“பாபர் மசூதி வளாகத்தில் ராமபிரான் அவதரித்தார்” என்ற கருத்து 18 நூற்றாண்டின் மத்தியில்தான், அதாவது, 1850 பின்தான் உருவாக்கப்பட்டு, இந்துக்களிடம் பரப்பப்பட்டது.  அப்பொழுதும்கூட, மசூதியின் மையக் குவிமாடத்திற்குக் கீழேதான் ராமன் பிறந்தார்” என எந்தவொரு இந்து சாதுக்கள் பிரிவும் கூறவில்லை.

ராம ஜென்மபூமி என்ற இந்தக் கட்டுக்கதையும் மத நம்பிக்கையின்பாற்பட்டு உருவாக்கப்படவில்லை. அதற்கொரு அரசியல் காரணம் இருந்தது. 1850 பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக முதல் வட இந்திய சுதந்திரப் போர் கருக்கொண்டு உருவாகி வந்தது. காலனிய ஆட்சிக்கு எதிரான களத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஒன்று திரண்டு நின்றனர். இந்த ஒற்றுமையின், காலனி ஆட்சி எதிர்ப்பின் மையமாக அயோத்தியை உள்ளடக்கியிருந்த அவத் மாகாணம் திகழ்ந்தது. இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டிய உடனடித் தேவையும் நீண்டகால நோக்கமும் ஆங்கிலேய அரசுக்கு இருந்ததோடு, நவாப் வாஜித் அலி ஷா என்ற முஸ்லிம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த அவத் மாகாணத்தை பிரிட்டிஷ் அரசு தனது சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவரவும் முயன்று வந்தது.

அவத் மாகாண நவாப் வாஜித் அலி ஷா.

இச்சூழ்நிலையில்தான் 1855 அயோத்தியில் இந்து கலவரம் ஏற்பட்டு, அதில் 75 முஸ்லிம்களும் 11 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தைத் தொடர்ந்து அவத் நவாப் வாஜித் அலி ஷா நியமித்த கமிட்டியின் விசாரணையில், ”பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அவ்விடத்தில் இந்துக் கோவில் இருந்ததாக எந்தவொரு இந்துவும் கோரவில்லை. அது போல பாபர் மசூதிக்கு அருகே அமைந்திருந்த அனுமன் கோவிலுக்குக் கீழே மசூதி இருந்ததாக எந்தவொரு முசுலீமும் கோரவில்லை.”

இக்கலவரம் நடந்து முடிந்த அடுத்த ஆண்டு, 1856 வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அவத் மாகாணத்தை இணைத்துக் கொண்ட பிரிட்டிஷ் காலனி அரசு, இந்த இணைப்பிற்கு இந்து கலவரத்தையும் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த வலுக்கட்டாயமான இணைப்புக்கு நவாப் வாஜித் அலி ஷாவின் இரண்டாவது மனைவி பேகம் ஹஸ்ரத் மஹல் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவந்ததோடு, 1857 வெடித்த முதல் வட இந்திய சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கெடுத்தும் கொண்டார். அதே சமயம், பாபர் மசூதி வளாகத்தினுள் இருந்த அனுமன் கோட்டையில் தங்கியிருந்த மகந்துகளோ ஆங்கிலேய அரசுக்குத் துணை நின்றனர்.

1855 நடந்த கலவரம், ஆங்கிலேய காலனி அரசு அவத் மாகாணத்தை இணைத்துக் கொண்டது, 1857 வெடித்த முதல் வட இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகிய சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டுதான், பாபர் மசூதியின் தென்கிழக்கே, அவ்வளாகத்தில் ராம்சபுத்ரா என்றொரு சிறிய மேடையை இராமநந்தி பைராகிகள் உருவாக்கியதோடு, அங்குதான் ராமபிரான் பிறந்ததாகக் கூறத் தொடங்கினர்.

பேகம் ஹஸரத் மஹல்.

இம்மேடை கட்டப்பட்டதை முஸ்லிம்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்த போதும், ஆங்கிலேய அரசு பாபர் மசூதியையும், அதன் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவையும் ஒரு தடுப்புச் சுவரின் மூலம் இரண்டாகப் பிரித்து, வளாகத்தின் உட்புறப் பகுதியில் அமைந்திருந்த மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வெளிப்புறப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்தது.

