றார் ஆசிரியை.

இதற்குப் பின் பல்லாண்டுகள் உருண்டோடி விட்டன, பல விஷயங்கள் நடந்து விட்டன. ஒரு வருடம் முன்னதாக குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தர வேண்டுமா இல்லையா என்று யாரும் விவாதிப்பதில்லை. ஆறு வயதுக் குழந்தைகளின் படை பள்ளியை நோக்கிப் பாய்கிறது; இவர்களில் ஒரு பகுதியினர் ஏற்கெனவே பள்ளியில் நுழைந்து, மிகச் சிறந்த வகுப்பறைகளில் அமர்ந்து, ”படிப்பு சொல்லித் தாருங்கள்” என்று அன்பான, அறிவுக் கூர்மையுள்ள ஆசிரியர்களிடம் கோரினர்; இன்னொரு பகுதியினர் நர்சரிப் பள்ளிகளில் தமது சிறு மேசைகளின் முன் அமர்ந்து கொண்டு குழந்தை வளர்ப்பாளர்களிடம் நல்ல உணவைக் கேட்பதோடு, ”படிப்பு சொல்லித் தாருங்கள்” என்றும் கேட்கின்றனர்; மூன்றாவது பகுதியினர் சாக்லேட்டுகள், விளையாட்டு சாமான்களோடு கூடப் புத்தகங்கள், அரிச்சுவடிகள், ஸ்கேல்கள் முதலியவற்றையும் வாங்கித் தருமாறு தம் பெற்றோர்களிடம் நச்சரிக்கின்றனர்; இன்னுமொரு பகுதியினரோ ஒருவருக்கொருவர் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வரும் எழுத்துகளையும் கடைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் உள்ள எழுத்துகளையும் படிப்பதன் மூலமும் தம் அறிவுத் தாகத்தை தீர்த்துக் கொள்வதென முடிவு செய்துள்ளனர்.

இன்றுள்ள குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் பார்த்தீர்களா! இந்த ஆறு வயதுக் குழந்தைகள் யார்?

இவர்களுக்கு குழந்தைகளாக இருக்கப் பிடிக்க வில்லையா! இயற்கையன்னை இவர்களுடைய வயதிற்கு உரித்தான குணங்களை மாற்றி விட்டாளா என்ன!

இல்லை, இயற்கை ஒன்றையும் மாற்றவில்லை.

படிக்க:
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

இவர்கள் 80-ம் ஆண்டுகளின் புலப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றனர். இவர்கள் தம் குழந்தைப் பருவத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை, மாறாக புத்திசாலித்தனமான குழந்தைப் பருவத்தைப் பெற முயலுகின்றனர். எனது முதிய ஆசிரியையின் வார்த்தைகளின் பொருள் அனேகமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும். புதிய புதிய தலைமுறைகளைச் சேர்ந்த ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரவும் அவர்களை வளர்க்கவும் நான் துவங்கிய பின் இதை மேன்மேலும் அதிகமாக உணர்ந்தேன்.

குழந்தைப் பருவம் என்றால் என்ன? சந்தோஷமான, உற்சாகமான குழந்தைப் பருவம் என்றால் என்ன? “குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற அறைகூவலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? எனது ஆசிரியர் மனசாட்சியை சாந்தப்படுத்தி, ஊக்குவிக்க இக்கேள்விகளுக்குப் பதில்களைப் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

ஆறு வயதுக் குழந்தைகளைக் கவனித்த போது ஒன்று தெரிந்தது. குழந்தைப் பருவம் என்பது வெறும் குறிப்பிட்ட வயதுப் பருவம் மட்டுமல்ல. இப்பருவத்தில் இவர்களுக்கு விளையாட, குதிக்க, ஓடியாடப் பெரும் விருப்பமிருக்கும், இவர்கள் கவலையற்று, பல நேரங்களில் பொறுப்பற்றுத் திரிவார்கள் – என்பதெல்லாம் ஒருபுறம். ஆனால் உண்மையான குழந்தைப் பருவம் என்பது பெரியவர்களாகும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்; இதில் மனித வாழ்க்கை ஒரு குணாம்ச மட்டத்திலிருந்து வேறொரு உயர் மட்டத்திற்கு மாறுகிறது. குழந்தை தானாகவே இதைப் பற்றி யோசிப்பதில்லை. ஆனால் அவனுடைய வளர்ந்து வரும் சக்திகள் அவனை இத்திசையில் உந்தித் தள்ளுகின்றன. இச்சக்திகளால் பெரியவர்களாக்கும் நிகழ்ச்சிப் போக்கை முழுமையாக்க முடியாது. குழந்தைகளின் மீது அக்கறையுள்ள, பெரியவர்களாக வேண்டிய அறிவுத் தீனியையும் அனுபவத்தையும் தரவல்ல பெரியவர்களின் உதவி இக்குழந்தைகளுக்கு வேண்டும்.

