சமீபத்தில், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியை குறைத்ததுடன், பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிர்மலா சீதாரமனின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதற்கு பதிலாக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திருக்கலாம் என்று சிலர் கூறினர். எந்த அரசாங்கமாக இருந்தாலும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருப்பதாக சிலர் கூறினர். கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைப்பதால் பொதுமக்களுக்கு என்ன லாபம் என்று பலர் கேள்வி எழுப்பினர்.

இந்த விமர்சனங்கள் நியாயமாக தோன்றினாலும், நிர்மலா சீதாராமன் தரப்பிலும் ஒரு நியாயம் உள்ளது. அந்த நியாயத்தை புரிந்துகொண்டால்தான் அது உண்மையிலேயே நியாயமா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். அதாவது, தர்க்க ரீதியில் அதை தவறு என்று நிறுவமுடியும்.

ரோம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த கதையோடு, நிர்மலா சீதாராமனின் நடவடிக்கையை ஒப்பிட முடியுமா? அவ்வாறு ஒப்பிடுவதே சரி என்று நீங்கள் நினைத்தால், ரோம் ஏன் பற்றி எரிகிறது என்பதை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த பிறகு ரோம் பற்றி எரியவில்லை. நகரம் பற்றி எரியத்தொடங்கிய பிறகே, அவன் ஃபீடில் வாசிக்கத் தொடங்கினான். தீயை அணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல், ஃபிடில் வாசித்ததை வேண்டுமென்றால் குற்றம் என்று சொல்லலாம். ஆனால், நகரம் பற்றி எரிய யார் காரணம்?

“அரசாங்கம், அரசாளவேண்டுமே தவிர, வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது” என்று கூறும் சில அறிவாளிகள் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளையும் சரி என்று கூறுகிறார்கள். பொருளீட்டும் வழிகளை அதிகரித்து, அதை பாதுகாத்து முறையாக செலவிடுதே சிறந்த அரசு என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு வாதத்திற்கு, பொருளீட்டுவதென்பது, வரி வசூலை மட்டுமே குறிப்பதாக எடுத்துக்கொண்டால், கார்ப்பரேட்டுகளின் வரியை குறைப்பது அரசுக்கு வரும் வருமானத்தை குறைப்பதல்லவா? பொருளீட்டுவதென்பது, வரி வசூலை மட்டுமே குறிப்பிடவில்லை என்றால், அரசாங்கம் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற கூற்று தவறல்லவா? முன்னதற்கு, பின்னது முற்றிலும் முரணாக உள்ளது. ஆகவே, இந்த இரண்டும் சரி என்று கூறுபவர்கள் முரண்பாடுகளின் மொத்த உருவமல்லவா?

உண்மையில் நமது அரசாங்கம் எப்படி பொருளீட்டுகிறது? அதை எப்படி மக்களுக்கு செலவழிக்கிறது?

படிக்க :
♦ பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

பொருளீட்டல் என்பது பெரும்பாலும் வரி வசூலையே நம்பியுள்ளது. இயற்கை வளங்களின் மூலமும், லாபம் தரும் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மூலமும் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த வருமானம் அரசாங்கத்தை நடத்தவும், பெயரளவிலான நலத்திட்டங்களை வழங்கவும் மக்களின் சில அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. மற்றபடி, மக்களின் அனைத்து தேவைகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்வதில்லை. மாறாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சேவைகளும், படிப்படியாக நிறுத்தப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்களும், அதன் உண்மையன மதிப்பை விட மிகவும் சொற்பமான விலைக்கு தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

இதனால் அரசு, மக்களுக்கு வழங்கிவந்த இலவச அல்லது நியாயமான விலையிலான சேவைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அடிப்படையாக அரசு வழங்க வேண்டிய நல்ல வாழும் சூழலும், கல்வியும், சுகாதாரமும் கூட பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், “அரசாங்கம், அரசாளவேண்டுமே தவிர, வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது” என்ற குறிக்கோள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சரி, இந்த குறிக்கோளை வகுத்தது யார்? இந்த குறிக்கோளை நோக்கி அரசாங்கத்தை செலுத்துவது எது?

உழைப்பு என்ற உயிர்ப்பான செயல்பாடே, மனித வாழ்க்கையின் அடிப்படையாகும். உண்மையில், உழைப்பே மனிதனை மனிதனாக மாற்றியது. அப்படிப்பட்ட உன்னதமான உழைப்புச் சக்தியை முதலாளியிடம் விற்பதன் மூலம், அவரிடமிருந்த தொழிலாளி கூலியைப் பெருகிறார். அதைக்கொண்டு உயிர்வாழ தேவையான பொருட்களை வாங்கிக்கொள்கிறார். உழைப்புச் சக்திக்கு ஈடாக முதலாளி வழங்கும் கூலி, ஒரு தொழிலாளியை தொடர்ந்து தொழிலாளியாக மட்டுமே வைத்துக்கொள்வதற்கு போதுமானதாக உள்ளது. அதுவும், தொழில்துறை சிறந்த விளங்கும் காலங்களில் மட்டுமே இது சாத்தியமாகிறது. தொழில்துறையில் அடிக்கடி நிகழும் நெருக்கடிகளின்போது கூலியின் அளவு குறைகிறது. அத்துடன், ஒரு மிகப்பெரிய தொழிலாளர் கூட்டம் வேலையை இழக்கிறது. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட முதலாளி வர்க்கம், அதைப் பெருக்குவதற்காக செய்யும் சித்து விளையாட்டுகள் தொழிலாளர்களை பாதிக்கிறது.