1885 ராம் சபுத்ராவை நிர்வகித்து வந்த நிர்மோகி அகாராவின் தலைமை பூசாரி மஹந்த் ரகுபர் தாஸ், ”அயோத்தியில் அமைந்திருக்கும் சபுத்ரா ஜென்மபூமியில் ஒரு கோவிலைக் கட்டிக் கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும், இதனை முஸ்லிம்கள் தடுக்கக் கூடாது” எனக் கோரி உரிமையியல் வழக்கொன்றைத் தொடுத்தார். இந்த வழக்கு டிசம்பர் 1885 முதல் நவம்பர் 1886 வரை ஆங்கிலேய அரசின் மூன்று நீதிபதிகளால் அடுத்தடுத்து விசாரிக்கப்பட்டு, கோவில் கட்டும் கோரிக்கை மறுக்கப்பட்டது. எனினும், இவ்விசாரணைகளில் ராம் சபுத்ராதான் இராமர் பிறந்த இடமாகக் கூறப்பட்டதே தவிர, ஒரு முறைகூட மசூதி இராமர் பிறந்த இடமாகக் கூறப்படவில்லை.

உரிமையியல் வழக்குகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் நிலை. அந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று. எனினும், 22.12.1949 அன்று நள்ளிரவில் பாபர் மசூதியினுள் கள்ளத்தனமாகக் குழந்தை இராமர் சிலையை வைத்து இப்பிரச்சினையை மீண்டும் தொடங்கி வைத்தது, இந்து மதவெறிக் கும்பல்.

1857 வெடித்த முதல் வட இந்திய சுதந்திரப் போர் குறித்த சித்திரம். (கோப்புப் படம்)

சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சமயத்தில் ஃபைசாபாத் மாவட்ட ஆட்சியராகவும் மாவட்ட நீதிபதியாகவும் இருந்த கே.கே.கே.நாயர் இந்து மகாசபையோடு நெருக்கமாக இருந்து, இச்சதிச் செயலை நிறைவேற்றிக் கொடுத்தார். கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு முட்டுக்கட்டையாகச் செயல்பட்ட அவர், 29.12.1949 அன்று நிர்வாக ஆணையொன்றை வெளியிட்டு பாபர் மசூதி வளாகத்தை ஜப்தி செய்தார். இதன் மூலம் மசூதியைக் கோவிலாக்கினார் கே.கே.கே.நாயர்.

16.01.1950 அன்று இந்து மகா சபையின் ஃபைசாபாத் கிளைச் செயலராக இருந்த கோபால் சிங் விஷாரத் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கும் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்ற அடிப்படையில் நிலத்தின் உரிமையைக் கோரவில்லை. மாறாக, கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை வழிபடத் தன்னை அனுமதிக்க வேண்டும்; பிரதிவாதிகள் (அரசும், முஸ்லிம்களும்) சிலைகளை அகற்ற முடியாதவாறு நிலையான தடையாணை பிறப்பிக்க வேண்டும்” என்றுதான் கோரியிருந்தார். இவ்வழக்கில் விஷாரத் கோரியவாறு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்தது, ஃபைசாபாத் உரிமையியல் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்துதான் முஸ்லிம்கள் பாபர் மசூதியில் தொழுகை நடத்துவதைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். (அயோத்தி: இருண்ட இரவு, பக்.135, 150)

குழந்தை இராமன் சிலையை மசூதிக்குள் வைக்கும் திட்டத்திற்கு உதவிய அன்றைய ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கே.கே.கே. நாயர்.

இந்நிலையில் 1959 பாபர் மசூதி அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலத்தின் மீது உரிமை கோரி, நிர்மோகி அகாரா வழக்கில் இணைகிறது. இது அனுபவ பாத்தியதை அடிப்படையில் சொத்தின் மீது உரிமை கோரிய ஒரு சிவில் வழக்கு மட்டுமே. அந்த இடம் இராமன் பிறந்த இடம், மத நம்பிக்கை என்ற வாதங்களெல்லாம் நிர்மோகி அகாராவின் மனுவில் கிடையாது. இதற்கு எதிராக வேறு வழியில்லாமல் சன்னி வக்ஃபு வாரியம் 1961 இல் எதிர் மனு தாக்கல் செய்கிறது.

அடுத்த இருபது ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத் தாழ்வாரத்திலேயே தூசிபடிந்து கிடக்க, 1980 பிற்பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. இந்த சிவில் வழக்கை இந்து மதவெறி அரசியலாக மடைமாற்றியது. பா.ஜ.க.வின் இம்முயற்சிக்கு அடிக்கொள்ளியாகச் செயல்பட்டது காங்கிரசு.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக, 1984 ஏப்ரலில் அவரது தலைமையில் இருந்த காங்கிரசு அரசு, மசூதியில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இராமர் சிலையை இந்துக்கள் வழிபடுவதற்காக பூட்டப்பட்டிருந்த அம்மசூதியைத் திறந்துவிடும் முடிவை எடுத்தது. அதற்கு எதிர்வினையாக 1984 ஏப்ரலில் நடந்த விசுவ இந்து பரிசத்தின் மாநாட்டில் அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களிலுள்ள மசூதியை அகற்ற வேண்டுமெனத் தீர்மானம் இயற்றப்பட்டதோடு, 1984 செப்டம்பரில் பாபர் மசூதியை அகற்றக் கோரும் ரத யாத்திரையைத் தொடங்கியது, வி.இ.ப. 1984 அக்டோபரில் இந்திரா காந்தி  சுட்டுக் கொல்லப்பட, இராமஜென்ம பூமி இயக்கத்தை விசுவ இந்து பரிசத் கைவிட நேர்ந்தது. (பிரண்ட்லைன், டிச.6, 2019, பக்.9)

இந்து மகாசபை ஃபைசாபாத் கிளைச் செயலராக இருந்த கோபால் சிங் விஷாரத்.

