PP Letter headபத்திரிக்கை செய்தி

20.05.2020

  • ஸ்டெர்லைட் படுகொலை தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
  • கருப்பு கொடி, முழக்க அட்டையுடன், மே.22, 2020 : காலை 10-மணி வீட்டிலிருந்து நினைவு அஞ்சலி !

தூத்துக்குடியின் சுற்றுச்சூழலை சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்திய நாசகார ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக் கோரி 2018ம் ஆண்டு மே.22 அன்று பேரணியாக தூத்துக்குடி மக்கள் சென்ற போது, காவல் துறையின் துப்பாக்கி சூட்டிற்கு, பெண்கள், ஆண்கள் என 15 நபர்கள் கொல்லப்பட்டனர்.

இப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்கள் அதிகாரத்தின் தோழர் செயராமன் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் இரண்டாம் நினைவுத் தினத்தை முன்னிட்டு எங்களது வீரவணக்கங்களை உரித்தாக்குகிறோம். சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வையும் அழிக்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களுக்கு முன்னுதாரணமானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்.

தமிழக மக்களின் உறுதியான போராட்டத்தால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்குவதற்காக ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு எவ்வாறு வந்தாலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எனும் மற்றுமொரு சுற்று இருக்கின்றது என காத்திராமல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையினை தூத்துக்குடியினை விட்டு நிரந்தரமாக அகற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தங்கள் மண்ணில் நாசகார ஆலை வேண்டாம் என மக்கள் முடிவெடுத்து போராடி அதற்காக தங்களின் இன்னுயிரையே தந்து நிற்கும் போது அதனை ஒட்டித்தான் அரசு நிர்வாகங்கள் நிற்க வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பினையும் மீறி நலத்திட்ட உதவிகள் எனும் நயவஞ்சகத் திட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து வட்டாரப் பகுதியில் செயல்பட அனுமதிப்பது. அதை எதிர்க்கும் மக்களை முன்னணியாளர்களை பொய் வழக்கில் கைது செய்வது ஆகியவை தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. எனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

தமிழக காவல்துறை போராடிய மக்கள் மீது நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் என தங்கள் கைவண்ணத்தில் மக்கள் வன்முறை, அமைப்புகளின் தூண்டுதல் என மக்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி கதை எழுதி நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறைப்படுத்தினர். தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்பு சட்டம் என முன்னணியாளர்கள் வழக்கறிஞர்கள் மீது ஏவப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்தில் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்ததுடன், அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி உத்திரவிட்டது. வழக்கும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) புலனாய்வுக்கு விசாரணையும் மாற்றப்பட்டது.

துப்பாக்கி சூட்டினை நேரில் பார்த்தவர்கள் குறிப்பான விவரங்களுடன் சிபிஐக்கு புகார்கள் கொடுத்தபிறகும் எந்த போலீசாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட வருவாய்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 15 பேரின் படுகொலைக்கு காரணமான அதிகாரிகள், போலீசார் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சுற்றுச்சூழல் சட்டவிதிகள் திருத்தம், விரைவான அனுமதி, கனிம இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாட பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்து விடுதல் என மோடியின் கார்ப்பரேட் பாசிச ஆட்சி தீவிரமான தாக்குதலை இந்திய மக்கள் மீது தொடுத்துள்ளது.

விசாகப்பட்டினம் விசவாயு மரணங்கள் போல் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ஸ்டெர்லைட் போராட்டம்தான் முன்னுதாரணமான போராட்டம் ஆகும். மீத்தேன், ஹைட்ரோகார்பன், மின்வழித்தடம், பெட்ரோ-கெமிக்கல் மண்டலம், வணிகத் துறைமுகம் என வேதாந்தா, அம்பானி, ஆதானி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தினை சுற்றி வளைக்க உள்ளன. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், சுற்றுசூழலை நாசமாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடவும், தூத்துக்குடி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்த உறுதியேற்போம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான மே.22 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தங்களின் இருப்பிடங்களுக்கு முன்போ, தெருவிலோ கருப்பு உடையணிந்தோ அல்லது கருப்பு கொடி ஏந்தியோ

மே.22 ஸ்டெர்லைட் படுகொலை!
தூத்துக்குடி தியாகிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!
போராடிய மக்களை சுட்டுக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கு!
கார்ப்பரேட்டுகளுக்காக சுற்றுச்சூழல் சட்டத்தினை திருத்தாதே!

ஆகிய முழக்கங்களுடன், சமூக இடைவெளியுடன் நின்று தூத்துக்குடி தியாகிகளின் நினைவை போற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு மற்றும் புதுவை
தொடர்புக்கு : 99623 66321