தொழில்துறை ஏற்றமாக இருக்கும் காலங்களில் தொழிலாளர்களின் வாழ்நிலையில் மாற்றம் நிகழ்கிறதா? என்று கேட்டால் அதுவும் இல்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால், தொழில்துறை ஏற்றம் கண்ட காலத்திலும்கூட, லாபம் அல்லது கொள்ளை லாபம் மட்டுமே முதலாளிகளின் நோக்கமாக உள்ளது. அப்படியிருக்க, முதலாளி அடையும் லாபத்தோடும், அதனால் அவன் அனுபவிக்கும் சுகபோகங்களோடும் ஒப்பிட்டால், தொழிலாளர்களுக்கு உயர்த்தி வழங்கப்படும் கூலி மிக மிக சொற்பமே. தொழில்துறை ஏற்றத்தால் சமூகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றத்துடனும், புதிய நுகர்பொருட்களின் வருகையுடனும் ஒப்பிட்டால் உண்மையில் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு சில ஆயிரம் ரூபாய் கூலி உயர்ந்துள்ளதே தவிர, அதன் மதிப்பின் அடிப்படையில் பார்க்கப்போனால் உண்மையில் கூலி குறைந்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு, மூலதனத்தை வைத்துக்கொண்டு, லாபத்தை பெருக்குவதற்காக வழிதேடி அலையும் முதலாளிகளுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்கவே அரசுதுறைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. தனியார் முதலீடு பெருகினால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று இந்த கீழ்த்தரமான செயலுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட நபரின் தவறால் நிகழ்வதில்லை. இதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் விதியாக உள்ளது. ஆகவே, யார் ஆட்சியில் இருந்தாலும் சமூகத்தை இயக்கும் விதி என்ற அடிப்படையில் அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும். முன்னர் மன்மோகன் செய்தார். பின்னர் சிதம்பரம் செய்தார். அருண்ஜெட்லிக்குப் பிறகு இப்போது நிர்மலா சீதாராமன் அதை செய்கிறார். இவர்கள் அனைவரும் பின்பற்றும் அந்த சமூக இயக்கத்தின் விதியே முதலாளித்துவம்.

படிக்க :
♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
♦ மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்

அரசு மக்களுக்கு செய்ய நினைப்பதை முதலாளிகளுக்க செய்ய வேண்டும். முதலாளிகள் அதைக்கொண்டு தங்கள் தொழில்துறையை பெருக்குவார்கள். இதனால், வேலைவாய்ப்பு பெருகும். கூலி உயரும். மக்களின் வாழ்நிலையும் உயரும். இந்த விதியையே அனைத்து அரசுகளும் பின்பற்றுகின்றன. இதன் அடிப்படையில்தான், வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக, கார்ப்பரேட் வரியை நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதுதான் அவர் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயம்.

ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு முதலாளித்துவம், அந்த லாபத்தை பெருக்கும் பேராசையில் இந்த விதியை தொடர்ந்து மீறுகிறது. இதனால், மக்கள் கூட்டம் கூட்டமாக வேலை இழக்கின்றனர். ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் அலைகின்றனர். ஆனால், மறுபுறம் முதலாளிகள் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவு செல்வத்தை சேர்த்து சுகபோகமாக வாழ்கின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், முதலாளிகளுக்கு அரசு தொடர்ந்து சலுகை வழங்கி வருகிறது. அத்துடன், பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

நிர்மலா சீதாராமனை பொருத்தவரை அவர் செய்ய நினைத்ததன் நோக்கம் சரிதான். ஆனால் அது எதிர்பார்த்த விளைவைத் தராது என்பது அவருக்கே தெரியும். இருந்தபோதும் முதலாளித்துவம் என்ற விதி, அதை செய்ய நிர்பந்திக்கிறது. முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவர் அதை செய்தே ஆகவேண்டும்.

ரோமை சுருட்டி விழுங்கிய பெருந்தீயோடு, முதலாளித்துவத்தை ஒப்பிடலாம். இந்தப் பெருந்தீ, இன்று உருவானதில்லை. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பற்றத்தொடங்கி, அவ்வபோது கனன்றபடியும், பெரும்பாலும் சுவாலையை விரித்தும் தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயின் தன்மையை அறியாமல், தீ எப்படி உருவானது என்பதையும் அறியாமல், அவ்வபோது ஃபிடில் வாசிப்பவர்களை மட்டுமே குற்றம் சொல்வதுடன் இந்த மிகப்பெரிய பேரவலம் மறைக்கப்படுகிறது.

