“கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டிலேயே தனித்திருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தம் செய்து கொள்வது, விட்டமின் சி கொண்ட ஆரோக்கியமான உணவு, இத்தியாதி, இத்தியாதி..” – சமீபமாக இது போன்ற அறிவுரைகளை அதிகமாக கேட்டு வருகின்றோம்.

இதில் உண்மை உள்ளதை மறுக்க முடியாது. மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய்க் கிருமியை அண்ட விடாமல் பார்த்துக் கொள்வது தான் ஒரே தீர்வு. ஆனால், இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமா?

இயக்க நிறுத்தம் (Lock down) அறிவிக்கப்பட்ட பின், கையில் இருக்கும் காசுக்கு தகுந்தாற் போல் மளிகை சாமான் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி ஓரிரு மாதங்களுக்கு சேமித்து வைத்து வைத்துள்ளனர் பலர். ஆனால், அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்வார்கள்? அவர்கள், கும்பலாக ரேஷன் கடைகளில் கூடி அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கு முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது. பல்வேறு வட இந்திய மாநிலங்களில் இருந்து தில்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களுக்கு அத்துக் கூலிகளாய்ச் சென்ற ஏழைத் தொழிலாளிகள் தங்கள் ஊர்களை நோக்கி கால் நடையாகவே புறப்பட்டு விட்டனர். சுட்டெறிக்கும் வெயிலில் தார் உருகி ஓடும் சாலையில் அறுந்து போன செருப்புகளோடு அவர்கள் நடந்து சென்றனர். முதுகில் துணி மூட்டைகள், தலையில் சிறு சிறு பாத்திரங்கள், தோளில் குழந்தைகளோடு அவர்களை ‘வல்லரசு’ இந்தியா நடக்கவிட்டு அழகு பார்த்ததை உலகம் மௌனமாய்க் கடந்து சென்றது.

“நாங்கள் கட்டிடக் கூலித் தொழிலாளிகள். நாங்கள் அழைத்த போது எங்களது மேஸ்திரி தொலைபேசியை எடுக்கவில்லை. எங்களுக்கு கூலியும் கிடைக்கவில்லை. கையில் காசும் இல்லாமல், சாப்பிட வழியும் இல்லாமல், போக்குவரத்தும் இல்லாமல் என்ன செய்ய முடியும்? அது தான் வேறு வழியின்றி கால்நடையாகவாவது ஊருக்கே போய் விடலாம் என நடக்கத் துவங்கினோம்” என்கிறார் மத்திய பிரதேசத்தின் பெடூல் மாவட்டத்தைச் சேர்ந்த தயாள் மண்டல்.

நடந்தே போய்ச் சேர்ந்து விடலாம் என அவர்கள் கடக்க நினைத்த தொலைவு – 800 கிலோ மீட்டர்கள்.

படிக்க:
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

இவரோடு சேர்த்து மொத்தம் ஐம்பது தொழிலாளர்கள். அவர்கள் மொத்த பேரும் ஹைதராபாத்தின் துக்கூகுடா எனும் பகுதியில் ஒரு கட்டிடத்தில் கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் சொகுசு கட்டிடங்களைக் கட்டும் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்துள்ளனர்.

இவர்கள் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்த அங்கூரம் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இவர்களை அணுகி விசாரித்துள்ளனர். 800 கிலோ மீட்டர்கள் நடந்து சொந்த ஊருக்குப் போகும் தீர்மானத்தில் இவர்கள் இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து அருகில் உள்ள தற்காலிக உறைவிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், சமைப்பதற்கான மளிகைப் பொருட்களைகளையும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கி உள்ளது.

மாதிரிப் படம்

“அவர்களிடம் சொற்பமான அளவுக்கு மளிகைப் பொருட்கள் இருந்தன. போகும் வழியில் ஆங்காங்கே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளும் தீர்மானத்தில் இருந்தனர். நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம். போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின் போகாராமில் உள்ள தற்காலிக உறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களை அங்கேயே வைத்திருப்பது கடினம். எப்பாடு பாட்டாவது சொந்த ஊருக்குப் போயே தீர வேண்டும் என்கிற உறுதியில் இருக்கின்றனர். அதற்காக 800 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை என்கிற முடிவில் உள்ளனர்” என்கிறார் அங்கூரம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுமித்ரா.

“என் மனைவியும் பெற்றோரும் பயந்து போய் உள்ளனர். அவர்களுக்கு இந்த சூழலில் ஊருக்கு திரும்புவது கடினம் என்று தெரியும். ஆனால், வெளியே எங்கேயும் இருப்பதை விட எப்படியாவது வீட்டுக்கு வந்து விட்டால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். எங்கள் குடும்பங்கள் பயந்து போய் உள்ளன. எனவே இந்த லாக்டவுன் நீக்கப்படும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது.. எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடும். எனவே என்னவானாலும் சரி, நாங்கள் நடந்தாவது ஊருக்குப் போய் விடுகிறோம். நாங்கள் இது பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமும் போலீசிடமும் பேசப் போகிறோம்” என்கிறார் மோகன். இவர் நடைபயணம் மேற்கொண்ட குழுவில் உள்ள ஒரு தொழிலாளி.

தங்குவதற்கு இடமும், சாப்பிட உணவும் இருந்தும் கூட அந்த தொழிலாளர்கள் ஏன் தங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்கிறார்கள்?

***

உலகமயமாக்கல், புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை போன்றவற்றின் விளைவாக அதிகரித்துள்ள நகரமயமாக்கலுக்கு அத்துக்கூலிகள் அவசியம். குறைந்த கூலிக்கு அசாதாரணமான உழைப்பை உறிஞ்சி சுரண்ட கொத்துக் கொத்தாக பின் தங்கிய மாநிலங்களில் இருந்து படிப்பறிவில்லாத, ஏழை தொழிலாளிகளை ஏஜெண்டுகள் மூலம் பெரு நகரங்களுக்கு அள்ளி வந்து கொட்டுகின்றனர் காண்டிராக்டர்கள். இவர்களிடம் இருந்து உழைப்பை சுரண்டிக் கொண்டு உயிர் பிழைத்துக் கிடப்பதற்கு மட்டுமே போதுமான கூலியைக் கொடுக்கின்றனர்.

தங்கள் உழைப்பால் அழகூட்டப்படும் நகரங்களிலேயே அந்நிய மனிதர்களாக தகரக் கொட்டகைகளுக்குள் விலங்குகளைப் போல வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நகரங்கள் தம்மைக் காப்பாற்றாது என்பதையும், தங்களது குடும்பங்கள் மட்டுமல்ல, வாழ்க்கைக்கான நம்பிக்கையும், வேர்களும் ஏதோருவொரு மாட்டுவளைய மாநிலத்தின் பின் தங்கிய கிராமத்தில் தான் உள்ளது என்பதையும் இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். எனவே தான் ஆபத்துக் காலத்தில் சிறிய உயிர்கள் தங்களது வளைகளைத் தேடி மருண்டு ஓடுவதைப் போல் இடம்பெயர் கூலித் தொழிளர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி ஓடுகின்றனர்.

உழைக்கும் இடத்தில் மட்டுமல்ல – பிழைக்கச் சென்ற ஊரிலும் இந்த மனிதர்கள் அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை “வந்தேறிகள்” என்றும், தங்களது வாய்ப்புகளைப் பறிக்க வந்த வடநாட்டு “சதிகாரர்கள்” என்றும் தமிழ் நாஜிகள் அவ்வப் போது குறிப்பிடுவார்கள்.


தமிழ் அண்ணல்
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க