விவசாய இடுபொருட்களுக்கான செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய விவசாயிகள் கோரி வரும் வேளையில், இந்த நிதியாண்டுக்கான வரவு-செலவு அறிக்கையில் உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏறத்தாழ 9,000 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, வெட்டப்பட்ட அத்தொகையை இந்திய விவசாயிகள் தமது சொந்தக் காசிலிருந்து செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உர மானியத்தை வெட்டியதோடு திருப்தி கொள்ளாத மோடி அரசு, விதைகளுக்குச் சான்றளிப்பது, சந்தைப்படுத்துவது தொடர்பாக புதிய விதை மசோதா ஒன்றையும் தயாரித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தயாராகி வருகிறது. இம்மசோதா சட்டமானால், “குறைந்த விலையில் தரமான விதைகள்” என்ற விவசாயிகளின் உரிமை காலாவதியாகிவிடும்.

இந்திய அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பிறகு இந்திய விதைச் சந்தையை இந்தியச் சட்டங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை விதிகளும் கட்டுப்படுத்தி வருகின்றன. இவற்றின் அடிப்படையில், 2001-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டம்”, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சாதகமான வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடமை உரிமைகள் மற்றும் புதிய பயிர் வகைகள் பாதுகாப்பு ஒழுங்கு விதிகள் ஆகியவற்றை மறுதலிக்காத அதேசமயம், இந்திய விவசாயிகளின் உரிமைகளையும் ஓரளவு பாதுகாப்பதாக அமைந்தது.

இந்திய விதைச் சந்தையின் மதிப்பு ஏறத்தாழ 15,000 கோடி ரூபாயாகும். இதில் 50 சதவீதத்தைத் தனியார் நிறுவனங்கள்தான் கைப்பற்றிக் கட்டுப்படுத்தி வருகின்றன. தனியார் நிறுவனங்களிலும், மான்சாண்டோ, டௌ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நான்கு பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் 34 சதவீத விதைச் சந்தையைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

“விதைகளின் விலைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும், விதைகளின் தரத்திற்குத் தாமே சான்றளித்துக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், விதைகளின் மூலக்கூறுகளைச் சுதந்திரமாக ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும், அறுவடை செய்யப்பட்ட தானியங்களைச் சேமித்து விதைகளாகப் பயன்படுத்தும் இந்திய விவசாயிகளின் உரிமையைக் கட்டுப்படுத்த வேண்டும்” என இப்பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கோரி வந்ததை நிறைவேற்றித் தரும் விதமாக இப்புதிய மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இந்திய விவசாயிகளின் மீது “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை” ஏவிவிடும் அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது.

படிக்க:
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

விதை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் விவசாயிகள் என்ற வரையறைக்குள் வராதவாறு முந்தைய விதைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்த விலக்கை இப்புதிய மசோதா விலக்கிக் கொண்டுவிட்ட அதேசமயம், கார்ப்பரேட் நிறுவனங்களையும் விவசாயிகள் என வரையறுப்பதற்கு ஏற்ப தொளதொளப்பான விளக்கத்தை அளித்திருக்கிறது. இதன்படி, விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருப்பவர்களையும் மைய மற்றும் மாநில அரசுகளால் வரையறுக்கப்படும் விவசாயம் தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களையும் விவசாயிகள் என வரையறுக்கிறது புதிய மசோதா.

இந்த வரையறையின்படி விதை உற்பத்தியில் ஈடுபடும் பாயர், மான்சாண்டோ உள்ளிட்ட பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும்கூட விவசாயிகள் எனக் கருதப்பட்டு, புதிய விதை மசோதாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள், விலக்குகளை இந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