தூரத்தில் நிற்கும் பார்வையாளர்கள் இதன் உஷ்ணத்தை உணராமல் இருக்கலாம். ஆனால், உள்ளே வெந்துகொண்டிருப்பவர்கள் தீயை எதிர்த்து போராட துணிந்துவிட்டார்கள். அந்த கூட்டத்தில் பலர், முன்னாள் பார்வையாளர்கள் என்றபடியால், பரவி வரும் தீ, இன்றைய பார்வையாளர்களையும் வெகு சீக்கிரத்தில் போராட்டத்தின் பக்கம் ஈர்க்கும் நாள் தொலைவில் இல்லை.

170 ஆண்டுகளுக்கு முன், கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற புத்தகம், நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியை குறைத்ததற்கான அடிப்படையை விளக்குகிறது. மன்மோகன் சிங் உலகமயமாக்களுக்கு இந்தியாவை திறந்துவிட்டதன் பொதுவான நோக்கத்தை புரிவைக்கிறது. இது தொடர்வதால் நிகழும் பயங்கரத்தை கூறுவதுடன், இது இப்படியே தொடராது என்பதையும் தத்துவார்த்தமாக புரியவைக்கிறது.

மார்க்சியத்தின் மற்றொரு கர்த்தா ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” என்ற கட்டுரை, உழைப்பே அனைத்திற்கும் அடிப்படை என்று வாதிடுகிறது. உழைப்பு என்ற உயிர்ப்பான செயல்பாடே குரங்கிலிருந்து மனிதன் உருவானதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறுகிறது. மனித சமூகம் உருவானதற்கு உழைப்பும், உழைப்புக் கருவிகளும் எவ்வாறு காரணமாக அமைந்தன என்பதை விளக்குகிறது. இயற்கையின் மீது மனிதன் ஆற்றும் வினையும், அதற்கு எதிர்வினையாக, இயற்கை மனிதனை தண்டிப்பதைப் பற்றியும் பேசுகிறது. எதிர்வினையைப் பற்றி கவலையில்லாமல், இயற்கையை அழிப்பதால் ஏற்படும் விளைவே, எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் முதலாளியத்தால் ஏற்படும் என்று கூறுகிறது. இறுதியாக, இந்த ஆபத்திலிருந்து மனித சமூகத்தை பாதுகாக்க, தற்போதைய சமூக கட்டமைப்பு முழுவதிலும் ஒரு புரட்சி தேவை என்று கூறுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புத்தகங்கள், இதுவரை எளிமையாக்கப்படாதது மிகவும் வருத்தத்திற்குரியது. பொருள் முதல்வாதமே மார்க்சியத்தின் அடிப்படையாகும். ஆனால், அதை மறுக்கும் வகையில், மார்க்சிய ஆசான்கள் எழுதிய வாக்கிய அமைப்புகளை மாற்றினால்கூட பெரும்பாவம் என்பது போல், அந்த மொழிபெயர்ப்புகள் கடினமாகவே விடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதைத்தொடர்ந்து மக்கள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டங்களும், கம்யூனிச தத்துவத்தின்கீழ் அனைவரும் அணிதிரளும் காலம் தொலைவில் இல்லை என்பதை உணர்த்துகின்றன. அந்த வரலாற்றுத் தருணத்தை விரைவில் அடைய வேண்டுமென்றால், தத்துவம் மக்களிடம் விரைவாக சென்றுசேர வேண்டும். அதற்கு, மார்க்சிய ஆசான்களின் எழுத்துகள் மக்கள் மொழில் எளிமையாக்கப்பட வேண்டும்.

இந்த வரலாற்று தேவையை உணர்ந்து பணியாற்றும் சக தோழர்களுக்கு தோள்கொடுக்கும் முயற்சியாக கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன். என் அறிவுக்கு எட்டியவகையில், கருத்துகள் மாறாமல், பிழை ஏதும் இல்லாமல், முடிந்தவரையில் எளிமைப்படுத்தியுள்ளேன்.

இந்த இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா, வரும் வெள்ளிக்கிழமை (10.01.2020) மாலை 6 மணிக்கு, புத்தக கண்காட்சி அரங்கில், “போதி வனம்” (கடை எண்: 201) பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊக்கமளித்த “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின்” தோழர்களுக்கும், மொழிபெயர்ப்பை சரிபார்த்து தந்த தோழர் பாஸ்கர் மற்றும் தோழர் அ.கா.ஈஸ்வரன் அவர்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

இது ஒரு இயக்கமாக்கப்பட்டு அனைத்து தத்துவார்த்த எழுத்துகளும் விரைவில் எளிமையாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் !

முகநூலில் – அசீப்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க