Sunday, June 13, 2021
முகப்பு செய்தி தமிழ்நாடு கொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை !

கொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை !

ஊரடங்கு நடவடிக்கையால் பல இளம் வழக்கறிஞர்கள் வருவாய் இழக்கும் சூழல் உள்ளது. எனவே அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பியுள்ளது.

-

  • பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்கள், மூத்த வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் !!
  • இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் !!

வழக்கறிஞர் நண்பர்களே,

கொரோனா (COVID-19) நோய்த் தொற்று காரணமாக 22.03.2020 முதல் 14.04.2020-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவினை மத்திய அரசு  பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் அனைத்து பிரிவினரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. இது சம்மந்தமாக நாம்  ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

கேரளம், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநில வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை அறிவித்துள்ளனர். அதைப்போலவே தமிழக வழக்கறிஞர்களுக்கும் நிதியுதவி கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மூத்த வழக்கறிஞர்கள், சில அமைப்புகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு உதவி அளிக்கும் வகையில் தங்களிடம் நிதி இல்லை என தெரிவித்தனர்.

நிதி பிரச்சனை இருந்தாலும் எல்லோரையும் பொதுவாக வைத்து பார்க்காமல் வழக்கறிஞர்களின் பாதிப்பின் அளவு மற்றும் வாய்ப்பை கணக்கில் எடுத்து அதற்கேற்ற வகையில் உதவி திட்டத்தை செய்யவேண்டும். அதேபோல பார்கவுன்சிலிலுருந்து மட்டும் இல்லாமல் வேறு வகைகளிலும் நிதியை  திரட்டலாம் என கருதினோம்.

அதற்காக  வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசினோம். அவ்வாறு விவாதித்தபோது உதவித்தொகைக்கான நிதியினை பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், அரசாங்கம் உட்பட பல வழிகளில் திரட்ட முடியும் என்ற வழிமுறை கிடைத்தது. அதேபோல மூன்றிலிருந்து ஐந்து கோடி வரை  பணம் திரட்ட முடியும் என்பதும்  தெரிந்தது.

படிக்க:
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

அதன்பின்னர் அதிக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரிவை எவ்வாறு கண்டறிவது? என்ற கேள்வியும் எழுந்தது.

இதனை தீர்க்க கேரளாவில் பின்பற்றப்பட்ட வழிமுறையையும் எடுத்துகொண்டும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளையும் எடுத்துக்கொண்டும், வழக்கறிஞர் தொழிலில் 7 ஆண்டுகள் தாண்டாத, 35 வயதிற்கு மிகாத, வழக்கறிஞர் தொழிலை மட்டுமே நம்பி வாழும் நமது சகோதர-சகோதரிகளகளுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கவேண்டும். இந்த பணியை பார்கவுன்சில் உறுப்பினர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், தேர்தல் காரணமான எதிர்தரப்பினர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்து ஒரு திட்டத்தை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று மனு தயாரித்தோம். அதனை ஏற்கனவே நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்த மனுவை தமிழகம் முழுவதும் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து வழக்கறிஞர்களின் பெயரையும் இணைத்து கொடுக்க  திட்டமிட்டோம். ஆனால் ஏற்கனவே நாட்கள் கடந்து போய்விட்டதால் ஒரே நாளில் ஒரு சில மாவட்டங்களிலிருந்து மட்டும் மொத்தம் 871 வழக்கறிஞர்களின் பெயர், பதிவு எண் பெறப்பட்டு மனு தயாரிக்கப்பட்டது. (ஒரு  சிலர் மட்டும்  அதை பயனாளர்கள் பட்டியல் என்று தவறாக புரிந்து கொண்டனர்).

24 மணி நேரத்தில் 871 வழக்கறிஞர்கள் வாட்ஸ் அப் வழியாகவே ஒப்புதல் கொடுத்ததன் மூலம் வழக்கறிஞர்களின் உணர்வை புரிந்து கொள்ளமுடிந்தது. இந்த திட்டத்தினால் தாங்கள் பயன் பெற மாட்டோம் என்று தெரிந்தே பலர் இந்த கோரிக்கையை ஆதரித்து உள்ளனர்.

குறிப்பாக சென்னையில் உள்ள மூத்த வழக்கறிஞர்களில் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை,  உட்பட நாங்கள் தொடர்புகொள்ள முடிந்த பெரும்பாலான மூத்த வழக்கறிஞர்கள் நமது இந்த முயற்சியை ஆதரித்ததோடு, முதலில் அவர்களின் பெயரை இணைத்துக் கொள்ள இசைந்தனர்.

பார்கவுன்சில் தலைவர் திரு.அமல்ராஜ் அவர்களை நேரில் சந்திக்க முயன்றும் அவர் வெளியூரில் இருந்ததால் தொலைபேசியில் பேசி தகவலைத் தெரிவித்தோம். முறையாக பார்கவுன்சில் செயலாளருக்கு இ – மெயில் வழியாக மனு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பார் கவுன்சில் அகில இந்திய உறுப்பினர் திரு. பிரபாகரன் அவர்களை நான், வழக்கறிஞர்கள் திரு. பார்வேந்தன் மற்றும் திரு. பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சந்தித்து பேசி அவரிடமும் மனுவின் நகலை கொடுத்தோம்.

10-ற்கும் மேற்பட்ட தற்போதைய  பார் கவுன்சில் உறுப்பினர்களிடமும், பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்களிடமும் நமது கோரிக்கையை விளக்கி பேசியுள்ளோம்.

படிக்க:
செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !
♦ கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?

நாம் மனு கொடுத்துள்ள இந்த சூழலில் இன்று (07.04.2020) பார்கவுன்சில் கூட உள்ளது என்பது நம்பிக்கையான செய்தி.

மனு கொடுத்ததோடு நின்று விடாமல், கோரிக்கை நிறைவேறும்வரை நாம் தொடர்ந்து இதில் கவனம் செலுத்துவோம், பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்வோம்  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது அல்லாமல் ஏற்கனவே MBA போன்ற பல வழக்கறிஞர்கள் சங்கங்கள் உதவி திட்டத்தை தொடங்கியதைப் போல MHAA உள்ளிட்ட எல்லா சங்கங்களும் பார் கவுன்சில் மூலம் பெற முடியாத இளம் வழக்கறிஞர்களுக்கு நிதியுதவி மற்றும் வழக்கறிஞர் தொழிலில் 7 ஆண்டுகளை தாண்டியிருந்தாலும் பொருளாதார தேவையில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அந்தந்த சங்கங்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும் என்பதையும்  கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
சு.ஜிம்ராஜ் மில்ட்டன்
வழக்கறிஞர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க