1986 வயது முதிர்ந்த முஸ்லிம் பெண்மணி ஷா பானுவின் ஜீவனாம்சக் கோரிக்கை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அப்பெண்மணிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்க, ராஜீவ் காந்தி அரசு நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி அத்தீர்ப்பை ரத்து செய்தது. இதனைச் சாக்காக வைத்து, ராஜீவ் காந்தி அரசு முஸ்லிம்களைத் தாஜா செய்வதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்ய, ராஜீவ் காந்தி அரசு பாபர் மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு இந்துக்களை வழிபாடு செய்துகொள்ள அனுமதித்தது. இதற்கு இந்த வழக்கில் ஃபைசாபாத் நீதிபதி பாண்டே கொடுத்த உத்தரவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காங்கிரசு அரசு.

இதனைத் தொடர்ந்து இராம ஜென்மபூமி பிரச்சினையை அரசியல் ரீதியில் அறுவடை செய்வதற்கான இயக்கத்தை பாரதிய ஜனதா நாடெங்கும் கட்டத்தொடங்கியது. 1989 தேர்தலுக்குச் சில நாட்கள் முன் பாபர் மசூதி வளாகத்தில் இராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை நடத்த சங்கபரிவாரத்தை அனுமதித்தது ராஜீவ் அரசு.

ராம ஜென்மபூமி பிரச்சினை கருக்கொண்டு உருவான காலக்கட்டம் காலனியக் கட்டம் என்றால், அப்பிரச்சினையை சங்கப் பரிவார அமைப்புகள் தீவிரமாகக் கையில் எடுத்த காலக்கட்டம், இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கட்டமாகும்.

பா.ஜ.க. கும்பலுக்குத் துணைபோன தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் பி.பி.லால்.

எனினும், மூல வழக்கைப் பொருத்தவரை, இராமன் பிறந்த இடம் என்ற அடிப்படையில் பாபர் மசூதி நிலத்தின் மீது உரிமை கோரும் மனு” எதுவும் 1989 வரை தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தைச் சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும் என்ற சூட்சுமம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே அன்று புரிந்திருந்தது.

நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, குழந்தை இராமனையே மனுதாரர் ஆக்கி, குழந்தை இராமனின் நெருங்கிய நண்பர், காப்பாளர் என்ற முறையில் 1989 இல் மேற்கூறிய வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார், அவர். அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருக்குப் பதிலாக ‘ராமனின் நண்பனாக திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். திரிலோக்நாத் பாண்டே விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறத்தில், கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதென்ற ஆர்.எஸ்.எஸ். பொய்ப் பிரச்சாரத்தை உண்மையைப் போலக் காட்டும் மோசடித்தனமான தொல்லியல் ஆய்வுகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த முன்னாள் இயக்குநர் பி.பி.லால், மசூதியின் கீழே சிதிலமடைந்த தூண்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் நடந்துவந்த மூலவழக்கு 1989 ஜூலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் 2010 தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி வளாகத்தின் மீது உரிமை கோரிய நிர்மோகி அகாரா, சன்னி வாரியத்தின் மனுக்கள் காலவரம்பைத் தாண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எனக் கூறித் தள்ளுபடி செய்தது. எனினும், அந்நிலத்தை குழந்தை ராமர், சன்னி வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று மனுதாரர்களுக்கும் இடையே மூன்றாகப் பங்கிட்டுத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின்படி, பாபர் மசூதி இருந்த நிலப்பகுதி இராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தை இராமருக்கும், ராம்சபுத்ரா அமைந்திருந்த பகுதி நிர்மோகி அகாராவுக்கும், எஞ்சிய நிலப்பகுதி சன்னி வாரியத்திற்கும் ஒதுக்கப்பட்டது.

இத்தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ”1500 சதுர கெஜ நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுப்பது யாரையும் திருப்திப்படுத்தாது, அமைதியை ஏற்படுத்தவும் உதவாது” எனக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அந்நிலத்தைக் குழந்தை இராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது. சங்கப் பரிவாரத்தைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்” என்பதுதான் இத்தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் செய்தி.

முத்து

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க