அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 15

ரம்பக் கட்டப் போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், ஒவ்வொரு பள்ளி நாள் குறித்தும் மகிழ வேண்டும், ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோஷப்பட வேண்டும், ஒவ்வொரு முறை பாடத்திற்கு மணியடிக்கும் போதும் உற்சாகப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி வாழ்க்கை அவனுடைய வாழ்க்கையின் சாரமாக இருக்க வேண்டும். சத்தம் போடுதல், திட்டுதல், அச்சுறுத்தல், முரட்டுத்தனம் ஆகிய விஷயங்கள் குழந்தைகளுடன் கலந்து பழகுவதில் தலைகாட்டவே கூடாது.

எனது கருத்துப்படி, ஆரம்பக் கட்டத்தில் உண்மையான கல்வி போதிக்கும் முறை, குழந்தைகள் மீது உண்மையான அன்புடன் படிப்பு சொல்லித் தந்து, வளர்க்கும் முறை மனிதாபிமான அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர அதிகாரத் தொனியிலான, கட்டாய, நிர்ப்பந்த அடிப்படையில் அமையக் கூடாது.

தமது ஆசிரியர்களுக்குக் கோபமேற்படுத்தவோ, தமக்குப் படிப்பு சொல்லித் தந்து வளர்ப்பதற்கு இடையூறு செய்யவோ குழந்தைகள் பிறக்கவில்லை. யதார்த்தத்தை அறியும் திறமைகளும் வாய்ப்புகளும் இவர்களிடம் கிட்டத் தட்ட எல்லையற்று உள்ளன, அறிவுத் தாகம் இவர்களிடம் மிகுந்துள்ளது என்பதை நாம் நம்ப வேண்டும். எனது கருத்துப்படி, ஆரம்ப வகுப்புகளில் கல்வி – வளர்ப்புப் பணியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகளின்பாலான மனிதாபிமான உறவைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது குழந்தை வளர்ப்பின் விதியாக வேண்டும்.

ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர். ஆனால் நாம் எப்படி சொல்லித் தந்தாலும் இவர்கள் படிப்பார்கள் என்பது இதன் பொருளல்ல. அதிகாரத் தொனியோடு, கட்டாயப்படுத்தி இவர்களுக்குப் படிப்பு சொல்லித் தந்தால், முரட்டுத் தனமாக இவர்களுடன் கலந்து பழகினால், படிப்பார்வத்தை ஒரு வருடம் முன்னதாகவே இவர்களிடமிருந்து பிடுங்கியவர்களாவோம், இவர்களின் வளர்ச்சியை செயற்கையாகத் தடுத்து நிறுத்துவோம். விளையாட வேண்டுமென்ற தங்கள் தேவையை குழந்தைகளால் விட முடியாது என்பதை நாம் மறந்தால் நமது போதனை முறை, அவர்களுடைய அறிதல் உலகில் வழிகாட்டியாக இருக்காது, இரவு நேரத்தில் தன்னந்தனியாக தன் மகளை தண்ணீர் எடுத்துவர காட்டிற்கு அனுப்பிய மாற்றாந்தாய் போலிருக்கும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள் மூலம் படிப்பு சொல்லித் தர வேண்டுமா, இதனால் இவர்களுக்கு என்ன பயன் என்று விஞ்ஞானிகள் இன்று வரை விவாதிக்கின்றனர். அதிகாரத் தொனியை விரும்பும் பலர் இப்படிப்பட்ட முறை குழந்தைகளுக்குத் தீங்கிழைக்க மட்டுமே செய்யும், ஏனெனில் படிப்பே ஒரு விளையாட்டு என்ற கருத்து இவர்களிடம் ஏற்படக் கூடும் என்கின்றனர். படிப்பு எவ்வளவு கடினமானது, சிக்கலானது என்று குழந்தைகள் முதலிலேயே நன்கு புரிந்து, உணர்ந்து, அனுபவிப்பது நல்லதாகும் என்று இதற்குப் பொருளாகாதா? ஒருவேளை, படிப்பே ஒரு வேதனை, இம்சை என்று குழந்தைகளுக்குத் தோன்றினால் என்ன செய்வது?