2002-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டத்தின்படி, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்துவரும் விதைகளை மூலமாகக் கொண்டு அதனினும் மேம்பட்ட விதையைத் தனிநபரோ, நிறுவனமோ சந்தைப்படுத்தினால், அம்மேம்படுத்தப்பட்ட விதை விற்பனை வழியாகக் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியைத் தேசிய விதை வங்கிக்கு வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. இப்புதிய மசோதாவில் அவ்விதி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபம் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, புதிய வீரியமிக்க, மேம்பட்ட விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தாம் கண்டுபிடித்த விதைகள் எந்த மூல விதையிலிருந்து வந்தன என்பதையோ, அதில் விவசாயிகளின் பங்கு குறித்தோ குறிப்பிடத் தேவையில்லை எனச் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இனி, பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு நமது நாட்டின் பாரம்பரிய விதைகள் அனைத்தையும் திருடிக்கொண்டு, அவற்றைப் புதிய மேம்படுத்தப்பட்ட விதைகளாகச் சந்தைப்படுத்தும் அயோக்கியத்தனத்தில் சட்டபூர்வமாக ஈடுபடக் கூடும்.

2001-ஆம் ஆண்டு சட்டப்படி, புதிய மேம்படுத்த விதைளை உருவாக்கும் நிறுவனங்கள் அவ்விதை மீது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உரிமை கோர முடியாது. ஆனால், புதிய விதை மசோதா அக்காலக்கெடுவை ரத்து செய்து, தனியார் நிறுவனங்கள் எத்துணை முறை வேண்டுமானாலும் தமது விதைகளுக்குத் திரும்பத்திரும்பச் சான்றிதழ் பெற்றுச் சந்தையில் விற்றுக்கொள்ள அனுமதித்திருக்கிறது. இதன் மூலம் விதை நிறுவனங்களின் நீண்ட கால ஏகபோக கொள்ளைக்குச் சட்டபூர்வ தகுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

2001 சட்டப்படி பயிர் செய்யும் பருவ காலங்களில் சந்தையில் விதைத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுத்துப் போதுமான அளவு விதைகள் விற்பனை செய்யப்படுவதையும், அக்காலங்களில் விதைகளின் விலைகளை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தும் அதிகாரமும் உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிய விதை மசோதாவில் இவை இரண்டுமே உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களும் வியாபாரிகளும் விதைகளைப் பதுக்கிக் கொள்ளவும், விதைகளின் விலைகளைச் செயற்கையாக ஊதிப் பெருக்கிக் கொள்ளவும் வழி ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது.

அறுவடைக்குப் பின் விதைகளைச் சேமித்து வைத்து அடுத்த மகசூலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும், அதனை விவசாயிகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ளவும் இப்புதிய மசோதா விவசாயிகளை அனுமதித்தாலும், விவசாயிகள் தமது விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கிறது. விவசாயிகள் சான்று பெறாத விதைகளை விற்பனை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் சோதனையிடவும் போலீசு அதிகாரிகளுக்கு நிகரான அதிகாரங்களுடன் கூடிய அமைப்பு உருவாக்கப்பட்டு, விதைகளின் மீதான விவசாயிகளின் சுதந்திரமும் உரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.

தரமற்ற விதைகளால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நட்டமடையும்போது அவர்களைப் பாதுகாப்பதற்கு 2001-ஆம் ஆண்டு சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தன. புதிய மசோதாவின்படி, இப்படிப்பட்ட பிரச்சினைகளில் அரசு நேரடியாக விவசாயிகளின் பக்கம் நிற்காது. மாறாக, விவசாயிகள் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட விதை தரமற்றது என நிரூபித்து நட்ட ஈடு பெற்றுக் கொள்ள வேண்டுமென என நட்டாற்றில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். மேலும், தரமற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் அபராதத்தை மிகக் குறைவாக நிர்ணயித்திருக்கும் இம்மசோதா, சான்று பெறாத விதைகளை விற்கும் விவசாயிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடுத்து ஒரு இலட்சம் வரை அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கிறது.

தரமான விதை, சான்றிதழ் பெற்ற விதை என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குகிறது இம்மசோதா. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்து வருகிறார், மோடி. ஆனால், அவரது அரசு கொண்டு வந்திருக்கும் இம்மசோதாவோ கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதற்கு வழி ஏற்படுத்தித் தருகிறது.

பரணிதரன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart