ந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கும் பாஜக அரசு, அரசமைப்பின் எல்லா பிரிவுகளையும் தன்னுடைய ஊதுகுழல்களாக மாற்றிவருகிறது. இராணுவத் தளபதி, தனது பதவிக்குரிய ‘மாண்பையும்’, அதிகார எல்லையையும் மீறி நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசால் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆரிஃப் முகமதுகானும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான்.

அண்மையில் கேரள மாநிலத்தில் உள்ள, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த ‘இந்திய வரலாறு கூட்டமைப்பின்’ 80-வது நிகழ்வில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்று துறை பேராசிரியர் இர்பான் ஹபீப், எம்.பியும் பல்கலை சிண்டிகேட் உறுப்பினருமான பிஜு கண்டக்காய், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கே.கே. ராகேஷ் போன்றோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிஜு கண்டக்காய், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடந்துவரும் போராட்டங்கள் குறித்து பேசினார். கே.கே. ராகேஷும் இதுகுறித்து பேசினார். ஆனால், இவர் ஆங்கிலத்தில் பேசியதால், உடனடியாக கவனம் பெற்ற ஆளுநர், ராகேஷின் பேச்சை குறிப்பெடுத்துக்கொண்டார்.

இந்திய வரலாற்று கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர். அமியா பாக்சி பேசி முடித்த பின்னர் ஆளுநர் பேசத்தொடங்கினார். முதலில் தனக்கு முன் பேசியவர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் ராகேஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுவதாக கூறினார்.

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசத் தொடங்கினார். அதற்கு கூட்டத்தில் இருந்த சில பங்கேற்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இது குறித்து விவாதிக்க ஆளுநர் அழைத்தபோது, பதாகைகள் மூலம் இரு பெண்கள் அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்தனர். ஜனநாயகப்படி போராடுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என ஆளுநர் சொன்னபோது, கேரள போலீசு அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பார்த்தது.

படிக்க :
வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

அதோடு, ஜே.என்.யூ., அலிகர், டெல்லி, ஜாமியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பலர் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அலிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஒருவரையும் வெளியேற்ற முயற்சித்தது போலீசு.

இந்த நிலையில் ஆளுநர் தனது உரையில் மவுலானா ஆசாத் மேற்கோளை சுட்டிக்காட்டி பேசிய போது அரங்கில் எதிர்ப்பு குரல்கள் வலுவாக எழுந்தன.

“பிரிவினை சில அழுக்குகளை எடுத்துச் சென்றது. அதில் சில குழிகள் அப்படியே விடப்பட்டன. அதில் இப்போது தண்ணீர் சேகரமாகி, துர்நாற்றம் வீசுகிறது.” என்ற ஆளுநர், போராட்டக்காரர்களைப் பார்த்து “நீங்கள் துர்நாற்றம் வீசுகிறீர்கள். மவுலானா ஆசாத் உங்களுக்காகத்தான் இதைச் சொன்னார்” என்றார்.

மேடையில் தடுத்து நிறுத்தப்படும் வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப்.

அதுவரை ஆளுநரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் இர்பான் ஹபீப் எழுந்து நின்று,“மவுலானா ஆசாத் அல்லது காந்தியை விட நாதுராம் கோட்சேவை மேற்கோள் காட்டுங்கள்” எனக் கூறினார்.

ஆளுநர் மவுலானா ஆசாத்தை மேற்கோள் காட்டிய உடனேயே மேடையில் என்ன நடந்தது என்பதை அலிகார் வரலாறு மற்றும் தொல்லியல் சமூகம் தனது செய்திக்குறிப்பில் இப்படி கூறுகிறது:

“ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியவுடன், இந்திய வரலாற்று கூட்டமைப்பின் தலைவராக உள்ள பேராசிரியர் இர்பான் ஹபீப் தனது இருக்கையில் இருந்து எழுந்து கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரனிடம் சென்று, ‘வரலாற்று கூட்டமைப்பின் அரங்கத்தை ஆளுநர் தனது அரசியல் அரங்கமாக மாற்றுவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்’. பேராசிரியர் ஹபீப் அங்கு சென்றவுடன், கூடுதல் துணை ஆட்சியரும் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியும் அவரைத் தள்ளி அவரைத் தடுக்க முயன்றனர். ஆளுநரும் தான் பேசுவதை ஹபீப் தடுக்க முயன்றதாக குற்றம் சாட்டத் தொடங்கினார்.”

உலகளவில் புகழ்பெற்ற மூத்த வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீபை மரியாதைக்குறைவான முறையில் பாதுகாப்பு அதிகாரிகள் கையாண்ட நிலையில், தன் பேச்சை ஹபீப் தடுக்க முயன்றதாக தனது ட்விட்டர் மூலம் பரப்பத் தொடங்கினார் கேரள ஆளுநர்.

அப்போது மேடையில் இருந்த கந்தக்காய், “பேராசிரியர் ஹபீப் ஆளுநர் உரை நிகழ்த்துவதை தடுக்கவில்லை; உடல் ரீதியாகவும் தடுக்கவில்லை, ஆனால் அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்” என கூறுகிறார்.

ஆளுநரேகூட உரையை குறுக்கிட்டார் என்றுதான் கூறினார். ஆனால், வட இந்திய ஊடகங்கள் ஹபீப், ஆளுநருக்கு சவால் விடுத்ததாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டன.

பின்னர் ஊடகங்களிடம் நடந்ததை தெளிவுபடுத்திய வரலாற்றாசிரியர், “ஆரிஃப் முகமது கான் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை. அலிகரில் இருந்த நாட்களில் இருந்தே நான் அவரை அறிந்திருக்கிறேன். ஆனால், காவல்துறையின் நடவடிக்கைதான் எனக்கு கவலையளிக்கிறது, அதுவும் ஒரு கம்யூனிச அரசாங்கத்தின் கீழ் இப்படியா..” என்று அவர் கூறினார். மேலும், எதிர்ப்பாளர்கள் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டு பேசினார் அவர்.

நாடே பாசிசமயமாகிவரும் நிலையில், கம்யூனிஸ்ட் அரசாங்கம் என சொல்லிக் கொண்டாலும் அதன் கீழ் இயங்கும் போலீசும்கூட காவி அரசுக்கு கட்டுப்பட்டதே. ஆளுநர் முசுலீம் பெயரில் உள்ள ஒரு காவி என்பதும் அவர் நியமனத்தின்போதே தெரியவந்த விசயம். கர்நாடகத்தில் வீதிக்கு வந்து போராடிய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவை மிக மோசமாக நடத்தியது கர்நாடக போலீசு.

இப்போது மதிப்பிற்குரிய வரலாற்றாசிரியரான இர்பான் ஹபீப் மோசமாக நடத்தப்பட்டுள்ளார். இந்திய வரலாற்றில் மிக மோசமான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.


கலைமதி
செய்தி ஆதாரம் :  தி வயர்.