படிக்க :
பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கக் கோரி் கனடாவில் பேரணி !
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

என் கருத்துப்படி, பிரச்சினையை இப்படி வைக்கக் கூடாது. விளையாட்டின் மனவியல் சாரத்தை வெளிப்படுத்தி, இந்த அடிப்படையில் கல்வி போதிப்பதைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு பிரச்சினை முன்வைக்கப்பட வேண்டும். விளையாட்டில் முக்கியமான அம்சம் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு. குழந்தை தானாகவே ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, சலிப்பேற்படும் வரை விளையாடுகிறான், தன் தேவை பூர்த்தியானதாக உணர்ந்ததும் இதை நிறுத்துகிறான். என் கருத்துப்படி, சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உணர்வு தான் விளையாட்டின் மனவியல் அடிப்படையாகும்.

ஆனால் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்தும் குழந்தை கடினமற்ற நடவடிக்கைகளை மட்டும்தான் விளையாட்டில் தேர்ந்தெடுக்கிறான் என்று இதற்குப் பொருளாகாது. விளையாட்டைத் தேர்ந்தெடுக்கும் குழந்தை இதன் மூலம் இடர்ப்பாட்டையும் தேர்ந்தெடுக்கிறான், இதைக் கடப்பதில் அவன் தன் கவனத்தையும் முயற்சிகளையும் ஒன்று திரட்டி செயல் முனைப்போடு இயங்குகிறான். இடர்ப்பாடுகளைக் கடக்கும் அம்சம் தான் குழந்தையைப் பொறுத்த மட்டில் விளையாட்டை உணர்ச்சிகரமானதாய், இலட்சிய நோக்குடையதாய் ஆக்குகிறது.

விளையாட்டில் ஏற்படும் அதே உணர்ச்சிகளை, கல்வி கற்கும் போதும் குழந்தை அனுபவிப்பதில் என்ன தப்பு? அப்போது நாம் விளையாட்டுப் படிப்பைப் பற்றிப் பேச மாட்டோம், மாறாக, குழந்தைகளின் நிலைகளின் அடிப்படையிலான, இந்த நிகழ்வுப் போக்கில் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உணர்வை குழந்தைகள் அனுபவிப்பதன் அடிப்படையில் கல்வி போதிப்பதைப் பற்றிப் பேசுவோம். குழந்தை விளையாட்டினால் மகிழ்ச்சியடைகிறான் இல்லையா? படிப்பைக் கண்டும் அவன் மகிழ வேண்டும். ஆசிரியர்கள், குழந்தை வளர்ப்பாளர்களாகிய நாம் இந்த சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இதுதான் ஆறு வயதுக் குழந்தைகள் விஷயத்தில் எனது பணியின் அடிப்படைகளில் ஒன்று.

பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பை நாம் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரவும் அவர்களை வளர்க்கவும் அதிகபட்சம் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் திறமைகளை உரிய நேரத்தில் வளர்ப்பதற்கு அனுகூலமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்காக மட்டுமே அவர்களை டெஸ்குகளில் உட்கார வைக்க வேண்டும். இத்திறமைகள் இந்த வயதில்தான் முளை விடுகின்றன, புதியவற்றை அறியும் போக்கில் குழந்தைகளின் வெற்றிகரமான முன்னோக்கிய இயக்கத்திற்கு இவை பெரிதும் முக்கியமானவை.

குழந்தை நன்கு படிக்க இவனுக்கு என்ன தேவை? குழந்தைக்குப் படிக்கவும் படித்ததைப் புரிந்து கொள்ளவும் தெரிய வேண்டும், தன் மனப்பதிவுகளை எழுதத் தெரிய வேண்டும், படிப்பதை, பார்ப்பதைப் புரிந்து, கிரகிக்க குறிப்பிட்ட கண்ணோட்டம் வேண்டும், சுற்றியுள்ள ஏராளமான நிகழ்வுப் போக்குகளிலிருந்து, பொருட்களிலிருந்து மேற்கூறியவற்றைப் பிரித்தெடுக்கத் தெரிய வேண்டும், தான் பார்த்ததை வார்த்தைகளில் சொல்லத் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட திறமைகளையும் இவற்றோடு தொடர்புடைய ஞானத்தையும் கிரகிப்பதானது கல்விக்குக் குழந்தை தயார் என்று காட்டுகிறது. குழந்தைக்குப் பேச்சு வராவிடில் எப்படிப் படிக்க முடியாதோ அதே போல் மேற்கூறியது இல்லாமல் பள்ளியில் கல்வியை நிறைவேற்ற இயலாது.