குழந்தைகள் வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் மூல ஊற்று அவர்கள் இவ்வாறு பெரியவர்களாவதில் தான் உள்ளதென்று எனக்குத் தோன்றுகிறது. பரிசுகள், உலாவுதல் மூலம் மட்டும் குழந்தைகளுக்கு சந்தோஷம் தரலாமென சில நேரங்களில் நாம் நினைப்பது தவறாகும். 80-ம் ஆண்டுகளின் ஆறு வயதுக் குழந்தையை இப்படிப்பட்ட அதிசயங்களால் மட்டும் சந்தோஷப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெட்டத் தெளிவாகி வருகிறது. கதைகளைப் படிக்க அவனுக்குச் சொல்லிக் கொடு, யதார்த்தத்தை அறியும் வழிகளைச் சொல்லிக் கொடு, அவன் தனது எதிர்காலத்தோடு கலந்து பழகுவது குறித்து மகிழ்வான் என்று அனுபவம் காட்டுகிறது. பெரியவனாகும் பாதையில் இவன் பெரியவர்களின் உதவியோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனுக்கு மகிழ்ச்சிகரமான மலர்ச்செண்டாகும்.

இவ்வாறாக நான் ஒரு “முதுமொழிக்கு” வந்தேன். ஒருவேளை அதை நியதியாகக் கருதலாம்.

குழந்தையின் வளர்ந்து வரும் சக்திகளுக்கேற்ப இவன் பெரியவனாக உதவுவது என்றால் இவனுடைய குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சிகரமானதாக, கவர்ச்சிகரமானதாக, உணர்ச்சிகள் நிறைந்ததாக ஆக்குவது என்று பொருள். மாறாக, குழந்தையின் குழந்தைப் பருவத்தைப் பறிக்கக் கூடாது என்ற மாயையான தர்க்கத்தைக் காட்டி குழந்தைக்கு முழு சுதந்திரம் அளித்து, பெரியவனாகும் இயக்கப் போக்கின் வேகத்தைக் குறைப்பது என்றால் குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் உண்மையான உணர்வை அவனிடமிருந்து பிரிப்பது என்றாகும்.

இவற்றிற்கெல்லாம் ஒரு விளக்கம் தரலாம்: குழந்தையின் இயல்பு மாறவில்லை, சூழ்நிலை மாறியுள்ளது, குழந்தையின் இயல்பு மீது தாக்கம் செலுத்தும் நமது வாழ்க்கை மாறியுள்ளது, நவீன வாழ்க்கையின் புதிய சூழ்நிலைகளில் குழந்தை வளருகிறான். இந்த மாற்றங்களின் ஒரு வெளிப் பாடாகத்தான் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் கற்றுக் கொள்ள வேண்டுமென விருப்பம் தோன்றியது. அதாவது இவர்கள் பெரியவர்களாக, மனித நடவடிக்கையின் அதிக சிக்கலான வடிவங்களை கிரகிக்க விரும்புகின்றனர்.

ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க ஆசைப்படுகின்றனர். இவர்களைத் தயாரிப்பு வகுப்பிற்கு அனுப்பும் பெரியவர்களாகிய நாம், இவர்களுக்கு பள்ளியில், கல்வியில் சலிப்பு ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். ஓராண்டு பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிற்குப் பின் பள்ளி வாழ்க்கையை இவர்கள் எப்படி அணுகுவார்கள், படிப்பை எப்படிப் பார்ப்பார்கள் என்பதெல்லாம் வீண் கேள்விகள் அல்ல, இவைதான் முக்கிய சாரமாகும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க