மேற்கூறிய திறமைகள் குழந்தையின் கல்வி – அறிதல் நடவடிக்கைக்கு அவசியமான கருவிகள் ஆகும். இவை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையானவையாக உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றிகரமாக அவனால் விஞ்ஞானக் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் புரிந்து, கிரகிக்க முடியும். குழந்தைகள் இத்திறமைகளைப் பெறுவதை – இது எந்த சூழ்நிலையில் நடைபெற்றாலும், பள்ளியில் நடைபெற்றாலும் கூட – கல்வி என்று இச்சொல்லின் கண்டிப்பான பொருளில் கூற முடியாது. குழந்தை படிக்க, எழுத, எளிய கணக்குகளைப் போடக் கற்றுக் கொள்வதை கல்வி என்று அடிக்கடி அழைத்தாலும் இதை புதிய மட்டத்துக்கு இட்டுச் செல்லும் வளர்ச்சிப் போக்காகத்தான் கருத வேண்டும். படிப்பது, எழுதுவது, எளிய கணக்குகளைப் போடுவது இவையெல்லாம் இன்றைய உலகில் குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் புதிய மட்டங்கள் மட்டுமே. நடக்கவும் பேசவும் குழந்தை எந்த சமூக – மனவியல் அடிப்படையில் கற்றுக் கொண்டானோ அதே அடிப்படையில் தான் இவற்றையும் கற்றுக் கொள்கிறான்.

வாழ்க்கை அனுபவம், உறுதி, பேச்சின் உள்ளடக்கமும் ஆழமும், வார்த்தைகளின் எண்ணிக்கை, நடவடிக்கைகளின் திடீர் எழுச்சி ஆகியவற்றில் ஆறு வயதுக் குழந்தைகள் ஏழு வயதுக் குழந்தைகளிடமிருந்து கணிசமாக மாறுபடுகின்றனர். முக்கியமானது என்னவெனில் விளையாட்டின் மீதுள்ள நாட்டமும் தேவையும் மாறுபடுவதாகும். ஓராண்டு வித்தியாசம், அல்லது இதற்கும் குறைவான வயது வேறுபாடு நம்மைக் குழப்பாமல் இருக்கட்டும்.

இவ்வாறு ஆறு வயதுக் குழந்தைகளுக்கும் ஏழு வயதுக்  குழந்தைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாததானது இன்னொரு தவறான கருத்திற்கும் இட்டுச் செல்கிறது. அதாவது ஆறு வயதுக் குழந்தைகளின் தயாரிப்பு வகுப்பை முழு முதல் வகுப்பாக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. இதனால் ஆறு வயதுக் குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை மறைகிறது, பாடத்திட்டங்கள், பாடநூல்கள், முறையியல் சிபாரிசுகளை உருவாக்குபவர்கள் முன் தோன்றக்கூடிய சிக்கலான பிரச்சினைகளும் இதன் மூலம் “அகற்றப்படுகின்றன”. இப்படியிருக்கும் பட்சத்தில் ஆறு வயதுக் குழந்தைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் – ஆசிரியர்கள், முறையியல் நிபுணர்கள், ஆணையாளர்கள் எல்லோருக்கும் – வசதியாகவும் எளிதாகவும் ஆகிறது. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் பிரச்சினையை இப்படி எளிதாகத் ”தீர்ப்பதை” நான் குழந்தை வாழ்க்கையை மட்டுமின்றி, குழந்தைகளின் மனவியல், ஆசிரியரியல், முறையியல் போன்ற விஞ்ஞானங்களையும் அதிகார முறையில் அணுகுவதாகப் பார்க்கிறேன்.

(அடுத்த பாகத்துடன் நிறைவடைகிறது)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க